பெங்களூர், செப். 22-

லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய டென்னிஸ் வீரர்கள் தேர்வின்போது, பயசுடன் விளையாட மகேஷ் பூபதியும், ரோகன் போபண்ணாவும் மறுத்தனர். இதையடுத்து டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து இருவரும் நீக்கப்பட்டனர்.

அதன்பின்னர் பூபதி, போபண்ணா இருவருக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் தடை விதித்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த பூபதி, தடையை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக கூறியிருந்தார்.

அதன்படி கர்நாடக மாநில ஐகோர்ட்டில் பூபதி, போபண்ணா இருவரும் தங்கள் மீதான தடையை நீக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி மோகன் சந்தானகவுடர், டென்னிஸ் வீரர்கள் மீதான 2 ஆண்டு தடைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும் மத்திய விளையாட்டு அமைச்சகம், அனைத்திந்திய டென்னிஸ் சங்கம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.


நன்றி : மாலை மலர்