Results 1 to 11 of 11

Thread: வலி கொடு

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0

    வலி கொடு

    சிறு கதை

    -------------------------------------------------------------------------

    “வலிக்குதும்மா”


    “மருந்து சாப்டாச்சே கண்ணு.....இதோ இப்ப சரியாயிடும் பாரு”


    “ம்...”


    “தூங்கு...”


    “ம்..ஹூம்....ரொம்ப வலிக்குதும்மா”


    “சாமி விபூதி தடவறேன். வலி பட்னு காணாம போயிடும் சரியா? ”


    “இல்ல....தாங்க முடியல, வலிக்குது..”


    “இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ. சரியாயிடும்டா கண்ணு”


    “உனக்கு இந்த மாதிரி வலிச்சா தெரியும்”


    “சாமி...கடவுளே.....என் ராதா குட்டிக்கு எத்தனை மருந்து கொடுத்தும் வலி கொறையலயே. இந்த பிஞ்சை ஏன் இப்படி வதைக்கறே? அந்த வலி எல்லாத்தையும் எனக்கு கொடுப்பா.”


    “அம்மா...நீ பெரியவ. ரொம்ப பெரிய வலியை உன்னால பொறுத்துக்க முடியும் இல்லமா?”


    “ஆமாண்டி செல்லம். நிறைய தாங்கிக்க முடியும். அதான் ‘சாமி... எனக்கு வலி குடு’ன்னு வேண்டிக்குவேன். இன்னும் பத்து நிமிஷந்தான். உன் தலையிலேருந்து வலி உஷ்ஷுன்னு பறந்து வந்து அம்மா தலைக்குள்ள ஒக்காந்துக்கும். பாக்கறியா?”


    “ ம்...”


    “உன் அண்ணாவுக்கு இப்படிதான், திடீர்னு ஒரு நாள் தொப்பை வலி வந்து துடிச்சு போயிட்டான்.”


    “இங்கயா.. பாரு?”


    “ம்...அங்கதான். உன்னை மாதிரி ராமுவுக்கும் அப்ப சின்ன வயசு”


    “8 வயசா?”


    “ஆமாம்”


    “ம்..சொல்லு”


    “இதே மாதிரி தான். என் மடில படுத்துகிட்டு, அம்மா தொப்பை வலி தாங்க முடியலம்மான்னு அண்ணா கத்தினான்”


    “அழுதானா?”


    “ஒரே அழுகை”


    “சாமியை வேண்டினியா?”


    “ஆமாம். வீபூதி தடவி, ‘சாமி என் புள்ளையை இப்படி வலி கொடுத்து சோதிக்கறயே? அந்த வலியை எனக்கு கொடு’ன்னு சத்தமா கேட்டு அழுதேன்”


    “நீ அழுதியா?”


    “ம்..”


    “எனக்கும் அழுகை வராப்பல இருக்குமா”


    “அழ வேணாம். கேளு. அண்ணாவை கூட்டிட்டு டாக்டர் கிட்ட போனோமா?”


    “எனக்கு வலி இப்ப கொஞ்சந்தாம்மா இருக்கு. அப்பறம்?”


    “டாக்டர், அண்ணாக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும்னு சொல்லிட்டார்”


    “அய்யோ”


    “ஒரு எறும்புக்கடி மயக்க ஊசியோட சரி. உடனே ஆபரேஷன் முடிஞ்சு அண்ணா சிரிச்சுட்டே வெளிய வந்துட்டான். அவன் வலியும் ஓடிப்போச்சு”


    “என்ன ஆபரேஷன்?”


    “அபெண்டிசைட்டிஸ்?”


    “அபாசெண்டிசைஸிஸ்?”


    “என்ன சொன்ன ?”


    “நீயே சொல்லுமா?”


    “ம்..ஹூம்...திருப்பி சொன்னா நான் தப்பு பண்ணிடுவேன்”


    “அம்மா...”


    “என்ன?”


    “தலவலி போயிடுச்சு, விளையாடப் போட்டா?”


    “ம்...போ”

    -----------------------------------------------------------------------------------------------------------


    முப்பத்தஞ்சு வருஷம் முன்னால எனக்கு வயசு 8.


    பெருமூச்சு....இது நான்தான். அம்மா இல்ல.


    ஆமாம். அம்மா இப்ப இல்ல. இன்னியோட எங்கம்மாவோட காரியமெல்லாம் முடிஞ்சு முப்பது நாள் ஓடியாச்சு..


    “அப்பறம் வேறெப்பலாம்மா சாமிகிட்ட நீ வேண்டிகிட்ட?”ன்னு அம்மாவை ஒரு தரம் விளையாட்டா கேட்டேன்.


    “திடீர்னு அப்பாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடெண்ட். அப்பாவுக்குதான் வலி தாங்காதே. ‘கடவுளே அவர் வலியை எனக்கு கொடுத்துடுப்பா’ன்னு கேட்டேன்.”


    அப்படியே வரிசையா மளமளன்னு சொல்லிக் கொண்டு போனாள்....


    அப்பா அண்ணாவை அடிச்சபோது, அண்ணாவுக்கு வலிச்ச வலிக்கு...


    அண்ணியோட பிரசவ வலிக்கு...


    பாட்டியோட பல்வலிக்கு.....


    மாமாவோட மார் வலிக்கு...


    பேத்தி மடால்னு கட்டில்லேருந்து கீழ விழுந்த வலிக்கு......


    பேரன் மூக்கு மேல, பக்கத்து வீட்டு பையன் ஓங்கி குத்தின வலிக்கு....


    இது எல்லாத்துக்கும், ‘கடவுளே..வலி கொடு..வலியை எனக்கு மட்டும்
    கொடு’ னு அசட்டு அம்மா பொசுக்கு பொசுக்குனு யோசிக்காம சாமியை வேண்டியிருப்பா.


    கேட்டால் கொடுக்காமல் போக அந்த ஆண்டவன் இல்லாமல் இருந்தால் தானே?


    கொடுப்பான்.


    கொடுத்தான்.


    அம்மாவின் கடைசி பத்து வருடங்கள் மனவலியுடன், கூடுதலாக கால் வலியையும் சேர்த்து கொடுத்தான். அப்பறம் இங்கும் அங்குமா ஒடம்புல சின்னதும் பெரிசுமா இன்னும் நிறையவே வலிகள். ஆகமொத்தம் வலிக்கு கொறச்சலே இல்லை. வேற என்னத்த அவ வரமா கேட்டா? வலியைத் தவிர?


    கடைசி 30 நாள் படுத்த படுக்கையாய் இருந்தபோதும் வலி.


    கடைசி இரண்டு நாட்கள் அரை மயக்கத்தில், இரண்டு கால்களிலும் வலியின் உச்சம். பாதத்தில் ஆரம்பித்த வலி, சிறுகச்சிறுக முட்டிவரை ஏறி, 24 மணி நேரத்துக்குள் அதன் உரிய அடையாளங்களுடன் (நரம்புகள் புடைத்து, செக்கச்செவேலென) தொடை வரை ஏறிவிட்டது. அவள் இது வரை வாழ்நாளில் கண்டிராத வலி அது.


    உயிர் போற வலி...


    உயிர் போறதுக்கு முன்னாடி வர்ற வலி...


    மருந்து சரியில்லையா? மருத்துவர் சரியில்லையா? ஆஸ்பத்திரி சரியில்லையா? இல்லை பெத்த பசங்களா?


    எது எப்படியோ?


    ஒன்று மட்டும் உண்மை. ஒன்று மட்டும் சரி. அது அவள் அப்போது அனுபவித்த அந்த வலி.


    ஆண்டவன் இருக்கிறான்.


    அம்மாவின் வாழ்க்கையில் இதுவரை சொல்லியும், சொல்லாமலும் ஆயிரம் வலிகள் இருந்திருக்கும். அதெல்லாம் எனக்கு தெரியாமலில்லை. ஆனால் அம்மா போனதுக்கப்பறம் முதலில் நினைவுக்கு வருவது....அம்மா கடைசியா பேசினது, கடைசியா தூங்கினது, கடைசியா சிரித்தது, கடைசியா கேட்டது, கடைசியா வலித்தது இதெல்லாம்தான். ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் மாதிரியே, லாஸ்ட் இம்ப்ரெஷனும் மனதில் பதிந்து விடுகிறது.


    இதோ அம்மாவின் கடைசி 12 மணி நேரங்கள்...அப்படியே என் நினைவிலிருந்து....


    ஆஸ்பத்திரி நிசப்தம், மணி சரியா இரவு 1.31....


    “ராதா”


    “என்னம்மா?”


    “ராதா...ராதா....வலி..”


    “என் செல்ல அம்மா இல்ல, சரியாயிடும்”


    “கால்... கால் வலி.”


    “இந்த காலாம்மா?”


    “ரெண்டு காலும்”


    “மருந்து இப்ப சாப்டியே. சரியாயிடும் பார்”


    “ராதா....ராதா...வலி...வலி..”


    “என் கண்ணு இல்ல..ராமா ராமான்னு சொல்லுமா...வலி போயிடும்...யோகிராம் சுரத்குமார்னு சொல்லுமா”


    அதே அரை மயக்கந்தான்.


    “ராம்...ராம்....யோகிராம் சுரத்குமார்....ராம்...ராம்...யோகிராம் சுரத்....யோகிராம்.....ராம்...ராம்...ராதா...”


    நீ கேட்டதை கேட்டபோது கொடுக்காம நாள் குறித்து கொடுக்கிறான். அதுவும் நாள்கணக்கா கொடுக்கிறான்.


    ஆண்டவன் இருக்கிறான்.....


    “ராதா....ராதா...வலி..”


    “இப்ப கொறஞ்சுடும் பாரு”


    “வலிக்குது”


    “யோகிராம் சொல்லுமா”


    குழந்தை மாதிரி சொன்னாள். “யோகிராம்......ராம்...ராம்....”


    அதே ஆஸ்பத்திரி நிசப்தம், காலை மணி 3.00


    “ராதா ராதா....வலி....வலி”


    “ராம்...ராம்...ராம் சொல்லு”


    “ராம்.....ராம்....ராம்......ராம்...........ராதா........ராதா........ராம்.....ராம்.........ராதா.....ராம்.........ராதா..........ராம்............ராதா........ராம்” அவள் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருக்கு. என் கண்ணிலும் தான். அந்த நேரத்துல அது ஒண்ணுதான் என்னால முடிஞ்சது.


    ”ராதா....ராதா...”


    மறுநாள் காலை 6 மணிக்கு அம்மா ஐ.சி.யூவுக்குப் போனப்பறம், ராமா... ராதா…எதுவும் எனக்கு கேக்கல. அவ கூடதான் சாமி இருக்காரே!! வலியை ஊசி ஊசியா அவர்தானே ஏத்தறார்!.

    பகல் மணி 11.00. அவளின் அதிகபட்ச வலி. கடவுளே...இன்னும் ஐ.சி.யூக்குள்ளதான் இருக்கியா?


    மதியம் மணி 1.00. வலியின் உச்ச கட்டம். ஐ.சி.யூ குலுங்கியது.


    ஆண்டவன் இருக்கிறான்...


    மணி 1.20.....ஒரு வழியாக வலி குறைந்துவிட்டதை டாக்டர் எங்களுக்கு சொன்னதைத் தொடர்ந்து, சாமியும் விடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். உறவுகள் எல்லாத்துக்கும் நாங்கள் ‘அம்மாவுக்கு வலி விட்டதை’ சொல்லி அனுப்பிவிட்டோம்.


    மதியம் மணி 1.31.... அம்மா வலி முற்றும் அடக்கம். கூடவே எனது அழுகையும் அடக்கம்.

    *************************
    காமாக்ஷி

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் govindh's Avatar
    Join Date
    04 Mar 2010
    Location
    Kottaram
    Posts
    1,907
    Post Thanks / Like
    iCash Credits
    38,869
    Downloads
    0
    Uploads
    0
    வலி கொடு....!
    படித்து முடிக்கும் போது...
    மனதிற்கு வலி கூடி விட்டது...!

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    தாயின் பிரார்த்தனைகள் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராது, முழுமையானதானாக அமைந்திருக்கும்.
    நாம் கேட்காமலே கிடைத்த வரம்.., தாய்...

    நேற்றைய தினம் ஒருவர் எனக்குச் சொன்னார்,
    "உனக்குக் கோபம் வரும்போதெல்லாம், தாய் தந்தையரை நினைத்துக்கொள், மனதால் பேசிக்கொள், கோபம் அடங்கிவிடும்" என்று...

    இந்தக் கதையையும் படித்தபின், என் மனம் சொல்கின்றது உன் வலிநிவாரணி அம்மா என்று...

    பாராட்டுக்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    கணவன், குழந்தைகள் மட்டுமல்லாது தன்னைச் சுற்றியுள்ள அத்தனை மனிதர்களின் வலியையும் வரமாக வாங்கிக் கொண்டவளின் கடைசி நாட்கள் இத்தனைத் துயர் தருபவையாக இருந்திருக்கவேண்டாம். பாவம், இத்தனைப் பேரின் வலியை வாங்கிக் கொண்டாளே... அத்தனைப் பேரில் ஒருவரேனும் அவள் வலியை வாங்க முயலவில்லையே.... ஒருத்தர் வேண்டாம், அத்தனைப் பேருக்கும் பகிர்ந்துகொடுத்திருந்தாலும் வலி மாயமாய்ப் போயிருக்குமே என்று என்னென்னவோ எண்ணத்தோன்றுகிறது. பரிதாபத்துக்குரிய தாயவள்! தாய்மையின் மொத்த உருவமும் அவளே... கதைக்கருவும் அதை எழுதியவிதமும் கதையோடு ஒன்றவைத்து நம் வீட்டில் நிகழ்வதைப் போன்ற ஒரு உணர்வை அளித்து வாட்டமுறச் செய்கின்றன. இதுபோன்ற தாய்மையைப் போற்றும் கதைகள் வழங்குவதற்காகவே உங்களைப் பெரிதும் பாராட்டுகிறேன் காமாக்ஷி. மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    சந்தாஷங்களைப் பகிர்ந்துகொண்டு, வலிகளை மட்டும் தானே வாங்கிக்கொண்டு அநுபவிக்கத் துணிந்தவள் என்பதால் தான் தாயைக் கொண்டாடுகிறோம்....அவள் மறைந்தபின்......!
    Last edited by ஜானகி; 04-01-2012 at 12:47 AM.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    வலி - என்றால் வலிமை என்றும் பொருள் உண்டு. STRENGTH
    வலி - என்றால் துன்பம் என்றும் பொருள் உண்டு. PAIN


    நம் பண்பாட்டின் படி வலிகளைத் தாங்கக் கூடிய பக்குவமே வலிமையாகும்.

    (வடிவேலு சொல்றா மாதிரி "இவன எம்புட்டு அடிச்சசாலும் வாங்குறான்டா! இவன் ரொம்ப நல்லவன்டான்னு சொல்லிட்டானுங்குமா")


    ஒரு பாபர் மகனின் நோயை பிரார்தித்து வாங்கிக் கொண்டார். சரித்திரத்தில் அழியாத இடம் அவருக்கு...

    ஆயிரமாயிரம் அம்மாக்கள்..

    வலியை எடுத்துக் கொண்டு நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும் குணம் தெய்வகுணமாகும். கொடைமடம் என்பது போல எந்த லாஜிக்கும் பார்க்காத கருணையே தாய்மையாகும்.







    நாம்தான் துன்பங்களைப் பிறருக்கு தரக்கூடிய வல்லமையே வலிமை எனத் தவறாய் எண்ணிக்கொள்கிறோம்.
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.


    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by govindh View Post
    வலி கொடு....!
    படித்து முடிக்கும் போது...
    மனதிற்கு வலி கூடி விட்டது...!
    நன்றிகள் கோவிந்த்

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    தாயின் பிரார்த்தனைகள் மட்டுமே பிரதிபலன் எதிர்பாராது, முழுமையானதானாக அமைந்திருக்கும்.
    நாம் கேட்காமலே கிடைத்த வரம்.., தாய்...

    நேற்றைய தினம் ஒருவர் எனக்குச் சொன்னார்,
    "உனக்குக் கோபம் வரும்போதெல்லாம், தாய் தந்தையரை நினைத்துக்கொள், மனதால் பேசிக்கொள், கோபம் அடங்கிவிடும்" என்று...

    இந்தக் கதையையும் படித்தபின், என் மனம் சொல்கின்றது உன் வலிநிவாரணி அம்மா என்று...

    பாராட்டுக்கள்...
    மிக்க நன்றி

  9. #9
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    வலில்யை படித்து முடித்த பின் நிஜமாகவே மனசுக்குள் வலிக்கிறது நெகிழ்ச்சியான கதை

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர் இராஜேஸ்வரன்'s Avatar
    Join Date
    07 Feb 2012
    Location
    Chennai, India
    Posts
    158
    Post Thanks / Like
    iCash Credits
    14,317
    Downloads
    1
    Uploads
    0
    மிகவும் அருமையான கதை.

    ராமா... ராதா…எதுவும் எனக்கு கேக்கல. அவ கூடதான் சாமி இருக்காரே!! வலியை ஊசி ஊசியா அவர்தானே ஏத்தறார்!.......

    ஒரு வழியாக வலி குறைந்துவிட்டதை டாக்டர் எங்களுக்கு சொன்னதைத் தொடர்ந்து, சாமியும் விடை பெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
    நெஞ்சை தொட்ட இடங்கள். ஒரு வேளை ராதாவின் பாட்டி இருந்திருந்தால் வலியை 'எனக்கு தா' என்று சாமியை கேட்டு வாங்கிக்கொண்டிருப்பாளோ? ஆசிரியர் கதையை மிகவும் உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள்.

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    14 Oct 2009
    Posts
    425
    Post Thanks / Like
    iCash Credits
    12,815
    Downloads
    16
    Uploads
    0
    Quote Originally Posted by இராஜேஸ்வரன் View Post
    மிகவும் அருமையான கதை.



    நெஞ்சை தொட்ட இடங்கள். ஒரு வேளை ராதாவின் பாட்டி இருந்திருந்தால் வலியை 'எனக்கு தா' என்று சாமியை கேட்டு வாங்கிக்கொண்டிருப்பாளோ? ஆசிரியர் கதையை மிகவும் உணர்வு பூர்வமாக எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள்.
    ஊக்கத்திற்கு பாராட்டும் படித்தமைக்கு நன்றியும்!!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •