Results 1 to 12 of 20

Thread: பிற பெண்களை தொடுபவர்கள் கைகள்

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    23 Sep 2010
    Location
    பஹ்ரைன்
    Posts
    502
    Post Thanks / Like
    iCash Credits
    39,029
    Downloads
    4
    Uploads
    0

    பிற பெண்களை தொடுபவர்கள் கைகள்

    சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் பிரிக்கும் அந்த மலைக்காடுகளின் ஊடே ஒரு ஒற்றையடிப் பாதை. புரவிகள் விரைந்து செல்வதற்கு ஏதுவான வழியல்ல அது. வெண்புரவி ஓன்று மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.அதன் குளம்படி ஓசை நல்ல நாட்டுப் பாட்டிற்கு ஏற்ற தாளம்போல் சீரான இடைவெளிவிட்டு ஒலிக்கிறது. அதன் மேல் ஒரு இருபத்திமூன்று வயது மதிக்கத்தக்க இளைஞன் அமர்ந்திருக்கிறான். நல்ல உயரம் ஆஜானுபாகுவானத் தோற்றம். கண்களை மட்டும் விட்டு, மூடி இருப்பதால் அவன் முகத்தை காணும் பாக்கியம் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் அந்த கண்களின் வசீகரம் நம்மை கட்டிப்போடுவது உறுதி.

    அந்த வெண்புரவி நீண்ட தூரம் பிரயாணம் செய்திருக்க வேண்டும். களைத்து காணப்பட்டது. புரவி மேலிருந்தவன் அதைபுரிந்து கொண்டவன்போல் சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்தான். இளைப்பாறுவதற்கு ஒரு இடத்தை அவன் பார்வை தேடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

    இரண்டு கல் தொலைவிற்கு பின் ஒரு நீர்வீழ்ச்சியை கண்டதும், புரவியை விட்டு இறங்கி அதன் காதில் ஏதோ சொல்லுகிறான். அதுவும் புரிந்து கொண்டதுபோல் கனைத்துவிட்டு துள்ளி ஓடி புல்வெளியில் மேயத்துவங்குகிறது. தன் உடைவாளை கழட்டி தரையில் வைக்கிறான். சுற்றிலும் ஒருமுறை நோட்டம் விடுகிறான். அவன் செய்கைகளிலிருந்து அவன் இந்த இடத்திற்கு புதியவன் போல நமக்கு தோன்றுகிறது. தலையை சுற்றி முகத்தையும் மூடியிருக்கும் துணியை அகற்றுகிறான். களையான முகம். நீண்ட அவன் கைகள் முழங்கால்களைத் தொடுவது போல் இருந்தது. மேலாடையை அகற்றி விட்டு நீரில் மெதுவாக கால் வைத்தான். பரந்த அவன் மார்பில் காயங்களின் வடுக்கள் அவனை மாபெரும் போர்வீரன் என பறைசாற்றுகிறது.

    நீரை அள்ளி எடுத்து முகத்தை கழுவியபின் பருகலானான். தாகம் தணிந்தபின் முகத்தை துடைத்தபடி நின்றான். அவன் காதுகளில் ஏதோ உணர்கிறான். ஆம். நமக்கும் அது எட்டுகிறது . வாள்கள் உரசிக்கொள்ளும் ஓசையும் மனிதர்களின் ஓலமும் கேட்கிறது. சுதாரித்த அவன் , மேலாடையை அணிந்து கொண்டிருக்கும்போதே வாயினால் ஒருவிதமான இனிய சப்தம் எழுப்பினான் . புல் மேய்ந்துகொண்டிருந்த புரவி, எஜமான் சப்தம் கேட்டவுடன் ஆர்வமாக ஓடிவந்து நின்று கனைத்தது. அதன் பிடரியை தடவிய அவன் உடைவாளை மாட்டிக்கொண்டு தாவி அதன்மீது ஏறியமர்ந்து ஓசை வந்த திசை நோக்கி விரைந்தான்.

    நாமும் அவனைப் பின் தொடர்வோம்.

    அங்கே நாம் காணும் காட்சி , ஒரு பல்லக்கு கவிழ்ந்து கிடக்கிறது. அதனருகே ஒரு இளம் பெண் நின்று அழுது கொண்டிருக்கிறாள். அவளை சுற்றி பத்து பேர்கள் உருவிய வாட்களுடன் நின்றுகொண்டு அவளை அதட்டி எதையோ கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் படை வீரர்கள்போல் தோன்றுகிறது. சற்று தூரத்தில் வெட்டுக் காயங்களுடன் மூன்று பேர் முனகிக்கொண்டு கீழே விழுந்து கிடக்கிறார்கள்.

    நம் ஊகம் சரியானால், இந்தப்பெண்ணை பல்லக்கில் வைத்து நான்கு பேர் தூக்கி வந்திருக்க வேண்டும். அதனைத் துரத்தி வந்த இவர்கள் பல்லக்குத் தூக்கிகளை தாக்கியிருக்கிறார்கள். தங்களிடம் உள்ள ஆயுதங்களால் பல்லக்கு தூக்கிகளும் எதிர்த்து போரிட, மூன்று பேர் காயம்பட்டு கீழே விழ , ஒருவன் ஓடி இருக்க வேண்டும்.

    நம் வீரன் என்ன செய்கிறான் என்று பார்க்கலாம்.

    'நண்பர்களே ..'

    சப்தம் கேட்ட படை வீரர்கள் இவனைத் திரும்பி பார்க்கிறார்கள். முகத்தை அவன் திரும்பவும் மூடியிருந்தான்.
    புதியவன் ஒருவன் வந்ததும், சற்று தெம்பான அந்த பெண் சற்றே நிதானமடைந்தாள். அவர்களுக்கு தலைவன் போலிருந்தவன் வாழை ஏந்தியபடி இவனை நோக்கி வந்தான்.

    ' யார் நீ?' என்றான்.

    அவனை நிராகரித்த நமது வாலிபன் பெண்ணை நோக்கி,

    ' பெண்ணே என்ன நடந்தது ?' என்று வினவினான்.

    அப்பெண் அழுதுகொண்டே,

    'ஐயா , நான் ஒரு நாட்டியக்காரி, இந்த நாட்டு அரண்மனையில் எனது நாட்டியத்தை முடித்துக்கொண்டு பக்கத்து தேசத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். இந்த பல்லக்கை நான் வாடகைக்கு அமர்த்தி இருந்தேன். சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென்று இவர்கள் வழி மறித்தார்கள். பல்லக்கு தூக்கிகளையும் தாக்கினார்கள். என்னையும் அடித்து துன்புறுத்தி, எனக்கு துளியும் சம்மந்த மில்லாதவற்றை கேட்கிறார்கள்' என்றாள்.

    'தனியாகவா வந்தாய்?'

    'எங்கள் தேசம் போல் இந்த தேசத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் என்று நினைத்தேன் ஐயா' என்றாள்.

    உண்மையில் அவள் கன்னங்களில் அடி வாங்கியதற்கான விரல் அடையாளம் சிவப்பாய் பதிந்து இருந்தது.

    இளைஞன் அவர்களை சுட்டெரிப்பதுபோல் பார்த்தான்.

    'நீங்களெல்லாம் யார்?' என்று கோபத்தோடு கேட்டான்.

    'நாங்கள் இந்நாட்டு தளபதி செங்கோடனின் வீரர்கள். எங்களைக் கேட்க நீ யாரடா?' என்றவாறே வாளோடு அவன் மீது பாய்ந்தான்.

    மின்னல் வேகத்தில் ஒதுங்கி திரும்பிய நம் வீரன்.

    'நடுக்காட்டில் தனியாக வந்த அபலையிடம், சண்டைபோடும் நீங்களா வீரர்கள்' என்றான் புன்னகைத்தவாறே.

    ஒதுங்கிய அவன் லாவகத்தையும், பயமில்லாத அவன் பேச்சையும் கண்ட அவன், தங்கள் எதிரில் நிற்பவன் சாதாரண வீரனில்லை என்பதை உணர்ந்தான்.

    'இவள் வெறும் நாட்டியக்காரி அல்ல, உளவுக்காரி. நம்பகமான தகவல் கிடைத்ததால் தான் அவளிடம் விசாரிக்கிறேன். நீ ஒதுங்கி உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ' என்று உறுமினான்.

    'இதுவும் என் வேலைதான்' என்றான் நமது வீரன்.

    ஆத்திரம் கொண்ட அவன் மீண்டும் வாளோடு பாய்ந்து வந்து தாக்கினான்.

    சற்றே குனிந்த நம் வீரன் ஒதுங்கி பின்னங்காலால் அவன் இடுப்பில் ஒரு உதைவிட்டான்.

    தடுமாறிய அவன் அருகிலிருந்த மரத்தில் மோதி கீழே விழுந்து முனகினான்.

    தலைவன் விழுந்ததை பொறுக்க முடியாமல் மற்றவர்கள் ஓடிவந்தனர். நம் வீரன் உடைவாளை உருவினான். நீண்டு மெலிதாக இருந்த வாள், சூரிய ஒளியில் பளபளத்தது. முன்பக்கமாகவே வந்த அவர்களின் வாட்கள், வீரனின் ஒவ்வொரு வீச்சிலும் அபய ஒலியை ஏற்படுத்தியது. அவன் எங்கே நிற்கிறான் எப்படித் தாக்குகிறான் என்பது புரியாமல் வீரர்கள் தடுமாறினார். எதிரிலும், பக்கவாட்டிலும், பின்புறமும் அவன் கால்கள் மின்னல் போல் போய்வந்தது. அவனைச் சுற்றி வாளால் ஒரு அரணை உண்டாக்கி இருந்தான். அந்த வியுகத்தை அவர்களால் உடைக்க முடியாமல் நிலைகுலைந்தனர். ஒவ்வொருவராக காயம்பட்டு பின்வாங்கினர். மெல்லிய வாளில் இத்தனை உறுதியா? நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. யாரையும் பெருங்காயப் படுத்தாமல் நமது வீரன் சண்டையை முடித்தான். தாங்கள் சண்டையிட்டது, ஒரு மாபெரும் வீரனுடன் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

    அவர்கள் கைகளைக் கொடியால் கட்டி இரண்டு இரண்டு பேராக குதிரையில் ஏற்றினான். காயம்பட்ட பல்லக்கு தூக்கிகளையும் தூக்கி அமர்த்தினான். அந்தப் பெண் தனியாக குதிரையில் ஏறினாள்.குதிரை ஏற்றம் பயின்றவள் போலத் தெரிகிறது. வீர்கள் இருந்த குதிரைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டி, தொடக்கக் கையிற்றை அந்த பெண்ணிடம் கொடுத்தான்.

    'தொடர்ந்து வா' என்றவாறே தன் புரவியை முன்னால் மெதுவாக செலுத்தினான்.

    ஐந்து காத தூரம் கடந்தபின், காடு முடிந்து சேர நாட்டு எல்லை தொடங்கியது. அருகிலிருந்த மருத்துவ சாவடியில், பல்லக்குத் தூக்கிகளை அனுமதித்துவிட்டு, மருத்துவச் செலவிற்காக இரண்டு பொற்காசுகளைத் தந்தான்.

    மாலை மயங்கும் நேரமாகிவிட்டது. தெருவில் ஒரு இளம்பெண், பத்து படை வீரகளை கட்டி இழுத்து செலவதையும், முன்னால் முகம்மூடிய வீரன் வருவதையும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். அவர்கள் கோட்டை வாயிலை அடைந்தார்கள். நமது வீரன் காவலர்களிடம் மெதுவாக ஏதோ சொல்லிய உடன் கதவின் ஒருபாதி திறக்கப் பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அரண்மனை முற்றத்தை அடைந்தவுடன் ஒரு கவலர்கூட்டம் வந்து இவர்களை அழைத்துச் சென்றது.

    நாம் நமது அடுத்த நாளை இங்கிருந்தே துவங்கலாம். பல நாட்களுக்கு பிறகு விசாரணைக் கூடம் பரபரப்பாக காணப்பட்டது. அதற்கு காரணம் அங்கு அரசர் வரப்போவதுதான். மிக முக்கியமான விசாரணைக்கு மட்டுமே அரசர் வருவார் என்பதால் அரசியல் வட்டாரத்தில் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

    கட்டியம் கூறுபவனின் ஓசை நம் காதுகளில் விழுகிறது.

    '........மாமன்னர் , ராஜாதி ராஜ , வீரமறவர் இரண்டாம் செங்குட்டுவர் ....' என அவன் முன்னறிவிப்பு நீள்கிறது.

    பொன்னிறம் மின்னும் பட்டாடை உடுத்தி, தலையில் நவமணிக் கிரீடம் சூடி, அகன்ற நெஞ்சமும், திரண்ட தோள்களும், உதட்டில் கொண்ட புன்முறுவலும், கண்களில் ஒளி கொண்ட தீர்க்க பார்வையுமாய், அமைச்சர்கள் புடைசூழ, தளபதிகள் பின்தொடர, ஒரு சூரியன் போன்ற பிரகாசத்துடன் மன்னர் நடந்து வருவதைக் காண கோடிக் கண்கள் வேண்டும்.

    மன்னர் அரியாசனத்தில் வீற்றிருக்கிறார்.

    அவர் கண்ணசைத்ததும், அதற்கு நிகரான ஒரு இருக்கை அவர் அருகே போடப்பட்டது. அதில் அமரப்போவது யார் என்ற ஐயம் அவையினரைப்போல் நமக்கும் உண்டாகிறது.

    அரசர் தன் தொண்டையைக் கனைத்தவாறு பேசத் துவங்குகிறார்.

    அவையில் பெரும் நிசப்தம்.

    ' அவைப் பெரியோரே , அமைச்சர் பெருமக்களே, எனதருமை குடிமக்களே. அனைவருக்கும் எனது வணக்கங்கள். நமது அண்டை கொங்கு நாட்டிலிருந்து அந்நாட்டின் இளவல் மூன்றாம் தொண்டைமான் வந்திருக்கிறார். அவரை உங்கள் அனைவர் சார்பாக நான் வரவேற்கிறேன். இந்த விசாரணைக் குழுமத்திற்கும் அவர் ஒரு வழக்கு கொண்டு வந்திருக்கிறார். அதை விசாரித்து தீர்ப்பிட வேண்டிதான் நாம் இங்கே கூடியிருக்கிறோம்.'

    அந்த இளவலைக் காண நம் கண்கள் துடிக்கிறது. அதோ அவர் வருகிறார். அட இது நமக்கு பரிச்சயமான முகம் ஆயிச்சே..நம் முகமூடி வீரன்தான் அது. ராஜ உடையில் என்ன ஒரு கம்பீரம். நாமும் அல்லவா அவன் அழகில் சொக்கிப் போகிறோம். என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம்.
    அரசருக்கு இடப்பக்கம் போடப்பட்ட அந்த அரியாசனத்தில் அவர் வந்து அமர்கிறார்.(ஆம் இளவரசர் என்று தெரிந்தபின் நம்மை அறியாமல் மரியாதை வந்துவிடுகிறது.) அரசர் ,

    'விசாரணையை ஆரம்பிக்கலாம்' என்கிறார்.

    அந்த பத்து வீரர்களையும் , அந்த பெண்ணையும் அழைத்து வருகிறார்கள்.

    ' அமைச்சரே இவர்கள் நம்நாட்டு வீரர்கள்தானே?'

    'ஆம் மன்னா எல்லைத் தளபதி செங்கோடனின் பிரவில் உள்ளவர்கள்'

    'அவர் எங்கே?'

    'மாமன்னருக்கு எந்நாளும் கீர்த்தி உண்டாகட்டும் ' என்று வணங்கியபடி செங்கோடன் அவையின் முன்பு வந்தார்.

    'பெண்ணே என்ன நடந்தது என தயங்காமல் சொல்'

    அவள் தனக்கு நடந்தவற்றையும், முகமூடி வீரன் தன்னைக் காப்பாற்றி அழைத்து வந்ததையும் ஓன்று விடாமல் கூறி முடித்தாள்.

    'இந்தப்பெண் கூறுவது எல்லாம் மெய்யா ?' என வீரர்களை பார்த்துக் கேட்டார்.

    'ஆம் மன்னா , உளவுக்காரி என்று நினைத்து அவ்வாறு நடந்துகொண்டோம்' என்றனர்.

    'தளபதியாரே நீர் என்ன சொல்கிறீர், சந்தேகம் கொண்டால் அந்தப் பெண்ணைப் பிடித்து விசாரணைக் குழுமத்தில் ஒப்படைக்க வேண்டியது தானே. பெண்களை விசாரிக்கும் அதிகாரம் உமக்கு தரப்பட்டுள்ளதா? அதற்கென்று தனி பெண்கள் இருப்பது உமக்கு தெரியும்தானே?' என்று கேட்டார் அரசர்.

    தளபதி தலைகுனிந்து நின்றார்.

    'இந்தப்பெண்ணை கன்னத்தில் அறைந்தது யார் ?'

    அவர்களின் தலைவன் முன்னே வந்தான்.

    'நீர்தானோ அது. மங்கையரை கைநீட்டி அடிப்பது நல் வீரனின் செயலில்லையே..கலைஞர்கள் நாட்டின் சொத்து என்று உமக்குத் தெரியாதா.? '

    'மருத்துவச் சாவடியில் இருப்பவர்களின் நிலை என்ன அமைச்சரே?'

    'ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் . ஆறுவதற்கு இரண்டு மாதங்களாவது ஆகும் மற்றவர்களுக்கு பரவாயில்லை மன்னா'

    'நல்லது அமைச்சரே, அவர்களுக்கு ஆகும் செலவை கஜானாவிலிருந்து கொடுக்கச் சொல்லுங்கள். பல்லக்குத் தூக்குவது என்பது அரசால் அங்கீகாரம் பெற்று நடப்பது. அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்பு அவர்கள் கையில் தான் உள்ளது. அவர்களையும் தேவை இல்லாமல் தாக்கி காயப் படுத்தி விட்டீர்கள்.' என்று கூறிய அரசர் சுற்றி அவையினரை பார்த்தார்.

    எல்லாரும் மன்னரின் தீர்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும்தான்

    'அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்த தளபதியாரின் உடைவாளை அவர் அரசிடம் ஒப்படைத்து விட்டு ஓராண்டு பணிநீக்கத்தில் இருக்க உத்தரவிடுகிறேன்.'

    'பல்லக்கு தூக்கிகளை பணிசெய்ய விடாமல் தடுத்து அவர்களைத் தாக்கி இருக்கிறீர்கள் அதைத் தடுக்க வந்த வீரனையும் தாக்க முயற்சி செய்துள்ளீர்கள். அந்த வீரன் வேறு யாருமல்ல, இதோ நமது கௌரவமிக்க விருந்தாளி கொங்கு நாட்டு இளவல் தான்.' என்றார் அரசர்.

    "ஆ .." என்ற சப்தம் அவையில் நிறைந்தது.

    'இந்த வீரர்கள் நம் நாட்டிற்கு பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டு அவர்களுக்கு ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கிறேன்.'

    அப்பெண்ணினை பார்த்து,

    ' தாயே, இந்த வீரனின் தகாத செய்கையால் இந்த நாடே உன் முன் தலைகுனிந்து நிற்கிறது. பெரிய மனது கொண்டு மன்னிப்பாயாக. எமது வீரர்கள்
    உன்னை பாதுகாப்பாக, நீ விரும்பும் இடத்தில் கொண்டு சேர்ப்பார்கள். தக்க சமயத்தில் வந்து நாட்டின் கௌரவத்தைக் காத்த கொங்கு இளவலுக்கு இந்த நாடு என்றென்றும் நன்றி உடையதாக இருக்கும்.' என்று கூறி நிறுத்தினார்.

    பெண்ணினை அடித்த வீரனைப் பார்த்து,

    'உன் சார்பாக நீ ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' என்றார்.

    அவன் தலை கவிழ்ந்து நின்றான்.

    'பிற பெண்களையும் தாயாக, சகோதரியாக மதித்துப் போற்றும் நம்நாட்டில் இதுபோன்றதொரு இழிசெயல் இனிமேல் நடவாமல் இருக்க வேண்டும். அனுமதி இல்லாமல் பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் தீயிட்டு பொசுக்கப்பாடல் வேண்டும். ஆனால் இது வேண்டுமென்று செய்த காரியம் இல்லை என்பதும் நமக்கு தெரிய வருகிறது. முன்பகையும் உள்நோக்கமும் இல்லை. எனவே இந்த வீரனுக்கு கைகளில் நூறு பிரம்படியும், ஒருவருட கடுங்காவல் தண்டனையும் விதிக்கிறேன்.' என்று கூறி முடித்தார்.

    பெண்களைப் போற்றும் மன்னவரைப் போற்றியபடி அவையினர் கலைந்து சென்றனர். கொங்கு இளவலின் புன்முறுவலை ஆமோதித்து, அவர் தோழில் கைபதிந்து அரசரும் வெளியேறுகிறார். நாமும் தான்.

    பின்குறிப்பு:
    கதை முடியவில்லை. இக்கதையின் தொடர்ச்சி 'தமிழை உண்டவன்' என்ற தலைப்பில் ஒரு வரலாற்று தொடராக வர தயாரிக்கப் படுகிறது.
    Last edited by dellas; 05-02-2011 at 04:13 PM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •