Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 59

Thread: தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை– 25 : ருத்ராக்ஷப்பூனைக்கு...

                  
   
   
  1. #13
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    இன்னம்பூரான் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
    எல்லா நடைமுறைகளிலும் ஒரு நழுவு உத்தி எப்படியோ உருவாக்கப் பட்டு விடுகிறது.
    தொடருங்கள்.
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்களுக்கு நன்றி ஜெய், ஜார்ஜ்.
    ----------------------------------------------------------------------------------

    தணிக்கை என்ற முட்டுக்கட்டை - 4

    இன்னம்பூரான்

    உலோக ரஸவாதம்

    பகவத் கீதையிலே, ‘…யுக்த இத்யுச்யதே யோகீ ஸமலோஷ்டாஸ்ம காஞ்சனஹ’ என்று ஒரு வரி மண்ணையும் பொன்னையும் சமமானதாக நோக்கும் யோகியைப் பாராட்டுகிறது. இந்த வடக்கத்தி சமாச்சாரம் யார் வேணும்னு அழுதார்கள் என்று தமிழாவேசம் கொண்டோர்க்கு, ஒரு அகத்தியர் பாடல்:
    “கேட்கவே மதியில் அப்பா
    கிருபையால் பத்துக்கு ஒன்று
    மீட்கவே உருக்கிப் பார்க்க
    மிக்கது ஓர் மாற்றாகும்
    வீட்கமாய் தகடு அடித்து
    விருப்புடன் காவி தன்னில்
    ஆட்கவே புடமும் இட்டால்
    அப்பனே தங்கம் ஆமே.”
    தெரிஞ்சவா என்ன சொல்றான்னா, பொன்னுக்கு வீங்காதவர்களுக்குத் தான் ரஸவாதம் கை கூடும் என்று. வாஸ்தவம் தான். ஆனா, இந்த லெளகீக பூலோகத்தில், இது எந்தத் தெய்வத்துக்குப் ப்ரீதீ, சொல்லுங்கோ? ஹைவே ராபரி என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களோ? அந்த ஹைவே இலாகாவே ரஸவாதம் பண்றேன் பேர்வழின்னு ஒரு ஏடாகூடத்தில் இறங்க, ‘வெங்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி’ நாமளும் பீடு நடை போட, ஈயத்தை பாத்து இளிச்சது பித்தளை! எல்லாம் உலோக மயம் ஜகத்!

    என்ன சுத்தி வளைக்கிறேனே என்று பார்க்கிறீர்களா? (அவான்னா வளைக்கறா!) குஜராத்திலிருந்து சற்றே விலகி, இன்றைய கால தேச வர்த்தமானத்தில், அநாமதேயமாக இருக்கவேண்டிய மா மாநிலம் ஒன்றில், இந்தக் கூத்து நடந்தது. என்னுடைய சஹபாடி ஒத்தன் பாம்பேயில் இருக்கும் ஒரு பொறியியல் கம்பெனிக்கு சேர்மன். எங்கள் டெண்டர் ஒன்றுக்கு விண்ணப்பித்தான். உனக்கு இது எப்டி மூக்கில் மணந்தது என்று யான் வினவ, அவன் கேட்டான், ‘ஏன்டா! நீ பேப்பர்லே டெண்டர் நோட்டீஸ்லாம் பாக்கமாட்டியா? அதுலே தாண்டா ஸூக்ஷ்மம்’ என்றான். அன்றிலிருந்து டெண்டர் நோட்டீஸெல்லாம் நான் ஓதாமல் இருந்த நாள் கிடையாது. வந்தது வினை!

    காலை ஆறு மணி. வலது கையில் ஒரு டம்ளர் காஃபி; இடது கையில் நாளிதழ். சூடாக ஒரு டெண்டர் நோட்டீஸ்! ஆழ்ந்து விட்டேன். ‘என்னது இது? காஃபி ஆறிடுத்து. பேப்பராம் பேப்பர் என்று நம்மாத்து மாமி விரட்ட, நான் காஃபியை முழுங்க, அது புரைக்கேற, டெண்டர் டென்ஷன் என் தலைக்கு ஏறிவிட்டது.

    அலுவலகம் போன உடனே, பொதுப்பணித் துறை தலைவருக்கு ஃபோன் போட்டுக் கேட்டேன், ‘சார்! சாதம் வடிச்சாச்சு. அதை மறுபடியும் கிச்சலி சம்பா அரிசியாக்கணும் என்கிறார்கள்!’ மனுஷன் எமகாதகன். விஷயத்தை ‘டக்’னு கிரகிச்சுண்டுடுவார். ஆனா, ‘ப்ளண்ட்டா’ வெட்டு ஒண்ணு, துண்டு இரண்டு என்ற வகையில் பேசுவார். ‘விஷயத்துக்கு வா. இந்த ஆடிட் காராளே, சுத்தி வளைச்சுண்டு…’ என்றார் அந்த ஐ.ஏ.எஸ். (‘வளைக்கிறேன் இரும்.’ என்று எனக்குள் கருவிக்கொண்டேன்.)

    இனி, ஒரு விளக்கம் அளித்த பிறகு தான், அவரிடம் சொன்னதைக் கூறுவது நலம். இரும்பு ஒரு தாது. அதிலிருந்து எஃகு தயாரிக்கப்படும். அதில் பலவகை – மைல்ட் ஸ்டீல் என்ற அடிப்படை எஃகு முதல் ஹை-கார்பன் ஸ்டீல் என்றெல்லாம் பல வகை. ‘ங’ப்போல் வளை’ என்ற ஒளவையார் வாக்குக்கிணங்க, மைல்ட் ஸ்டீலை, ராமர் தனுஸை வளைத்தது போல, இரும்பு ஆலையில், உரிய முறையில் வளைத்துவிட்டால், அதன் வலிமை அதிகம். ஒரிஜினல் பேடண்ட் பெயர்: ரிப்ட் டார்ஸ்டீல். (TOR steel is one of the highest grades of steel which is used in reinforced concrete. TOR steel is a Cold Twisted Deformed (CTD) Steel Reinforcement Bar.) அப்றம், நாய் வால் தான். வளைந்ததை நிமிர்த்த முடியாது. ஆனால், ‘வளைந்த டார்ஸ்டீலை நிமிர்த்தி மைல்ட் ஸ்டீல் ஆக்குவதற்கு, அதுவும் நூற்றுக்கணக்கான டன்கள், டெண்டர் போட்றுக்கா. நாலு கேள்வி கேட்போம், சொல்லிப்பிட்டேன்’ என்றேன்.

    எனக்கு ஆடிட் ஆட்சேபணையை விட, வருமுன் காப்போனாக, தவறைத் தடுப்பது பிடிக்கும். ஆகவே, தந்தி அடிக்கற மாதிரி எங்களுக்குள் வார்த்தை பிரயோகங்கள். மத்தியானம் இரண்டு மணிக்கு மீட்டிங். ஏதோ ஒரு வால் அறுந்து போகும். ‘அது நீயா / ஹைவே முதன்மை பொறியாளரா?’ என்று சவால் விட்டார்.

    இனி நாடக பாணி; தெளிவுற விளக்கும். கிஞ்சித்து ஆங்கிலக் கலப்படம். இரும்பு எஃகு ஆகிறது. சந்தேஹமிருந்தா கேளுங்கோ. சந்தேஹ நிவாரணத்துக்கு, நான் உத்தரவாதம்.

    கதாபாத்திரங்கள்: துறைத் தலைவர் (து.த.), டெபுடி அக்கவுண்டண்ட் ஜெனெரல், (டீ.ஏ.ஜி: இருக்கிறதுல்ல ஜூனியர்.) தலைமைப் பொறியாளர் (த.பொ.) + ஒரு படை, டவாலிகள்.

    சித்துண்டி: வறுத்த முந்திரிப் பருப்பு, குணுக்கு போன்ற வடை, வடை போன்ற குணுக்கு, காஃபி / டீ.

    பின்னணி இசை: பழைய ஏர்-கண்டிஷரின் உறுமல்.
    (அரை மணி முன்னால் வந்து து.த.வின் காதைத் த.பொ. கடித்ததன் விளைவாக…)

    து.த: ‘ஸெளந்தரராஜன்! எல்லாம் ஆடிட் கிருத்திரமம் தான். நீங்க தான் ஏன் இத்தனை டார்ஸ்டீல் தேக்கம்? என்று கேட்டீர்களாம்.

    த.பொ: அதனால்தான் இந்த டெண்டர். அவா கேட்காட்டா இந்த டார்ஸ்டீல் தேக்கம்…(சொல்லாமல் சொன்னது: எங்கள் தூக்கத்தைக் கலைக்காது!)

    டீ.ஏ.ஜி. (அடியேன்): புள்ளி விவரங்களைப் பாரும். பாலம் கட்டத் தனி இலாகா. ஹைவேஸ் ரோடு இலாகாவுக்கு எஃகு தேவையில்லை. அஞ்சு வருஷமா, இத்தனை லட்ச ரூபாய் முடக்கம். ஏன் இதை வாங்கினீஹ? எந்த எஸ்டிமேட்? ஆமாம்? எப்டி இந்த ரஸவாதம் நடக்கும்?

    த.பொ.வின் படைச் சிப்பந்தி ஒருவர், அவர் காதில் முணுமுணுக்க, அவர் பகர்ந்தது: ‘முதல் பாயிண்ட்: டீ.ஏ.ஜி. is not a technical person. இரண்டாவது பாயிண்ட்: இந்த ‘ரஸவாதம்’ ஆட்சேபனை கடிதம், ஆடிட் கிட்டேருந்து வரவேயில்லை. I object to Soundararajan fishing in troubled waters. நான் பதில் சொல்வதற்கில்லை. (கோப்புகளை மூடுகிறார், என்னைப் பார்த்து முறைத்துக்கொண்டே.)

    து.த. Yes. Soundararajan is fishing in troubled waters. He is paid for it. But, you are in troubled waters. ‘த.பொ. என்னிடம் சொல்லுங்கள்: ‘டார்ஸ்டீலை மைல்ட் ஸ்டீலாக மாற்றுவது எப்படி?’

    [நீண்டதொரு மெளனம் நிலவியது. ஒரே டென்ஷன்.]

    த.பொ: இதெல்லாம் சகஜம்; எளிது; புதிது அல்ல. Everything is above board. டீ.ஏ.ஜி.க்குக் கரும்பு தின்ன ஆசை. நான் ஏன் கொடுக்க வேண்டும்? (ஆனைக்கு தீனி போட்டுக் கட்டுபடியாகுமா? என்று கருவிக்கொண்டே!)

    டீ.ஏ.ஜி.: என்னைப் பற்றி இருவரும் பேசுகிறீர்கள். நான் ஆடிட் ஆட்சேபணை எழுதி வந்திருக்கிறேன். கொடுத்து விடவா?

    த.பொ.வின் அடிப்பொடி: (உரக்க) வேண்டாம்! வேண்டாம்!

    [கொஞ்சம் மெளனம் நிலவியது. ஒரே டென்ஷன். அதிகப்படி உறுமல்கள் மென்மையாகக் கேட்டன.].

    து.த.: Let the Audit speak.

    டீ.ஏ.ஜி: நான் சொல்வதைத் த.பொ. ஆதாரத்துடன் மறுக்கட்டும்.
    1. இந்த டெண்டர் சட்டப்படியும் செல்லாது; டெக்னிகலாகவும் இயலாதது. மொட்டை அடிச்சுட்டு வகிடு எடுக்கறாப்பல!
    2. நடக்கப் போவது பண்ட மாற்றம். இந்த அழகில் ‘உருக்குவதில் சேதாரம்’ இத்தனை விழுக்காடு என்று ‘டெக்னிகல்’ பாயிண்ட் வேறே!!! நான் சொல்வது தப்பு என்றால், த.பொ.விடம் எஸ்டிமேட் கேட்பேன். ஏன்? து.த. வாங்கிப் பார்க்கட்டுமே!
    3. அத்தருணம், இவர்களே எத்தனை நஷ்டம் எஸ்டிமேட்டில் போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கவும்.
    4. Let me take an executive stand for a change. உங்கள் வசம் இருக்கும் இலாகாக்களில், இன்னார், இன்னாருக்கு டார்ஸ்டீல் தேவை. அவர்களும், கேட்டுப் பார்த்து, கேட்டுப் பார்த்து, களைத்து போய்விட்டார்கள். அவர்களுக்குக் கொடுப்பதை விட்டு விட்டு…

    து.த.: டீ.ஏ.ஜி.க்கு நன்றி. ஆனால், அவர் ஆடிட் ஆட்சேபணையை விட்டுக் கொடுத்ததைப் பற்றி, ஏ.ஜி.யிடம் புகார் அளிப்பேன் (அப்பாடா! முதல் புன்சிரிப்பு.).

    (கடுமையான தொனியில்): த.பொ. இன்றே இந்த டெண்டரை வாபஸ் பெற்று, எனக்கும், டீ.ஏ.ஜி.க்கும் எழுத்து மூலம் அதைத் தெரிவிக்க வேண்டும். மீட்டிங் ஓவர்.

    டீ.ஏ.ஜி: இந்த டெண்டர் யாருக்குப் போயிருக்கும் என்று சொல்லவா?

    து.த.: நோ. நீ வந்த காரியம் ஓவர். மீட்டிங்கும் ஓவர். You stay for a minute.

    [து.த: சொல்லு. யாருக்குப் போயிருக்கும்?

    டீ.ஏ.ஜி: சொல்வதற்கில்லை. ஆனால், இன்னார் இன்னார் எழுதிய கடிதங்களைப் பாருங்கள். (காட்டுகிறார். இருவரும் வியப்பு மேலிட, கலைந்து போகிறார்கள்.) அன்றிலிருந்து, அந்த து.த., டீ.ஏ.ஜியின் நண்பேன்டா.]

    தொடரும்....

  3. #15
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 5

    தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 5

    இன்னம்பூரான்


    சேம் சைட் கோல்!

    இன்று ‘அநாமதேயம்’ (அதாவது) ‘மூளையின் மர்மங்கள்’ என்ற தலைப்பில், டேவிட் ஈகிள்மேன் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது. அவர் தடாலடியாக ஒரு கருத்தை முன் வைக்கிறார். ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடிந்தால், பின்னவரை அவரது தவறான செயலுக்குத் தண்டிப்பது நியாயமா? இது விஞ்ஞான ரீதியாகச் சில சோதனைகளின் பயனாக எழுந்த கேள்வி. அதன் பக்க விளைவாக, ஒரு உபத்திரவம்.

    பல துறைகளில், அன்றாட அலுவல்கள், நிர்வாகம், மானேஜ்மெண்ட், தணிக்கை, காவல் துறை, ஆமாம், தேர்தல் நடத்துவது ஆகிய ‘வேலி காத்தான்‘ பணிகளில் இருப்பவர்களை ‘பயிரை’ மேய ஏவ முடியும் என்றால், சிக்கல்களும் முடிச்சுகளும் இறுகுமே தவிர, தீர்வு காண்பது அரிது. எனினும், வேலிகளை அடர்த்தியாக இறுக்கி, அன்றாடம் உறுதியாக இருக்கும்படி அவற்றைப் பராமரிக்க வேண்டும்; அது முடியும். தணிக்கைத் துறைக்கு, அந்த நிலைப்பாடு இன்றியமையாதது என்பதில் ஐயமே இல்லை. சில கசப்பான / மனத்துக்குகந்த அனுபவங்களையும் / ஒரு இலக்கிய வரவையும் எடுத்துக் கூறினால், தவறில்லை. அவை படிப்பினையே.

    ஒரு நாள் அப்பா அலுத்துக்கொண்டிருந்தார், வழக்கத்துக்கு மாறாக. ஊட்டியில் வேலை. வேனில் காலத்தில் அரசே அங்கு முகாம். இதெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னால். நாணயத்திற்குப் பெயர் போன அதிகாரி ஒருவர் அவர் வாயில் புறப்பட்டு வர, விசாரித்தேன். ‘அவர் நல்லவர் தான். சுத்துப் படைகளுக்குத் தீனி போட்டுக் கட்டுபடியாகவில்லையே’ என்று அங்கலாய்த்துக்கொண்டார். நான் வேலைக்கு வந்த புதிது. ‘நீ ஜாக்கிரதையாக இரு’ என்றார். முதல் ஆடிட் பாடம், தந்தை சொல் மந்திரம் என்க.

    நாற்பது வருடங்களுக்கு பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, ஒரு நாள் சார் பதிவாளர் அலுவலகம் போக வேண்டியிருந்தது. என் தலைவிதியை நொந்துகொண்டே, தயங்கி, தயங்கி, பல தடவை ஒத்திப் போட்ட பிறகு, வேறு வழியில்லாமல் போனேன். ஏனெனில், அங்கு தரகர்கள் நெருக்க, அலுவலர்கள் ஒதுங்க, காசு புரள, லஞ்ச லாவண்யம் தலை விரித்தாடும். ஆனால், பாருங்கள். என் காரியம் சுளுவில் முடிந்தது, காசு, பணம் கொடுக்காமல். இனி ஒரு உரையாடல்:

    ஒருவர்: சார் வாங்கோ. பையன் இங்கிலாந்துக்கு போய்ட்டானாமே. நடேசா! சாருக்கு நல்ல நாற்காலி போடப்பா. இது ஆடறது. அப்படியே போய் அவருக்கு கோக்கோ கோலா வாங்கிண்டு வா. எதற்கும் ஒரு லிம்காவும்… இன்னைக்கு லேட்டாத்தான் எனக்கு லன்ச். காலை டிஃபன் ஹெவியோல்லியோ! ஹி! ஹி!

    நான் (தயங்கி, தயங்கி): யார் என்று தெரியவில்லையே. நான் இது எல்லாம் குடிப்பதில்லை…டயபெட்டீஸ்! (நிர்தாக்ஷிண்யமாக சொல்ல வேண்டியது தானே, ராஜூ! ஏன் நொண்டி சாக்கு? => இது உள் மனது.)

    அவர் (சபையோரை விளித்து): சார் வைத்தியை மறந்துட்டார்! அவருடன் ஆஸ்பத்திரி ஆடிட் போயிருக்கேன் -1972இல். டாக்டரெல்லாரையும் குடஞ்சு எடுத்துட்டார். சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேலையும் நெட்டி வாங்கிடுவார். ஹி! ஹி!. கோலாவா? லிம்காவா?
    இரண்டும் வந்துடுத்து. கட கட வென, காணாது கண்ட பட்டிக்காட்டான் மாதிரி, கோக்கோ கோலாவை ‘ஜுர்ர்’ என்று உறிஞ்சுகிறார்! (அச்சமில்லை! அச்சமில்லை! ஓய்வு பெற்ற அதிகாரியிடம் அச்சமில்லை! அச்சமில்லையே!) எனக்கு அவரைச் சுத்தமாக ஞாபகம் இல்லை. மனசுக்குள்ளே ஒரு அல்ப சந்தோஷம் => இந்த ஆடிட்காரன் சார்பதிவாளரை இந்த உறிஞ்சு உறிஞ்சுகிறானே என்று. ஆனால் கருவேல முள் தைத்த மாதிரி ஒரு வலி. => டிபார்ட்மெண்ட் பேரைக் கெடுக்கிறானே. சேம் ஸைட் கோல் போட்றானே என்று.

    ஈகிள்மேன் சொல்ற மாதிரி, நற்குணத்தைக் குலைப்பது எளிது. களையெடுக்கச் சுணங்கினால், நாற்று அழியும். மேலதிகாரி இன்ஸ்பெக்சன் என்று வந்தாலே, அவரைத் தன்னைக் கட்டுவதில் புத்தி செல்வது மனித இயல்பு. தணிக்கையாளன் இன்னும் மோசம். மேலதிகாரியையும் கவிழ்த்து விடுவான். அவனுடைய வீக் பாய்ண்ட்டைப் பிடித்தால், அவனை வயப்படுத்தி விடலாம். இப்படி குறுக்குப் புத்தி செல்வதால், எந்த இன்ஸ்பெக்சன் வந்தாலும், சந்தா வசூலித்தாவது செலவு செய்வார்கள் என்று மறைமுகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டால், மறுத்து விடுவார்கள். இக்காலத்தைப் பற்றி யான் அறியேன். ஏனெனில், நான், ஒரு ஆஃபிஸை விட்டு வந்த பிறகு, அங்கு போவதே இல்லை. அது என் மரபு.

    என் முதல் இன்ஸ்பெக்சன், ஆண்டிப்பட்டி பிளாக் டெவலெப்மெண்ட் ஆஃபீஸ். 1958? மதுரை ஜங்க்ஷனில் என்னை ஆட்கொண்டார்கள், ஒரு குழு. அங்கே டேராப் போட்ட ஆடிட் சிப்பந்திகள் சூழ, வலம் வந்த பீ.டீ.ஓ. என்னை வைகை அணைக்கட்டு அதிதி இல்லத்தில் அமர்த்தினார். ஒரு சுற்று காஃபி, டிஃபன், தடபுடலாக. அருமையான நீர் நிலைக்காட்சி. இரவில் மின்சார ஒளி மயம். தனித்து விடப்பட்டேன். ஒரு முழு நாள் வேலை ஒன்றும் வரவில்லை. அப்பப்போ திண்டி. மறுநாள் காலை, இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் வந்தன, ஒரு படையுடன். நான் ஏதோ ருசி பார்த்ததுடன் சரி. வந்த படை தின்பண்டங்களை ஒரு தாக்கு தாக்கியது. எனக்கோ ஒரே கோபம். டிஃபன் கொண்டு வந்த ஜீப்பிலேயே, சிப்பந்திகளின் கோரிக்கைகளை உதறிவிட்டு, ஆஃபீஸ் போனால், எல்லாருக்கும் ஒரே கடுப்பு, ‘இள வயது. ஆஃபீஸர் மாதிரி கெத்தா இருக்கத் தெரியவில்லை’ என்று. என் சிப்பந்திகளே நெளிந்தார்கள்.

    ஒரு பாடாக, வேலை தொடங்கியது. நான் ஆண்டிப்பட்டிக்கு ஜாகை மாறுவதாகச் சொல்லிவிட்டேன். அது ஒரு பிரச்சினை. பீ.டீ.ஓ. வந்தார். வயதானவர். நல்ல மாதிரி. எடுத்துக் கூறினார்: இருப்பது ஒரு சிறிய விருந்தினர் இல்லம். அங்கு ஆடிட் பார்ட்டி முகாம். நீங்கள் வரலாமோ?

    பணிந்தேன். காம்ப்ரமைஸ்=>1. எனக்குக் கொடுக்கும் படியில் என்னால் இட்லி, தோசை, வடை, பொங்கல், உப்புமா, இடியாப்பம் எல்லாம் கட்டுப்படியாகாது. நான் கேட்டது மட்டும் கொடுத்தால் போதும். பீ.டீ.ஓ. ஐயாவின் அனுபவம் பேசியது, ‘கவலையற்க. பில் அப்படி கொடுத்தாப் போச்சு.’ நான் சம்மதிக்கவில்லை. நோ காம்ப்ரமைஸ்=>1.

    அடுத்த ரவுண்ட். அரசு சம்பந்தமாக பழகியதால், மதுரை கலெக்டர் நண்பர். ஒரு நாள் அவருடைய அழைப்பில் அவர் வீட்டில் டின்னர். எனக்கென்னெமோ தோன்றியது, ஆண்டிப்பட்டி பம்பரமாகச் சுழன்றது என்று. அத்தனை பரபரப்பு. என் மேல் மதிப்பு. ‘கிர்ரென’ பிரமாதமாக ஏறியது. ஒரு நன்மையும் விளைந்தது. கலெக்டர் சொல்லிவிட்டார், ‘இவர் மூளையை நீவிர் ஏவ வேண்டாம்’ என்று. நோ சிக்கல், நோ முடிச்சு. இட்லி மட்டும், காலையில்!

    பல அனுபவங்களைச் சொல்லலாம். பல படிப்பினைகளை முன் வைக்கலாம். பொதுவாகச் சில விஷயங்களைச் சொல்லி விட்டு, இப்போதைக்கு விடை பெறுகிறேன். பல துறைகளில் ‘வேலி காத்தான்’ போன்ற பணிகளில் இருப்பவர்களைப் ‘பயிரை’ மேய ஏவுவது எளிது. தணிக்கைத் துறையில் நல்ல மரபுகள் உண்டு. எழுதும் காகிதம், பேனா, பென்சில் எல்லாம் கொடுப்பார்கள். எடுத்துச் செல்லவேண்டும். தணிக்கை செய்யும் இடத்தில் யாசகம் செய்யக் கூடாது. சோத்துக் கடை நன்றிக் கடனில் மாட்டிக்கொள்ளக் கூடாது. மற்றவர்களுடன் அளவோடு பழகவேண்டும். எதற்கும் முன்னெச்சரிக்கை நலம். தாட்சண்யம், நற்பெயர் நாசம்.

    ஏவுபவர்கள் முதலில் நம்மை எடை போடுவார்கள். ‘கோயிலுக்குப் போவானா?’ பரிவட்டம் கட்டி, மாலைகள் அணிவித்து, மேளம் கொட்டி, தடபுடல் செய்து விடுவார்கள். எனக்கு அன்னவரம் சத்யநாராயணா கோயிலில் நடந்தது. தடுக்க முடியவில்லை. ‘சினிமா ஆசையா?’ தினம் இரண்டு ஷோ. நாலு பேர் துணைக்கு! எனக்கு இல்லை. தப்பித்தேன். சுற்றுலாப் பிரியனா? தலை சுத்தற வரைக்கும் அழைத்துச் செல்வார்கள். நான் சுற்றுலாப் பிரியன். ஒத்துக்கொள்கிறேன். அதுவும் கானகப் பிரியன். இந்தியாவின் எல்லாக் காடுகளிலும் சுற்றியிருக்கிறேன், ஏவுகணைகளின் தொந்தரவு இல்லாமல். முதல் படி: எல்லாத் துறைகளிலும் எனக்கு பிரதியுபகாரம் தேடாத நண்பர்கள் உண்டு.

    தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தின் உதவி நாடாமல், வனத் துறையில் ஒரு கெளரவப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, நண்பர்களின் உதவியோடு, நான் கானகங்களில் சுற்றியிருக்கிறேன்.

    முதல் விதி: செலவுகளை, கட்டணங்களை நேரடியாகக் கட்டுவது.

    இரண்டாவது: ஒளிவு, மறைவு இல்லாமல் செயல்படுவது.

    மூன்றாவது: விட்டுப் போன செலவுகள் என்ன என்று கேட்டு, கட்டுவது.

    உதாரணத்திற்குச் சொல்கிறேன். இரண்டு மாதம் லீவு போட்டு, குடும்பத்துடன், வடகிழக்கு மாநிலங்களில் பயணித்தோம், மும்பையிலிருந்து. ரயில்வே: வண்டிச் சத்தமில்லை. பிற்காலம் ரயில்வே போர்ட் சேர்மன் பதவியேற்ற எம். என். பிரசாத் அவர்கள் வரவேற்று, காரையும், விதிக்குட்பட்டு, என்னிடம் கொடுத்தார். அவருக்கு மும்பையிலிருந்து வந்த கடிதத்தைக் காண்பித்தார். அசந்து போய்விட்டேன். அதில், ‘He is no mere auditor; more than anything else, he is Railway’s friend’ என்று எழுதியிருந்தது. இத்தனைக்கும், தணிக்கைத் துறையின் வரலாற்றில், நான் ரயில்வே துறை மீது கணிசமாகக் குற்றம் சாற்றினேன் என்று பதிவு ஆகியிருக்கிறது.

    ஆந்திராவில் வனவிலங்குகளுக்கு ஆன என் பணியை அறிந்த அஸ்ஸாம் வனத் துறைத் தலைவர், எல்லா ஏற்பாடுகளும் மனமுவந்து செய்தார். இதை, இவ்வளவு விலாவாரியாகச் சொல்வதன் பின்னணி: ஒருவர் மூளையை மற்றொருவர் ஏவ முடியுமானால், வருமுன் காப்போனாக இருந்து, அப்பேற்பட்ட ஏவுகணைகளிலிருந்து தப்ப முடியும். அதற்குப் பயிற்சியும் திறனும் வேண்டும். அதுவும் போதாது. நண்பர்களும் வேண்டும்.

    ஒரு வினா: நீங்கள் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இது எல்லாம் கை கூடி வந்திருக்குமா? விடை: துர்லபமே. நான் அந்த அந்தப் பதவியில் இல்லாமல் இருந்தால், இருப்பதை வைத்துக்கொண்டு குப்பை கொட்டியிருக்கலாம், பராபரமே!

    தொடர்ந்த வினா: இலக்கிய வரவு எங்கே? விடையாய் வந்த வினா: இதுவே நீண்டுவிட்டது. படிப்பார்களோ இல்லையோ? ‘சோற்றில் மறைந்திருக்கும் பூசணிக்காய்’ மர்மம் வேண்டுமா? இலக்கிய வரவு வேணுமா?

    தொடரும்……..

  4. #16
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உண்மை சம்பவங்களின் நிகழ்வுகள் கத்தி மீது நடப்பது போன்று கடினமானது ...இந்த பதிவும் உண்மைதனை உணர்த்தும் போது நடக்கும் நிகழ்கால சம்பவங்களின் நிகழ்வை அறிந்து கொள்ள முடிகிறது ...தொடருங்கள் நண்பரே..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    நன்றி ஜெய்.

    -----------------------------------------------------------------------
    தணிக்கை என்ற முட்டுக்கட்டை - 6

    இன்னம்பூரான்
    பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!

    பகுதி 1:

    ‘தாரு ப்ரஹ்மன்’ தரிசனம் கிடைப்பது மஹாபாக்யம். 12 வருடங்களுக்கு ஒரு முறை பூரி ஜெகன்னாத் தெய்வ உருவங்களை மாற்றுவார்கள். மரத்தினால் செய்த உருவங்கள். தலைமை பூஜாரியின் கனவில், கானகத்தில் இறை உறைந்திருக்கும் மரம் காட்டப்படும். அதைப் பூஜித்து, சம்பிரதாயப்படி வெட்டி, இரதத்தில் கொணர்ந்து சிலாரூபங்கள் வடிக்கப்படும். அவர் கனவில் வந்தது தாரு (மரம்). பாமரனாகிய யான் அங்கு சென்று தொழுதது, ஜெகன்னாத பெருமாள். இந்த நுட்பத்தைத் திருமூலர் உணர்த்திய சூத்திரத்தைப் பாருங்கள்.

    ‘மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே’

    இதற்கு மேல் இங்கு ஆன்மீகமும் தெய்வீகமும் பேசினால், உதை தான் விழும். ஏனெனில், மறைக்கப்பட்டது முழுப் பூசணிக்காய். அது மறைந்தது சோற்றில். முற்றிலும் முரணான அலைவரிசையில் டப்பாங்குத்து ஆடும் செப்பிடு வித்தை. முழுப் பூசணிக்காயைச் சோற்றில்…

    இது பால்கூட்டு பண்ணுவாளே, அந்த பூசணிப் பிஞ்சு அன்று. கல்யாண பூசணியாக்கும். பெத்த பூசணி. காணுமே. என்னடா இது? கண்ணைக் கட்ற வித்தையாயிருக்கு என்று வியப்பு மேலிட, கண்களைச் சுழற்றுகிறீர்களா? ஆமாம். இந்த காண்ட்ராக்ட்டுகள் பின்னால் ஒரு மெகா-பில்டப்பே இருக்கிறது. டெண்டர் நோட்டீஸ்லே அந்த வேலைக்கு ஒரு எஸ்டிமேட் (தோராயமான செலவுத் தொகை) போட்டிருக்கும். அது தான் டெண்டர்களை மதிப்பீடு செய்வதற்கு அளவுகோல். நான் பார்த்த வரையில், முக்காலே மூணு வீசம், இந்த எஸ்டிமேட் எல்லாம், வை.மு.கோ. நாவல்களைப் போல கற்பனைச் செல்வங்கள் - காண்ட்ராக்டர்களுக்குச் செல்வம்.





    பெண் வாசனை அறியாத ரிஷ்யசிருங்கர் லகுவாக மோஹனாஸ்திரத்தைத் தொடுத்தாரல்லவா. அதே மாதிரி, அறியாப் பிள்ளையான நான் பொதுப்பணித் துறையின் லீலா வினோதங்களின் மீது தொடுத்த கணைகள் பல. உக்காய் வந்து சேர்ந்தேன், ஒரு மாதம் நாகார்ஜுன சாகர் திட்டத்தில் பயிற்சிக்குப் பிறகு. (அங்கு நான் கைமண்ணளவு கூட கற்றுக்கொள்ளவில்லை. பள்ளியில் கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொண்டு வரும் மாணவனைப் போல, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை ஓரளவு அங்கு கண்டுகொண்டேன்.)

    சூரத்திலிருந்து 50 / 60 மைல். வழியில் பர்தோலி சர்தார் வல்லபாய் படேலையும், ஸோன்கட் கோட்டை சிவாஜி மஹராஜையும் நினைவுக்குக் கொணர்ந்தன. அன்னியன் என்பதைப் எனக்குப் பல குறிப்புகளால் உணர்த்தினர். ஆஃபீஸர் காலனியில் எனக்கு ஒரு பங்களா ஒதுக்கப்பட்டு இருந்தாலும், எனக்கு அத்வானத்தில் ‘பூத்’ பங்களா! பகலில் தெரு நாய்கள், மாலையில் நாக ஊர்வலம், இரவில் எலிகள் கொண்டாட்டம். ‘டங்க்! டங்க்!’: பேயின் நடமாட்டம்! ஜீப்பில்லாத அதிகாரி முப்புரிநூல் இழந்த பார்ப்பனன் மாதிரி. ஊஹூம்! தரல்லையே. கோப்புகள் நம்மை எட்டிப் பார்க்காது. ஸோ வாட்! சிறுசுகளா! நாங்களும் தனிக்காட்டு ராஜா – ராணியாக ஜாலியாக இருந்து வந்தோம். டோண்ட் கேர்!

    அரசு விதிகள் எல்லாம் ஈயடிச்சான் காப்பியா! அவங்களுக்கு தெரியாமலே, ரேட்டு பட்டியலுக்கு (schedule of rates), நிதி ஆலோசகரின் சம்மதம் பெறவேண்டும் என்று ‘தேளைத் தூக்கி மடியில் விட்டுக்கொண்டிருந்தார்கள்’ (ஒரு மேலாண்மை எஞ்சீனியரின் திருவாக்கு). இந்தத் தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள், ஒரு அலமாரியை அடைக்கும். அவை தான் டெண்டர் மஹாத்மியத்தின் மூலாதாரம்; அப்பழுக்கில்லாத நடைமுறைச் சாத்தியம் என்று பீற்றிக்கொண்டார்கள். ‘டெக்னிகல்’ இல்லாதவர்களுக்குப் புரியாது. உமக்கு வேண்டாம் என்றார்கள். உக்காய் அணைக்கட்டு திட்டம் 1965இலியே ரூபாய் 100 கோடி. இருக்கும் 10 டிவிஷன்களில் நம்பர் 1: கட்டடங்களுக்கு; அதிகப்படியாக 2 / 3 கோடி; மற்ற 97 / 98 கோடி அணை சம்பந்தம். கட்டட டிவிஷனிலிருந்து, (என் அறைக்கு எதிர் வாடை) ஒரு லோடு ரேட்டுப் பட்டியல் தொகுப்புகள் வர மாதமிரண்டு பிடித்தது. அணை கட்டுபவர்கள் அப்படி மூலாதாரம் ஒன்றுமில்லை; அது சாத்தியமில்லை என்று சாதித்தனர்.

    யானும், பெருந்தன்மையுடன், பெரும்பாலான கட்டடங்கள் முடிந்து விட்டதால், ‘டிவிஷன் 1க்குப் பராமரிப்பு வேலை தான்; அவர்களின் ரேட்டு பட்டியலை பார்வையிடப் போவதில்லை; டெண்டர்களுக்கு என் சம்மதம் நாடினால் போதும். அந்த டிவிஷனில் ஆள் குறைப்பு தேவை’ என்று சொல்லிவிட்டு, அவர்களின் வசவுக்கு ஆளாயினன். அது போதாது என்று அணைக்கட்டு டெண்டர்களின் மதிப்பு போடும் விதம் என்னே? என்னே? என்று வினவினேன்.

    அடேங்கப்பா? எழுதப்படாத தடா ஒன்று இருந்தது. என்னுடன் பேசுபவர்கள் சந்தேஹிக்கப்படுவார்கள் என்று. அது தளர்க்கப்பட்டது போலும். இஞ்சினீயர்கள், அதிலும் வாசாலகர்கள், போட்டா போட்டி போட்டுக்கொண்டு என்னுடன் உறவு கொண்டாடினார்கள். என் வினாவுக்கு, ஆளுக்கொரு விடை அளித்தார்கள். சுருங்கச் சொல்லின், 95% விழுக்காடு ஒப்பந்தங்களுக்கு ரேட்டுப் பட்டியல் கிடையாது. ஒவ்வொன்றின் தொகையோ, கோடிக்கணக்கில். ஆனால், டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல் (rate analysis), கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாகப் பரிமளிக்கும்.


    தலைமை இஞ்சினீயருக்கு ஒரு மடல்:
    “ஐயா! நமது அணைக்கட்டு சம்பந்தமான ரேட்டுப் பட்டியல்களையும், ரேட்டு அலசல்களையும், நிதி ஆலோசகன் என்ற முறையில் ஆராய்ந்தேன். தற்காலம் நமது ரேட்டுப் பட்டியல்களுக்கு வேலையில்லை. விட்டு விட்டேன். கோடிக் கணக்கான செலவு சம்பந்தமான ஒரு ரேட்டு அலசலிலும் அடித்தளம் இல்லை. எல்லாம் ஊகத்தின் அடிப்படையில். என் ஆய்வில் தவறு இருக்கலாம். அவ்வாறு இருந்தால், அதைத் திருத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நூறு பக்கங்களில் என் ஆய்வு; அதை அனுபந்தமாக இணைத்துள்ளேன். தங்கள் உண்மையுள்ள… ‘ப்ளா’ ப்ளா’ ‘ப்ளா! (blah!…) இன்று வரை பதில் இல்லை. உறவு முறிந்தது, தற்காலிகமாக; உடன் இருந்தோம் (கோ-எக்ஸிஸ்டன்ஸ்!), நான்கு வருடங்கள். எனக்குப் பிரச்சினை ஒன்றும் இல்லை.

    சரி. உவமைக் கட்டை அவிழ்ப்போம். சோறு: தடிமன் ஆன ரேட்டுப் பட்டியல் தொகுப்புகளும், கணக்குச் சாத்திரம், சூத்திரங்கள், வரை படங்கள் சஹிதமாக டெண்டர் ஆவணங்களில், பக்கம், பக்கமாக ரேட்டு அலசல்களும். பூசணிக்காய்: ஆதாரமில்லாமல், ஊகித்து டெண்டர் விடுவதால், பிற்பாடு, ‘ங’ப் போல் வளைவது எளிது. தணிக்கைத் துறைக்குத் தண்ணி காட்டலாம். ஆட்டைத் தூக்கி மாட்டில் போடலாம். மாட்டைத் தூக்கி ‘கடப்ஸில்’ வீசலாம்.

    பகுதி 2:
    பகுதி 1க்குச் சான்றாக: தற்காலத் தமிழ்நாட்டு டெண்டர் விளம்பரம் ஒன்று, குருட்டாம்போக்கில் அலசப்படுகிறது. அந்தரங்கங்களில் செல்ல வாய்ப்பு இல்லாததால், நான் எல்லை கடக்கவில்லை. உங்கள் அனுமானத்திற்கு விட்டு விடுகிறேன். கேட்டால், சந்தேஹ நிவாரணம்.

    தமிழ்நாட்டு அரசு ெண்டர்களை http://www.tenders.tn.gov.in என்ற தளத்தில் காணலாம். கீழ சூரிய மூலை வகையறா வாய்க்கால்களில் காவேரி நீர் சேர, துகிலி கிராமத்தில் ஒரு சிறிய தடுப்பு அணைக்கட்டு. மேல் விவரங்கள், நுணுக்கங்கள் உள்பட, 60 பக்கங்கள்.



    மேலெழுந்தவாரியாக படித்தால் கூட, வெளிப்படையாக தெரிய வரும் உரசல்கள் ஜாபிதா பின்வருமாறு:

    1. ஒப்பந்தத் தொகை: ரூ. 87,13,176.10/- => என்னே துல்லியம்!); (பத்து பைசா தள்ளுபடி)

    2. ஏப்ரல் 20, 2011 பிரகடனம்; அதிகாரபூர்வமான தளத்தில் ஒரு வார தாமதத்திற்கு பிறகு, ஏப்ரல் 28, 2011 அன்று. => இதற்கே ஒரு வாரம்! டெண்டர் மனுவை கேட்டவர்களுக்கு எல்லாம், மே 6, 2011க்குள் தர இயலுமோ?

    3. டெண்டர்கள் மே 6, 2011 அன்று மாலை 3 மணிக்குள் போட்டாக வேண்டும். => என்ன அவசரமோ? கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். பத்து நாள் கெடு! ஆண்டவா!

    4. அரை மணி நேரத்திற்கு பிறகு திறக்கப்படும். ஏன் இந்த தாமதம் ஐயா! 3.01 மணிக்கு திறந்தால், முறைகேடுகளைத் தவிர்க்கலாமே!

    5. வந்ததடா ஆபத்து! நிபந்தனை 4 (b), நான் என்றோ குஜராத்தில் ஒழித்த (புனர்ஜென்மம் எடுத்ததோ?) மூடு மந்திரம்! அதற்காக ஒரு படிவமே, 23ஆம் பக்கத்தில்! [மீள் பார்வை: ‘... எட்டு பேர் டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். ‘மலை முழுங்கி மஹாதேவனுக்கு’ தான் கொடுக்கவேண்டும் என்று தீர்மானம். அப்படியானால், ‘மலை முழுங்கி’ [(+) %] / [(- %)] சின்னங்களுக்கு எதிரே காலியிடம் இட்டு சீல் செய்து, நல்ல பிள்ளையாக, பெட்டியில் போட்டு விடுவார். குறிப்பிட்ட தேதியன்று, சீல் உடைத்து, மொத்தத் தொகைகளையும் படிக்கும்போது, ஐயாவின் டெண்டர் இறுதியில் வாசிக்கப்படும். வாசிப்பவரோ, கணக்குப் புலியாகிய டிவிஷனல் அக்கவுண்டண்ட். ‘மலை முழுங்கி’யின் டெண்டரை எடுக்கும் வரை, மற்றவர்களின் மொத்தத் தொகையை மனத்தில் கொண்டு, கிடுகிடு வேகத்தில் கணக்குப் போட்டு, இவரின் டெண்டர் காலணா குறைவாக இருப்பதைப் போல [+%] அல்லது [-%] வாசித்து விடுவார்.]’ எனவே, அன்பர்களே! வேண்டப்பட்டவனுக்கு அடிக்கலாம் லக்கி ப்ரைஸ்…

    6. நிபந்தனை: மூன்று மாதங்களுக்குள் வாபஸ் வாங்கக் கூடாது (அ-து; முடிவெடுக்க அத்தனை நாட்கள் ஆகலாம்.) ஆனால், வேலையை ஒரு வருடத்துக்குள் முடிக்க வேண்டும். (மழைக் காலம் வந்து படுத்தக் கூடாது என்றால், மே மாதமா டெண்டர் கேட்பது!)

    7. அவசரக் கோலம் அள்ளித் தெளித்தால் போல. காலாகாலத்தில் கேட்டிருந்தால், ஒப்பந்த ரேட்டு குறையுமில்ல.

    8. இந்த ஒப்பந்தத்தில் 13 வேலைகள்; ஒவ்வொன்றிற்கும் ரேட்டு, வேலை அளவு, செலவினம் எல்லாம் விலாவாரியாகப் போட்டிருந்தாலும், நாங்கள் அதற்கெல்லாம் பொறுப்பு அல்ல என்று பிரகடனம்.

    9. முத்தாய்ப்பாக, எந்த டெண்டரையும் காரணம் கூறாமல் புறக்கணிக்க எங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற முழக்கம். சட்டப்படி இது செல்லாது.

    10. சொல்லணுமா? என்ன? தோண்டின குழியில் நிற்பதின் பெயர் ‘பிணம்’ என்று?

    தொடரலாமா....?

  6. #18
    இனியவர் பண்பட்டவர் த.ஜார்ஜ்'s Avatar
    Join Date
    23 Mar 2009
    Posts
    928
    Post Thanks / Like
    iCash Credits
    15,270
    Downloads
    7
    Uploads
    0
    தொடரலாம். [எழுத்து நடையை கொஞ்சம் கவனித்தால் இன்னும் விறுவிறுப்பாக அமையும் என்று தோன்றுகிறது.]
    குறைகளையல்ல.. நிறைகளையே நினைவில் கொள்.

  7. #19
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தொடரலாம் ..
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்களுக்கு நன்றி ஜார்ஜ், ஜெய். ஐயா அவர்கள் சில பகுதிகளை ஏற்கனவே எழுதி விட்டார். உங்கள் கருத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார் என்று நம்புவோம்.
    -----------------------------------------------------------------------------------

    தணிக்கை என்ற முட்டுக்கட்டை - 7

    இன்னம்பூரான்
    வேலி காத்தான்

    ‘அகப்பை பிடித்தவள் தன்னவளானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?’ என்றார், பாவாணர். ஆகவே, மஹாஜனங்களே, வேலிக்குக் காத்தான் வேணும்.
    ஒரு மாந்தோட்டம். சுற்றிலும் வேலி. அத்துடன் நிற்காமல், காவல் காப்போர். அதுவும் போதாது என்று, அவர்களுடன் வேட்டை நாய். இதையெல்லாம் மயில் ராவணன் போல் தாண்டி, சைக்கிளில் அமர்ந்தபடியே மாங்காய் அடிக்கும் மாங்கனிச் சித்தர்களும் உண்டு; புறங்கை நக்கும் காவலாளிகளும் உண்டு. அவரவர் சொத்தைக் காபந்து பண்ணிக்கொள்வதும், அது சூறை ஆடப்படுவதும், நாம் அன்றாடம் காணும் காட்சிகள். அக்காலத்து அரசர்களின் கோட்டைகளுக்கும் குறைந்தது மூன்று அரண்கள்: மதில், காடு, அகழி. அவற்றைக் கடந்து வந்து பகைவன் ஊரைக் கைப்பற்றுவதும் வரலாறு, தமிழிலக்கியம்.

    மக்களாட்சிக்கு உத்தரவாதமான பாதுகாப்பு தரக்கூடிய அரண்கள் யாவை, அவற்றை இந்தியாவில் திறனுடன் எழுப்பி, பராமரிப்பது எப்படி என்று, உங்களின் மேலான கருத்துகளை நாடுகிறேன். அதற்கு ஹேதுவாக, சில நிகழ்வுகளை பதிவு செய்கிறேன். ஒவ்வொன்றிலிருந்து படிப்பினைகள்.

    => இந்தியா:டைம்ஸ் ஆஃப் இந்தியா (மே 8,2011)வில், ஆடிட் பேச்சைக் கேட்டிருந்தால், காமென்வெல்த் கேம்ஸ் ஊழலைத் தவிர்த்திருக்கலாம் என்று பொருள்பட ஒரு கட்டுரை. உண்மை; அழுகுணி ஆட்டங்களை இரு வருடங்கள் முன்னாலேயே ஆடிட் மோப்பம் பிடித்துவிட்டது. ஆனால், அந்த ஆவணங்களை நாடாளுமன்றத்துக்கு ஏன் சமர்ப்பிக்கவில்லை என்ற வினாவை, அந்த இதழ் எழுப்புகிறது, விஷயம் புரியாமல்.



    வெண்ணெய் திரண்டு வரும் போது தாழியை உடைக்கலாமோ? நட்டாறு கடக்கும்போது, அதன் அடி மட்டத்தை தொடக் கூடாது; தணிக்கை ஒரு தொடர் பணி. விடைகளையும் இரு தரப்பையும், எல்லாக் கோணங்களையும் அலசி, ஒரு உயர் நிலையில் ஃபைசல் செய்ய வேண்டியதை, அரை குறையாக அறிவிப்பது தவறு. குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுக்கும் என்பதால், திரு.சுரேஷ் கல்மாடியின் காமென்வெல்த் கேம்ஸ் ஆளுமை, ஆடிட்டைப் புறக்கணித்தது. மத்திய அரசு இரு கண்களையும் இறுக்க மூடிக்கொண்டது. பாவாணர் சொன்ன மாதிரி, அகப்பை பிடித்தாளே, தன்னவள்!
    படிப்பினை: எந்த நிர்வாகத்துக்கும் வேலி காத்தான் / காத்தாள் இருக்க வேண்டும்.

    => கனடா: கனடாவின் தணிக்கைத் துறையின் மரபுகள், கொள்கைகள், சாதனைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. அதன் அக்காலத்துத் தலைவர் திரு.கென்னெத் டை அவர்களிடம் பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன்; தங்கள் நூலகத்தில் என் கட்டுரை ஒன்றைச் சேகரம் செய்து எனக்கு ஊக்கமளித்தார். அத்துறையின் தற்காலத் தலைவர் திருமதி ஷீலா ஃப்ரேஸரும் (கீழுள்ள படத்தில் உள்ளவர்) புகழ் வாய்ந்தவர்.


    லோக்பால் என்று இந்தியாவில் தற்காலம் பெரிதும் (லொட லொடவென்று!) பேசப்படும் பதவியைப் போல அங்கும் ‘கண்ணியத்தின் காவலர்’ என்று ஒரு பதவி உண்டு. அப்பதவியில், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ என்பவர் ஏப்ரல் 2007இல் ஏழு வருடப் பணியில் அமர்த்தப்பட்டாலும், அக்டோபர் 2010இலியே, கனமான ஓய்வு தொகை ($ 530,000) பெற்றுக்கொண்டு ஜூட், திடுத்தெப்பென்று! சோழியன் குடுமி சும்மா ஆடுமா? அதற்கு அவர் கொடுத்த விலை: ‘தான் செய்தது / செய்யத் தவறியது பற்றிப் பொது மன்றங்களில் பேசக் கூடாது’ என்ற நிபந்தனை.

    இதன் பின்னணி யாதெனில், திருமதி. ஷீலா ஃப்ரேஸரின் தணிக்கை, ‘திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ தன் பணியைச் சரிவர செய்யவே இல்லை; $ 11 மிலியன் பட்ஜெட்டை வைத்துக்கொண்டு, 228 புகார்களில் ஏழு புகார்களை மட்டும்தான் விசாரித்தார்; மீதமுள்ள 221 புகார்களில், 70 புகார்களைத் தள்ளுபடி செய்ததில் முறைகேடுகள், மூன்று வருடங்களாகியும், கொள்கைகளை நிர்ணயிக்கத் தவறியது, அரைகுறை நிர்வாகம்’ என்றெல்லாம் குறை காணத் தொடங்கியது. ஆடிட் ரிப்போர்ட் வருவதற்கு இரண்டு மாதம் முன்னாலேயே பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயம். இத்தனைக்கும் இவர் மீது பாரபட்சம் காட்டுகிறார், காசு பணம் தகராறு என்பதைப் போன்ற குற்றச்சாட்டுக்கள் கிடையாது. தன்னார்வக் குழுக்கள், ‘விக்கிலீக்ஸ்’ போன்ற கசிவு ஊழியர்கள், மற்றொரு தனியார் ஆடிட் எல்லாமே, தணிக்கைத் துறை சொன்னதை ஆமோதித்தன.
    தனியார் ஆடிட்டின் அறிவிக்கை மே 5, 2011 தான் வெளி வந்தது.


    தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் வந்த சில தினங்களுக்குள்ளேயே, பொது கணக்குக் குழுவும் தன் விசாரணையைத் தொடங்கியது. அக்குழுவின் சம்மனைப் பெற்றுக்கொள்ளாமல், கொஞ்சம் போக்குக் காட்டினார், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெ, ஒரு வக்கீலை அமர்த்திக்கொண்டு (இந்திய வழக்குடன் ஒப்பியல் நோக்குவது நீங்கள்!).

    பின்னர் அங்கு வந்து குற்றச்சாட்டுகளை மறுத்தார், ஆதாரமில்லாமல். ஒரு வழியாக, மார்ச் 2011இல், திருமதி க்ரிஸ்டைன் க்யூமெயையும், திருமதி. ஷீலா ஃப்ரேஸரையும் ஒரே சமயத்தில் விசாரிக்க, இந்தப் பொது கணக்குக் குழு முயல, குருவி உட்கார்ந்த உடனே பனம்பழம் வீழ்ந்தாற்போல, அரசு கவிழ்ந்தது!

    இந்த நிகழ்வுத் தொடரில், இந்தியாவுக்குப் படிப்பினைகள் பல உள்ளன.

    ‘கண்ணியத்தின் காவலர்’ என்று பதவி ஒரு வேலி. அந்த வேலி அறுந்து கிடப்பதைக் கண்டு, பயிர் மேயப்படாவிட்டாலும், தணிக்கைத் துறை படம் பிடித்துக் காட்டியது. மக்கள் சமுதாயமும் அதே வழி சென்றது. கசிந்த செய்திகளுக்கும் முக்கியத்துவம். சுருங்கச் சொல்லின், திறன் இல்லாமையே பெரும்குற்றமாகி விட்டது. இதை எல்லாம் நம் நாட்டில் 2ஜி விவகாரம் அல்லல்படுவதோடு ஒப்பியல் செய்யவும். அதற்கு ஏதுவாக இத்தொடரின் 5ஆவது கட்டுரையை மீளப் பார்க்கலாம்; உங்கள் இஷ்டம். கனடாவில் மக்களாட்சி ரொம்ப ரொம்ப சூடிகை. இந்தியாவில், குறை காண முடியாத ஆடிட் ரிப்போர்ட்டைப் பந்தாடுகிறார்கள், அரசியல் சலுகை அனுபவிப்பவர்கள்.

    => இங்கிலாந்து: அங்கு, ஆடிட்டர் ஜெனெரல் பதவிக்கு மவுசு ஜாஸ்தி. அவரை தேர்ந்தெடுக்கும் குழு மிகவும் உயர்நிலை குழு. (இந்தியாவில் ஆடிட்டர் ஜெனெரலை நியமிப்பது, நடைமுறையில் பிரதமர் மட்டும். சம்பிரதாயமாக செய்வது ஜனாதிபதி). மேலும், இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனெரல் வேலை ஆயுசு பர்யந்தம். ஓஹோ! அசைக்க முடியாது என்றா நினைக்கிறீர்கள்? எனக்கு ஓரளவு பரிச்சயம் ஆன திரு.ஜான் போர்ன் 1988இலிருந்து 2007 வரை ஆடிட்டர் ஜெனெரல். அவரிடம் அக்டோபர் 1990இல், இரு மாதங்களில், நீவிர் ஸர் ஜான் போர்ன் என்றேன். நடந்ததே!


    பேரும் புகழும் நற்பெயருமாகத் திகழ்ந்த ஸர் ஜான் போர்ன் என்ற யானையின் அடி சறுக்கியது, 2004இலிருந்து. போட்டுக் கொடுத்தது யாரு? அவருடைய ஆளுமைக்கு உட்பட்ட தேசிய தணிக்கைத் துறையே. அது ‘Open Government’ என்ற கோட்பாட்டுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு, அன்னாரின் மூன்று வருட பயணச் செலவு(£365,000), சோத்துக் கடை (£27,000) கேளிக்கைகள், ஆட்டம் பாட்டம், கொழுத்த காண்ட்ரேக்ட் கம்பேனிகளுடன் கூடா நட்பு என்றெல்லாம் பட்டியலிட, ஊடகங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் பொங்கியெழ, அவரே ராஜிநாமா செய்தார்.
    படிப்பினை: இந்த வேலிக்குக் காத்தான், மக்களின் விழிப்புணர்ச்சி, இங்கிலாந்தின் மரபு காக்கும் பண்பு. தாமதம் ஆனாலும், தன்னவளானாளே அகப்பையை போட்டு விட்டு, துடைப்பத்தைத் தூக்கியது.

    மக்களாட்சியைத் திடப்படுத்த, வாய்மை நாடுவது மட்டுமே தணிக்கையின் இலக்கு, கண்டறிந்த உண்மையை உரைப்பது, பொது கணக்குக் குழுவின் கடமை. மேல் நடவடிக்கைகளுக்குத் தார்மீகப் பரிந்துரைகள் அளிப்பது நாடாளுமன்றத்தின் பணி, அவற்றை நிறைவேற்றுவது தான் அமைச்சரவையின் / பிரதமரின் தொண்டு என்றும், இந்த தொடர் கடமைகளிலிருந்து யார் தவறினாலும், பிரிதிநிதித்துவ மக்களாட்சியின் செங்கோல் வளைந்து, ஒடிந்து விடும் என்ற அச்சம் எழுகிறது என்பதை, இத்தொடரை படித்த வாசகர்கள் அறிவார்கள்.

    எனவே, தணிக்கைத் துறை, பொது கணக்குக் குழு, நாடாளுமன்றம், அமைச்சரவை, பிரதமர் ஆகிய அமைப்புகளுக்கு, மதில், காடு, அகழி எல்லாம் இன்றியமையாத தேவை என்பதில் ஐயமில்லை. ஆக மொத்தம், வேலி காத்தான் என்ற முள்வேலி தேவை தான் என்பதை உணர்த்த ‘ஸேம் சைட் கோல்’ போடப்பட்டது, முள்ளுப் பொறுக்கியாக? யாரு முள்ளுப் பொறுக்கி?

    தொடரும்………………

    ====================================================
    படங்களுக்கு நன்றி – http://www.readthehook.com, http://www.chilliwacktoday.ca, http://www.vancouversun.com, http://www.guardian.co.uk

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இது போன்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிந்தாலும் ..அவர்களின் கனடா நாட்டின் மக்களாட்சியில் நிகழும் பதவிலகல் என்பது போல் இங்கே நிகழ்வது சாத்தியம் இல்லாத ஒன்று ...இங்கே உள்ள அரசியல்வாதிகளுக்கு மக்கள் எதிர்ப்பு எதிர்கட்சிகள் எதிப்பெல்லாம் ஏதோ நிகழ்ச்சி நிரல்களில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் போல் என்று தானே தம கடமையை தொடர்ந்து செய்கிறார்கள்...தொடருங்கள் தோழர்....
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Sep 2009
    Posts
    3,681
    Post Thanks / Like
    iCash Credits
    22,944
    Downloads
    0
    Uploads
    0
    //‘அகப்பை பிடித்தவள் தன்னவளானால், அடிப்பந்தியில் இருந்தாலென்ன, கடைப்பந்தியில் இருந்தாலென்ன?’ என்றார், பாவாணர்.//

    பாவாணர் பற்றித் தேவையின்றிக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
    ___________________________________
    கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன
    வினைபடு பாலாற் கொளல்.

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    12 Jun 2011
    Posts
    250
    Post Thanks / Like
    iCash Credits
    10,653
    Downloads
    0
    Uploads
    0
    சற்றே விளக்கவும், திருமதி.குணமதி. மறுபடியும் படித்துப்பார்த்தேன். தவறு, பொறுத்தமின்மை புலப்படவில்லை.

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    தணிக்கை என்ற முட்டுக்கட்டை - 8

    இன்னம்பூரான்

    முள்ளுப்பொறுக்கியார்

    ஒரு உரையாடல்:
    ராஜூ: ‘பாட்டி! பாட்டி! முள்ளுப்பொறுக்கி சாமி ஓடியாச்சு. கிடுகிடுன்னு என்னமா ஓட்றார்!’

    பாட்டி: ‘கோமளம்! என் மடிப்புடவை எடுத்துண்டு வா. கம்பு வச்சுருக்கேன், பார், மூலைலே. அடியே வேதா! நல்லதாப் பாத்து தேங்காய், பழம், வெத்தலை எல்லாம் அந்த வெள்ளித் தட்டுலெ எடுத்து வை. பெருமாள் வந்திண்டே இருக்காராம். டேய் ராஜூ! தாத்தாட்டே சொல்லு. எப்ப பாத்தாலும் அரட்டை, பக்கத்தாத்து பாவி பிராமணனோட. கொஞ்சம் விட்டாக்க, சாமியாவது பூதமாவது! அப்டின்னு வெட்டிப் பேச்சு வேறே. நாராயணா! நாராயணா! உங்களைத்தானே! தட்டிலே போட்றத்துக்கு சில்லறை எடுத்து வைங்கோ. கை கொஞ்சம் தாராளமாகவே இருக்கட்டும் என்ன? மாட்டுப்பெண் ஸ்நானம் பண்லே! புரியறதா? ஊருக்கெல்லாம் தண்டோரா போட வேண்டாம்.

    இது கிட்டத்தட்ட எழுபது வருடங்களுக்கு முன்னால், அரியக்குடி சம்பாஷணை + நம்ம நகாசு. எல்லாம் வல்ல சக்கரத்தாழ்வாருக்கு ‘முள்ளுப்பொறுக்கி’ என்று செல்லப் பெயர். தெரு, வீதியெல்லாம் புல்லுடன் கூட நெருஞ்சி முள்ளும். பெருமாளின் திருவடிகள் நோகுமே என்று வருமுன் காப்போனாக, ஓடோடி வந்து, அதையெல்லாம் களைந்து விடுகிறார், பதினாறு ஆயுதபாணியாகிய சக்கரத்தாழ்வார்.

    இப்போது, தணிக்கைத் துறையின் குமாஸ்தாக்களின் (ஆடிட்டர்களின்) ‘முள்ளுப்பொறுக்கி’ பணியைப் பற்றிச் சில வார்த்தைகள். குமாஸ்தாவின் கண்ணில் படாதது, அதிகாரிகள் கண்ணில் படுவது துர்லபம். என்ன தான் மேற்பார்வை இருந்தாலும், குமாஸ்தாவால் உதறப்பட்ட அலசலை உயிர்ப்பிப்பது எளிதல்ல. அந்தக் காலத்தில், ஏ.ஜி. ஆஃபீஸில் குமாஸ்தா வேலை கிடைத்தால், கல்யாண மார்க்கெட்டில் மதிப்பு உயரும். அப்பவே, பெண்களை வேலைக்கு அமர்த்தியதால், (இப்போ அல்லி ராஜ்யம்!) ஆஃபீஸ் கூட ஒரு கல்யாண மாலை தான், நான் ஏ.ஜி. ஆஃபீஸின் தல புராணத்தில் எழுதின மாதிரி. நேர்காணல் மூலமாக, குடைந்து, குடைந்து, பட்டதாரிகளை வேலையில் அமர்த்துவோம். சிபாரிசு இல்லாமல் போகவில்லை. வாழையடி வாழைக் கன்றுகள் வேறே. ஆனா பத்துக்கு எட்டு தேறும். சூட்டிகையாக ஆடிட் செய்வார்கள். பிள்ளையார் சுழி போடுவது இவர்கள் தாம். தற்காலம், பயிற்சிகள் / பரிட்சைகள் முடித்து ஒரு படி மேல் உள்ளவர்களும், ‘முள்ளுப்பொறுக்கி சாமிகளாக’.


    முப்பது வருடங்கள் கடந்தபின்: திரு. சி.ஜி. சோமையா என்ற ஆடிட்டர் ஜெனெரல்; குடகு நாட்டைச் சேர்ந்தவர். அவரிடம் மூடி, மெழுக முடியாது. அவரும் உள்ளது உள்ளபடி பேசுவார். எனக்கு அவ்வப்பொழுது crazy ideas வருவது தொட்டில் பழக்கம். இந்தப் பொது கணக்குக் குழு, நாம், நெற்றி வியர்வை நிலத்தில் விழ, உழைத்து, உழைத்து தரும் ரிப்போர்ட்டுகளில், சிலவற்றை மட்டும், அதுவும் தாமதமாக அலசுவதால், ரிப்போர்ட்டுகளைச் சுருக்கி, புல்லட் பாயிண்ட்டுகளாய் அனுப்பினால் நலம் என்று கருதி, ஒரு ரிப்போர்ட்டின் பவர் பாயிண்ட் பிரெஸெண்டேஷனை அவரிடம் காண்பித்தேன். அதன் பூரணத்தை மெச்சிய அவர் சொன்னார், ‘ஸுந்தர்! எறும்புகள் தானியம் சேகரிப்பது போல், நம் ஆடிட்டர்கள் கொணர்ந்ததை இப்படி வெட்டி முறித்தால், அவர்களின் ஆர்வம் குறைந்து விடும்.’ பாயிண்ட் மேட் என்று ஒத்துக்கொண்டேன். இன்று அவர் நம்மிடையே இல்லை. இருந்தால், ‘முள்ளுப்பொறுக்கியார்’ கண்டு மகிழ்ந்திருப்பார்.

    ஒரு அலுவலகத்திற்கு போய்த் தணிக்கை செய்வது எப்படி? அதற்கான வழிமுறைகள் என்ன, என்ன? மந்திரங்களும் தந்திரங்களும் உண்டா? செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது யாது? எப்போது அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்; எப்போது மறியல் செய்ய வேண்டும்? எப்போது டேக்கா காட்ட வேண்டும்?, இந்த மாதிரியான FAQவுக்கு நான் பாடம் எடுப்பது உண்டு. புல்லட் பாயிண்ட்களின் முதல் பத்தில் ஐந்து இங்கே, சான்றுகளுடன்:

    =>1. முதலில் அடித்தளப் பாடம்: பேஸிக்ஸ்: நம்மால் எல்லாத் துறைகளையும் தணிக்கை செய்ய இயலும் என்ற அசையா தன்னம்பிக்கை, திறந்த மனத்துடன் அணுகும் முறை, வினா – விடை பயிற்சி, வைக்கோல் போரில் ஊசி தேடி எடுக்கும் திறன் + என்ன? (அதிர்ஷ்டம்!);

    =>2. ஹோம் ஒர்க்: தணிக்கை செய்யப் போகும் அலுவலகத்தைப் பற்றிய ஆவணங்கள், முன் வந்த தணிக்கை படிப்பினைகள், அத்துறை சம்பந்தமான தகவல் தொகுப்பு / அலசல் ஆகியவை;



    =>3. டீம் ஒர்க்: மத்திய அலுவலகத்தில் இருக்கும் ஏணி, டேரா போட்டு ஆடிட் செய்யும்போது, வளைந்து கொடுக்கும். வேலைப் பங்கீடு செய்யப்பட்டு, உரிய மேற்பார்வையுடன் நடக்கும். ராத்திரி எல்லாரும் சேர்ந்து இரண்டாவது ஆட்டம் போவோம். டீ.ஏ.ஜீ யெல்லாம் கொஞ்சம் தூரத்தில். ஆனா, நாம பழகற விதத்தில் இருக்கிறது.

    =>4. பணிகளை அணி வகுத்துச் செய்வது: இங்கு மேலாவின் அறிவுரை நன்கு பயன்படுத்தப்படும். பணிகளை அணி வகுத்து செய்வதால், குறைந்த செலவில் நம்பகம் நிறைந்த தணிக்கை இயலும். உதாரணமாக, வரவு செலவை ஒரு துரித கண்ணோட்டம் விட்டாலே பூனை வாங்குவதற்குப் பதில் யானை வாங்கினார்களா என்று தெரியும். பிறகு பால் வாங்காமல், கரும்பு ஏன் வாங்கினார்கள் என்று, கண்ணில் விரலை விட்டு ஆட்டலாம்.

    =>5: டெஸ்ட் ஆடிட்: ஒரு அலுவலகத்தின் செயல்கள் முழுவதையும் ஆடிட் செய்ய வேண்டுமானால் (தற்காலம் அது தேவையோ?) ஆடிட் பட்டாளம் இன்று இருப்பது போல் நூறு மடங்கு வேண்டும். வேஸ்ட், ஸ்வாமி. அதனால் முழுமையான ஆய்வு என்று உத்தரவாதமும் கிடைக்காது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம், சில பணிகளில், இரு பருக்கை, சில பணிகளில். எந்தப் பருக்கையை ஊசியால் குத்தி எடுப்பது என்பது பரம ரகஸ்யம், ஆபரேஷன் தியேட்டர் மாதிரி. இங்கே தான் கார்வார் செய்ய வந்த அதிகாரியின் வலிமை, திறன், பழம்பெருச்சாளியின் சாமர்த்தியம். ஆடிட் ஏணியின் ஒவ்வொரு படியிலும் இவர்கள் அஞ்ஞாதவாசம் புரிவார்கள்.

    யாராவது படிக்கிறார்களா என்று தெரியவில்லை. கேட்டால், தொட்ட குறை, விட்ட குறை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். என்ன சொல்றேள்?

    தொடரும்……

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •