Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 23

Thread: புன்முறுவல்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0

    புன்முறுவல்

    நான் வீட்டிற்குள் நுழைகிறேன். வழக்கமாக ஓடி வந்து என் கால்களைக் கட்டிபிடிக்கும் என் மகளை இன்று காணவில்லை. என்மனைவி புன்னகையோடு வருகிறாள். அவளின் ஒற்றைப் புன்னகைக்கு என் சோர்வெல்லாம் பறந்து போகும். அவளைத்தாண்டி நான் யாரைத்தேடுகிறேன் என்பதைப் புரிந்து கொண்டவளாய், என் அம்மாவின் அறையிலிருந்து மகளை அழைத்து வந்தாள். என்னைப் பார்த்தவுடன் என் கால்களைக் கட்டிக்கொள்ள வந்த மகளைத் , தூக்கியபடி, என் அம்மாவைத் தேடினேன். அம்மா மாலையில் அமர்ந்து புத்தகம் படிக்கும் சாய்வு நாற்காலி வெறுமனே இருந்தது. என் மனவோட்டத்தை புரிந்த என் மனைவி, என் கைகளைப் பற்றியவாறு,

    " அம்மா இன்று மதியத்திலிருந்தே கலக்கமாகத்தான் இருக்கிறார்கள். நான் கேட்டதற்கு தலைவலி என்று சொன்னார்கள். ஆனால் எதையோ மனதில் வைத்து குழம்பிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மெல்ல என்னவன்று கேளுங்கள். இப்போது வேண்டாம் அவர்கள் தூங்குகிறார்கள்."

    என் மனைவி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். என் அம்மாவிடம் அவ்வளவு பாசம் அவளுக்கு. என்னைவிட என் அம்மாவைப் புரிந்தவள் அவள்தான். குளிப்பதற்கு துண்டை கையில் தந்தாள். நானும் அம்மாவைப் பற்றி யோசித்தவாறே குளியலறைக்குள் நுழைந்தேன்.

    அப்பா ஒரு மர வியாபாரி. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவுடன் அப்பா எதற்காகவும் கோபித்துக் கொண்டதில்லை. பள்ளி முதல் வகுப்பில் நான் பயின்று கொண்டிருக்கும்போது, பெரிய நிறுவனம் ஒன்றிற்கு மலேயாவிலிருந்து மரங்கள் தருவிப்பது சம்பந்தமாக கப்பலில் சென்ற அப்பா திரும்பவே இல்லை. கப்பல் விபத்தில் சிக்கிக் கொண்டதாக பலர் பேசக் கேள்விப்பட்டேன். நான் பலமுறை அம்மாவிடம் கேட்டேன். ஆனால் நான் கேட்கும் வேளைகளில் எல்லாம் அம்மாவின் கண்களில் கண்ணீர் மல்குவதைக் கண்டிருக்கிறேன். நானும் அம்மாவின் வேதனைப் புரிந்து கொண்டதைப்போல், அப்பாவைப் பற்றி கேட்பதை நிறுத்திக் கொண்டேன்.

    அதன்பின் பல பெரிய மனிதர்கள் வந்து அம்மாவிடம் சப்தம் போட்டு சென்றார்கள். பின் சில பத்திரங்களில் அம்மா கையெழுத்திட்டு அதை வந்தவர்களிடம் கொடுத்தார்கள். அதன்பின் அவர்கள் வரவே இல்லை. அது ஒருவேளை சொத்துப் பத்திரமாக இருந்திருக்கலாம். சில நாட்கள் கடந்தபின் அம்மா என்னையும் அழைத்துக்கொண்டு என் மாமா வீட்டிற்கு சென்றார்கள். எனக்கு மாமா என்றால் கொள்ளைப் பிரியம். அவர்களின் ஒன்றரை வயது மகள் அமுதாவிற்கு என்னோடு ஒட்டுதல் அதிகம். என்னை அமுதாவோடு வெளித்திண்ணையில் விளையாட சொல்லிவிட்டு, அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டது இன்னமும் என் நினைவிலிருக்கிறது.

    " தம்பி, நீதான் இப்போது உதவேண்டும் இன்னும் ஒரு வாரத்தில் நான் மொத்த தொகையும் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் வீடு அவர்களுக்கு சொந்தமாகிவிடும். ஏற்கனவே பத்திரத்தில் நான் ஒப்பிட்டு விட்டேன்."

    " என்னக்கா என்னிடம் அவ்வளவு பணம் எங்கிருக்கு. உன் வீட்டுக்காரர் இவ்வளவு பெரிய தொகையை வாங்கிபோவார் என்று நானும் எதிர் பார்க்க வில்லை."

    " எல்லாம் நீ தரவேண்டாம். ஐந்து ஏக்கர் நிலத்தையும் நான் விற்கப்போகிறேன். அது வந்த உடனே உன் கடனை மீட்டு விடுகிறேன். வீடு அவர் பார்த்து கட்டியது . முழுவதும் சந்தனமும், தேக்கும். அதைவிட அவர் நினைவாக இருப்பது வீடு ஒன்றுதானே. அதை நான் எப்படி விட்டுத்தர முடியும்."

    " புரியாமல் பேசாதே அக்கா எனக்கு பிறந்திருப்பது பெண்பிள்ளை அவளுக்கென்று நான் ஏதாவது வைத்திருக்க வேண்டாமா. நீ உன் நிலத்தை விற்றாலும் உன்கடன் மீண்டுவிடாது. பேசாமல் வீட்டை விற்று கடனை அடைக்கிற வழியைப்பார்."

    " என்னடா இப்படி சொல்கிறாய். உன் மகள் பிறந்த உடனே என் மகனுக்குதான்னு நீதானடா சொன்னாய்"

    "அதெல்லாம் சரி வராது . நீ வேறு ஏதும் வழியைப்பார்"

    அதன்பின் கணமும் தாமதிக்காமல் என்னை அழைத்துக்கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். சில நாட்களில் நாங்கள் வேறொரு சிறிய வீட்டிற்கு குடி பெயர்ந்தோம். கையில் மீதமிருந்த சின்ன தொகையைக் கொண்டு அப்பாவிற்கு விசுவாசமாயிருந்த வேலைக்காரர்கள் இருவருடன் அப்பாவின் மர வியாபாரத்தைத் அம்மா தொடர்ந்தார். அம்மாவின் முகத்தில் எப்போதும் ஒரு புன்சிரிப்போடு கூடிய உறுதியை நான் கண்டேன். நான் எட்டாவது பயின்றபோது அம்மா எங்கள் வீட்டினை மீட்டார். அப்பாவின் ஆளுயர படத்தினை கூடத்தில் மாட்டி அதையே வணங்கி வந்தார்.

    தினமும் மாலையில் என்னை அருகே அமர வைத்து ஒரு தோழனிடம் சொல்வதைப்போல் அன்று நடந்த அனைத்து வியாபார பரிவர்த்தனைகளையும் சொல்வார். மாமாவைப் பற்றி அம்மா மறந்து விட்டதாகவே தோன்றியது. வேறு எவரேனும் அதைப் பற்றி அம்மாவிடம் கேட்டால் ஒரு புன்னகை மட்டுமே அம்மாவின் பதிலாக இருந்தது. தன்னுடன் உழைக்கும் அந்த இரு விசுவாச தோழர்களுக்கு ஒரு குறிப்பிட்ட லாபப் பங்கினை அவரவர் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் சேர்த்து விடுவார்.

    வருடங்கள் கடந்தன. கல்லூரிப் படிப்பை முடித்த அடுத்த இரண்டாவது வருடம் வியாபார நுணுக்கங்கள். அனைத்தும் நான் கற்றுக்கொண்டு விட்டேன் என அம்மா உறுதி செய்துவிட்டு என்னிடம் எல்லாப் பொறுப்புகளையும் தந்துவிட்டு, வீட்டில் ஓய்வெடுத்தார்கள். அதுபோல் அம்மாவின் தோழர்களும் தங்கள் பிள்ளைகளை என்னுடன் பணியமர்த்திவிட்டு ஓய்வில் போனார்கள். இளம்தலைமுறையினர் நாங்கள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி மரக்கடைசல் வேலைகளில் பெரும் வளர்ச்சி கண்டோம். எங்களின் வளர்ச்சி கண்டு அம்மா பெருமிதப் பட்டார்கள்.

    அவ்வளவு நெஞ்சுரம் வாய்ந்த அம்மாவும்,தன் தம்பி மகளை இன்னொருவருக்கு மணமபேசியது அறிந்து நொந்துதான் போனார்கள்.நான் பலவாறு சமாதனப் படுத்தியும் அவர்கள் முழு அமைதி கொண்டதாக தெரியவில்லை.அடுத்த மாதம் என் திருமணத்தை வெகு விமரிசையாக முடித்தபின்தான் அவர்கள் அமைதி கொண்டார்கள். அது நடந்துமுடிந்து மூன்று ஆண்டுகள் இருக்கலாம். இன்று அம்மாவின் மன சலனத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

    குளித்து முடித்து விட்டு சாப்பிட உட்கார்ந்தேன். என்மகள் என் மடியமர்ந்தாள். தூக்கத்திலிருந்து மீண்ட அம்மா என் எதிர் வந்தமர்ந்தார்கள். என் மனைவி அவர்கள் கையில் தேநீர்க் கோப்பையை கொடுத்தபின் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர்கள் நெற்றியில் கைவைத்து,

    " சூடு பெரிதாக ஒன்றுமில்லை, தலையில் பாரமாக உள்ளதாம்மா?" என விசாரித்தாள்.

    " அப்படி ஒன்றுமில்லை. " என்று கூறி மௌனமானார்கள்.

    நானும் மனைவியும் அம்மாவின் முகம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
    அவர்களே தொடர்ந்தார்கள்.

    " உன் மாமா அனாதையாக படுக்கையில் இருக்கிறானாம். " என்று கவலையோடு சொன்னார்.

    நானும் கேள்விப்பட்டேன். அத்தையின் மறைவிற்குப்பின் திருமணமான மகனும் மகளும் அவர்புறம் திரும்பிப் பார்கவில்லை. சர்க்கரை நோயில் வாடிய அவர் தானே சமையல் செய்து உண்ணும் அளவிற்கு தனிமைப் படுத்தப் பட்டார். காலில் ஏற்பட்ட புண் தகுந்த மருத்துவம் செய்யாமல். வளர்ந்துகொண்டே போவதாகவும் அறிந்தேன். ஆனால் படுக்கையிலிருப்பது நான் அறிந்திருக்கவில்லை. உடன்பிறந்தவர்,மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்தவர், இப்படி துன்பப் படுகிறார் என்றதும் அம்மா கவலை கொள்கிறார்களா? கடந்த இருபது வருடங்கள் எந்தவித தொடர்பும் இல்லை. அவரைப் பற்றிய பேச்சும் வந்ததில்லை. ஆனால் அம்மா வருந்துகிறார்களே. மாமா மீது கோபம் இல்லையா? நான் தொடர்ந்தேன்.

    " என்ன செய்யவேண்டும் அம்மா"

    " ஒரு எட்டு நாமெல்லாம் அவனைப்போய் பார்த்து வரலாமா?"

    " இப்போதே போகலாம் அம்மா" என என் மனைவி சொன்னாள்.

    அடுத்த பத்து நிமிடங்களில் நாங்கள் புறப்பட்டு விட்டோம்.

    அடுத்த ஊரில்தான் மாமா வீடு. கால்மணி நேர வாகனப் பயணத்தில் மாமா வீட்டை அடைந்தோம். வாசல் கதவு லேசாகத் திறந்திருந்தது. என் மனைவி முன்னால் சென்று கதவை மெல்லத் திறந்தாள். ஒருவித மருந்து வாசமும் கழிவுநீர் வாசமும் கலந்த நெடி முகத்தில் வந்து மோதியது. உள்ளே நுழைந்தவள் தேடி, மின்விளக்கு விசையைப் போட்டவுடன் கூடம் முழுவதும் வெளிச்சம் பரவியது. மாமா உலர்ந்த தேகமாய் ஒரு மரக் கட்டிலில் கிடந்தார். கூடம் எல்லாம் பஞ்சும், காகிதக் குப்பைக்களுமாகக் கிடந்தது. வேறுயாரும் வீட்டிலிருப்பதுபோல் தெரியவில்லை.

    வெளிச்சம் உணர்ந்ததும், தூங்கிக் கொண்டிருந்த மாமா மெல்ல கண்களைத் திறந்தார். யாரோ நிற்பதை உணர்ந்து எழுவதற்கு முயற்சி செய்தார். வலக்காலில் ஒரு பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அதன் வலியை பொறுக்காமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்தார். உடனே என் மனைவி ஓடிச்சென்று அவரின் முதுகில் கைகொடுத்து தூக்கி அருகிலிருந்த தலையணையை அடைகொடுத்து அவரை உட்கார வைத்தாள்.

    அம்மா மெதுவாக நடந்து மாமாவை நோக்கிச் சென்றார்கள். அம்மாவைப் புரிந்து கொண்டதும் மாமாவின் கணகளில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. தன் கண்களை மூடிக்கொண்டார். ஆனால் கண்ணீர் வருவது மட்டும் நிற்கவில்லை. அம்மா அவர் அருகே சென்று அவர் தலையைக் கோதினார். கண்களைத் திறக்காமலே மாமா,

    " அக்கா" என்றார்.

    என்ன இது! என் அம்மா குலுங்கி அழுகிறார்கள். நான் முதன் முதலாக பார்க்கிறேன் என் அம்மா அழுவதை.

    " என் மீது கோபமில்லையா அக்கா?"

    " கோபமுண்டு தம்பி, ஆனால் நீ துன்பப்படவேண்டுமென்று நான் ஒரு கணமும் நினைத்ததில்லயடா. என்ன கோலமடா இது." என்று குமுறினார்கள்.

    "உனக்கு செய்த பாவமிது" என்று கண்ணீரின் ஊடே மாமா பதிலுரைத்தார்.

    இவ்வேளையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும், துண்டும் கொண்டுவந்த என் மனைவி, மாமாவின் முகத்தை துடைத்தாள். மேலும் அவர் உடலையும் துடைக்க முற்பட்டாள்.

    " அப்பா இது யார்" என என் மகள் என்னிடம் கேட்டாள்.

    " இது உன் தாத்தா" என்றாள் என் மனைவி துடைப்பதை நிறுத்தாமல்.

    "தாத்தாவா? தாத்தா ஏன் இங்க இருக்கு.?"

    "இது தாத்தா வீடு அதான் தாத்தா இங்க இருக்கு" என்றாள்.

    ஒரு மணி நேரம் கடந்திருந்தது. என் உதவியோடு மாமாவை சுத்தமாக துடைத்து விட்ட என் மனைவி, கூடத்தையும் சுத்தமாக கழுவி துடைத்திருந்தாள். மாமாவின் தலைமாட்டில் கட்டிலில் அமர்ந்திருந்த அம்மா அவர் தலையைக் கோதுவதை நிறுத்தவில்லை. மாமாவின் கண்ணீரும் நின்றிருக்கவில்லை. நாங்கள் அம்மாவைப் பார்த்தோம். கண்கள் கலங்கியிருந்த அம்மா கட்டிலிலிருந்து எழுந்தார். மாமாவின் கைகளைப் பற்றி விடைபெற்று புறப்படத் தயாரானோம்.

    " அப்பா, தாத்தா இங்க தனியா இருக்குமா" என்றாள் என் மகள்.

    இதைக் கேட்ட அம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

    நான் எங்கள் வாகனத்தை ஒட்டிக்கொண்டு வருகிறேன். என்னருகில் என் மனைவி அமர்ந்திருக்கிறாள். பின்னிருக்கையில் என் மகள் அம்மாவின் மடியில் அமர்ந்துகொண்டே மாமாவிடம் என்னவெல்லாமோ கேட்டுக்கொண்டே வருகிறாள். மாமாவும் அதற்கு பொறுமையாக பதிலுரைக்கிறார். கண்களை மூடி தலையை பின்புறம் இருக்கையில் சாய்த்தவாறு அம்மா புன்முறுவல் பூக்கிறார்கள்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் பிரேம்'s Avatar
    Join Date
    23 Jul 2010
    Location
    Malaysia
    Age
    34
    Posts
    462
    Post Thanks / Like
    iCash Credits
    10,236
    Downloads
    2
    Uploads
    0
    "இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்."

    சார்..அருமை சார்..எப்டி சொல்றதுன்னே தெரியல சார்...பக்கா சூப்பர்...

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    என்ன சொல்லுவது டெல்...
    மூன்று தலைமுறைகளை ஒரு உணர்வுக்கதைக்குள் அடக்குவது என்பது சாதாரணவிடயமல்ல...

    அனைத்துப் பாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்த விதம்,
    தனித்துவம்...

    இக்கதையில்,
    நான் எதையெல்லாம் உணர்ந்தேன்...
    பிரிவைப், புறக்கணிப்பை, ஆதரவின்மையைச், சந்தர்ப்பவாதத்தைத் துணிவைத், தளராமுயற்சியை, சிறுவயதிலேயே பக்குவத்தை, பெருவயதிலும் தப்புணர்தலை, மன்னிப்பை...
    எல்லாவற்றிற்கும் மேலாக எப்படியிருப்பது ஒரு குடும்பத்தின் உண்மையான சந்தோஷம் என்பதை...

    பாராட்டுடன் ஐந்து நட்சத்திரங்களும், சிறு இ-பணமும் அளித்துக் கௌரவிக்கின்றேன்...

    புன்முறுவல்...
    என் மனமும் உணர்கின்றது...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நல்ல கதை.. சகோதர பாசத்தை நன்றாய் உணர்த்தி கதையை நகர்த்தி உள்ளீர்கள்.. பாராட்டுக்கள்!

    தான் ஆடவிட்டாலும் தன சதை ஆடும்ன்னு சும்மாவா சொன்னங்க.. ரத்தபாசம் ரத்தபாசம் தான்...

  5. #5
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி பிரேம்,
    அந்தஸ்து வழங்கி ஊக்கத்தொகையும் வழங்கிய அக்னி அவர்களுக்கு நன்றிகள்.
    sarcharan அவர்களுக்கு நன்றி.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஜானகி's Avatar
    Join Date
    23 Oct 2010
    Location
    Chennai
    Posts
    2,597
    Post Thanks / Like
    iCash Credits
    32,445
    Downloads
    3
    Uploads
    0
    சகோதர பாசத்தைவிட, இளைய தலைமுறையினரின், புரிதலும், பகிர்வும், பிணைப்பும் பாராட்டுதற்குரியதுதான் !

    இப்படியும் சிலர் இருப்பதால்தான், வானம் பொய்க்காமலிருக்கிறது போலும் !

  7. #7
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நல்லவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்வதுதானே மழை. நன்றி ஜானகி அவர்களுக்கு.

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    ஒரே தாய் வயிற்றில் பிறந்தும் மனதளவில் வேறுபட்ட இரு உடன்பிறப்புகளின் வேறுபட்ட வாழ்வைக் காட்டி, ஒன்றின் பாசப்பிணைப்பின் மகத்துவத்தையும், மற்றொன்றின் பரிதவிக்கவைக்கும் நிராகரிப்பையும் உணர்த்தி மனதை நெகிழ்த்திவிட்டீர்கள்.

    தலைமுறைகளூடே கடத்தப்படும் பாசமும் நேசமும் அதன் வளமான வருங்காலம் சொல்லி புன்முறுவல் பூக்கவைக்கிறது. பாராட்டுகள் டெல்லாஸ்.

  9. #9
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வறுமையில் வைராக்கியத்துடனும் வழமையில் பாசத்துடனும் என நல்ல இலக்கணத்தாயாக இருந்திருக்கிறார் அந்த தாய். அழகாக காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  10. #10
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி கீதம் அவர்களுக்கு.
    நன்றி அன்புரசிகன் அவர்களுக்கு.

  11. #11
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அற்புதமான கதையை தந்தமைக்கு நன்றி.!

  12. #12
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0
    நன்றி மதி அவர்களுக்கு.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •