Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5
Results 49 to 59 of 59

Thread: தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை– 25 : ருத்ராக்ஷப்பூனைக்கு...

                  
   
   
 1. #49
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 18

  இன்னம்பூரான்
  பலப்பரிட்சை

  தனிமனிதர்களை சாடுவதற்காக, இங்கு மகாகவியின் பாஞ்சாலி சபதத்திலிருந்து, ‘பேயரசு புரிந்தால், பிணந் தின்னும் சாத்திரங்கள்..’ என்ற உவமை எடுத்துரைக்கப் படவில்லை. சாத்திரங்கள் பிணம் தின்றதால் தான், மக்களாட்சி என்ற சால்வையை அணிந்து கொண்டு, கூளிகள் ஆட்சியை தட்டிப் பறித்தனர் என்ற பேருண்மையை கர்நாடகாவின் லோகாத்யட்சாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ 464 பக்க அறிக்கை (27/07/2011) பறை சாற்றியதை, எடுத்துரைக்கவே, இந்த உவமை என்க. அதன் விளைவாக, திரு.பி.எஸ்.எடியூரப்பா, இழுபறிகள் பல அரங்கேற்றம் ஆன பிறகு, துக்கம் அடைத்த நெஞ்சின் குமுறலுடன், முதல்வர் பதவியிலிருந்து விலகிய செய்தியும், அந்த ‘தியாகத்திற்கு’ அவரிட்ட நிபந்தனைகளும், பதவி வேட்டையும், ஒரு குறுக்கு சந்து தடாலடியும், ஆகஸ்ட் 31 அன்று வெளியாயின. இந்த தகவல்கள் பொதுமன்றத்துக்கு வரும் வரை, லோகாத்யட்சாவின் அறிக்கையை அலசுவது உகந்தது அல்ல. அதனால், சற்றே தாமதம். அதை வாசகர்கள் மன்னிப்பார்களாக.

  நாம் அரசியல் கட்சிகளின் சார்பற்றவர்கள் என்பதால், இரு விஷயங்களை முன்கூட்டி சொல்லி விட வேண்டும். ஊழலும், லஞ்சமும், கறுப்புப் பணமும், வெளி நாடுகளில் அதன் முடக்கமும், நீதிமன்றங்கள் முன் வழக்குகளும், சிறை புகுந்த பிரபலங்களும், இவற்றை எதிர்க்கும் மக்கள் சக்தியின் பன் முகங்களும், ஆ.ராசாவிடமிருந்து ‘கை நாட்டு’ விருது பெற்ற தணிக்கைத் துறையின் அறிக்கைகளும், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவை. அடுத்தபடியாக, உச்ச நீதிமன்றத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை அசட்டை செய்து, 49 லாரிகள் பெல்லாரியில் இரும்பு தாதுவை ஏற்றி புறப்பாடு செய்த அவலம், லோகாத்யட்சாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ அறிக்கை வெளியான பிறகு நடந்தேறியது.

  சுருங்கச் சொல்லின், இந்த ஆய்வு அரசு கேட்டதே; எடுத்த எடுப்பிலேயே, இது அக்கவுண்டெண்ட் ஜெனெரலின் 2003 -4 & 2003-2004 வருட ஆட்சேபனைகளை ‘கிடப்ஸ்’ஸில் போட்டதின் பின் விளைவுகளை முன்னிறுத்துகிறது. அடி உதைக்கு அஞ்சாத அரசு அதிகாரிகள் சிலரின் அயராத பணியின் பரிசிது. இது இரண்டாவது அறிக்கை.(முதலாவது: டிசம்பர், 18, 2008). முதல் அறிக்கையின் பரிந்துரைகளை அரசு கண்டு கொள்ளவில்லை என்றும், சட்டமீறல்கள் அதிகமாயின என்றும், அரசு மேற்பார்வை முழுதுமே ஒழிந்த நிலையில் என்றும், லோகாயுக்தா விசனம் தொனிக்க உரைத்துள்ளார். தென் பாண்டி சீமை பேச்சுத் தமிழில், ‘இவரு ஒரு வேஸ்ட்!’ வேலைக்காவாது’, தருமமிகு சென்னை பாஷையில்!

  சட்ட திட்டங்கள், அவைக்குட்பட்ட விதி முறைகள், அன்றாட நடை முறைக்கேற்ற ஆணைகள், நீதி மன்றத் தீர்வுகள், ஆடிட் முடிபுகள், எல்லாவற்றையும், வருடக் கணக்காக, சகட்டு மேனியாக, மீறிய சாகசத்தின் வரலாறு, இந்த அறிக்கை. மறுக்க முடியாத சான்றுகள். கின்னஸ் ரிகார்டில் பதித்தால், அப கீர்த்திகளில் முதலிடம் பெறும், இந்த சுரங்கச் சுரண்டல். முதலில் ‘அறிமுகம்’ என்ற பகுதியில், சட்டம், விதி, ஆணை, ஆவணங்களை பற்றிய விவரங்கள் உள்ளன. இனி பட்டியலிட்டால் தான், இந்த அலங்கோலத்தின் பரிமாணம் புரியும்.

  1.கிட்டத் தட்ட கடந்த 50 மாதங்களில் 3 கோடி டன் இரும்பு தாது, சட்ட விரோதமாக ஏற்றுமதியாயின. வருடா வருடங்களுக்கான சராசரி விலையின் அளவு கோல் படி, இதன் மதிப்பு ரூ. 1,22,28,14,22,854/-. அப்படீங்களா? நாங்களெல்லாம் அன்றாடம் காய்ச்சிகள். ரூவா கணக்கு ஏற மாட்டேங்குது?
  [2006/7: 32 லக்ஷம் டன்: 2007/8: 37 லக்ஷம் டன்: 2008/9: 54 லக்ஷம் டன்;2009/10: 128 லக்ஷம் டன்; 2010: முதல் மூன்று மாதங்கள்: 48 லட்சம் டன்]
  இரும்பு தாது நடக்குமா என்ன? லாரி சவாரி. அதற்கு பெர்மிட் வேண்டும். அது கணக்கில் பதிந்து விடும். (ஆடிட்காரன் உயிர் போகும் வேளையில் மென்னியை பிடிப்பான்.) எனவே மூன்று துஷ்பிரயோகங்கள்: 1.ஓவர் லோடு;2. கள்ளக் கடத்தல்;3. கள்ள பெர்மிட். ஜோர். சான்று: 3 லட்சம் டிரிப்களில் அலசல்.

  ஜூலை 2010லிருந்து ஏற்றுமதி தடை செய்யப்பட்ட பின் 17,58,336 டன்கள் அனுப்பபட்டன. அதில் 14,85,076 டன்கள் கிருஷ்ணாபுரம் போர்ட் கம்பெனியால். இது புலன் விசாரணைக்குகந்த சமாச்சாரம். சான்று: தேதிகள்/கப்பல்கள்/கம்பெனிகள் ஜாபிதா.

  32,44,219 டன்கள் வந்த வழி, போன வழி தெரியவில்லை. ராஜா அரிச்சந்திரர்கள் கூக்குரலிடக் கூடாது என்று அவற்றை அத்துடன் விட்டு விட்டார்.

  பணமென்னவோ பாதாளம் மட்டும் பாயும். பெப்ரவரி 2011இல் லோகாயுக்தா பேலகிரியில் பறிமுதல் செய்த பிறகு தான் உச்சக் கட்ட சட்ட மீறல்: 130 லட்சம் டன்கள். இது வரை பலப் பரிட்சையில் வாகை சூடியது, அப கீர்த்தி மன்னர்கள்.

  யந்திரஙகள் துஷ்பிரயோகம்~ கணினி, லாரி, கப்பல் இத்யாதி. மந்திரஙகள் துஷ்பிரயோகம் பெர்மிஷன் இல்லாத பெர்மிட்டுகள், சான்றில்லா ஆவணங்கள். தந்திரஙகள் துஷ்பிரயோகம்~ ஆந்திரப் பிரதேசத்து மொத்த லாரி பெர்மிட்டுகளின் நகல்களை வைத்துக் கொண்டு கர்நாடகாவில் லாரி சவாரி! பேஷ்!

  மணியோசை (பெர்மிட்டு) வரும் பின்னே! ஆனை (லோடு) வரும் முன்னே! {கர்நாடகாவோல்லியோ! ஆனை ஒடி வருது!}
  லோகாத்யட்சா கம்பெனிகளிடமிருந்து பறி முதல் செய்த விவரங்களில் அடக்கம்: ‘துறைமுகம், கஸ்டம்ஸ், போலீஸ், தாது இலாகா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகியோருக்குக் கொடுத்த மாமூல். மாமூல் வழி முறைகள், ரேட் கார்டு.

  லஞ்சமாகப்பட்டது 2004-05 இல் கிட்டத்தட்ட 23 லட்சம் ரூபாய். அது 48 லட்சத்துக்கு தாவியது அடுத்த வருடம். 66 லட்சம் அதற்கு அடுத்த வருடம். தூக்கியடித்தது 128 லட்சம் 2007- 2008ல். ஓஹோ!

  ரேட்டுக்கார்டு:
  ~ எம்.எல்.ஏ/எம்.பிக்களுக்கு லம்ப்பு லம்ப்பாக! சுரங்க இலாக்காவுக்கும் அப்படியே!

  ~ போலீஸ் சூப்பிரண்டு துரைக்கு லட்சம் ரூபாய், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான்! அடிஷனல் ஐயாவுக்கு மாதம் 25 ஆயிரம்! டிபுடினா பத்து தான், ஆனா சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு பதினாலு டோய்! செக்போஸ்ட் பசங்களுக்கு ரண்டாயிரம் மட்டுமே. ஊருக்கு இளைச்சவன் ஊருக்கு வெளியில்!

  ~ சுங்க இலாக்கா காட்டில் பெய்யும் மழை: ஆபீசருக்கு லட்சமாமே! அப்றம் கப்பலுக்கு 12 ஆயிரம். அதை ஃபைண்ட்யூன் பண்ணாங்க, கப்பலுக்கு ஆறாயிரம் + டன்னுக்கு அம்பது பைசான்னு (பிசாசுகள் பிரிச்சு எடுத்துக்குமோ!)

  ~ இனி கப்பல் கணக்கு கன ஜோரு! போர்ட் டைரக்டருக்கு ஐம்பது ஆயிரம் கப்பலுக்கு, அடுத்தவனுக்கு 25 ஆயிரம், சுத்துப்படைகளுக்கு புஸ்! வெறும் ரூபாய் 5,500/- கப்பலொன்றுக்கு!

  49 லாரிகள் பெல்லாரியில் இரும்பு தாதுவை ஏற்றி புறப்பாடு செய்த அவலம், லோகாத்யக்ஷாவின் ‘சுரங்கச் சுரண்டல்’ அறிக்கை வெளியான பிறகு நடந்தேறியது. (இரண்டாவது பாரா)

  ~ முடிந்தால், இங்கு, ‘கையோடு கையாக, ரயிலில் 7448 டன்கள் யாத்திரை! படத்தை பார்த்தால் மேட்டூர் அணைக்கட்டில் தண்ணீர் வழிவது போல், தாது மழை! ஆண்டவா’

  (மன்னிக்கவும். எனக்கு வயிற்றை புரட்டுகிறது. நாளை தொடரலாமா? அல்லது 464 பக்கங்களில் 53 பக்கங்கள் கவர் பண்ணியாச்சு. அத்துடன் போதுமா? வாசகர்கள் தான் சொல்லவேண்டும்.)


  தொடரும்....

 2. #50
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 19

  இன்னம்பூரான்

  எண்ணெய் காய்கிறது!


  செப்டம்பர் 9, 2011: காலை 2 00 மணி:
  வாணலியில் எண்ணைய் காய்ந்தால், தீ பற்றி எரியும். சமையலறை எரியும். தீ பரவும், வீடு, அடுத்த வீடு, தெரு, பேட்டை எல்லாம் எரியக்கூடும். இப்போ அப்படித்தான் இருக்கு.


  ஊர்திகள் விரைகின்றன. விமானங்கள் பறக்கின்றன. தோசை வார்க்கிறோம். ராணுவம் தயார் நிலையில். இதற்கெல்லாம் கச்சா பெட்ரோலியம் எண்ணைய் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த போது, எண்ணெய் கம்பெனிகள் எல்லாம் அன்னியர் கையில். ஒரு பாடாக, நேருவின் பொருளியல் கொள்கைக்கேற்ப அரசின் ஆளுமை, இத்துறையில் வலுத்தது, கே.டி. மாளவியா எந்த அமைச்சரின் துரித நடவடிக்கைகளால். இதை எல்லாம் குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால், இந்தியாவின் ஆளுமை அதன் வலிமையைக் கூட்டியது. அது எண்ணெய் வல்லரசுகளின் பொறாமையை கிளப்பியது. கச்சா எண்ணெய் ராசாதி ராசர்களுடனும் இந்தியா இணக்கமாக இருந்தது. இது எல்லாம் சூடு ஆறின கதை.


  இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தாராளமயமானது (யாருக்காக?) 1991ல். கடந்த இருபது வருடங்களில் தனியாரின் தொனி கூடி வருகிறது. இத்தனைக்கும், ஆடிட் ரிப்போர்ட்டில் சொல்றமாதிரி, கன்ட்ரோல், அரசு கையில் இருக்க வேண்டும். எண்ணெய் ராசா ரிலையன்ஸ் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு நைச்சியமாக பேசுகிறது, 2011ல். இந்தியாவிலேயே பெரிய கம்பெனி. பங்குச்சந்தை கண்காணிப்பாளர், முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள் (உங்களில் சிலர் இருப்பார்கள்; நான் ஓடி வந்து விட்டேன்.), ஆய்வாளர்கள் எல்லாருமே, ‘ரிலையன்ஸ்! ரிலை பண்ணமுடியல்லையே’ என்று அலறுகிறார்கள். பங்குச்சந்தையில் ஏண்டாப்பா விழுகிறாய் என்றால், இது கரடி வித்தை என்கிறது, இந்த அடுக்கு மாடி கம்பேனி.


  சற்றே விசாரிப்போம், வாசகர்களில்லாமல், இத்தொடர் அறுந்து போயிருந்தாலும்.
  மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திய தணிக்கைத்துறை, இத்துறையின் அரசு-தனியார் கூட்டுப்பணிகளை அலசி, ஆகஸ்ட் 24, 2011 அன்று தன் 203 பக்க அறிக்கையை நம் ஜனாதிபதியிடமும், கச்சா எண்ணெய் அமைச்சரகத்திடமும் சமர்ப்பித்தது. மத்திய அரசு மனமுவந்து அதையும், கிட்டத்தட்ட பூண்டி ஆகிவிட்ட நமது ஏர் இந்தியா கம்பெனி ஆடிட் ரிப்போர்ட்டையும், சில மணி நேரம் முன்னால், நம் நாடாளுமன்றத்தில் (கதவு பாதி மூடின பிறகு) தாக்கல் செய்தது. கேள்வி கேட்க முடியாது பாருங்கள். எனினும், துரிதம் என்று தான் சொல்லவேண்டும். கர்நாடகாவுக்குத் தான் உலகளவில் கின்னெஸ் ரிக்கார்ட்! பெங்களூரு நகர மையம் 53 வருடங்களாக ஆடிட் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யவில்லை என்று மார் தட்டிக்கொள்கிறது. அது ஒழிந்து போகட்டும்.


  இந்த ஆடிட் ரிப்போர்ட் என்ன சொல்றதாம். அரச மரத்தை சுற்றி வந்து வயற்றை தொட்டுப்பார்த்தாளாம், மாதொருத்தி! அந்த மாதிரி நம் ஊடகங்கள் சில மாதங்களாகவே ஊகமும், ஹேஷ்யமும், கசிவுகளாகவும், இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டு, அடித்துக்கொண்டன. ரிலையன்ஸ் புலம்பலை விளம்பரப்படுத்தின. நானும் அப்பப்போ ‘வல்லமையில்’ சங்கு ஊதினேன். செவி சாய்த்தீர்களோ, இல்லையோ? அதை விடுங்கள்.


  அதிகாரப்பூர்வமான ரிப்போர்ட் கையில். ஆடிட் ரிப்போர்ட்டின் புருஷலக்ஷணம் சுருக்கம். நான் மேலும் சுருக்கினால், ‘சுக்குமி, ளகுதி இப்புலி’ என்று இருக்கும். முக்கியமானவற்றை பட்டியலிடத்தான் முடியும். முழுதாக, ஆடிட் ரிப்போர்ட்டை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, இலவசமாகப் படிக்கலாமே.

  ‘சுருக்’ என தைத்த ‘சுருக்’ ரிப்போர்ட்:
  பாரா 3.5: எங்கள் வேலை பலவிதங்களில் தடை பட்டது. காலம் கடந்து, அமைச்சரகம் ‘ஒத்துழைக்க’, ஒரு பாடா ஒப்பேத்தினோம். (நமக்குள்: போன வருடமே ரெடியாக இருந்தது.)


  பாரா 4.2.1: ரிலையன்ஸ் ‘மணலை கயிறாகத் திரித்து’ (என் சொல். ஆடிட் ரிப்போர்ட் இத்தனை வக்கணையா பேசாது. அதுவும் சரி தான்.) ஆடிட் செய்வதையே ‘ஒப்பந்த விரோதம்’ என்று காச்சுமூச்சினர். இத்தனைக்கும் அமைச்சரகம், எங்கள் ஆடிட்டை வேண்டியது மட்டுமல்ல; மட்டுமல்ல; எங்கள் ஆளுமையை உறுதிப் படுத்தியது.
  எக்கச்சக்கமான கேஸ்களில் அரசின் மேற்பார்வை மிகக்குறைவு; பத்துக்கேஸ்களில் ரிலையன்ஸ் அகேர் என்ற கம்பெனிக்கு டெண்டர் இல்லாமல் ‘கேட்டதைக் கொடுத்த’ ஒப்பந்தங்கள்; அரசின் பணம் மாட்டிக்கொண்டிருந்தாலும், கவர்ன்மெண்ட் விதிப்படி தனியார் துறை செய்யவேண்டும் என்று சொல்லவே மாட்டோம். எனினும், விவேகம் என்று ஒன்று எல்லாருக்கும் பொது;


  ஹைட்ரோகார்பன் இலாக்கா கடமை தவறியது.. கே.ஜீ. பேஸின் பகுதிகளில், ஒப்பந்தப்படி, 25% பாகத்தை சரண் செய்து, இரண்டாவது (7645 சதுர. கிலோமீட்டர்கள்), மூன்றாவது பகுதிகளுக்கு செல்லலாம். அதை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்பது மர்மம்; விட்டுக்கொடுத்த அதிகாரியின் மீது ஏற்கனவே புலனாய்வு விசாரணை இருந்தது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்லதொரு தீர்மானம் வேண்டும்;


  ஏப்ரல் -மே 2005 லியே தனது இலாக்காவின் விதிகளை மீறியது, ஹைட்ரோ கார்பன் இலாக்கா. எதற்கு? ரிலையன்ஸுக்கு அதீத சலுகைகள் அளிக்க.


  பர்மார், பன்னா-முக்தி பகுதிகளில் கைர்ன், ஓ.என்.ஜீ.ஸி, ப்ரிட்டீஷ் காஸ் + ரிலையன்ஸ் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட ராயல்டி நஷ்டம் கணிசமானது என்ற ஆடிட் ரிப்போர்ட், அதை கணிக்கவில்லை. 2ஜி படிப்பினையா? எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும்.


  அதே மாதிரி ,கே.ஜி-டி6 பகுதியில் செலவை 2.4 பில்லியன் டாலரிலிருந்து, ரிலையன்ஸ் 8.8. பில்லியனுக்கு தூக்கிப்பிடித்ததை பற்றி விமரிசிக்கவில்லை. எனக்கு அது சரியாகப்படுகிறது. ரிலையன்ஸின் பதிலை தன் ஆய்வில் எடுத்துக்கொண்டதாகத் தோற்றம். போகிறப்போக்கு நல்லாயில்லை. ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும். செலவு ஆன பிறகு தணிக்கை செய்யத்தான் வேண்டும். வரிப்பணம், ஐயா.


  ஈற்றடி: தனியார் கம்பெனிகள், நாங்கள் ஏதோ அநாவசியமாகத் தலையிட்டு காரியத்தை கெடுக்கிறோம் என்று சொன்னால், வரிப்பணம் வீணாவதை பார்த்துக்கொண்டு, நாங்கள் வாளாவிருக்க முடியுமா? என்ன?;


  பாரா 7.1: ஆக மொத்தம், அமைச்சரகம், எழுத்து மூலமாக, ஆடிட் முடிவுகளை ஒத்துக்கொண்டு, ஆவன செய்வதாக, வாக்கு அளித்திருக்கிறது.

 3. #51
  இளம் புயல் பண்பட்டவர்
  Join Date
  17 Sep 2011
  Location
  சென்னை
  Posts
  277
  Post Thanks / Like
  iCash Credits
  26,621
  Downloads
  6
  Uploads
  0
  மிகவும் அற்புதமாக தணிக்கைபிரிவின் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் அதனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்ச்சியையும தெளிவாக விளக்கியுள்ளீர்கள். மீண்டும் தொடர்ந்தால் மகிழ்ச்சிதான்.மிக்க நன்றி.
  சீனிவாசன்

 4. #52
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  கருத்துக்கு நன்றி சீனு.

  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 20

  இன்னம்பூரான்

  தமிழ்நாடு


  தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன் சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.


  A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]

  • ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை. அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி நஷ்டத்தையும் ரூ. 600 கோடி வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  • சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர் முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  • சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி. இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  • ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  • மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி, நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  • தலைகீழ்: ரூ. 28.08 கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08 கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  • வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  • பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு. தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  • எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  • சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம் ரூ. 8.32 கோடி. இதில் பாரபட்சம் இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  • மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  • தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  • ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  • B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்

  இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.

  • இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  • அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.


  நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.
  (தொடரலாமா என்று கேட்கலாமா?)

 5. #53
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 21

  இன்னம்பூரான்

  பாலப்பிராயமும், ஆடிட்டும்

  இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம்.

  ‘ஆடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே ‘செவி சாய்ப்பது, கேட்டறிவது’. தணிக்கைத் துறையின் செயல்முறைகளைக் கூட மக்கள் அறிந்து கொண்டால், அவர்களே உள்ளூர் விஷயங்களை, “குப்பை அள்ளுவதிலிருந்து சிசேரியன் ஆபரேஷன் வரை” தணிக்கை செய்ய இயலும். வாழ்வாதாரம் உயரும். அதாவது, தணிக்கை என்பது நிதி சம்பந்தமானது மட்டுமல்ல. அந்தக் கழுகுப் பார்வைக்கு மனித யத்தனங்கள் யாவற்றையும் உட்படுத்தலாம் என்பதே. உதாரணமாக, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் குறிப்புக்கள் எழுதி வைக்க வேண்டும். அவற்றை அலசுவதை ‘மெடிக்கல் ஆடிட்’ என்பார்கள்.

  நமது ஊர்களிலே அநாதை இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. தலித் மாணவ மாணவிகளுக்கு சலுகை தரும் இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. குற்றமிழைத்த சிறார்/சிறுமிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் உண்டு. மாற்றுத்திறனாளி/ கண்ணொளி மங்கியோர்/ கேட்கும் திறனற்றவர்கள்/பேசும் திறனற்றவர்கள்/ மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர் என நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளுக்கு உறைவிடம், பள்ளி ஆகியவை உண்டு. நம்மில் யாராவது அவ்விடங்களுக்கு சென்று, என்னதான் நடக்கிறது என்று கேட்டது உண்டா? உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், பொது ஜனம் போய்க் கேட்டால், அங்கு கோலோச்சுபவர்கள், அதிகாரப்பேய் ஆவேசத்தில் விரட்டுகிறார்களா?, மழுப்புகிறார்களா? பொய்யுரைக்கிறார்களா? நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளை பேச விடுவதில்லையா? அவ்வாறெல்லாம் இருந்தால், மேலும் படிப்பீர்கள் என நினைக்கிறேன்.

  இங்கிலாந்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இருபாலாரும் போர்க்களப் பணிகளில் முனைந்து இருந்ததாலும், ஜெர்மானிய குண்டுவீச்சு மும்முரமாக இருந்ததாலும், சிறார்கள், பாதுகாப்புக் கருதி, முன்பின் தெரியாத குடும்பங்களுடன் வாழ, கிராமங்களுக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களில் ஒருவரை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பேசிய போது, செவிலித்தாயின் அன்பைச் சொல்லிச், சொல்லி, உருகினார். அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் மத போதகர்களின் அநாகரீக பாலியல் பலாத்காரங்களும் பதிவு ஆகியிருக்கின்றன.
  இந்தப் பின்னணியில், ஒரு வாரம் முன்னால் வந்த ஒரு தணிக்கை அறிக்கை (ஆடிட்டர் ஜெனரல் கொடுத்தது அல்ல. ஆஃப்ஸ்டெட் என்ற அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு). சமுதாய நலன் என்ற அரசு பிரிவினர் இந்த இல்லங்களை சோதித்து வர வேண்டும் அவர்கள் செய்யும் சோதனை பற்றி, குழந்தைகளிடமே கேள்வி கேட்கப் பட்டது. 224 குழந்தைகளிடம் கேள்வி கேட்கப் பட்டது. அவற்றில் 149 பேருக்கு , இந்தச் சோதனை அனுபவம் உண்டு. முக்கால்வாசிப் பேர்களுக்கு சோதனை வரப் போவது தெரியும். கால்வாசிப் பேருக்குத் தெரியாது. மேலும் தோண்டித் துருவினால்: கால்வாசி குழந்தைகள் தாங்கள் சோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முக்கால்வாசி குழந்தைகள் தாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை என்றனர். இருபத்தேழு குழந்தைகள் இருப்பிடங்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினதை சொன்னார்கள். இன்னும் சிலர் (4/27) நல்லதையே சொல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.

  இது பெரிய விஷயமல்ல. தணிக்கை அறிக்கையைச் சுருக்கி அளித்தேன். நமக்கேற்ற சில படிப்பினைகள் முக்கியம். அவை:

  • இந்த விசாரிப்பு, அவரவரின் மொழியில் நடந்தது;
  • பதினான்கு வயதுக்கு மேல்/கீழ், ஆண்/பெண், இருக்குமிடம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, நுட்பங்கள் அறிய;
  • இந்தச் சோதனைகளை குழந்தைகள் நோக்கிய விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  • இடம்,பொருள், ஏவல் பொறுத்து, இதமாக, நிதானமாக கேள்விகள் கேட்பதில் பயன் அதிகம் உண்டு.
  ஒரு வித்தியாசமான தணிக்கையை பகிர்ந்து கொண்டதின் விளைவாக, உங்கள் ஊரில்/பேட்டையில் எழக் கூடிய வினாக்களில் ஐந்து, மாதிரிக்கு:

  • அநாதை இல்லங்களில், ராணிப்பேட்டையில் இருக்கும் தீனபந்து இல்லத்தில் என்னால் இயன்றது போல, சிறார்களுடன் பேசமுடியுமா?
  • உங்கள் அருகில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு நடப்பதை மேற்பார்வை செய்வது யார்? செங்கல்பட்டில் ஒன்று உள்ளது.
  • தலித் ஹாஸ்டலில் சமபந்தி போஜனம் என்றாவது நடப்பது உண்டா?
  • பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவை, பெற்றோர் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
  • புதிய கருத்து/வினா ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
  தொடரும்...
  Last edited by பாரதி; 16-08-2012 at 04:30 AM.

 6. #54
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 22

  இன்னம்பூரான்


  வெட்ட வெளியிலே கரும் புள்ளி.

  கடந்த 2011-ம் வருடத்தில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட துறை, அகில இந்தியத் தணிக்கைத் துறை. அரசியலில் ஆளுமை செலுத்துபவர்களால் பெரிதும் வசை பாடப் பெற்ற மகிமையும் அதைத்தான் சாரும். ஊடகங்களால் ஆதரவுடனும், எதிர் மறையாகவும் விமர்சனம் செய்யப்பட்ட துறையும் அதுவே.
  நடு நிலையில் நின்று, ஆதாரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும், நிரூபணங்களுடனும், மறுக்க முடியாத முடிபுகளுடனும், தங்கு தடையின்றி, நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்புடைய வகையில், அதன் அடிப்படைக்குக் குந்தகம் இல்லாத வகையில், தரமுயர்ந்த அறிக்கைகளைச் சமர்ப்பணம் செய்யும் துறை, இது ஒன்றே. ஆகவே, குடியரசு தினத்தன்று, இந்தத் தொடர் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுகிறது.

  ஆராயப் படுவதும், விழிப்புணர்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகளின் தொட்ட குறைகளும், விட்ட குறைகளும், பாரபட்சமில்லாமல்அலசப்படுவதும் கண்கூடு. சில மாஜி அமைச்சர்களும், கட்சிப் பிரமுகர்களும், உயரதிகாரிகளும் சிறை சென்றதின் முகாந்திரம், இந்த ஆடிட் அறிக்கைகளே. அவை அரசியல் சாசனத்தின் கட்டளைக்குட்பட்டு, பாராளு மன்றத்தில்/சட்ட சபையில் சமர்ப்பிக்கப் படுகின்றன. தணிக்கைத் துறைக்கு நாடாளும் மன்றம் தான் எஜமானன் என்பர். ஆனால், அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உணர்த்துவர், நுட்பம் அறிந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில், 150 வருடங்களாக, இடை விடாமல் பணி புரியும் இத்துறையின் எஜமானன், மக்கள் சமுதாயமே என்பது என் கருத்து. இது நிற்க.

  அணுசக்தி இலாகாவும், வெட்டவெளி (ஸ்பேஸ்) இலாகாவும் பல வருடங்களாகவே, குற்றம், குறை காண்பவர்களை அண்ட விடுவதில்லை. அவற்றைத் தணிக்கை செய்வது எளிதும் அன்று. ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும், கிடைத்தவை புரிய வேண்டும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் வேண்டும். இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டுதான் ஏற்புடைய தணிக்கைக் கையேடுகள் தயார் செய்யப் பட்டு, விஞ்ஞான ஆடிட் பயிற்சிகள் அளிக்கப் பட்டு, ஒரு தனிப் பிரிவே இயங்குகிறது. இது வரைத் தணிக்கை முடிவுகளைத், தகுந்த காரணம் காட்டி, யாரும் குறை கண்டதில்லை. இந்தியாவின் வெட்ட வெளி இலாகா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி, ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கிச், சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள் கை ஆதரவும், புறங்கைச் சுவையுமாகப், பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்தியத் தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. ‘முதல் கோணல்’ என்று தொடங்கி, முற்றும் கோணல்’ என்று அலசியிருக்கிறது, அந்த ரிப்போர்ட். நியாயப் படுத்த முடியாத தாமதத்திற்குப் பிறகு, ஃபெப்ரவரி 2011ல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய அரசு, ஆடிட் ரிப்போர்ட்டை உறுதி செய்திருக்கிறது. அதற்கு இப்போது 2012- ல் என்ன என்று கேட்பவர்களுக்கு, இன்றைய செய்தி ஒன்று பதில் அளிக்கிறது. திரு. மாதவன் நாயர் என்பவர் பிரபல விஞ்ஞானி. வெட்டவெளித் துறையின் முன்னாள் தலைவர். மத்திய அரசு அவருக்கும், மேலும் மூன்று மாஜி அதிகாரிகளுக்கும் யாதொரு அரசுப் பதவியும் கொடுக்கலாகாது என்றொரு ஆணை பிறப்பித்துள்ளது. அந்தத் தடாலடி ஆணை நான்கு விதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

  முதல்கேள்வி: அவர்கள் நிஜமாகவே தவறு செய்திருந்தால், அவர்களில் சிலரும், மற்றும் சிலரும், தணிக்கைத் துறை அப்பட்டமாக எழுதியது போலத் தங்க நாணயங்களைப் பரிசிலாகப் பெற்று இருந்திருந்தால், இந்த மென்மை வருடல் ஒரு தண்டனையா என்ன? அவர்கள் மீது சட்டபூர்வமாக 2008-லிருந்து ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகி விட்டால், இந்தத் தடாலடி ஏன்? மாபெரும் தவறுகளை ஒப்புக் கொண்ட மாதிரி தான் பிற்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் தப்பி விட்டனரோ என்ற ஐயம்; இரண்டாவது கேள்வி எழுகிறது.

  இரண்டாவதுகேள்வி: இது மேலும் சிக்கலானது. ஆதாரங்களைப் பாரபட்சமில்லாமல் ஆய்வு செய்தால், தவறுகளுக்கு மற்றும் பலர் துணை போயிருக்கலாம் என்று தோற்றம். ஏனெனில், இந்த ஸ்பேஸ் துறையே பிரதமரின் நேரடி அலுவல்களில் ஒன்று. அவர் தான் இத்துறைக்குப் பொறுப்பு ஏற்கும் அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் திரு.பிருதிவிராஜ் செளஹான் அன்றாடப் பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர். அவருக்கும், பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரியாதபடி, திரு. மாதவன் நாயர் மறைத்து விட்டார் என்று சொல்ல இயலாது. அவர்கள் தஸ்தாவேஜுகளை இனம் கண்டு (அல்லது இனம் காணாமல் !) அவ்வப்பொழுது சம்மதம் தெரிவித்து இருக்க வேண்டும், அரசு விதிமுறைப்படி. மேலும், இந்த எஸ். பாண்ட் விவகாரம் நாட்டின் பாதுகாப்பைப் பாதிக்கக் கூடியது. அந்தப் ‘பொன் பரிசில்’ அளித்த கம்பெனிக்கு எக்கச்சக்கச் சலுகைகள். இலாகாவின் மந்திரியோ பிரதமர். அவருக்குத் தெரியாது, இந்தக் கூத்து என்று அவருடைய ஆலோசகர்களின் குழு சொல்கிறது. யார் இதை நம்ப முடியும்?சந்தடி சாக்கில் துறை சாராத துணை அமைச்சர் ஒருவர் வந்து விஞ்ஞானிகளைத் தரக்குறைவாக, 27-01-2012 அன்று சாடியிருக்கிறார். அவர் வந்து புகல் என்ன நீதி? என்று திரு. மாதவன் நாயர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஐயகோ! இந்தியா கலிலியோ காலத்துக்குத் தள்ளப் பட்டதோ என்று மாதவன் நாயர் வினவுகிறார். நாம் எங்கே போய் அழுவது? ஜனாப் அப்துல் கலாம் அவர்களிடம் போயா?

  மூன்றாவதுகேள்வி: அந்த ஒப்பந்தம் தான் ஒரு வருடம் முன்னால் அபார்ஷன் செய்யப்பட்டு விட்டதே என்று ஒரு சால்ஜாப்பு. அது எடுபடாது, ஐயா. இந்தியத் தணிக்கைத்துறை சுணக்கம் காட்டாமல் தவறுகளைச் சுட்டியதாலும், ஊடகங்கள் சங்கு ஊதியதாலும், மக்கள் மன்றம் ஊழலையும், லஞ்சத்தையும் நாள் தோறும் கண்டித்து வந்த காலகட்டம் அது என்பதாலும் தான், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காலகட்டத்தைப் பாருங்கள். ஃபெப்ரவரி 2011. இல்லாவிடின், ஒப்பந்தம் நிறைவேறி, ஆடிட் குறிப்பிட்ட இரண்டு லட்ச கோடி ரூபாய்கள் நஷ்டம் கடையேறியிருக்கும்.

  நான்காவதுகேள்வி: இந்தியத் தணிக்கைத் துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன? என்ன? சரியான கேள்வி.

  தொடரும்...

 7. #55
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 23

  இன்னம்பூரான்
  வாசகர் ஒருவர், ஏலம் பிடிப்பதில் கூட்டுக்களவாணித்தனத்தை பற்றி, இத்தொடரின் பின்னூட்டத்தில், கேள்வி எழுப்பியிருந்தார். இன்றைய (11 02 2012) ஊடகச்செய்தி அதற்கு பிரமாணத்துடன் பதில் அளிக்கிறது.

  அதை படித்தவுடன் நினைவில் வந்தது, 1956/57ல் அக்காலத்து சென்னை மாகாண அரசாணை ஒன்றை தணிக்கை செய்தது. அந்த அரசாணை குறிப்பிட்ட நபரின் பெயர் நன்றாக நினைவில் இருக்கிறது. அவருடைய சந்ததியின் மனம் புண் படலாகாது என்று அதைச் சொல்ல வில்லை. அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி. மக்களிடையே நற்பெயர். நல்ல பெர்சனாலிட்டி. மிகவும் அரிதாக உபயோகப்படுத்தும் ஒரு விதியை பயன்படுத்தி, அவரை தடாலடியாக டிஸ்மிஸ் செய்து விட்டார்கள். அந்த விதிப்படி சில விவரங்களை சொல்லித்தான் ஆக வேண்டும். அதில் ஒன்று, அவர் வாங்கிய மாதாந்திர மாமூல் பட்டியல். அதிலிருந்து, மாதிரிக்கு, மூன்று உதாரணங்கள்: இந்த பேட்டை கசாப்புக்கடையிலிருந்து தினந்தோறும் கோழி இரண்டு: இந்தக் கடையிலிருந்து தினந்தோறும் லட்டு ,:ரெளடி ‘முத்து’ விடமிருந்து தினந்தோறும் ஆயிரம் ரூபாய். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், லஞ்சத்தின் ஊற்று, தேவையற்ற பொருள்களின் மீது பேராசை. இன்றைய செய்தியும் அதைத்தான் சொல்கிறது. 122 2ஜி உரிமங்களை ரத்து செய்த உச்ச நீதி மன்றமும் அதைத்தான் சொல்கிறது. தணிக்கை அறிவிக்கைகளும் அதைத்தான் சொல்கின்றன.
  இரு நாட்களுக்கு முந்திய செய்தியின் சுருக்கம்: முத்திரையிட்ட கவர்களில் பெற்ற ஏலத்தொகை ஆவணங்களை வைத்து, பேத்துமாத்து செய்த வகையில், கன்னா பின்னா என்று போலீஸ்/சுங்க அதிகாரிகள் லஞ்சலாவண்ய பேயாட்டம் புரிந்ததை, பிங்கலி மோஹன் ரெட்டி என்ற வாரங்கல் வாசியான ஒரு சாராய வியாபாரி கொட்டித் தீர்த்து விட்டார்.

  ஒரு பட்டியல்:
  6 லக்ஷம் ரூபாய் ஆறு கடைகளுக்கு; இது மேல் மட்டத்துக்கு. மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய், கீழ்மட்டத்தில். நடுமட்டம் தனியாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் வாங்கிப்போகும். கொஞ்சம் உயர் மட்டம், வருடம் இருமுறை கஜினி படையெடுப்பு. சிறப்பு அதிகாரிகள் படை ஒன்று, அவ்வப்பொழுது எம்மை வதைக்க, வந்து சேரும். அவர்களுக்கு 36000 ரூபாய் அழவேண்டும். ஆந்திரப் பிரதேசத்து டாஸ்மாக்கர்கள், அவர்கள் பங்குக்கு கறந்து விடுவார்கள். இது கொடுத்தவரின் சோகக்கதை.
  வாங்கியவர்களின் ஒப்புதல் வாக்கு: நடுமட்ட அதிகாரிகளில் இருவர் இதை உண்மையென்றனர். ஒரு கான்ஸ்டபிள் மாமூல் வரலாற்றை ஒப்புவித்தார். ஜூலை 2010ல் ஏலம் விட்டதிலிருந்து பெருமளவு மாமூலம் வாடிக்கை என்றும் சொன்னார்கள். வாரங்கல் மாநிலம் தாண்டி, இரண்டைரைக்கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக ஒருவர் கூறினார். இங்கு சொல்லப்பட்டது ஒரு துளி என்க. பல லஞ்சோஸ்தவர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல். நான் பெயர்களைத் தவிர்த்து விட்டேன். அதுவல்ல பாயிண்ட். அந்த மாநிலத்தை மட்டும் குற்றம் சாற்றுவதிலும் பயனில்லை.

  பின்னூட்டத்தில் எழுப்பப்பட்ட வினாவுக்கு பதில்: வேலியே பயிரை மேய்ந்தால், அது புற்று நோய் போன்றது.கொளுத்த தான் வேண்டும்.

  தொடரும்...

 8. #56
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  51
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  100,726
  Downloads
  21
  Uploads
  1
  தணிக்கை என்னும் முட்டுக்கட்டைத் தொடரை மீண்டும் தொடர்வதற்கு நன்றி பாரதி அவர்களே.

  லஞ்சோஸ்தவர்கள் - தேர்ந்த பெயர்ச்சொல்தான். பகிரப்பட்ட ஒரு துளியே இத்தனை மலைப்பைத் தருகிறதென்றால் மொத்தமும் எப்படியிருக்கும்? நினைக்கவே பதறுகிறது.

  இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கு நன்றி.

 9. #57
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  கருத்துக்கு நன்றி கீதம்.
  -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 24

  இன்னம்பூரான்

  பழங்கதை

  அகில உலக நாடுகளின் தணிக்கைச் சங்கமொன்று உண்டு. INTOSAI என்று அதற்குப் பெயர். அம்மாதிரியே, ஆசிய அமைப்பு ஒன்று உண்டு. அதன் பெயர்: ASOSAI. அதற்கு இந்த வருடம் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்தியாவின் தணிக்கைத்துறையைப் பற்றி அறிய மக்களிடையே ஆர்வம் கூடி வரும் வேளையில், உலகளவில் அத்துறையின் பணியைப் பற்றி எழுத நினைத்தேன். கண் முன் வந்து நிற்பதோ, ஒரு பழங்கதை. ஆம். தனது நாற்பது வருட அனுபவத்தின் அடிப்படையில், ஹிந்து இதழில், அக்டோபர் 24, 1986 அன்று வந்திருந்த கட்டுரை ஒன்றும் அதிலிருந்த மேற்கோளும்.

  “தன் முதுகுக்குப் பின்னால் நடப்பதையெல்லாம், அரசு உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். சொன்னதைச் செய்கிறோமா என்று அலச வேண்டும். இல்லையென்றால், தன் போக்கைச் சரியான பாதையில், மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ஒழிய, (ஆப்ரஹாம் லிங்கன் சொன்னது போல) ஜனநாயகம் ‘மக்களால், மக்களுக்காக, மக்களால் வழி நடத்தும்’ ராஜபாட்டையாக அமையாது.” சொன்னது ஸர் ஐவர் ஜென்னிங்க்ஸ் என்ற அரசியல் சாஸன வல்லுனர். இந்தியாவின் ‘ஐக்கிய நாடு அமைப்பு’(Federalism) பற்றி அருமையான ஆலோசனைகளை அளித்தவர். 1953ல் அவர் சென்னை வந்திருந்தார். ‘தெளிவு’ என்றால், அவர் பேச்சைக் கேட்க வேண்டும்.அக்டோபர் 24, 1986 அன்று வந்திருந்த கட்டுரையில் இந்த மேற்கோளுடன், நாடாளுமன்றத்தின்/சட்ட சபையின் பொதுக் கணக்கு மன்றம் எவ்வாறு தணிக்கை அறிக்கைகளைக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி எழுதியவர், எனது நண்பரும், தணிக்கைச் செயல்பாடுகளைப் பற்றிய ஆசானுமாக இருந்த திரு. டி.நரசிம்மன் அவர்கள். அவரை 89 வயதில் மார்ச் 2, 2012 அன்று இழந்தோம். வல்லமை எனக்கு சுயேச்சையாக எழுதும் உரிமையை அளித்துள்ளது. இன்று திரு. டி.நரசிம்ஹன் அவர்களின் பாமரகீர்த்தி எழுத விழைகிறேன். ஏனெனில், கோர்வையாக ஹிந்து இதழில் அவர் எழுதி வந்த கருத்துக்கள், கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டின் பின்னும், நம் நாட்டின் நடப்பை/ அரசின் போக்கை/ ஜனநாயகத்திற்குப் ‘பட்ட காலில் படும்’ படுகாயங்களைத் தெளிவுற உரைக்கின்றன. ஒரு நூற்றாண்டு என்பதை முதலில் விளக்க வேண்டும்.

  இந்தியா சுதந்திரம் பெற்றது 1947ல். அதற்கு முன் சில வருடங்களாகவே, நாடெங்கும் அதுவே பேச்சு. நான் பள்ளி மாணவன் அந்தக் காலக்கட்டத்தில். திரு. டி.நரசிம்ஹன் அவர்களோ 1946-ல் இந்தியத் தணிக்கைத்துறையில் அசிஸ்டெண்ட் அக்கவுண்டண்ட் ஜெனரலாகப் பதவியில் அமர்ந்தவர். அவரது தீர்க்க தரிசனமான கட்டுரைகளோ 1986ல் வெளி வந்தன. இதற்கு நடுவில், 1957ல் எனக்கு அவர் மேலதிகாரி/ஆசான். 1980-களில் நாங்கள் இருவரும் ஆந்திரப்பிரதேசத்தில் பணி புரிந்தோம். அவர் மூத்த அக்கவுண்டண்ட் ஜெனரல். நான் இளைய அக்கவுண்டண்ட் ஜெனரல். என்னால் ஆன வரை, வழக்கம் போல் நானும் அவரைத் தொணத்தினேன். எதற்கு இதையெல்லாம் சொல்ல வருகிறேன் என்றால், மனித இனத்தின் தொகையே சமுதாயம். சுற்றம் உறவு தந்த சமுதாயம். பள்ளிக் கல்வியின் நன்கொடையான சமுதாயம். அலுவலகம் தொழிற்சமுதாயம். நாடு தேசாபிமான சமுதாயம். எல்லாமே உள்வட்டங்கள் தான், உலகளவில்.

  இன்று உலகளவில் இந்தியத் தணிக்கைத்துறை, ஆசியத் தணிக்கை அமைப்பின் தலைமை ஏற்றுள்ள காலக்கட்டதில், என்னுடைய தொழிற்சமுதாயத்தில், தொடக்கத்திலிருந்து, எனது நண்பரும், தணிக்கைச் செயல்பாடுகளைப் பற்றிய ஆசானுமாக இருந்த திரு. டி.நரசிம்மன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவரது மனைவி திருமதி. அம்புஜம் நரசிம்மனுக்கும், புதல்வர் திரு.ராம்ஜீக்கும்,சுற்றத்துக்கும் என் சார்பிலும், வல்லமை சார்பிலும் அனுதாபம் தெரிவிப்பது என் கடனே. தருணம் கிடைத்தால், அவருடைய பணி/ கட்டுரைகள் பற்றிப் பிறகு பார்க்கலாம்.

  தொடரும்...

 10. #58
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  19,600
  Downloads
  62
  Uploads
  3
  தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 25

  இன்னம்பூரான்

  ருத்ராக்ஷப்பூனைக்கு...

  ருத்ராக்ஷப்பூனைக்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 17, 2012) காலை மூன்று மணிகளைக்கட்டி விட, பங்குச்சந்தை மட, மட என்று சரிந்தது. அந்த ஆராய்ச்சி மணிகள், ஆடிட் ரிப்போர்ட்கள் (N0. 5, 6 & 7 :2012 -13):
  1. மாபெரும் சக்தி உற்பத்தி மையங்களின் கட்டுமானம் +
  2. டில்லி சர்வதேச விமான நிலைய கட்டுமானம் +
  3. நிலக்கரியை தோண்ட, பணமூட்டையை புதைத்த காதை:
  கிட்டத்தட்ட 4 லக்ஷம் கோடி ரூபாய் நஷ்டம், பாரதவர்ஷத்தின் பிரஜைகளுக்கு, என்று அந்த ரிப்போர்ட்கள் குற்றம் சாட்டின. அடுத்த கட்டங்களில் எத்தனை நஷ்டமோ? நிலக்கரியின் அதிக விலை, சங்கிலித்தொடரில், கிள்ளுக்கீரை விலையை உயர்த்தும்; பயணிகளுக்கு விமானநிலைய வரி ஏறினால், பன்னாட்டு விமானங்கள், லாஹூரையும், ஹாங்காங்கையும், கொழும்புவையும் ஆதரிக்கும். நஷ்டம் நமதே. மின்சக்தி விலை உயர்ந்தால், பன்னாட்டு கம்பெனிகள் ஓடிடுவார்கள். குடியானவன் தலையை சொறிவான். மின்வெட்டு: ஜனத்தொகை கூடும். அந்த வகை எண்ணில் அடங்கா நஷ்டங்களை, குத்து மதிப்பாக, இன்னுமொரு நாலு லக்ஷம் கோடி எனலாம். ஆடிட்டர் ஜெனெரலுக்கு ஆரூடக்கணக்கெல்லாம் ஊகிப்பதில் ஆர்வம் இல்லாததால், சரிந்த பங்குச்சந்தை மேலும் யாரை எந்த அளவு குலைத்து நாசம் செய்தது, குலைக்கப்போகிறது என்பதை இப்போதைக்கு விட்டு விடுவோம். கடிச்சதென்னெமோ கடிச்சாச்சு. குதறியுமாச்சு.

  நமது பிரதமர் திரு. மன்மோஹன் சிங் அவர்கள் தன் பணி யாதாயினும், கண்ணியமாக, நாணயத்துடன், காசு, பணம் வாங்காமல், செய்தவர் என்ற புகழ் பெற்றவர். அதனால், அவரை யாராவது குறை சொன்னால் எனக்குப் பிடிக்காது. இன்று நானே குறை கூறுவதால், தலையில் அடித்துக்கொண்டு, எழுதுகிறேன். அமைச்சர்கள் யாவருக்கும் எஜமானன் என்ற முறையிலும், அடிபட்ட துறை ஒன்று சிலகாலம் அவரது நேரடி கண்காணிப்பில் இருந்ததாலும், அவருடைய பொறுப்பும், அதை தட்டிக்கழித்த ஸ்வபாவமும் தாங்கொண்ணா விசனம்.

  இன்று நான் எழுதப்போவது அறிமுகக்கட்டுரை கூட இல்லை. இது ஒரு முகாந்திரம் மட்டுமே. மூன்று ரிப்போர்ட்டுகளையும் எளிதில் படிக்க முடியவில்லை. நேற்று, இன்னேரம், ஆடிட்டர் ஜெனெரலின் இணையதளம் உறைந்து கிடந்தது. எந்த புண்ணியாத்மா செய்த கைங்கர்யமோ? ரிப்போர்ட்களை வலையில் ஏற்றுவதில் இன்னல்கள் பல இருந்ததாக, என் ஊகம். எப்படியோ ஒரு பார்வை பார்த்தாய்விட்டது. கண்களும் கலங்கின, அண்ணல் காந்தியை நினைத்துப்பார்த்து.

  அவற்றின் சாராம்சம்:


  ஆடிட் ரிப்போர்ட் 7: (என் விஷயதானம்: நிலக்கரி ஊழல்கள் பழம்பெருச்சாளிகள். தான்பாத் நகரில் ஒரு நாள் கழித்தால் போதும். கறுப்புப்பணத்தின் மகிமை அறிவீர்கள், கொல்லப்படாமலிருந்தால்!) எனினும், தனியார் துறை பணமூட்டைகளுக்கு நிலக்கரி சுரங்கங்களை, ஏலம் போடாமல், தாந்தோன்றித்தனமாக தாரை வார்த்த வகையில் ` 10.67 லக்ஷம் கோடி நஷ்டம் என்று தணிக்கைத்துறை சொல்லப்போவதாக, மார்ச் 2012ல் ஒரு பிரபல நாளிதழ் கூறியது. நிலக்கரித்துறையோ, குய்யோ முறையோ என்று அலறி, அரசு நடத்தும் கம்பெனிகளின் அதீத லாபத்தை விட்டு விடுமாறு கெஞ்சினர். மேலும், திறந்த வெளி சுரங்கங்களை (நெய்வேலி மாதிரி) மட்டும் கணக்கில் போட்டுக்கொள்ளுங்கள். தோண்டும் சுரங்கங்கள் நஷ்டத்தில் ஓடுகின்றன, என்றார்கள் ஆடிட்டர் ஜெனெரலும் இசைந்தார்; நஷ்டம் ` 1.86 லக்ஷம் கோடி என்றார். ( முதல் பார்வையில் எனக்கு இசையவேண்டியதாக தோன்றவில்லை என்பது வேறு விஷயம்.) ஆக மொத்தம், எஸ்ஸார் குழுமம், ஜிண்டால், அதானி, ஆர்செலார்மிட்டல், டாடா ஸ்டீல் வகையறா கம்பெனிகளுக்கு தடால்புடால் ஆதரவு தந்த இந்த முறைகேட்டினால் வந்த நஷ்டம் ` 1.86 லக்ஷம் கோடி என்று மதிப்பீடு செய்தது, பிரதமரின் ஆளுமைக்குட்பட்ட மத்திய அரசு தான். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், அமைச்சர்கள் திருவாளர்கள் வி.நாரயணசாமியும், ஸ்ரீபிரகஷ் ஜெய்ஸ்வாலும், அபிஷேக் சிங்வியும், தணிக்கைத்துறையை நிந்தித்து, ஏன் சாமியாட்டம் ஆடுகிறார்கள் என்று புரியவில்லை. கஷ்டகாலம்!


  ஆடிட் ரிப்போர்ட் 6: மற்ற விஷயங்களை பிறகு பார்க்கலாம், பெரும்பாலான வாசகர்களுக்கு விழிப்புணர்ச்சி உந்தினால். முக்கிய ஆக்ஷேபணை: விதிக்கு மீறிய ‘பண்டமாற்றம்’ உதவியால், ரிலையன்ஸ் பவர் என்ற அனில் அம்பானி கம்பெனிக்கு, ஒப்பந்தத்துக்கு அப்பாற்பட்ட, அதிகப்படி லாபம் `29,033 கோடி கிடைக்க வகை வகுத்தது.


  ஆடிட் ரிப்போர்ட் 5: டில்லி தேசத்தின் தலைநகரம். அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தின் தரமுயர்த்த ஜீ எம் ஆர் என்ற கம்பெனியின் கூட்டாளிகள் உட்பட்ட நிறுவனத்துக்கு `240 பிலியன் விலை பெறக்கூடிய 240 ஏக்கர் நிலம் பத்தில் ஒரு பங்கு விலையில் கணக்கிடப்பட்டு, அதுவும் கம்பெனியின் பங்குகளாக ரசவாதம் செய்யப்பட்டு, (அதாவது விலை பெற்றுக்கொள்ளாமல்), தாரை வார்க்கப்பட்டது.

  இந்த முகாந்திரம் கூட என் மனநிம்மதிக்காக எழுதப்பட்டது. பெரும்பாலான வாசகர்கள் விரும்பினால் ஒழிய, இந்த கருமாந்திரத்தில் என் மனதை செலுத்தப்போவதில்லை. அப்படிச்சொல்லவேண்டியது அதிகம். வேணுமானால், அந்த ரிப்போட்டுகளை இணைத்து விடுகிறேன்.

  (தொடர் என்னமோ தொடரும், ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள்!)

  தொடரும்...


 11. #59
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  08 Nov 2010
  Location
  நாகர்கோயில்
  Posts
  1,859
  Post Thanks / Like
  iCash Credits
  38,955
  Downloads
  146
  Uploads
  3
  மீண்டும் தொடரும் தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை க்கு என் வரவேற்புகள் ...உண்மைகளினை துணிந்து தணிக்கை செய்யும் இந்த தணிக்கை துறையின் செயல்பாடு இன்றைய அரசியல் முகவர்கள் கோபத்தினை தூண்டி அவர்கள் கூறும் வார்த்தைகள்(குறிப்பாக மத்திய அமைச்சர் நாராயணசாமியின் பேச்சு ) சாக்கடை அருகே செல்லும் ஒரு வெள்ளை அன்னத்தின் மீது சேற்றினை தூற்றுவது போல் உள்ளது ...
  என்றும் அன்புடன்
  நாஞ்சில் த.க.ஜெய்

  ..................................................................................
  வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
  சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
  ...................................................................................

Page 5 of 5 FirstFirst 1 2 3 4 5

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •