எள்ளி நகையாடும்
===என்னைந்து புலன்களையும்
கிள்ளி நகையாடிக்
===கிறங்குவதும் எந்நாளோ?

புயல்காற்றில் புழுதிபோல்
===பூவையர் நினைப்பென்னும்
மயல்காற்றில் உழலாமல்
===மதிபெறுவ தெந்நாளோ?

கண்மூடித் திறந்திட்டால்
===கரைந்தோடும் இளமையெனக்
கண்மூடா தலையுமனம்
===கண்டறிவ தெந்நாளோ?

அங்கம் தழுவியே
===கிடந்தாலும் ஆடைதான்
அங்கம் புணராகலை
===அகமறிவ தெந்நாளோ?

உப்புத் தண்ணீரில்
===உயிர்வாழ்ந்து வந்தாலும்
உப்பருந்தா மீன்போலே
===உயர்வடைவ தெந்நாளோ?

கானல் நதியிறைத்துக்
===கழனி விளையாது
கோணல் மதியிந்தக்
===குறிப்பறிவ தெந்நாளோ?

இடைமட்டு மல்லாது
===இதயமும் சிறுத்திருக்கும்
கடைமாதர் தம்மேனி
===கலப்பறுப்ப தெந்நாளோ?


உள்ளங் கைகடந்து
===ஓடாத ரேகைபோல்
உள்ளந் தானடங்கி
===உறங்குவதும் எந்நாளோ?

கடல்குடித்துக் கர்ஜிக்கும்
===கதிரென்ன சுட்டாலும்
முகில்வற்றா நிலைபோலே
===முக்திபெறுவ தெந்நாளோ?

புடவைக் காற்றுக்கே
===புலனைந்தின் கதவங்கள்
தடவென்று திறவாத
===திடம்பெறுவ தெந்நாளோ?

சிவப்புத் தோலுக்குச்
===செத்து மடியாமல்
அவளுக்கும் நிழல்கறுப்பென்(று)
===அகம்தெளிவ தெந்நாளோ?

காமன் தொடுக்கின்ற
===கணைகளை முறித்ததில்
ஞானக் கனல்மூட்டித்
===தவம்புரிவ தெந்நாளோ?-----------ரௌத்திரன்