வாசப் புதுமலரே- என்
வாழ்வின் முதல்தளிரே!
நேசத் திருமகளே - எனை
முற்றும் மறந்தாயோ?

பாதி இரவுகளில் - பனி
சொட்டும் இரவுகளில்
பாதை வழிநடந்தோம் - அதை
பாவை மறந்தாயோ?


இமைகள் கவிழவிட்டு - நாம்
இதழ்கள் பேசவிட்டுச்
சமயம் நாம்மறந்தோம் - என்
சகியே மறந்தாயோ?

வானம் நீளும்வரை - நம்
வாழ்க்கை நீளும்வரை
வாழ்வோம் நாமென்றாய் - அந்த
வார்த்தை மறந்தாயோ?


மின்னல் நீயென்றேன் - அதற்கா
மனதில் இடிதந்து
கண்ணில் மழைதந்து - ஒரு
கணத்தில் மறைந்திட்டாய்?

பருவ வயதினிலே - காதல்
பூக்கும் காரணத்தால்
பருவ வயதினைப்போல்- காதல்
கதையும் பொய்த்திடுதோ?

காதல் கோடையிலே-இலைபோல்
கண்ணீர் உதிருதடி!
காதல் சூளையிலே-இதயச்
செங்கல் வேகுதடி!

பிணங்கள் வேகின்ற - சுடு
காட்டு வெளியினைப்போல்
அணங்கே உன்னினைவில் - என்
ஆவி எரியுதடி.


மையல் தந்துவிட்டு - என்
மலரே ஏன்மறந்தாய்?
மையைத் தீட்டிவிட்டு - என்
விழியை ஏன்பறித்தாய்?

ஆசை தந்துவிட்டு - என்
அழகே ஏன்மறந்தாய்?
பாஷை தந்துவிட்டு - என்
நாவை ஏனறுத்தாய்?


கண்ணில் கருமணிபோல் - என்
கிளியே நீவந்தாய்.
கனவைப் போலின்று - ஏன்
கலைந்து போய்விட்டாய்?


----------ரெளத்திரன்