Page 14 of 22 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 ... LastLast
Results 157 to 168 of 261

Thread: பூக்கள் பூக்கும் தருணம் - நிறைவுப்பகுதி

                  
   
   
  1. #157
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    (22)

    அழகிய ரோஜாப்பந்தைக் கொண்டு வந்து கையில் கொடுத்ததைப் போல் இருந்தது சுந்தருக்கு. அது உடலை முறுக்கி, மெலிதாய் வாயைக் கோணிக் கொண்டு ஒரு கொட்டாவி விட்டது. பின் அரைக்கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு மறுபடியும் மூடிக்கொண்டது. பச்சிளம் சிசுவை முதலில் வாங்கப் பயந்து மறுத்தவனிடம் எப்படி ஏந்திப் பிடிக்கவேண்டும் என்று கற்றுத் தந்து வற்புறுத்திக் கொடுத்துவிட்டுக் கேட்டாள் அத்தை,

    "உம்மருமவன் என்ன சொல்றான்?"

    "ஆமா.... அவன் எப்பவும் தூங்கிகிட்டே இருக்கான்...என்ன சொல்லப் போறான்?"

    "சீக்கிரமா கல்யாணம் பண்ணிகிட்டு எனக்கொரு பொண்ணு பெத்துக்குடு மாமான்னு சொல்லல?"

    வழக்கமான கிராமத்துக் கிண்டல் பேச்சு. முன்பென்றால் சட்டென்று கோபமோ வருத்தமோ வெளிப்படும். இப்போது மனமெங்கும் ஜாக்கியின் நினைவு இருந்ததால் இனம் புரியாத பரவசமே உண்டானது.

    சித்ரா மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். குழந்தையைப் பார்த்து மகிழ்ந்தாலும், அது அழும் வேளையில் மெலிதாய் சலித்துக்கொண்டாள். அடிக்கடி சோர்ந்துபோனாள். காரணமின்றி கார்த்திக்கிடம் கடுகடுத்தாள்.

    டாக்டர் கார்த்திக்கைத் தனியே அழைத்துச் சொன்னார், "மிஸ்டர் கார்த்திகேயன், சித்ரா இப்போ நார்மலா இல்ல. அவங்க மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்காங்க. அதனால்..."

    "டாக்டர், ஏதாவது பிரச்சனையா?"

    "நோ... நோ... சில பெண்களுக்கு பிரசவகாலத்தில் இதுபோல் டிப்ரஷன் உண்டாவது உண்டு. கர்ப்ப காலத்தில் ஹார்மோன்களின் சுரப்பு க்ராஜுவலா அதிகரிச்சிருக்கும். குழந்தை பிறந்த கொஞ்ச நேரத்துக்குள்ள அது கிடுகிடுன்னு குறைஞ்சு வழக்கமான அளவை அடைஞ்சுடும். இந்த ஹார்மோன் இம்பேலன்ஸ் டிப்ரஷனை உண்டாக்குது. ப்ளஸ் குடும்பப் பிரச்சனைகள், கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை, அழகு குறைஞ்சிடுமோன்னு பயம்...."

    "அவ அப்படி நினைக்கிற டைப் இல்லை, டாக்டர்"

    "அவங்களைச் சொல்லல. பொதுவான காரணங்களைச் சொல்றேன். அதனால் அவங்க மூடு ஸ்விங் ஆகிட்டே இருக்கும். மத்தவங்கதான் அனுசரிச்சு நடக்கணும். அதுக்காகத்தான் உங்களை கூப்பிட்டேன். சித்ராவோட ப்ரதர் விஷயமா அவங்க ஏற்கனவே ரொம்ப அப்செட் ஆனாங்க இல்லையா?"

    "ஆமாம், டாக்டர்"

    "அதனால்தான் சொல்றேன்... எச்சரிக்கையா இருங்க... சமயத்தில் குழந்தையிடம் கூட அவங்க கடுமையா நடந்துக்கலாம்."

    "டாக்டர்..."

    "பயப்படாதீங்க... போஸ்பாடம் டிப்ரஷனுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு. மாத்திரைகள் கொடுக்கறோம். நாளைக்கு சைக்காலஜிஸ்ட் வந்து பார்ப்பாங்க.சித்ராவைக் குணப்படுத்துற முயற்சியில் உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை. அதனால்...."

    "புரியுது, டாக்டர். இனி அவளச் சங்கடப்படுத்துற மாதிரி எந்த டாபிக்கும் எடுக்கமாட்டேன்."

    "தட்ஸ் குட்"

    கார்த்திக் இத்தனையையும் சொன்னபிறகு அக்காவிடம் ஜாக்கியைத் திருமணம் செய்ய நினைப்பது குறித்துப் பேசுவது சரியா? சரியில்லை. இப்போதைக்கு இந்த விஷயம் தனக்குள்ளேயே இருக்கட்டும். ஜாக்கியை சந்தித்தபின் அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கலாம்.

    ஜாக்கியை எப்படி சந்திப்பது? எப்படித் தொடர்பு கொள்வது? ஜாக்கி தன் நிலையைத் தெரிவித்துவிட்டாள். தான் எப்படி அவளிடம் என் நினைவை எடுத்துச் சொல்வது? இடையில் இருப்பவள் இந்த வரவேற்பாளினிதான். அவளிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையோ... வீட்டு முகவரியையோ கேட்டால் என்ன?

    கேன்டீனிலிருந்து வெந்நீர் வாங்கி வரச் சொல்லி அத்தை கையில் ஃப்ளாஸ்கைக் கொடுக்க... படியிறங்கும்போதே வரவேற்பறையில் அவள் இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே இறங்கினான். இரவுப் பணியிலிருப்பவள் தலைவாரி ரப்பர் பேண்ட் போட்டுக்கொண்டு, கிளம்புவதற்கு தன்னை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாள். அவள் இன்னும் வரவில்லை. பகல் வேலை என்பதால் ஆறுமணிக்குதான் வருவாள். கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது ஆறாக ஐந்துநிமிடங்கள் என்று காட்டியது. சாலையைக் கடந்து எதிர்புறமிருந்த கேன்டீனுக்குள் நுழையும்போது அவள் அரக்கப்பரக்க ஓட்டமும் நடையுமாக மருத்துவமனைக்குள் செல்வது தெரிந்தது.

    வெந்நீரைப் பெற்றுக்கொண்டு வந்தபோது அவள் ரெஜிஸ்டரில் என்னவோ மும்முரமாக எழுதிக்கொண்டிருக்க... இப்போது போய் நின்றால் காலையில் வந்ததும் வராததுமாக கழுத்தறுக்கிறானே என்று நினைத்துவிட்டால் என்னாவது என்ற பயத்துடன் சுந்தர் தயக்கமாய்ப் படியேற... அவள் அழைத்தாள்.

    "குட்மார்னிங், சுந்தர் சார்.... என்ன சார், கண்டுக்கவே மாட்டேங்கறீங்க?”

    "எ..என்ன?"

    "என்னவா? உங்க சிஸ்டருக்கு பையன் பிறந்திருக்கான். எங்களுக்கெல்லாம் சாக்லேட் எங்கே? கார்த்திகேயன் சாரும் கண்டுக்க மாட்டேங்கறார். நீங்கதானே பையனோட தாய்மாமா.... நீங்க வாங்கித் தாங்க... தப்பில்ல.."

    அவள் கிண்டலும் கேலியுமாய் சொல்ல பக்கத்திலிருந்த நர்ஸ் சிரித்தாள். நேற்றே எல்லாருக்கும் சாக்லேட் வாங்கித்தரவிருப்பதாக அத்தான் சொன்னாரே... இன்னுமா வாங்கவில்லை? அலுவலகத்தில் தொடர்விடுப்பு எடுக்க இயலாததால் சுந்தர் அவ்வப்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு தேவையானதை வாங்கித்தந்துவிட்டு சென்றுகொண்டிருந்தான். முன்பே தெரிந்திருந்தால் தானே வாங்கித் தந்திருக்கலாம். சரி, இப்போது என்ன, சாக்லேட்டுக்குப் பதில் ஸ்வீட் பாக்ஸே வாங்கித் தந்துவிடவேண்டியதுதான். அப்படியே ஜாக்கியின் முகவரியையும் வாங்கிவிடவேண்டும்.

    "என்ன சார்... யோசிக்கிறீங்க?"

    "ஸாரிங்க... நேத்தே வாங்கித்தரதா அத்தான் சொன்னார். மறந்திட்டார் போல... இன்னைக்கு வாங்கித் தரேன்.மொத்தம் எத்தனைப் பேரு?"

    "ஏன் கணக்காதான் வாங்கித்தருவீங்களோ? ஹா….. ஹா….. சும்மா சொன்னேன் சார், ஸ்டாஃப், டாக்டர்ஸ், அட்டென்டர்ஸ் எல்லாரையும் சேத்தா... முப்பத்திரண்டு பேர் சார்.... எல்லாருக்கும் ஃபைவ் ஸ்டார்தான் வேணும். லாக்டோகிங் வாங்கிக் குடுத்து ஏமாத்திடாதீங்க"

    அவள் பேச்சில் அதீத உரிமை பிரதிபலித்தது. சுந்தரைப் பார்க்கும் பார்வையில் கனிவு தென்பட்டது. ஜாக்கி தன்னைப் பற்றி இவளிடம் ஏதாவது சொல்லியிருப்பாளோ?

    அன்று அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு ஆனந்தபவன் சென்று இரண்டு கிலோ மில்க் ஸ்வீட் வாங்கிவந்து அவளிடம் கொடுத்து அனைத்து ஊழியர்களுக்கும் விநியோகிக்கச் சொல்ல.... விழி விரித்தாள்.

    "சார், நான் விளையாட்டுக்கு சொன்னேன். நிஜமாவே வாங்கிட்டு வந்திட்டீங்களா?....வாவ்... சார்... யூ ஆர் க்ரேட்! தாங்க் யூ சார்!"

    "இந்தாங்க நீங்க கேட்ட ஃபைவ் ஸ்டார்!"

    "ஓ மை காட்! சார்... அசத்துறீங்க... தாங்க் யூ... தாங்க் யூ... "

    சுந்தர் பக்கத்தில் ஒருவருமில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு கேட்டான்.

    "நீங்க தவறா நினைக்கக் கூடாது... ஜாக்குலின் அட்ரஸ் கொஞ்சம் சொல்லமுடியுமா?"

    "ஓ! இதுக்குதான் இந்த ஸ்பெஷல் ஃபைவ் ஸ்டாரா?" விஷமமாய்க் கண்ணடித்தாள். சுந்தர் அதிர்ந்தான். இப்படி அவள் கண்ணடித்தும் சிரித்தும் விளையாட்டாய்ப் பேசிக்கொண்டிருப்பதை யாராவது பார்த்தால் தங்களைத் தவறாக நினைக்கக் கூடும் என்று பயந்தான்.

    "எதுக்குக் கேக்கறீங்க?"

    "சும்மாதான்... அவகிட்ட... அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்"

    "சாரி சார்! ஜாக்கி சிஸ்டர் அனுமதியில்லாம அதை நான் கொடுக்க முடியாதே..."

    அத்தனை உற்சாகமும் வடிந்துவிட்டது. இவளென்ன முட்டுக்கட்டை போடுவது? வேறுவழிகளில் முயன்றால் முடியாதா என்ன?

    "சார், நான் வேணும்னா அவங்ககிட்ட போன்ல பேசிப் பாக்கறேன். அவங்க சம்மதிச்சா அட்ரஸ் தரேன்."

    இவனின் சோர்ந்த முகம் அவளை இரங்கவைத்தது போலும்.

    "எப்போ பேசுவீங்க?"

    "இப்ப டாக்டர் வர நேரம்! அப்புறமா பேசிச் சொல்றேன் சார்!"

    "சரிங்க..."

    அதுவரை இங்கென்ன செய்வது? அக்காவைப் பார்த்துவரலாம் என்று போனால்.... அறைக்கு வெளியில் அத்தை நின்றிருந்தாள்.

    "என்ன அத்தை, போரடிச்சிடுச்சா?"

    "டாக்டர் வந்திருக்காங்க...... என்னை வெளியில இருக்கச் சொன்னாங்க"

    "அத்தான் எங்க?"

    "புள்ளைக்கு ஏணை கட்டக் கயிறு, ஏணைத்துணி, ரப்பர் ஷீட்டு, மடக்கு கொசுவல.... எல்லாம் வாங்கணும்னு சொல்லி கடைக்குப் போயிருக்காரு.... நாளைக் கழிச்சு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்..."

    "நாளன்னிக்கா?"

    "ஆங்.... இப்பெல்லாம் தையல் பிரிக்கிற வேலையே கெடையாதாமே... தானாவே சரியாயிடும்னு சொல்றாங்க..."

    அத்தை மருத்துவ முன்னேற்றத்தை வியந்தபடி இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தரின் நினைவோ... அந்தப் பெண் இந்நேரம் ஜாக்கிக்கு போன் செய்திருப்பாளா? ஜாக்கி என்ன சொல்லியிருப்பாள்? என்பதையே நினைத்துக்கொண்டிருந்தது.

    கீழே போகலாமா? அவள் என்ன நினைப்பாள்? திருமணமாகிவிட்ட பெண்ணைத் தொடர்புகொள்ள இவன் ஏன் இப்படித் துடிக்கிறான் என்று தவறாக நினைப்பாளோ? நினைத்தால் நினைக்கட்டும். அவளுக்கென்ன தெரியும் எங்கள் காதலைப் பற்றி! பொறுமையற்று மீண்டும் கீழே வந்தான்.

    வரவேற்பறையில் ஆட்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. அவளிடம் இப்போது பேச முடியாது. அவளும் வருவோர் போவோருக்கு தகவல்கள் தெரிவித்து, வரும் நோயாளிகளின் மருத்துவக் குறிப்புகள் பதிந்து, அவற்றைக் கணினியில் ஏற்றி, கண்ணும் கையும் வாயும் ஓயவே இல்லை.

    சுந்தர் வரவேற்பறையில் ஓரமாய் இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அங்கிருந்த இந்தியா டுடேவை எடுத்து வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தான். இடைக்கிடை அவளை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான். அவளை நோட்டமிடுவதற்காகவே இவன் வந்து அமர்ந்திருப்பதுபோல் யாரும் நினைக்க நிறைய வாய்ப்புள்ளது என்று நினைத்தபோது பயமும் வந்தது.

    ஒருமுறை நேருக்கு நேர் கண்கள் சந்தித்தபோது, இவனது நோக்கம் அறிந்து அவள், தொலைபேசியைக் காட்டி உதட்டைப் பிதுக்கி, லைன் கிடைக்கவில்லையென்று சாடை காட்டினாள். நேரம் கடக்க.. கடக்க... சுந்தர் பொறுமை இழந்தான். தன்னிடம் ஜாக்கியின் தொலைபேசி எண்ணையும் தரமறுக்கும் அந்தப் பெண்ணின் மேல் கோபம் வந்தது. வேலையில் நேர்மை கடைப்பிடிக்கிறாளாம்.

    வேறு யாருடனும் அதிகம் பழகவில்லையென்பதால் இப்போதைக்கு இவளை விட்டால் வேறு வழியுமில்லை. ஜாக்கிக்கும் இவனுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது என்பதை ஜாக்கியின் கடிதத்தின் மூலம் இவள் அறிந்திருக்கிறாள். அதனால் மேற்கொண்டு காய் நகர்த்துவது இவள் மூலமெனில் எளிது. பொறுமை காக்க வேண்டும்.

    "என்ன சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கே... ஆபிஸ் போகல?"

    திடீரென முன்னால் வந்து நின்ற அத்தானின் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாமல் திணறினான். கார்த்திக் ஏதோ சந்தேகம் கொண்டு வரவேற்பாளினியைப் பார்க்க... அவள் ரெடிமேட் புன்னகையை உதிர்த்தாள்.

    "சரி, வா.... ரூமுக்குப் போகலாம்"

    "இல்ல... நீங்க போங்க...நான் அப்புறம் வரேன்"

    "சுந்தர், இங்க உக்கார்ந்திருக்கிறதுக்கு.... மேல வந்து சித்ராகிட்ட அத்தைகிட்ட பேசிட்டு உக்காந்திருக்கலாமே...."

    "என்னைத் தொந்தரவு பண்ணாம போறீங்களா? ப்ளீஸ்" சுந்தரின் குரலில் மெலிதாய்க் கோபம் எட்டிப்பார்த்தது.

    "ஓஹோ... கதை அப்படிப் போகுதா?"

    "எப்படி?" சுந்தர் கோபமும் எரிச்சலுமாய்க் கேட்டான். கார்த்திக் அதை அலட்சியப்படுத்திப் புன்னகைத்துச் சொன்னான்.

    "ம்..ம்.. நடக்கட்டும்... நடக்கட்டும்" சொல்லிவிட்டு சென்றுவிட.... சுந்தருக்கு சற்றுத் தாமதமாகவே அதன் பொருள் விளங்கியது.

    ச்சே! ஏன் இப்படி அவசரப்படுகிறார் இவர்?

    சட்டென்று ஏதோ நினைவுக்கு வர.... 'கடவுளே... ' என்று பதற்றத்துடன் மாடியேறினான்.

    எதைத் தடுக்க ஓடிவந்தானோ அது அவன் வருவதற்குள்ளாகவே நடந்துமுடிந்திருந்தது.

    "அப்படியா? கேக்கவே சந்தோஷமா இருக்கு. அந்த நாசமாப் போனவளை மறந்து தொலைச்சானே.... அது போதும். இந்தப் பொண்ணு யாரு...என்னன்னு விசாரிங்க... பேரு உதயநாயகின்னு தெரியும். வேற விவரம் எதுவும் தெரியல."

    அக்கா குதூகலத்துடன் அத்தானுக்குக் கட்டளையிட்டுக்கொண்டிருந்தாள். விட்டால் அடுத்த முகூர்த்தத்திலேயே சுந்தருக்கும் அந்தப் பெண்ணுக்கும் திருமணம் செய்துவிடுவது போல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    "வா... வா.. சுந்தரு, உனக்கு நூறு ஆயுசு..." அத்தை சொன்னாள்.

    "இப்படிக் கண்டவளையும் கட்டிகிட்டு நூறு வயசு வாழுறதுக்கு, பொட்டுனு போய்ச் சேர்ந்திடலாம்"

    "பாவி... உன் வாயிலே நல்ல வார்த்தையே வராதா? எப்ப நல்ல விஷயம் பேசுனாலும் குதர்க்கமா ஏதாவது பேசு" சித்ரா கடிந்தாள்.

    "அக்கா... அத்தான், ரெண்டு பேரும் நல்லா கேட்டுக்கங்க.... நான் ஜாக்கியைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் என் மனசாலயும் நினைக்க மாட்டேன். ஜாக்கியைக் கல்யாணம் பண்றது பத்திதான் இப்ப யோசிச்சுகிட்டு இருக்கேன்."

    சித்ரா அதிர்ச்சியில் வாயடைத்திருக்க... கார்த்திக் சரமாரியாக கேள்விகள் கேட்டான்.

    "என்னது? ஜாக்கியைக் கல்யாணம் பண்ணப் போறியா? அதுக்கு அவ ஒத்துகிட்டாளா? அப்போ அவ புருஷன்?"

    "ஜாக்கிகிட்ட இதுபத்தி இன்னும் பேசல. பேசுறவிதத்தில் பேசினா ஒத்துப்பா..."

    "நான் ஒத்துக்க மாட்டேன்" சித்ரா அழுத்தமாய்ச் சொன்னாள்.

    "எனக்கு அதைப் பத்திக் கவலையில்ல" சுந்தரும் அழுத்தம் காட்டினான். சுந்தரின் அழுத்தமான பேச்சு அனைவரையுமே அதிரவைத்தது.

    சித்ரா அரைநிமிடம் அமைதியாய் இருந்துவிட்டு முகம் திருப்பி அழ ஆரம்பித்துவிட்டாள். கார்த்திக் தவித்தான். மருத்துவர் சொன்ன அறிவுரையை மறந்து அவளிடம் இந்தப் பேச்சை எடுத்தது எத்தனைத் தவறு? ஆனால் இப்படி நடக்குமென்று யாருக்குத் தெரியும்?

    காலையில் போகும்போது அந்தப் பெண்ணிடம் சுந்தர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்ததையும் வேலையெல்லாம் முடித்துத் திரும்பிவரும்போது அவளுக்கெதிரில் அமர்ந்து தவிப்பாய் அவளையே நோட்டமிட்டுக்கொண்டிருந்ததையும் வேறு என்னவென்று புரிந்துகொள்வது?

    "சுந்தருங்கிறவருக்கு போன் வந்திருக்காம். கீழ கூப்புடுறாங்கோ.."

    தகவல் சொல்லவந்த ஆயாம்மாவைத் தள்ளிக்கொண்டு படிகளில் பாய்ந்தான் சுந்தர்.

    "போன்தானே வந்திருக்கு. இவரு என்னமோ பொதையலைக் கண்டமாதிரி இப்படி ஓடுறாரு?" அவள் நொடித்தாள்.

    கீழே வந்தபோது அவள்... உதயநாயகி அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.

    "போன் வந்திருக்குன்னு...." ரிஸீவரைக் காணாமல் இவன் தவித்தான்.

    "ஸாரி, சார், உங்ககிட்ட போன் நம்பர், வீட்டு அட்ரஸ் எதுவும் தரவேண்டாம்னு சொல்லிட்டாங்க சார், அதுவுமில்லாம இனிமே அவங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு கண்டிப்பா சொன்னாங்க சார்"

    தொல்லை தருகிறேனா? நானா? அடிப்பாவி! உன்னைக் காப்பாற்ற வந்த தேவதூதனை அலட்சியப்படுத்துகிறாயே... ஜாக்கி... என்னை நீ புரிந்துகொண்டது அவ்வளவுதானா? கண்ணில் அணை கட்ட சட்டென்று கைக்குட்டை எடுத்து முகத்து வேர்வையைத் துடைப்பதுபோல் துடைத்துக்கொண்டான்.

    "சார்.."

    "ம்?" வேறென்ன சொல்லியிருக்கிறாளோ?

    "ஜாக்கி சிஸ்டரோட எக்ஸ் லவ்வரா சார்?"

    அவமானத்தாலும் ஆற்றாமையாலும் அடிபட்டுக் கிடந்த மனம் அவளது இந்தக் கேள்வியால் அசுரத்தனம் கொண்டது. சூழலை மறந்து சுந்தர் அவளிடம் பாய்ந்தான்.

    "என்னங்க அது எக்ஸ் லவ்வர்... ஒய் லவ்வர்னு? காதலில் என்னங்க முன்னாள் பின்னாள்னு இருக்கு? அவ காதல் உண்மையா இருந்தா.... என்னோட ஒரு வார்த்தைக்காவது மதிப்பு குடுத்திருப்பா... இப்படி முகத்தில அடிச்சமாதிரி பேசாதேன்னு சொல்லமாட்டா... அவகிட்ட சொல்லிடுங்க... நான் சாகுறவரைக்கும் அவளத்தான் நினைச்சுகிட்டிருப்பேன்னு.... எனக்கு இப்ப இருக்கிற ஜாக்கி தேவையில்ல... அந்த உலகம் தெரியாத அப்பாவி ஜாக்கி போதும். அன்னைக்கு அவகிட்ட நான் பார்த்த காதல் போதும். சொல்லிடுங்க... என்னை மறக்க சொல்லிடுங்க... ஆனா.... அவளை மறக்கச் சொல்லி யாரும் என்னைக் கட்டாயப்படுத்த முடியாது... அவளுக்கே அந்த உரிமை இல்லைன்னு சொல்லிடுங்க.... பேச விரும்பலையாமா? பேசாம இருப்பா.... என்னை நினைக்காம இருப்பாளா? நெஞ்சைத் தொட்டு சொல்லச் சொல்லுங்க.... என்னைப் பைத்தியக்காரன்னு நினைச்சிட்டாளா? பரவாயில்ல... ஆனா... என்னைக்காவது ஒருநாள் என்னோட தவிப்பும் காதலும் அவளுக்குப் புரியும்...."

    சுந்தர் வெறிபிடித்தவனைப் போல் கத்திக்கொண்டிருந்தான்.கூட்டம் கூடிவிட்டது. எல்லோரும் கசமுசாவென்று பேசிக்கொண்டார்கள். உதயநாயகி அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள். அவளிடம்தான் ஏதோ பிரச்சனையென்று மருத்துவமனை ஊழியர்கள் குழுமிவிட... தலைமைச்செவிலி சுதா சிஸ்டர் வந்து சத்தமிட்டாள்.

    "ஹலோ.... என்ன? ஏன் இங்க வந்து கத்திக் கலாட்டா பண்ணிட்டிருக்கே? உன் வீட்டுப் பிரச்சனையையெல்லாம் உன் வீட்டோடு வச்சுக்கோ... இது ஹாஸ்பிடல். ஹாஸ்பிடல்ல எப்படி பிஹேவ் பண்ணணும்னு தெரியாதா? படிச்சவனாட்டம் இருக்கே... இப்படிக் கூச்சல் போட்டு எல்லாரையும் டிஸ்டர்ப் பண்றியே... முதல்ல வெளியே போப்பா..."

    சுந்தர் அவமானத்தால் குறுகிப்போனான். யாரோ தகவல் சொல்லி… ஓடிவந்த கார்த்திக், சுந்தரை நிலைக்குக் கொண்டுவர முயல, கார்த்திக்கின் கைகளைத் தட்டிவிட்டு வாசலுக்கு விரைந்தவன், தன் கோபத்தையும் எரிச்சலையும் பைக்கிடம் காட்டிப் புறப்பட…. அழகாய்ப் புலர்ந்த அந்த நாளின் மகிழ்வெல்லாம் அவனது ஆக்ரோஷ வாய்வீச்சால் சின்னாபின்னமாகி அற்பாயுளில் கரைந்துபோனது.

    love is torture
    words can’t just express
    love is gamble
    with tears of pain in life’s distress
    love makes your life a strain
    where money’s there
    to lose the game
    love has this crazy name
    of pain and sorrow
    die down in shame


    (தொடரும்)
    Last edited by கீதம்; 26-07-2011 at 12:02 AM.

  2. #158
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

    என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

  3. #159
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

    என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?

  4. #160
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    கதை மிக அழகாக நகர்கிறது

    காதலின் வலியை வார்த்தையில் உணர்த்துவது கடினம்

    ஆனால் நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்

    தொடருங்கள்

    பாருங்க நீண்ட நாளாக காணாமல் போன மதியை அழைத்து வந்து விட்டது உங்கள் கதை
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  5. #161
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Ravee's Avatar
    Join Date
    25 Apr 2009
    Location
    மதுரை, தமிழ்நாடு
    Posts
    1,833
    Post Thanks / Like
    iCash Credits
    23,808
    Downloads
    25
    Uploads
    0

    Smile

    Quote Originally Posted by மதி View Post
    ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

    என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?
    என்ன மதி விரதம் முடிஞ்சதா ? எல்லாம் நல்ல சேதிதானே ? எப்ப பந்தி சாப்பாடு ? ............
    ந.இரவீந்திரன்
    வாழ்க்கை எப்போதும் இனிமையானது ?

  6. #162
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by மதி View Post
    ஆக சுந்தர ஒரு பைத்தியக்காரன் ஆக்கிட்டீங்க.. காதல் ஒரு மனுசன இம்புட்டு பாடுபடுத்தணுமா? புதுசா ஒரு நாயகி உதயநாகயகி.! இதுல சுந்தர் காதல் ஜெயிக்கணும்னா உதயநாயகி காதல் தோக்கணுமா??

    என்ன கொடுமை இது..!!! திருப்பங்கள்.. திருப்பங்கள்னு போகுது! அடுத்து என்னவோ?
    நன்றி மதி.

    Quote Originally Posted by Nivas.T View Post
    கதை மிக அழகாக நகர்கிறது

    காதலின் வலியை வார்த்தையில் உணர்த்துவது கடினம்

    ஆனால் நீங்கள் அருமையாக எழுதியுள்ளீர்கள்

    தொடருங்கள்

    பாருங்க நீண்ட நாளாக காணாமல் போன மதியை அழைத்து வந்து விட்டது உங்கள் கதை
    நன்றி நிவாஸ்.

  7. #163
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    (23)

    என் காதலே என் காதலே
    என்னை என்ன செய்ய போகிறாய்
    நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
    ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்

    சிலுவைகள் சிறகுகள்
    ரெண்டில் என்ன தரப் போகிறாய்
    கிள்ளுவதை கிள்ளிவிட்டு
    ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
    காதலே நீ பூவெறிந்தால்
    எந்த மலையும் கொஞ்சம் குழையும்
    காதலே நீ கல்லெறிந்தால்
    எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்

    இனி மீள்வதா இல்லை வீழ்வதா
    உயிர் வாழ்வதா இல்லை போவதா
    அமுதென்பதா விஷமென்பதா
    உன்னை அமுத விஷமென்பதா…..


    ஜாக்கியும் அமுதவிஷம்தான். என் மனக்கடலைக் கடைந்தெடுத்தால் கிடைக்கும் இனிய விஷம்! அவளே வதைக்கிறாள்; அவளே வலி மறக்கச் செய்கிறாள். அவளே மனம் சிதைக்கிறாள்; அவளே மறுசீரமைக்கிறாள்.

    தன் வாழ்க்கை நாடகத்தில் ஜாக்கி என்னும் பாத்திரத்தின் காட்சி முற்றுப் பெற்றுவிட்டது. இனி அதற்கு வேலையில்லை என்றபோதும் ஏனோ அதை ஏற்றுக்கொள்ளும் மனம் இன்னும் வரவில்லை. காட்சிப் பிழையாயேனும் கண்முன் அவள் தோற்றம் தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

    ஜாக்கியின் நினைவால் எழுவதும் விழுவதுமான உணர்வலைகளை வாழவைக்கும் இந்த உடலை வாழவைப்பதில் அக்கா வெற்றிபெற்றுவிடுகிறாள்.

    அக்கா! ஆத்திரப்படவேண்டிய நேரத்தில் அமைதியாய் இருந்தாள். அமைதியாயிருக்கவேண்டிய நேரத்தில் ஆத்திரப்பட்டாள்! அதிசயத்திலும் அதிசயமாய் வாழ்வதற்கான பிடிப்பு முற்றிலுமாய்க் கைநழுவிப் போய்விடாமல் அக்காவின் கையில் அன்புக் கயிறு அகப்பட்டுக்கிடக்கிறது. இதுவும் ஒரு வகையில் பாசக்கயிறுதான். அந்தப் பாசக்கயிற்றை எமன் வீசினால் மரணம். இந்தப் பாசக்கயிற்றை இவள் உருவினால் மரணம். என்ன விநோதம்! மூன்று பெண்களால் நிர்ணயிக்கப்பட்ட தன் வாழ்க்கைப் பாதையை நினைத்து வேதனையோடு சிரிப்பும் வந்தது.

    அக்காவின் மனவருத்தம், அத்தானின் தர்ம சங்கடம், ஜாக்கியின் பிடிவாதம், புறக்கணிப்பு எல்லாவற்றிடமிருந்தும் தப்ப… ஓடி ஓடிக் கடைசியில் இந்தத் தீவுக்கண்டத்தினுள் தஞ்சம் புகுந்துவிட்டான். எந்தப் பொந்தினுள் நுழைந்தாலும் சில நினைவுகளிடமிருந்து தப்பவே இயலாது என்னும் நிதர்சனம் உணர்ந்துகொள்வதற்குள் வயது கூடிவிட்டது. இளமை கடந்துவிட்டது.

    காலம்தான் எத்தனை வேகமாகச் சுழல்கிறது. ஆயிற்று ஒரு மாமாங்கம். அன்று இந்தக் கையிலேந்திய ரோஜாப்பந்து இன்று கால்பந்து விளையாடும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அதற்கு இரண்டு வருடம் பிந்திப்பிறந்த பூப்பந்தும் பூப்பந்து விளையாடுகிறதாம்.

    நான் மட்டும் ஏன் இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கிறேன்... வெகுதூரம் ஓடிவந்த களைப்புடன் திரும்பிப் பார்க்கிறேன். துவங்கிய இடத்திலிருந்து ஒரு அங்குலமும் நகர்ந்திருக்கவில்லையென்னும் உண்மை நெற்றிப்பொட்டில் சுடுகிறது. இப்படி நின்ற இடத்திலேயே ஓடிக்கொண்டிருந்தால் எப்போது என் இலக்கை அடைவது? இலக்கா? அது எங்கே இருக்கிறது? அதைத் தேடுவதுதானோ என் இலக்கு? விரக்தியில் நெஞ்சு விம்மியது.

    ஏன் இத்தனைப் போராட்டம்? எக்கேடோ கெட்டுப் போ என்று அக்காவும் கைவிரித்துவிட்டால் எத்தனை நலமாயிருக்கும். ஒரு தேசாந்திரியைப் போல் ஊர் ஊராய் சஞ்சாரம் செய்துகொண்டு கிடைத்ததை உண்டுவிட்டு மீதமிருக்கும் நாட்களைக் கழித்துவிடலாம். அப்பாவும் இப்படி நினைத்துதான் போனாரோ? அப்பாவின் வாழ்வாதாரம் அம்மாவின் உயிர்மூச்சில் கலந்திருந்ததோ? அவள் மூச்சை விட்டதும் இவர் வாழ்வை விட்டாரோ?

    அம்மாவை நினைத்ததும் சுந்தருக்கு உள்மனதில் ஏதோ நெருடியது. ஆம்! அப்பாவைப் பற்றியாவது எப்போதாவது நினைக்கிறேன். எப்படி அம்மாவை நினைக்க மறந்துபோனேன்? ரோஜாவாய் மணக்கும் ஜாக்கியின் நினைவை அணைக்கையில் முள்ளாய் அம்மாவின் நினைவு தைக்கவேண்டுமே! இல்லையே! ஏன்? ஜாக்கியை இழக்க அம்மாதான் காரணமென்று அடிமனதில் வஞ்சம் வைத்துவிட்டேனோ? ச்சீ! எத்தனைக் கேவலமான மைந்தன் நான்! கடமை தவறிய மகனாய்.... கண்ணியம் தவறிய காதலனாய்... பாசத்தைப் பிரதிபலிக்கத் தவறிய சகோதரனாய்....

    தவறுகளின் அடிப்படையிலேயே என் வாழ்க்கை அமைந்துவிட்டதா? இதுவரை என்ன சாதித்தேன்? இனிமேல் என்ன சாதிக்கப்போகிறேன்?

    சுயபரிசோதனை மிகக் கடினமாயிருந்தது. பதில் கிடைக்காத கேள்விகள்! உள்ளிருந்து எழும் கேள்விகளுக்கே விடை தெரியா நிலையில் வெளியிலிருந்து வீசப்படும் கேள்விக்கணைகளுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?

    கடும்பயிற்சிக்குப் பின் அதுவும் கைவந்தது. அதுவரை மனம் துளைத்துக்கொண்டிருந்த வினா அம்புகளை லாவகமாகப் பிடித்து முறித்துப்போடும் கலையில் தேர்ச்சி பெற்றாயிற்று. இலவச இணைப்பாக… வினா எழுப்பிய மனங்களை முறிக்கும் கலையும் ஏகலைவனைப் போல் ஏகாந்தமாகவே கற்றுத் தேர்ந்தாயிற்று.

    கொஞ்சம் கொஞ்சமாய் ஈரம் காணாமற்போய்.... இறுகிய களிமண் பாறையானது மனம். பந்தங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிடத்தான் மனம் ஏங்குகிறது. என்றாலும் பாலையில் எப்போதாவது கருணை காட்டும் கார்முகில் போல் சமயங்களில் அக்காவின் கண்ணீர் இளக்கி விடுகிறது. அதன் காரணமாகவே நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை அக்காவுக்கு தரிசனம் கொடுக்கும் இந்தியப் பயணம்!

    எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. நண்பர்கள் ஆவலுடன் தத்தம் உறவுகளுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துச் சென்றுவிட்டனர். ஏதோ தாங்களே நேரில் போய்க் கொடுப்பதுபோல் அவர்களின் முகத்தில் தென்பட்ட பூரிப்பில் இவன் தன்னை மறந்துபோனான். கிரிதான் அருகிலிருந்து எல்லாவற்றையும் அழகாகப் பேக் செய்து முகவரியைப் பெரிய அளவில் பிரிண்ட் எடுத்து பெட்டிகளின் எல்லாப் பக்கமும் ஒட்டி எடை பார்த்து என்று மிகவும் உதவினான்.

    கிரி பயணப்படுவதாயிருந்தால் தான் இத்தனை உதவிகள் செய்திருப்போமா என்று யோசித்தான். ம்கூம், வாய்ப்பே இல்லை. பெட்டியில் உடமைகளை அடுக்குவது அவனது தனிப்பட்ட விருப்பம். அதில் உதவ முன்வருவது அவனுடைய அந்தரங்கத்தில் நுழைவது போலிருக்கும் என்றெண்ணி அவன் தனியே போராடுவதை இவன் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பான் என்றே தோன்றியது.

    இத்தனை வருடங்களாக அப்படித்தான் இருந்திருக்கிறான். உடனிருந்த நண்பர்களும் இவனை அப்படியே விட்டிருக்கிறார்கள். கிரி மட்டுமே இவன் எத்தனை விலக்கினாலும் மறுபடி வந்து ஒண்டிக்கொள்கிறான். சரியான பாசப் பறவை. பாசத்திற்காக ஏங்குபவன். அருமையான குடும்பத்தைப் பிரிந்து இங்கே தனிமையில் கிடந்து உழல்கிறான்.

    "ஹூம், நீ இல்லாம இந்த ரெண்டு மாசமும் எப்படிப் போகும்னே தெரியலடா!"

    கிரியின் பேச்சில் அவனுடைய வருத்தம் வெளிப்பட்டது. தனிமை மிகக்கொடுமையானது. என்னவேண்டுமானாலும் செய்யத் தூண்டும். நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று குடிப்பழக்கத்தை கற்றுக்கொள்ளாதே என்று சொல்லத் தோன்றியது. வழக்கமாய் எழும் எண்ணமொன்று அதன் தலையில் தட்டி, குடிப்பதும் குடிக்காததும் அவனவன் சொந்த விஷயம் என்றது. வாயை மூடிக்கொண்டான்.

    விமானநிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த காரின் ஸ்டியரிங் கிரியின் வசம் இருந்தது. சுந்தர் அமைதியாக இருந்தான். அவனது முகத்தில் இருந்து அவனுடைய அகத்துள் ஓடுவது பரவசமா கலவரமா என்று இனம் பிரித்துப் பார்க்கமுடியவில்லை. அவன் அமைதியாக இருப்பதுபோல் தெரிந்தாலும் அமைதியற்றுத் தவிக்கிறான் என்பது புரிந்தது.

    கிரியின் அலையும் மனத்தை ஒருமுகப்படுத்த உதவும் பாடல்கள் சுந்தருக்கும் உதவும் என்ற நம்பிக்கையோடு சிடியைப் பொருத்திப் பாடவிட்டான்.

    ஒரு குளிகை ஒருவனுக்கு மருந்தாகவும் வேறொருவனுக்கு விஷமாகவும் செயல்படுவதுபோல் ஒரு பாடல் இவனுக்கு இதத்தையும் அவனுக்கு வேதனையையும் தந்தது.

    ஏ… அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
    அன்புக் கதை பேசிப் பேசி விடியுது இரவு…
    ஏழுகடல் தாண்டித்தான் ஏழு மலை தாண்டித்தான்
    எங்கருத்த மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு…
    நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டிப் பார்க்கிறேன்
    காட்சி யாவும் நிசமா மாற கூட்டிப் போகிறேன்
    சாமி பார்த்துக் கும்பிடும் போதும்
    நீதானே நெஞ்சில் இருக்கே.. ஏ…

    உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
    உலகமே சுழலுதே உன்னைப் பார்த்ததாலே


    கிரியிடம் விடைபெறும்போதும், சோதனை முடிந்து உள்ளேகி, விமானத்துடன் தன்னை இணைத்துக் கட்டும்போதும் அந்தப் பாடலே மனமுழுவதும் எதிரொலித்துக்கொண்டிருந்தது.

    ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிக்கிறேன்
    கூடு தந்த கிளிப் பெண்ணே உன்னாலதான் வாழுறேன்….


    அறிவிப்புகள் முடிந்து அந்தரத்தில் எழும்பியபோது.... வேரறுந்து நிற்பதுபோலத்தான் தோன்றியது. என்னுடைய கிளிப்பெண் எங்கே? இலவு காத்த இந்தக் கிளியை ஏன் துரத்தினாள் மனக்கூட்டைவிட்டு? விமானத்தின் வேகத்தை முந்திப் பறந்து சென்றது சுந்தரின் இறக்கை கட்டிய மனம் இருபது வருடத்துக்கு முந்தையக் கிளிப்பெண்ணைத் தேடிக்கொண்டு!

    (தொடரும்)
    Last edited by கீதம்; 26-07-2011 at 12:04 AM.

  8. #164
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் Akila.R.D's Avatar
    Join Date
    20 Jan 2010
    Location
    Bangalore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    16,226
    Downloads
    67
    Uploads
    1
    அக்கா,

    நல்லா இருக்கீங்களா?...
    இன்னிக்கு ஒரே நாள்ல எல்லா பாகத்தையும் படிச்சுட்டேன்...
    நான் சரியான நேரத்துலதான் வந்துருக்கேன் போல...

    கதை ரொம்ப வித்யாசமா இருக்கு...
    இனிமே தினமும் வரேன்...

  9. #165
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    Quote Originally Posted by Akila.R.D View Post
    அக்கா,

    நல்லா இருக்கீங்களா?...
    இன்னிக்கு ஒரே நாள்ல எல்லா பாகத்தையும் படிச்சுட்டேன்...
    நான் சரியான நேரத்துலதான் வந்துருக்கேன் போல...

    கதை ரொம்ப வித்யாசமா இருக்கு...
    இனிமே தினமும் வரேன்...
    அகிலா, நான் நல்லா இருக்கேன். உங்களை மறுபடியும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். தொடர்ந்து வாங்க.

  10. #166
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இப்போ சொல்லுங்க கிரிக்கு ஒரு நாற்பது வயதிருக்குமா? இந்தப்பாகம் அதிகமான சம்பவங்கள் இல்லாமல் மனம் அசைபோடும் விஷயங்களாகவே இருந்தது தொய்வு ஏற்படுத்தியது போலிருந்தது..

    பார்க்கலாம். இந்தமுறை அவனுடைய பயணத்திலியாவது நல்லது நடக்கட்டும்..!

  11. #167
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Nivas.T's Avatar
    Join Date
    18 Mar 2010
    Location
    தாய்த்தமிழ்நாடு
    Posts
    2,949
    Post Thanks / Like
    iCash Credits
    20,125
    Downloads
    47
    Uploads
    2
    வாழ்க்கையில் ஒருவன் சந்திக்கும் மனப்போராட்டங்களின் எழுத்துவடிவம் மிக அருமை.

    நன்மைகள் மட்டுமே நடக்கும் வாழ்க்கை என்றும் ருசிப்பதில்லை, வலிகள் கொடுக்கும் வாழ்க்கை என்றும் வெறுப்பதில்லை

    தொடருங்கள்
    த.நிவாஸ்
    வீழ்வது நாமாய் இருப்பினும் வாழ்வது தமிழாய் இருக்கட்டும்

  12. #168
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    யதார்த்தமான நகர்வு. இயலாமையால் வாடும் ஒருவனின் உணர்வுகளை நன்றாக காட்டுகிறீர்கள். தொடருங்கள். முக்கியமான கட்டத்துக்கு கதை வந்துவிட்டது போல் உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 14 of 22 FirstFirst ... 4 10 11 12 13 14 15 16 17 18 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •