Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 37

Thread: ஒரு மழை நாளில்....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    ஒரு மழை நாளில்....!!!

    காதுமடலில் விழுந்துத் தெறித்த ஒரு மழைத்துளியை உணர்ந்ததும், ஆத்திரத்துடன் அண்ணாந்து பார்த்தான் குமார். மழையை அந்தளவுக்கு வெறுத்தான். இருந்தாலும்...இவன் வெறுப்பையோ விருப்பையோ அறிந்து நின்று போகுமா மழை. ஓரிரு துளியாய்த் தொடங்கி,...சட சடவென வேகம் கூட்டியது. விலையில்லா பொருளுக்கு முண்டியடித்து ஓடும் தமிழக மக்களைப்போல வீதியில் நடமாடிக்கொண்டிருந்த அனைவரும், தலை மறைக்க ஒதுங்குமிடம் தேடி ஓடினார்கள்.

    குமாரும் அருகில் மூடப்பட்டிருந்த கடைக்கு முன்னால் இருந்த இடத்தில், ஏற்கனவே ஒதுங்கியிருந்தவர்களோடு ஒண்டிக்கொண்டான். என்னதான் மழையை வெறுத்தாலும், அவனை இன்னமும் தன் சாரலால் நனைத்துக்கொண்டுதானிருந்தது மழை. இந்த மழைமீதான வெறுப்பு போன வருடத்தின் ஒரு பேய்மழை நாளுக்குப் பிறகுதான் இவனை ஆக்ரமித்தது. அதற்கு முன்னால்வரை மனைவி நித்யாவோடும், செல்ல மகன் நிகிலோடும், மழையில் இறங்கி ஆட்டம் போட்டவன்தான். விளையாட்டுத் தோழனாய் இருந்த அந்த மழையே வினையாகிப் போனதுதான் வேதனை.

    ரு வருடத்துக்கு முன், அவர்கள் தங்கியிருந்த நகரத்திலிருந்து சற்று தொலைவிலிருக்கும் கிராமத்து வீட்டிலிருந்த அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாய் தகவல் வந்ததும், மனைவியையும், மகனையும் அழைத்துக்கொண்டு தன் சம்பாத்தியத்தில், ஆசைப்பட்டு வாங்கியக் காரில் கிளம்பினான். மழை பெய்து கொண்டிருந்தாலும், காரில்தானே என கிளம்பிவிட்டார்கள். போகப்போக மழை வலுத்துக்கொண்டே வந்தது. தங்கள் கிராமத்துக்கு சற்று முன்பாக உள்ள தரைப்பாலத்தைப் பார்த்ததும் தயங்கி காரை நிறுத்தினான்..

    அதை ஆறு என்று சொல்வதைக் காட்டிலும் ஓடை எனச் சொல்லலாம். எப்போதாவது இதைப்போன்ற மழைநாட்களில்தான் லேசான நீரோட்டமிருக்கும். ஆனால் இன்று கொஞ்சம் அதிகப்படியாகவே இருந்தது. தரைப்பாலத்தின் மேல் கணுக்காலுக்கு சற்று மேலாய் நனையக்கூடிய அளவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் தயங்கினான்....ஆனால்...சட்டென்று வேகமெடுத்துப் போனால்...கடந்துவிடலாம் என்று முடிவெடுத்து வண்டியைக் கிளப்பினான். பின்னாலிருந்து நித்யா அவன் தோளைத்தொட்டதும் நிறுத்தினான்.

    “தண்ணி அதிகமா இருக்கிற மாதிரி இருக்குங்க. எதுக்கு ரிஸ்க்? கொஞ்ச நேரத்துல வடிஞ்சுடும் அப்புறமா போய்க்கலாமே”

    “என்ன நித்யா இது....நாம எத்தன தடவ...இது மாதிரி தண்ணி ஓடும்போது இந்தப் பாலத்த தாண்டிப்போயிருக்கோம். இன்னைக்கு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...அதனால என்ன ஆக்ஸிலேட்டரை ஒரு அமுக்கு அமுக்கினா அந்தப்பக்கம் போயிடலாம். பயப்படாத....இப்ப பாரு எப்படி சர்ருன்னு போகுதுன்னு”

    அப்பாவின் உற்சாகம் அந்த ஆறு வயதுப் பையனையும் தொத்திக் கொண்டது. இப்படி தண்ணீரைக் கிழித்துக்கொண்டு போவது அவனுக்கு எப்போதுமே மிகப் பிடித்தது. முன் இருக்கையில் அமர்ந்திருந்தவன், அந்தக் கிழிசலைப் பார்க்க தலையை எம்பித் தயாரானான்.

    கார் சீறிக்கிளம்பி பாலத்தின் பாதியை அடைந்தபோதுதான்..அது நிகழ்ந்தது..அதுவரை ஓடையாய் இருந்தது தன் பேரை மாற்றிக்கொண்டு காட்டாறு ஆனது. சற்று தொலைவில் எங்கோ அதன் நீர்பிடிப்புப் பகுதியில் கொட்டிய பெருமழையின் அத்தனை நீரையும் சுமந்துகொண்டு...தன் வேகத்தை தாறுமாறாய் அதிகப்படுத்திக்கொண்டு அந்த தரைப்பாலத்தைக் கடந்தது. ஒரு பலத்தக் குலுங்களுடன் கார் நடுப்பாலத்தில் நின்றுவிட்டது. குமாரின் முகத்தில் கலவரம் தென்படத்தொடங்கியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அச்சத்தில் அலறிக்கொண்டிருந்த நித்யாவையும், நிகிலையும் சமாதானப்படுத்த,

    “நித்திம்மா....அப்படியே கொஞ்ச நேரம் காருக்குள்ளேயே உக்காந்துக்கலாம்....தண்ணி கொறஞ்சதும்...எறங்கி அந்தப்பக்கம் போய் யாராவது மெக்கானிக்கை கூட்டிட்டு வரலாம்”

    “அய்யோ பயமா இருக்குங்க...இந்த வெள்ளத்தோட வேகத்தப் பாத்தா...கார உருட்டிவிட்டுடுமோன்னு பயமா இருக்குங்க...”

    ” ச் சே....அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது...”

    குமார் சொல்லிக்கொண்டிருக்கும்போதே கார் இன்னொரு முறைக் குலுங்கியதுமல்லாமல்,,,சற்றே நகர்ந்தது. நிகில்”அப்பா” என அலறினான்.

    குமார் என்ன செய்வதெனத் தெரியாமல்....அதே சமயம் ஏதோ ஒன்றை செய்து இவர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற வெறியுடன் கதவைத் திறக்க முயன்றான். வெள்ளம் அந்தப் பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்ததால்....அவனால் கதவை சிறிதுகூட நகர்த்த முடியவில்லை. சட்டென்று நிகிலை நிற்கச் சொல்லி அந்தப் பக்கமாய் நகர்ந்து கதவைத் திறந்தான் கார் தடுப்பாய் நின்று கொண்டிருந்ததால் அவனால் கீழே இறங்கி நிற்க முடிந்தது. உடனே பின் கதவைத் திறந்து நித்யாவை கீழே இறங்கச்சொன்னான்.. நிகிலை தூக்கித் தோள்மேல் போட்டுக்கொண்டான். நித்யா காரைவிட்டு இறங்கிய அடுத்த நொடி, பாரம் குறைந்தக் கார், அந்த வெள்ளத்தின் அசுர தாக்குதலை தாங்க முடியாமல் சட்டென்று புரண்டது.

    “அய்யோ என்னங்க...”

    “அப்பாஆஆஆஆஆஆஆஆ..........”

    காரின் அசைவை உணர்ந்ததும், குமார் நிகிலை தூக்கிகொண்டு, ஒரு கையில் நித்யாவைப் பற்றி இழுத்துக்கொண்டும் பக்கவாட்டில் நகர்ந்தான். இதற்குள் தலைகீழாய் புரண்டக் கார் நித்யாவை அழுத்தியது. அதுவரை வெள்ளத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தியக் கார் புரண்டு நகர்ந்ததும், வேகமாய் பாய்ந்த தண்ணீர்,குமாரையும் நிகிலையும் இழுத்துக்கொண்டு போனது....அந்த காட்டுவெள்ளத்தின் ஆக்ரோஷப் புரட்டலில் நிகில் குமாரின் தோளைவிட்டு பிரிந்துபோய்விட்டான். தண்ணீரில் அடித்துக்கொண்டு போனக் குமார் கரையோரத்தில் வளர்ந்து, தண்ணீரைத் தொட்டுக்கொண்டிருந்த மூங்கிலால் நிறுத்தப்பட்டான். சட்டென்று அந்த மூங்கிலைப் பற்றிக்கொண்ட குமார்... தண்ணீர்ப்பரப்பை....பதட்டத்தோடு பார்த்தான். நித்யாவும், நிகிலும் போன சுவடுகூடத் தெரியவில்லை...நிகிலின் கடைசி அலறலின் மிச்சம் இன்னும் குமாரின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது..மனதெல்லாம் பரவிய வெறுமையில், வெறி கொண்டவனாக...அவர்களைத் தேடத் தண்ணீரில் பாய முயற்சித்தபோது, அதற்குள் கரையில் சேர்ந்திருந்தக் கூட்டத்திலிருந்த விவசாயி ஒருவரால் இழுக்கப்பட்டான். திமிற முயன்றவனை...வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கரையில் போட்டார் அவர். கரைக்கு வந்தும், அடங்காமல்...திமிறிக்கொண்டு வெள்ளத்தில் பாயப்போனவனை தன் இரும்புப்பிடியால் நிறுத்தி.....

    “போனவங்கப் போயிட்டாங்க....உனக்கு இன்னும் நாள் வரல...அதான் ஆண்டவனாப் பாத்து இந்த மூங்கில இங்க வெச்சிருக்கான்....நீ குதிச்சு அவங்களைக் காப்பாத்த முடியாது. அவங்க இந்நேரம்...எங்கையோ போயிருப்பாங்க....இது காட்டாறு....அதுவுமில்லாம இந்தப் பாலத்தைத் தாண்டினதும் பள்ளம் அதிகம், போய் பிரயோசனமில்ல.....அமைதியா இரு” என வலுவாய் அவன் கையைப் பற்றினார்.

    சில்லென்ற சாரல் கால்களை நனைத்துக்கொண்டிந்தபோது, அந்த மழைநாளின் நினைவுகளின் தாக்கம் தந்த கண்ணீர் சூடாய்க் கண்ணத்தை சுட்டது. முதுகை யாரோ தொடுவதை உணர்ந்ததும், திரும்பிப்பார்த்தான். நிகிலின் வயதேயாயிருந்த ஒரு சிறுமி, தன் அம்மாவின் தோளில் சாய்ந்துகொண்டு இவனைத் தொட்டுக்கொண்டிருந்தாள். குமார் திரும்பிப்பார்த்ததும்,

    “அங்கிள்...உள்ள இன்னும் எடம் இருக்கு உள்ளத் தள்ளி வாங்கன்னு எங்கம்மா சொல்றாங்க”

    “சாரல்ல உங்க துணியெல்லாம் நனைஞ்சிடுச்சு...அதான் உள்ள வாங்கன்னு சொன்னேன்”

    அந்த சிறுமியின் அம்மா இப்படிச் சொன்னதும், அவள் முகம் பார்த்தான்...

    “சந்திரா....சந்திராதானே நீங்க....நீ...”

    “குமார்....அட....எவ்ளோநாளாச்சு உன்னப் பாத்து.....இவ்ளோ நாளுக்கப்புறம் இப்படி மழைக்கு ஒதுங்கும்போதுதான் பாக்கனுன்னு இருந்திருக்கு....நல்லாருக்கியா....நித்யா, நிகில் எல்லாம் நல்லாருக்காங்களா? ஒன்ற வருஷம் ஆச்சு உங்களைப் பாத்து.”

    சந்திரா, குமாரின் கல்லூரித் தோழி. இவனுக்கு முன்பே அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. குமார் இருந்த நகரம்தான் அவளுக்கு சொந்த ஊர் என்றாலும் திருமணத்துக்குப் பிறகு வேறு நகரத்துக்குப் போய்விட்டார்கள். குமாரும், நித்யாவையும், நிகிலையும் இழந்தபிறகு அவர்களோடு வாழ்ந்த அந்த நகரத்தில் இருக்க விரும்பாமல்...இந்த ஊருக்கு வந்துவிட்டான். சந்திராவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்....முகத்தைத் திருப்பி மழையையே வெறித்துப்பார்த்தான்.

    “என்ன குமார் என்னாச்சு....நல்லாருக்காங்கதான....?”

    அவனது மௌனமும், முகத்திருப்பலும் அவளுக்கு எதையோ உணர்த்தியது....பிரிந்துவிட்டார்களா? நித்யா நல்லப் பெண்ணாயிற்றே..நிகில், குமார் மீது அவ்வளவு ஒட்டுதலாய் இருப்பானே....கொஞ்ச நேரத்தில் அவள் மனதில் பல எண்ணங்கள் அலைமோதியது.

    “இதோ பெஞ்சுக்கிட்டிருக்கே இந்த மழையத்தான் நீ கேக்கனும்”

    எண்ணங்களின் ஆக்ரமிப்பில் இருந்த சந்திராவுக்கு அவன் சொன்னது சரியாய் கேட்கவில்லை.

    “என்ன என்ன சொன்ன குமார்?”

    “இதோ பெய்யுதே....இந்தப் பாழாப்போன மழை.....இதைத்தான் கேக்கனும்....”

    சந்திராவுக்குத் திடுக்கென்றது...என்ன சொல்றான் இவன்....

    “என்னாச்சு குமார்....ஒரு மாதிரியா பேசற...?”

    “இன்னும் பைத்தியம்தான் பிடிக்கல...அப்படி பைத்தியமாயிருந்தாக் கூட நல்லாதான் இருந்திருக்கும்.....இப்படி ஒரு வாழ்க்கையை வாழறதுக்கு”

    அருகில் நெருங்கி வந்து அவனது கைகளை ஆறுதலாய் பிடித்துக்கொண்டு,

    “என்னாச்சுப்பா....நீ எப்பவும் இப்படியிருக்க மாட்டியே....சொல்லு குமார்”

    “எதெதெல்லாமோ மாறிடிச்சு சந்திரா....இப்பக் கொட்டிக்கிட்டிருக்கே....இதே மாதிரிதான் இந்த மழை....இதே மாதிரியில்ல....இதைவிட அரக்கத்தனமா...அன்னைக்குக் கொட்டிக்கிட்டிருந்திச்சு.....”

    எனத் தொடங்கி நடந்த சம்பவத்தை சொன்னான். அதற்குள் அவன் கண்கள் நிறைந்து, கண்ணீரைக் கொட்டிக்கொண்டிருந்தது.
    ”வெள்ளம் வடிஞ்சப்புறமா போகலான்னு என் நித்தி சொன்னாளே...கேட்டனா....நான் கேட்டனா.....அவங்க சாவுக்கு நானேக் காரணமாயிட்டேனே....”
    அரற்றிய மனதை சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு, சந்திராவின் முகத்தைப் பார்த்தான்.....

    பிரமைபிடித்தவள்போல நின்றுகொண்டிருந்தவளைக் கவனித்ததும், தன் சோகம் அவளை இப்படி தாக்கிவிட்டதே....என வருந்திக்கொண்டே,

    ‘விதி சந்திரா...விதி.....எனக்கு மட்டும் ஏன் அந்த மூங்கில் கிடச்சுது...ஒரேயடியா அவங்களோட போயிருக்கக்கூடாதா....?”

    “நானும் உன்ன மாதிரிதான் நினைச்சேன் அவரோடவே போயிருக்கக்கூடாதான்னு....இவளுக்காகத்தான் இப்ப வாழ்ந்துக்கிட்டிருக்கேன்”

    குமாருக்கு அதிர்ச்சி.

    “என்ன என்ன சொல்ற சந்திரா...என்ன ஆச்சு...இளங்கோவுக்கு என்ன ஆச்சு..?”

    விரக்தியாய் சிரித்தவள்.....

    ”அதே பேய் மழைநாள்ல...அதே பாலத்துலதான் இளங்கோவையும் அந்த வெள்ளம் அடிச்சுக்கிட்டு போயிடிச்சு....”

    உட்சபட்ச அதிர்வில் குமாருக்கு கைகள் சற்றே நடுங்கின...

    ‘சந்திரா என்ன இது....எப்படி...”

    “நானும் அவரும் இவளை அவங்கம்மாகிட்ட விட்டுட்டு எங்க சொந்தக்காரங்க விஷேஷத்துக்கு நம்ம ஊருக்கு வந்தோம். உங்க கிராமத்துக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கிராமத்துலதான் என்னோட ஸ்கூல்மேட் வள்ளி இருக்கா. அவளோடக் கல்யாணத்துக்கு என்னால வரமுடியல. அதான் அவரையும் கூட்டிக்கிட்டுப் போய் பாத்து கிஃப்ட் குடுத்து வாழ்த்து சொல்லிட்டு வரலான்னு சித்தப்பாப் பையனோட பைக்க எடுத்துக்கிட்டுப் போனோம். அந்த பாலத்துக்கிட்ட வந்தப்பதான் ஒரு கார் பாலத்துக்கு நடுவுல மாட்டிக்கிட்டிருந்திச்சு...வெள்ளத்தோட வேகத்துல ஆடிக்கிட்டிருந்திச்சு...அதப் பாத்ததும் என் கிட்டக் கூட சொல்லாம வெள்ளத்துல பாஞ்சிட்டார் இளங்கோ.....எதுத்து நீச்சல் போட்டுக் காரை நெருங்கி பிடிச்சிட்டார்....ஆனா அந்த சமயத்துலதான் கார் தலைகீழா பொரண்டுச்சு...அப்படியே இவரையும் அடிச்சுக்கிட்டுப் போயிடிச்சு......போயிடிச்சு....”

    அது பொது இடம் என்பதையும் மறந்து குலுங்கி அழுதாள்.

    “அப்ப அது உங்க கார்தான்....உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கறது நீங மூணுபேரும்தான்னுகூட தெரியாதே”

    அழுதுகொண்டே அவள் சொன்னதைக் கேட்டு....

    குமார் பிரமைப் பிடித்தவன் போல நின்றிருந்தான்.

    இளங்கோ எத்தனைப் பெரிய தியாகம் செய்திருக்கிறான்....எங்களுக்காகவா, அவனுடைய மனைவியின் கல்லூரித்தோழனின் குடும்பம் எனத் தெரியாமலேயே எங்களுக்காக உயிரை விட்டிருக்கிறான்....கடவுளே....

    அதற்குள் மழையின் வேகம் குறைந்து சிறு தூற்றலாகத் தூறிக்கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஒண்றிரண்டு பேரும் தலையில் கைக்குட்டையைப் போட்டுக்கொண்டு கிளம்பிவிட்டிருந்தார்கள்..

    சந்திராவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுகின்ற அம்மாவை தலையை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருந்த பூஜாவை...அப்படியே அள்ளி எடுத்துக்கொண்டான்.

    ”சந்திரா இவதான் எனக்கு இனிமே நிகில்....பூஜாவுக்கு நான்தான் இளங்கோ.....இனி என் வாழ்க்கைக்கு இவ போதும்....”

    மனதில் நினைத்துக்கொண்டே,

    “வா.....உங்களை வீடு வரைக்கும் விட்டுட்டுப் போறேன்”

    அவளது பதிலைக்கூட எதிர்பாராமல், பூஜாவைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவளது தலையை தன் கைக்குட்டையால் போர்த்திக்கொண்டுக் கிளம்பினான்.

    பின்னாலிருந்து பார்த்த சந்திராவுக்கு அந்த நிமிடம் பூஜா நிகிலாய் தெரிந்தாள்.

    இங்கிருப்பதை அங்கு மாற்றி வைத்து விளையாட்டுக் காட்டும் மழை....எந்த சலனமும் இல்லாமல்.....அவர்களை நனைத்துக்கொண்டிருந்தது......
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    நல்லதொரு கதை இது போன்ற மனிதாபிமானமிக்க மனிதர்கள் இருப்பதால் தானோ என்னவோ இன்னமும் பேய் மழை பெய்கிறது

    கவிதை போன்ற கதை பாராட்டுக்கள்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    மிக்க நன்றி அருண்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    நல்ல கதை அண்ணா... நீங்க கதை சொல்வது, நேரில் பார்ப்பது போலவே விவரிச்சி சொல்லுறீங்க... வாழ்த்துக்கள்...
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  5. #5
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    18 Jan 2012
    Location
    Tirupur
    Age
    49
    Posts
    65
    Post Thanks / Like
    iCash Credits
    13,302
    Downloads
    3
    Uploads
    0
    ஊணர்ச்சிகளை உரசிப்பார்த்த பேய் மழை !!!!

    நேரில் பார்த்து வியர்த்திட்ட நிசமான நிகழ்வுகளின் மலரும் நினைவுகள் !!!

    கலவரமடைந்த மனதைக் கரையேற்றியக் கடைசி வரிகள் !!!

    நல்ல கதை என்ற ஒரு சொல் போதாது இதை விமர்சிக்க !!!!

    வாழ்த்துக்கள் !!!!
    வீழ்வது வெட்கமில்லை வீழ்ந்து கிடப்பதுதான் வெட்கம் !!!
    திக்கெட்டும் தமிழ் மணக்க சங்கே முழங்கு !!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    08 Sep 2010
    Location
    Karappakkam,Cennai-97
    Age
    77
    Posts
    4,215
    Post Thanks / Like
    iCash Credits
    81,946
    Downloads
    16
    Uploads
    0
    கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூவும் எல்லாம் மழை.

    வாழ்த்துக்கள் சிவா.ஜி.
    இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
    விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    24 Jan 2012
    Location
    Bangalore
    Age
    61
    Posts
    2,259
    Post Thanks / Like
    iCash Credits
    48,408
    Downloads
    7
    Uploads
    0
    ஒரு நல்ல கதை.
    ஜெயந்த்.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவ தெங்குங் காணோம்…

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    காட்டாற்று வெள்ளமாயப் பெருக்கெடுத்து மகனைப் பிரித்த அதே மழை, வேறொரு நாள் பெய்யெனப் பெய்ந்து க்டையோரம் ஒதுங்க வைத்து, பூஜாவை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரே மழைநாளில், ஒரே பாலத்தில் தத்தம் துணையை இழந்த இருவர்! இது தான் விதியின் விளையாட்டு போலும்!
    வெள்ளத்தில் இருவரைப் பறிகொடுக்கும் காட்சியின் விவரிப்பு மனதைப் பதைக்க செய்கிறது. நல்ல கதை! பாராட்டுக்கள் சிவாஜி சார்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    நீண்ட நாள் கழித்து உங்க கதை.. கதையமைப்பும் விவரிப்பும் நன்றாய் இருந்தாலும்.. ஏதோ குறைகிறது.. என்னவென்று சரியாய் சொல்லத் தெரியவில்லை..!

    உங்க அளவுக்கு இல்லேன்னு தான் சொல்லுவேன். மனவோட்டங்களின் விவரணைகள் இன்னும் அதிகப்படுத்தியிருந்தால் முழுமையாய் இருந்திருக்கலாம்.!!

    என்னமோ உங்ககிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    23 Dec 2009
    Posts
    1,465
    Post Thanks / Like
    iCash Credits
    59,869
    Downloads
    22
    Uploads
    0
    மழை என்றதுமே ஒருவகை உற்சாகத்துடனே படிக்க ஆரம்பித்தேன், பாலத்தின் நடுப்பகுதிவரும் வரை குமார் போலவே தான் என் நம்பிக்கையும் இருந்தது.

    அதன் பின் காட்டாறு, வெள்ளம், கார் நீருடன் போனாலும் எப்படியாவது நித்தியும் நிகிலும் காப்பாற்றபட்டிருப்பார்கள் என நினைத்து திக் திக் மனதோடு படிக்க ஆரம்பித்தால் அதே வெள்ளததில் உதவவென வந்த இளங்கோவும் நீரோடு போனதாய் முடித்திருந்த விதம் இது கதையல்ல நிஜம் என உணர்வைக்கொடுக்கிறது.

    எங்கோ ஏதோவொரு சந்தர்ப்பத்தில் இம்மாதிரியான அவசரப்புரிதல்கள் பலரின் வாழ்வுக்கே முடிவுரையாய் இருப்பதும் நீரையும் நெருப்பையும் என்றுமே கட்டுபாட்டில் வைக்க மனிதரால் முடியாது என்பதும் எதிர்த்து நிற்க போனால் இழப்பது நம் உயிரே அன்றி வேறில்லை என்பதும் இக்கதையின் பாடம்.


    யோசிக்க வைத்த கதைக்காய் நன்றி அண்ணா..
    நாம் நேசிப்பவரால் மட்டுமே நம்மை அழவும், சிரிக்கவும் வைக்க முடியும்

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ரொம்ப நன்றி லீலும்மா. ரொம்ப நாளைக்கப்புறம் தங்கையை இங்கே காண்பதில் மிக்க மகிழ்ச்சி. நலமாம்மா....சமுத்திராக்குட்டி நலமா?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உண்மைதான் சுசிபாலா....இதுவும் உண்மையில் நிகழ்ந்து....விகடனில் வெளியான செய்தியின் அடிப்படையில் எழுதிய கதை.

    தங்களின் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •