" விசாலம் ! வாசலில் விட்டிருந்த என் செருப்பைக் காணோம்! நீ பாத்தியா?" என்று தன் மனைவியிடம் கேட்டார் தணிகாசலம்.

" நல்லாத் தேடிப் பாருங்க! அங்கதான் இருக்கும்!"

" இல்ல விசாலம்! நல்லாத் தேடிப் பாத்துட்டேன்!எங்கேயும் காணோம்; நீயும் கொஞ்சம் வந்து தேடிப்பாரு !"

இருவரும் ஒரு மணி நேரமாகத் தேடியும் செருப்புக் கிடைக்கவில்லை. தணிகாசலம் மிகவும் வருத்தப்பட்டார். போன மாசம்தான் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அந்த செருப்பை வாங்கினார். இன்னும் புது மெருகு குலையாமல் இருந்தது.

' போனால் போகட்டும் விடுங்க! பென்ஷன் வந்தவுடன் புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று விசாலம் சொன்னாள்.

செருப்புத் தொலைந்து ஒரு வாரமாயிற்று. " நாளைக்குப் பென்ஷன் வந்துவிடும்; புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று தணிகாசலம் நினைத்துக் கொண்டார்.

மாலை மணி ஐந்து இருக்கும். தணிகாசலத்தைத் தேடி அவரது நண்பர் சுந்தரவதனம் வந்திருந்தார்.

' என்னப்பா! செருப்புக் கிடைத்ததா?"

" இல்லை சுந்தரம் ! "

" விட்டுத் தள்ளு; நாய் ஏதாவது தூக்கிக்கொண்டு போயிருக்கும்! வேற ஒன்னு புதுசா வாங்கிக்க ! சரி வா! கோவிலுக்குப் போயிட்டு வரலாம்!"

இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.தணிகாசலம் செருப்பில்லாமல் வெறுங்காலுடன் நடந்து வந்தார். சுந்தரம் செருப்பைக் கோவிலுக்கு வெளியில் விட்ட பிறகு இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு , கோவிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பொதுவான சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டனர். செருப்பை விட்ட இடத்தில் , தணிகாசலத்தின் செருப்பைக்கண்ட சுந்தரம் , மிகுந்த வியப்படைந்தார். தணிகாசலத்தைக் கூப்பிட்டு

" தணிகாசலம்! இதோ பாருப்பா! உன் செருப்பு இங்க இருக்கு !"

மிகுந்த ஆவலுடன் சென்ற தணிகாசலம் , தொலைந்துபோன தன்னுடைய செருப்பு , அங்கே இருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதை அணிந்து கொள்ள காலை நீட்டியவர் ,சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.

" என்னப்பா ! தணிகாசலம்! தயங்காம போட்டுக்கிட்டு வா! அது உன்னுடைய செருப்பு! என்ன யோசனை ?"

" இல்லப்பா! இது என்னுடைய செருப்பு என்றாலும், தற்போது வேறு ஒருவனுடைய பொறுப்பில் உள்ளது. எனவே இதை எடுத்து நான் அணிந்துகொண்டால், அது திருடியதற்குச் சமம். அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? மேலும் ஒருவர் அணிந்த செருப்பை மற்றவர் அணிவது சுகாதாரமல்ல! நாளைக்கு வேறு செருப்பை வாங்கிக் கொள்கிறேன் !" என்றார் தணிகாசலம்.

அப்போது கோவிலுக்கு உள்ளே இருந்து வந்த இருவரில் ஒருவன் , தணிகாசலத்தின் செருப்பை அணிந்துகொண்டு புறப்பட்டான். சிறிதுதூரம் சென்ற பிறகு அவன் தன் நண்பனைப் பார்த்து,

" அந்தப் பெரிசுங்க என்னோட செருப்பைப் பாத்து ஏதோ பேசினதைக் கவனிச்சுயா? நல்லவேளை! சரியான நேரத்துல வந்துட்டோம்! இல்லன்னா அந்தப் பெருசுங்க என்னோட செருப்பைத் தள்ளிகிட்டு போயிருப்பானுங்க !"

இதைக்கேட்ட தணிகாசலம், தன் நண்பரிடம்," சுந்தரம்! இதுதான் உலகம்! புரிந்துகொள்!" என்றார்.