தீராத பிரார்த்தனை தாங்கிய
காகிதத்துண்டு ஒன்று எட்டியபோது
கடவுள் மொழி புரியாதவராய்
இருந்தார்...

தீராத பிரார்த்தனையின்
குரல் ஒன்று கதறிய போது
கடவுள் காதுகளற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
கண்ணீர்த் துளி ஒன்று
சொட்டிய போது கடவுள்
கண்களற்றவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனையின்
வலி ஒன்று அறைந்த போது
கடவுள் உணர்வுகளற்றாவராய் இருந்தார்

தீராத பிரார்த்தனை ஒன்று
தன் உருச்சிதைந்து
அழுகலின் நாற்றத்துடன் பரவியபோது
கடவுள் உணர்ச்சியற்றவராய் இருந்தார்

இப்படித் தீராத பிரார்த்தனைகள்
சுமந்து பால்வெளியில்
அலைந்து கொண்டிருக்கும்
காகிதத் துண்டுகள் எத்தனையோ?..

அவை என்றேனும் ஒருநாள்
பொழியக் கூடும் அமில மழையாக
கடவுளின் துகள்களையும் கரைத்துக் கொண்டு...