அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய
அனைத்துத் தோழர் தோழியருக்கும்
ரெளத்திரனின் அறிமுக வணக்கங்கள்!

என்னைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை. காரணம், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு
எதுவும் இல்லை என்பதுதான் எதார்த்தம்!

என்னைப் பற்றியும் எனது எழுத்தைப் பற்றியும்
சுறுக்கமாகவும் சிறப்பாகவும்
எனது இந்தக் கவிதை வரிகளை விட
என்னால் சொல்லிவிட முடியாது.

"உற்றதோர் குருவும் இல்லை!
------உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
------கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
------பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
------தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
------கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
------மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
------மென்தமிழ் நூற்ச மைப்பேன்!"எனது முதனூல் "கண்ணதாசன் துதி" என்பதாகும்.
இது "எனது குருநாதன் கவியரசு கண்ணதாசனின்" புகழ்பாடும் நூல்.
இது கண்ணதாசனின் மகனாரான திரு.காந்தி கண்ணதாசன் அவர்களால்
"கண்ணதாசன் பதிப்பக வெளியீ"டாக 2012 ஜனவரியில் வெளியானது.


சென்னையின் பல புத்தகக் கடைகளிலும்
எனது இப்படைப்பை நீங்கள் காண முடியும்!


"அந்தக் கதவுகள் திறக்கட்டும்"

"ஈழ ரத்தம்"

"திருவோடு"

"பெளர்ணமி அலைகள்"

"ருத்ர தாண்டவம்"

"குற்ற நெஞ்சம்" ---ஆகியன அடியேன் எழுதியுள்ள
இன்னும் அச்சுக்கு வராத கவிதை நூல்கள்!

இவற்றில் "குற்ற நெஞ்சம்" மட்டும் "காவியம்" ஆகும்!

விரைவில் ஒவ்வொன்றாக வெளிவரும்!இதற்கும் மேலாக என்னைப் பற்றிச் சொல்ல வேண்டியது எதுவுமில்லை.

முழு நேர இலக்கியவாதியாய் உலா வந்துகொண்டிருக்கிறேன்.

படித்தது இஞ்ஜினியரிங்.

திரைத்துறையில் பாடல் எழுதவும் முயன்றுகொண்டிருக்கிறேன்.
வாய்ப்புகள் கனியும் நிலையில்!

வழக்கம் போல உண்மைக்கும் நேர்மைக்கும் நல்லனவற்றிற்கும்
என்றும் இவ்வுலகத்தினிடையே மதிப்பிருக்கும்
என்ற நம்பிக்கையோடு எனது எழுத்துகளை உங்கள் பார்வைக்கு
விருந்தாக வைக்க வந்திருக்கிறேன்.

எனது விருந்து அறுசுவை விருந்து!

ஆம்! அறுசுவையும் இருக்கும். சில நேரம் ஏதேனும் ஒரு சுவை மட்டும்
மிகுதியாய் சேர்ப்பது என் இயல்பு.

பெரும்பாலும் காரமும்(கோபம்) கரிப்பும்(கண்ணீர்) மாறி மாறி முகம் காட்டும்.

ஜீரணிப்பது உங்கள் குடலின் சக்தியைப் பொருத்த விஷயம்!தமிழ்மன்றத்திற்கு நான் புதியவன்!

மற்ற சில இணையதளங்களுக்குப் பழகியவன்!


"செல்லும் இடமெல்லாம் சிறப்பு"க்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் சொந்தக்காரன்!என் மனம் ஆகாயம்!
என் தமிழ் மழை!

மழை பெரும்பாலும் இடிகளோடுதான் வரும்.

இடிகள் சில நேரம் சிலர் தலையிலும் விழலாம்.

அதற்கு ஆகாயத்தின் மீதோ மழையின் மீதோ
ஆத்திரமும் ஆதங்கமும் கொள்வதில் அர்த்தமில்லை.

இடிகளுக்காக மழையை வேண்டாம் என்று மறுதலித்துவிட மாட்டீர்
என்றும் நம்புகிறேன்.............-------------ரெளத்திரன்