Results 1 to 2 of 2

Thread: நன்னாரி ( மூலிகை ) வேர்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    27 May 2008
    Location
    chennai
    Posts
    64
    Post Thanks / Like
    iCash Credits
    10,157
    Downloads
    0
    Uploads
    0

    நன்னாரி ( மூலிகை ) வேர்

    நன்னாரி ( மூலிகை ) வேர்
    நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும்.


    இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.

    *

    இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

    *

    நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).

    *

    நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.


    ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.

    மருத்துவ குணங்கள்:

    1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...

    *

    2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

    *

    3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

    *

    4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.


    *

    5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.


    *


    6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .


    *


    7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.


    *

    8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.


    *

    9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.


    *


    10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


    *

    11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.


    *

    12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.


    *


    13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.



    *

    14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.


    *


    15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

    *

    16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.


    *

    17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.

    18. குறிப்பு:

    ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை.
    thanks விக்கிபீடியா.

    நன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து
    நன்னாரி



    சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

    கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.

    உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

    கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

    நன்னாரி பால்:
    1. நன்னாரி - 200 கிராம்

    2. சுக்கு - 50 கிராம்

    3. ஏலக்காய் - 25 கிராம்.

    செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

    தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.


    நன்னாரி சர்பத்:
    நன்னாரி - 200 கிராம்.

    தண்ணீர் - ஒரு லிட்டர்.

    சர்க்கரை - 1 கிலோ.

    எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

    செய்முறை:

    1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

    2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

    3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

    4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

    5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

    தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.
    இணையத்திலிருந்து திரட்டியவை
    Engr.Sulthan

  2. #2
    இனியவர் பண்பட்டவர் Dr.சுந்தரராஜ் தயாளன்'s Avatar
    Join Date
    17 Feb 2012
    Location
    Bangalore, Karnataka, India
    Age
    71
    Posts
    698
    Post Thanks / Like
    iCash Credits
    15,892
    Downloads
    0
    Uploads
    0
    நன்னாரி வேரில் இவ்வளவு பயன் உள்ளதா...நான் வெறும் சர்பத் என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். அறியத்தந்தமைக்கு மிகவும் நன்றி சுல்தான்ஜி

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •