Page 1 of 22 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 261

Thread: பூக்கள் பூக்கும் தருணம் - நிறைவுப்பகுதி

                  
   
   
  1. #1
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1

    பூக்கள் பூக்கும் தருணம் - நிறைவுப்பகுதி

    பூக்கள் பூக்கும் தருணம்
    ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
    புலரும் காலைப் பொழுதை
    முழு மதியும் பிரிந்து போவதில்லையே
    நேற்றுவரை நேரம் போகவில்லையே
    உனது அருகே நேரம் போதவில்லையே
    எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
    எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
    இரவும் விடிய வில்லையே
    அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
    பூந்தளிரே…


    ஏமி ஜாக்ஸன் ஏனோ சுந்தருக்கு ஜாக்கியாய்த் தெரிந்தாள். மனம் படத்தில் லயிக்காமல் பின்னோக்கி நழுவியது. ஆங்கிலோ இந்தியப் பெண்ணான ஜாக்குலினைத் தான் முதன்முதலாய்ப் பார்த்து வாய் பிளந்த காட்சி மனத்திரையில் தோன்றியது. இதற்குமேலும் படம் பார்ப்பது போல் நடிப்பது சாத்தியமில்லை என்று புரிந்தபின் கிரியைத் தனித்து விட்டுவிட்டு மெல்ல எழுந்து அறைக்குள் தஞ்சமடைந்தான்.

    அறைக்கதவைச் சாத்தியபின்பும் விடுவேனாவென்று பாடல் ஒலி சுந்தரின் செவிநரம்புகளைத் தீண்டியது. இந்தக் காதுகளுக்கும் கதவிருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? காதுகளை மட்டும் அடைத்து என்ன புண்ணியம்? அவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டி தாய்மடி தேடி ஓடுவதுபோல் ஓய்வாக இருக்கும்போதெல்லாம் இந்தப் பாழாய்ப்போன மனம் கடந்தகாலத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கிறதே.... அதை என்ன செய்து அடக்குவது?

    தலைக்கு அடியில் இரு கைகளையும் கொடுத்து வெறித்த கண்களுடன் சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடி படுத்திருந்த சுந்தருக்குள் சட்டென்று வெறுமை பரவத் தொடங்கியது. இந்த மின்விசிறிக்கும் தனக்கும்தான் எத்தனை ஒற்றுமை! காலம் முழுவதும் சுழன்றாலும் தானிருக்கும் நிலையிலிருந்து அங்குலமும் நகரவியலாத அதைப்போல்தான் தானும். எத்தனை வேகமாய் காலம் என்னைச் சுழற்றினாலும் என் மனம் என்னவோ இன்னும் அவள் நினைவைத் துறக்க முடியாமல் அன்றிருந்த அதே நிலையில்!

    வார்த்தை தேவையில்லை
    வாழும் காலம் வரை
    பாவை பார்வை மொழி பேசுமே
    நேற்று தேவை இல்லை
    நாளை தேவையில்லை
    இன்று இந்த நொடி போதுமே
    வேரின்றி விதியின்றி
    விண் தூவும் மழை இன்றி
    இது என்ன இவன் தோட்டம்
    பூப்பூக்குதே……


    மெல்லிய வருடலாய்த் துவங்கி மனதை வியாபித்தப் பாடல் ஆழ்மனம் வரை சென்று அங்கிருந்த நினைவுகளைத் தட்டியெழுப்பத் தொடங்கியிருந்தது. அவை எழுந்தால் ஆபத்தாயிற்றே என்று பயந்து மீண்டும் அவற்றைத் துயிலவைக்கும் அவன் முயற்சிகளைத் தட்டிவிட்டு வெடுக்கென்று கொத்தாய் அள்ளி வந்து அவன் முன்னால் ஆட்டி அரக்கத்தனமாய்ச் சிரித்தது.

    இதம் தரவேண்டிய பாடல் இம்சிக்க.... 'ச்சே... என்ன வாழ்க்கை இது?'. எத்தனையோ முறை எழுந்தும் ஒவ்வொருமுறையும் அடக்கிவைக்கப்பட்ட சலிப்பு மீண்டும் தலையெடுக்க முனைய.... இந்த முறையும் அதன் முயற்சியில் தோல்வியே.

    "சுந்தர்...."

    அழைத்துக்கொண்டே கிரி அறைக்குள் வந்தான்.

    "என்னடா..... படம் பாக்காம பாதியிலேயே வந்திட்ட?"

    "தலை வலிக்கிற மாதிரி இருந்துது...."

    "பொய் சொல்லாதடா.... என்ன மலரும் நினைவுகளா?"

    மலரும் நினைவுகளா? மலர்ந்து வாடி உதிர்ந்த நினைவுகள் அல்லவா அவை? ஆனாலும் இன்னும் தொடர்ந்துவந்து இம்சிக்கிறதே? அப்படியானால் உதிர்ந்துவிட்டதாய் நினைத்த யாவும் இன்னும் உதிரவில்லையா? இதிலிருந்து மீள வழியே இல்லையா?

    கிரியிடம் பேச்சை மாற்ற விரும்பினான்.

    "நீ பாக்கலையா? நிறுத்திட்டே?"

    "ப்ச், எனக்கு கவிதா ஞாபகம் வந்திட்டு"

    "ஸ்கைப்ல பேசவேண்டியதுதானடா...?"

    "முடியலைடா... அவள் என்னைப் பார்த்ததுமே அழ ஆரம்பிச்சிடுறா.... அவளைப் பாத்தா எனக்கு மனசே கேக்கமாட்டேங்குதுடா...."

    சுந்தர் அவனுக்கு எப்படி தேறுதல் சொல்வதெனப் புரியாமல் விழித்தான். அவளும் என்ன செய்வாள்? எட்டு வயதில் ஒரு சிறப்புக் குழந்தையை வைத்துக் கொண்டு காதல் கணவனைப் பிரிந்து சொந்தங்களால் விலக்கப்பட்டு வாழும் வாழ்க்கை! மன உறுதி, துணிவு எல்லாம் இவனைப் பார்த்ததும் உடைந்துவிட, அழுகை பீறிடுகிறது. இரண்டு வருடங்களில் இவனுக்குப் பழகிப் போனாலும் அவளுக்கு இன்னும் பழகவில்லை, பாவம்.

    கிரி தானே தேற்றிக்கொண்டவனாய்,

    "சரி, சாப்பிடலாமா? டைம் ஆயிடுச்சி" என்றான்.

    "ஹும், அதுக்கென்ன? வேளாவேளைக்கு அது மட்டும் தவறாம நடக்குது...."

    "ரொம்பத்தான் சலிச்சுக்காதடா... இன்னும் ஒரு வாரந்தானே... அப்புறம் ரெண்டு மாசம் ஜாலியா இந்தியால எஞ்சாய் பண்ணப்போறே….. அக்கா கையாலே சூப்பர் சாப்பாடு! "

    "என்னவோடா... ஊருக்குப் போறோம்கிற ஆர்வமே இல்ல. ஏதோ அக்கா கட்டாயப்படுத்துறதால போறேன். இல்லைனா.... "

    "ம்! அக்காவைப் பாக்கப் போறதால இப்படி, இதுவே பெண்டாட்டியைப் பாக்கப்போறதா இருந்தா....... சரி, முறைக்காதே...விட்டுட்டேன், எதுக்கு இப்ப வம்பு... வா... சாப்பிட்டுட்டு வந்து படு.... "

    பசியே இல்லை. இருந்தாலும் எழுந்தான். தனக்காக இல்லாவிட்டாலும் கிரிக்காகவாவது அவன் போயே ஆகவேண்டும். ஒருநாளும் இவனை விட்டு அவன் உண்பதில்லை. நல்ல சமையற்காரன், நல்ல சாப்பாட்டுப் பிரியனும் கூட. சுந்தர் நேரெதிர். சமைப்பதிலும் சரி, சாப்பிடுவதிலும் சரி, அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. அதனாலேயே சுந்தருக்கு அடுப்படியில் கழுவுவதையும், துடைப்பதையும் தவிர வேறு வேலை இருப்பதில்லை. அதையும் சமயங்களில் கிரியே செய்துவிடுவான்.

    நண்பர்களின் சந்திப்பும் அடிக்கடி இந்த வீட்டில் நடக்கும். பணி நிமித்தம் சிட்னிக்கு வரும் நண்பர்கள் இன்னும் அரைமணி நேரம் கூடுதலாய் தெற்கு நோக்கி காரைச் செலுத்தினால் சுந்தர், கிரி இவர்களின் சிறு போர்ஷனை அடைந்துவிடலாம்.

    கிரி அத்தனைப் பேருக்கும் சமைத்துவிடுவான். சமைப்பதே தெரியாது. ஆனால் சைவமோ, அசைவமோ பக்கத்துணையாக பல கறிகளும் செய்து அசத்திவிடுவான். ஊரை, உறவுகளை, சொந்த மண்ணைப் பிரிந்து ஐயாயிரம் மைலுக்கு அப்பால் வாழும் உணர்வை முற்றிலுமாக நீக்கிவிடும் கிரியின் சமையலும் பக்குவமும். கிரியின் சமையலுக்கு அனைவருமே அடிமை என்றுதான் சொல்லவேண்டும்.

    சுந்தர் ப்ரிட்ஜிலிருந்த சோறு, குழம்பு எல்லாவற்றையும் எடுத்து மைக்ரோவேவில் சூடுபடுத்தினான். கிரி எண்ணெயைக் காயவைத்து மிளகு அப்பளங்களைப் பொரிக்கத் தொடங்கினான்.

    "ஏண்டா.... மைக்ரோவேல்லேயே பொரிச்சிடலாம்ல?"

    "அப்பா சாமி, அதை நீயே சாப்பிடு, எனக்கு எண்ணெயில பொரிச்சதுதான் இறங்கும்"

    "நாக்கு நீளம்டா உனக்கு"

    மணித்தக்காளி, கத்தரிக்காய் வத்தக்குழம்பு பிரமாதமாய் மணத்தது.

    "டேய், ரெண்டு அப்பளம் பொரிக்க இத்தனை நேரமா? வாடா... "

    "இருடா, இருடா.... சாப்பிட ஆரம்பிச்சிடாதே... "

    சுடச்சுட நான்கைந்து வடைகளைக் கொண்டுவந்து தட்டோரத்தில் தள்ளினான்.

    "ஏதுடா வடை?"

    "ம்? முக்குக் கடையில வாங்கிட்டு வந்தேன்"

    சொல்லிச் சிரித்தான். வடையைப் பிட்ட சுந்தர் அதன் வித்தியாசமான நிறத்தைப் பார்த்துவிட்டு பரவசமானான்,

    "டேய், இது வாழைப்பூ வடைத்தானே? ஏதுடா வாழைப்பூ?"

    "எங்க ஆபிஸ்ல இருக்கிற ரெஜி பொண்ணு கொண்டுவந்து குடுத்துச்சிடா... நம்மூர் மரம் செடி அத்தனையும் வச்சி வளக்குதுடா.... அன்னைக்கி முருங்கக்காய், முருங்கக்கீரை எல்லாம் கொடுத்துதே... "

    சுந்தர் சிரித்தான்.

    "ஏண்டா சிரிக்கிறே?"

    "ஒண்ணுமில்லடா..." சொல்லிவிட்டு மறுபடியும் சிரித்தான்.

    "ஏய் என்னன்னு சொல்லு, இல்லைனா நானும் ஏதாவது சொல்லிடுவேன்... "

    "சரி, சரி சொல்றேன்.... ஒரு பழைய பாட்டு ஞாபகம் வந்திட்டு... அதான்" மீண்டும் சிரித்தான்.

    "என்ன பாட்டுடா?"

    "சிலை செய்யக் கைகள் உண்டு, தங்கம் கொஞ்சம் தேவை. சிங்காரப் பாடலுண்டு, தமிழ் கொஞ்சம் தேவைன்னு கேட்டிருக்கியா?"

    "ம். அதுக்கென்ன?"

    "கறி செய்யக் காய்கள் உண்டு, கிரி கொஞ்சம் தேவைன்னு அந்தப் பொண்ணு பாடினா எப்படி இருக்கும்னு....." முடிக்காமல் ஓகோவென்று மறுபடியும் சிரிக்க, கிரி எதுவும் சொல்லாமல் சுந்தரைப் பார்த்துப் புன்னகைத்தபடியே இருந்தான்.

    "என்னடா பாக்குறே?"

    "நீ இப்படிச் சிரிச்சி சந்தோஷமா இருக்கிறதைப் பாக்க எனக்கும் சந்தோஷமா இருக்குடா... "

    சட்டென்று சுயநிலைக்கு வந்த சுந்தர் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டான்.

    "சாரிடா..." நண்பனின் சந்தோஷத்தைக் கெடுத்துவிட்டோமோ என்ற குற்ற உணர்ச்சியுடன் சொன்னான் கிரி.

    "ச்சீ.... நமக்குள்ள என்னடா?"

    "சரி, இந்தியா போறதுக்கு எல்லாம் எடுத்துவச்சிட்டியா? “

    "ம், ஏதோ வச்சிருக்கேன்."

    "முதல்ல அதை முடி. நாளைக்கு பசங்க எல்லாரும் வரேன்னிருக்காங்க. ஆளாளுக்கு ஒரு பொருள் டெலிவரி பண்ணச் சொல்வானுங்க... அதனால முதல்ல உன் சாமானையெல்லாம் வச்சி வெயிட் பாத்துக்கோ..."

    "சரிடா... நீ உன் வீட்டுக்கு ஒண்ணுமே இன்னும் குடுக்கலையே...."

    "பெரிசா எதுவுமில்ல, பரத்துக்கு ஏதாவது டாய்ஸ் வாங்கித் தரலாம்னு இருக்கேன்."

    "கவிதாவுக்கு…?"

    சுந்தரின் கேள்விக்கு கிரி மெளனம் காத்தான். பின் சற்றே நெகிழ்ந்த குரலில் சொன்னன்.

    "எந்தப் பொருளைக் கொடுத்தும் அவளை சந்தோஷப்படுத்த முடியாதுடா.... காதலிச்சதுக்கான தண்டனையை இப்ப ரெண்டுபேருமே அனுபவிக்கிறோம், ப்ச்!"

    பிரிவின் வலியை சுந்தரால் உணரமுடிந்தது. கிரியின் வலிக்கு வயது இரண்டு வருடங்கள் என்றால் சுந்தருக்கோ அது இருபது வருடத்தை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தது. இருபது வருடமோ, இரண்டு வருடமோ... அனுபவிக்கும் ஒவ்வொரு நொடியிலும் பழுக்கக் காய்ச்சிய இரும்பென ஆழ்மனத்தில் இறங்கும் வேதனையை என்னவென்று சொல்வது?

    சுந்தர் கைக்குக் கிடைத்த ஒரு டிவிடியை அதன் ப்ளேயரில் போட்டு இயக்கினான். பாட்டுத் தொகுப்பு போலும். எல்லாம் கிரியின் ரசனை. ஒவ்வொரு பாடலாய்த் தள்ளிக்கொண்டே வந்தவனுக்கு, அந்தப்பாடலைக் கண்டதும் கைகள் இயங்க மறுத்தன.

    மனப்புண்ணை, பாடல்காக்கையொன்று மறுபடியும் கொத்திக்கிளற… நினைவுக்குருதி வழிய ஆரம்பித்தது.

    வானம்பாடி பறவைகள் ரெண்டு
    ஊர்வலம் எங்கோ போகிறது
    காதல் காதல் எனுமொரு கீதம்
    பாடிடும் ஓசை கேட்கிறது
    இசை மழை எங்கும்…..
    இசை மழை எங்கும் பொழிகிறது
    எங்களின் ஜீவன் நனைகிறது
    கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
    அழகிய வீணை சுரஸ்தானம்
    இரவும் பகலும் ரசித்திருப்போம்…..

    நீ ஒரு காதல் சங்கீதம்…
    வாய்மொழி சொன்னால் தெய்வீகம்


    (தொடரும்)
    Last edited by கீதம்; 25-07-2011 at 11:13 AM.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    என்னடா இன்னும் எதுவும் அரம்பிக்களியேன்னு பாத்தேன், என்னோட எதிர்பார்ப்பு பொய்யாகல. சோகத்தோடு தொடங்கும் நண்பர்கள் கதையா? கூட்டிகிட்டு போங்க, ஆனா ரொம்ப அழவைக்க கூடாது ஆமா
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் நிழல், பிரிவு...
    அதுவே, நிரந்தரப் பிரிவை மறக்க முடியாமல் நினைத்து வாழ்வது என்றாகையில்,
    முழுக்கணங்களுமே கனதிதான்...

    அற்புதமான தொடக்கம்...

    தொடருங்கள் கீதம்+அக்கா...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0
    அழுத்தமான தொடக்கம் .... அசத்துங்கள் ... கதையை படித்து முடிக்கும் வரை எமி ஜாக்சனின் அழகிய கண்களும் எங்கள் மனக்கண்ணில் கூடவே வந்தது .
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    ஆஹா...தங்கையின் கை வண்னத்தில் அடுத்ததொரு அற்புதத் தொடரா....ஆரம்பமே மென்மையான பாடல் வரிகளுடன் மனதுக்குள் நுழைந்து அமர்ந்துகொண்டது. ஏமி ஜாக்சன் நினைவு படுத்தும் அந்த பழையப் பறவை யார்...அதுக் கொத்திக் கிளறும் நினைவுப்புண்ணுக்கு பின்னனி என்ன என்ற சிறிய சஸ்பென்ஸும் சேர்ந்துகொண்டு,

    “மனப்புண்ணை, பாடல்காக்கையொன்று மறுபடியும் கொத்திக்கிளற… நினைவுக்குருதி வழிய ஆரம்பித்தது.”

    இப்படிப்பட்ட ’அட’ ரக வார்த்தையாடல்களுடன் அட்டகாசமாய் பயணிக்கத்தொடங்கியக் கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பூக்கள் பூக்கும் தருணம்...இனி அடிக்கடி வரனும் என்ற ஆவலுடன்......

    (முதல் பின்னூட்டமாய் இட இருந்தேன்....இணையம் காலை வாரிவிட்டதால்....இப்போது இடுகிறேன்...அது ஏங்க மன்றம் மட்டும் திறக்கவேமாட்டேங்குது....ஆ...ஊன்னா....oops அப்படீன்னு வருது)
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    அது ஏங்க மன்றம் மட்டும் திறக்கவேமாட்டேங்குது....ஆ...ஊன்னா....oops அப்படீன்னு வருது)
    ஏங்காமத் திறந்துபாருங்க பாஸ்...

    அ, ஆ, இ, ஈ, உ, ஊ...
    நீங்க நினைச்சபடிக்கு அகர வரிசையை மாற்றி மாற்றிச் சொன்னாற் திறக்குமா...
    தமிழ் மன்றமாயிற்றே... நான் மேலே குறிப்பிட்டபடி வரிசையாகச் சொல்லிப் பாருங்கள்...

    அதற்குப் பிறகும்ம் திறப்பதில் ஏதாவது பிரச்சினை என்றால்,
    பிரவீன், அன்புரசிகன் போன்றோரை நாடுங்கள்...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    பூக்கும் தருணத்தில் பூ விடும் பெருமூச்சு சூடாக இருக்கிறதே..... மனதுக்கு இதமளிக்கும் பாடல் கூட அதன் தாபத்தைத் தீர்க்கமுடியவில்லையே.....சீக்கிரம் குளிரவையுங்கள்...

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கலையரசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Posts
    1,562
    Post Thanks / Like
    iCash Credits
    68,621
    Downloads
    3
    Uploads
    0
    பூ பூக்கும் தருணம் என்ற தலைப்பில் கவிதையோ என்று திறந்தால் தொடர்கதை! ஆரம்பமே அட்டகாசமாயிருக்கிறது. நேரங்கிடைக்கும் போது படிப்பேன்.
    வாழ்த்துக்கள் கீதம்!
    வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு.


    நன்றியுடன்,
    கலையரசி.

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    ஏங்காமத் திறந்துபாருங்க பாஸ்...

    அ, ஆ, இ, ஈ, உ, ஊ...
    நீங்க நினைச்சபடிக்கு அகர வரிசையை மாற்றி மாற்றிச் சொன்னாற் திறக்குமா...
    தமிழ் மன்றமாயிற்றே... நான் மேலே குறிப்பிட்டபடி வரிசையாகச் சொல்லிப் பாருங்கள்...

    அதற்குப் பிறகும்ம் திறப்பதில் ஏதாவது பிரச்சினை என்றால்,
    பிரவீன், அன்புரசிகன் போன்றோரை நாடுங்கள்...
    என் கவலை எனக்கு......நெடிய பின்னூட்டம் தட்டச்சி....பதியப்போகும் நேரத்தில்......மன்றம் திறக்காமல் சண்டித்தனம் செய்கிறது....என்ன செய்வது?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    சிவா.ஜி...
    மாற்று உலாவிகளைப் பயன்படுத்திப் பாருங்களேன்...
    இப்போது அதிகமாக குரோமைத்தான் பயன்படுத்துகின்றேன். சில ஒத்துழைப்புக்கள் நல்காத போதும், நன்றாகவே இயங்குகின்றது...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நான் எப்போதுமே குரோம்தான் அக்னி...அதுதான் இப்படி அடிக்கடி oops ன்னு சொல்லுது...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நான் எப்போதுமே குரோம்தான் அக்னி...அதுதான் இப்படி அடிக்கடி oops ன்னு சொல்லுது...
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 22 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •