குழந்தைப் பருவத்தை விடவும்
குதூகலமானது இல்லை.

குழந்தைகளிடம் மட்டும்தான்
மகிழ்வு
குடியிருக்கிறது.

குழந்தைகளின்
அழுகுரலற்ற
எல்லா லோகமும்
சூன்யமாகிப்போகும்.

குழந்தையின் சிறுநீர் படாத,
குழந்தையிடம் உதை வாங்காத,
எவனுக்கும்
சுவர்க்கம் கிடையாது.

கொடுமையென சுழலும் பூமியிலே
மானுடர்க்கு
கொஞ்சமேனும் நிம்மதி உண்டென்றால்,
அது குழந்தையிடம் மட்டும்தான்.

எந்தக் கவிஞனும்
மழலை மொழிக்கு முன்னால்
தன் கவிகளை
முன்னிறுத்த மாட்டான்.

பிஞ்சுகளின்
பாதங்களை விடவும்
மென்மையானது அவர்களின் மனது.

எப்போதுமே
குழந்தைகளாகவே
இருந்துவிடக் கூடாதா
எனத்தான்
எப்போதும் எண்ணம் எழுகிறது.

ம்....
என்ன எழுதி என்ன
களிப்பாலிலும்
கார் நெல்லிலும்
கொத்துக் கொத்தாய்
குழந்தைகளை கொல்லும்
அமங்கலமான தேசத்தில்
இருந்து கொண்டு.......