Results 1 to 4 of 4

Thread: “தேனீ” உமருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா?

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் இனியவன்'s Avatar
    Join Date
    26 Apr 2006
    Location
    Singapore
    Posts
    727
    Post Thanks / Like
    iCash Credits
    8,959
    Downloads
    26
    Uploads
    0

    “தேனீ” உமருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா?

    “தேனீ” உமருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா?
    K.H.M.ஸதக்கத்துல்லாஹ்.



    (உமர் தம்பி)

    ஓலைச் சுவடிகளில் உறைந்து கிடந்த தமிழ், பின் படிப்படியாக உருமாறி புத்தகமாகி, இன்று விரல் நுனியில் வித்தை காட்டும் கணினியில் கண் சிமிட்டிச் சிரித்துக் கொண்டிருக்கிறது. எந்த ஒரு சிந்தனையையும் இன்று நாம் தமிழில் தட்டச்சலாம். ஆனால், அதற்கு வழியமைத்தவர்கள் எத்தனை பேர்? என்றாவது சிந்தித்தது உண்டா?

    இணையத்திலும், இதயத்திலும் தமிழுக்கென்று தனி ஆசனம் தந்து காத்து வருபவர்கள் என்றும் நம் போற்றுதலுக்குரியவர்கள். கணினி உலகில் விரிந்து, பரந்து, விருட்சமாய் வியாபித்து நிற்கும் அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த தகைமையுடையோர்களில் ஒருவர் “யுனிகோட் உமர் தம்பி”.

    தாம் மறைந்தாலும் தம் தாய் மொழி இவ்வுலகில் ஜீவிக்க வேண்டும் என்ற உமர் தம்பியின் தீரா வேட்கை இன்று நம் கண் முன் கணினித் தமிழாய் காட்சி தருகிறது. அதுவே அவருடைய வெற்றிக்கு சாட்சி. உமர் தம்பி உயிர் நீத்த அந்தக் கணம் (2006 ஜுலை 12) வரை அவருடைய முகவரியின் முதல் வரி கூட எனக்குத் தெரியாது.


    தகவல் பேரலைகளை ஓயாது எழுப்பிக் கொண்டேயிருக்கும் பெருங்கடல் இணையம். அதில் என்னதான் ஆங்கிலத்தில் உரையாடினாலும், அதையே அன்னைத் தமிழில் தொடரும் போது அலாதி ஆனந்தம். எதிர் கொள்பவர்களை எளிதில் இறுக அணைத்து வாஞ்சையோடு வாரிக் கொள்ளும் சுகானுபவம் தமிழ் வழிப் பரிமாறலில் கிட்டும். அப்படித் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் ஒருநாள், உமர் தம்பியின் மரணச் செய்தி காதுகளில் முட்டியது. யார் இவர்? ஏன் இணையத்தில் அவரைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள்? என்ற கேள்விகள் மனதில் உருக் கொண்டு, கருக்கொள்ள விரல்கள் தானாகவே தேடத் தொடங்கின உமர் தம்பியின் நதி மூலத்தை.

    இணையத்தில் இன்று நாம் தமிழில் தட்டச்சுவதற்கு அவரும் ஒரு விதையாகத் தம்மைத் தந்திருக்கிறார் என்று அறிந்த போது மனம் முழுக்க மகிழ்ச்சிப் பந்தல். அதே சமயம் அத்தனை எளிய, பெரிய, ஞானம் நிறைந்த நல்ல மனிதரோடு பரிச்சயமில்லாமல் போய் விட்டோமே என்ற விம்மல் இதயத்தில் எழுந்து எழுந்து அடங்கியது.

    தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் உமர் தம்பி. பிறந்தது 1953 ஜுன் 15. இப்பூவுலகை விட்டு நீங்கியது 2006 ஜுலை 12 ஆம் நாள். அதிராம்பட்டினம், காதிர் முகைதீன் கல்லூரியில் இளங்கலை விலங்கியல் துறையில் பட்டம் பெற்றவர்.

    இளங்கலை மட்டுமல்ல, இலக்ட்ரானிக்ஸ் (Electronics) என்னும் மின்னணுவியலில் பட்டயப் (Diploma) படிப்பையும் முடித்தவர். 1983 ஆம் ஆண்டில் தமது சொந்த ஊரிலேயே வானொலி, தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுது நீக்கும் பணிமனை அமைத்து நிர்வகித்து வந்தார் உமர்.

    கல்வி பயிலும் காலத்திலேயே 1977 ஏப்ரல் மாதம் அவருக்குத் திருமணம் நடந்தது. மனைவி பெயர் பெளஸியா (Fouzia). அத்தம்பதியருக்கு மூன்று மகன்கள்.

    மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராகத் திகழ்ந்தவர் உமர். அந்தத் தேடலின் நீட்சியாக, ஒருமுறை தாம் பயின்ற அதிராமபட்டினம் காதர் முகைதீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி ஊரிலிருப்போர் கேட்கும் விதத்தில் உரையாடல்களை ஒலிபரப்பினார்.

    1984 ல் துபாயில் உள்ள Alfuttaim குழும நிறுவனங்களில் மின்னணுச் சாதனங்களை பழுது நீக்கும் பொறியாளராகப் பணியில் சேர்ந்தார்.

    உமர், முறையாக எந்தக் கல்லூரியிலும் கணினித் தொழில் நுட்பத்தை பயிலவில்லை. துபையில் பணிசெய்த போது தமது ஓய்வுக் காலத்தைக் கணினி குறித்த தாகத்தையும், தேடலையும் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்திக் கொண்டார். படிப்படியாக கணினித் தொழில்நுட்பத்தில் தேர்ந்தார். Network administrator, SAP implementation team Head, Kiosk programmer என்று பல்வேறு துறைகளில் தடம் பதிக்க அவருக்கு அந்த ஞானம் போதுமானதாக இருந்தது. பதினேழு ஆண்டுகள் துபையில் பணி செய்த உமர், 2001 செப்டம்பரில் விருப்ப ஓய்வு பெற்றுத் தாயகம் திரும்பினார்.

    அத்துடன் நின்று விடவில்லை அவருடைய அறிவுத் தேடல். ஊரிலிருந்து கொண்டே தமது மூத்த மகன் மொய்னுதீனுடன் இணைந்து சென்னை போன்ற பெருநகரங்களில் இயங்கிவரும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்கும் (மாருதி கார்) நிறுவனங்களுக்கு, பொருள் இருப்பு மற்றும் விற்பனைக்கான மென்பொருட்களை வடிவமைத்து கொடுத்துப் பராமரித்து வந்தார்.

    இப்படிப் பல்வேறு வேலைகளைத் திறம்படச் செய்து கொண்டிருந்த வேளையில் கணினியில் கன்னித் தமிழுக்கு அணி செய்யும் பணியையும் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உமருக்குள் எழுந்தது. அந்தப் பணியில் தாம் ஈடுபட்டது மட்டுமல்ல. நாளைய தலைமுறையும் பயனுற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் தம் போன்று ஒரே கருத்துடையவர்களையும் திரட்டி அவர்களுக்குரிய ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

    ஒருங்குறித் தமிழில் முதன் முறையாக எல்லா தளங்களிலும் இயங்கும் WEFT நுட்பத்தின் அடிப்படையிலான தேனி இயங்கு எழுத்துருவை உமர் தம்பி அறிமுகம் செய்தார்.

    ஒருங்குறியல்லாத WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்களைச் சில தமிழ் வலைத்தளங்கள் முன்பே பயன்படுத்தி வந்தன. WEFT அடிப்படையிலான இயங்கு எழுத்துருக்கள் அந்த எழுத்துரு எந்த தளத்துக்கு உருவாக்கப்பட்டதோ அந்த ஒரு தளத்துக்கு மட்டுமே இயங்குமாறு இருந்தது. மேற்கண்ட இரண்டையும் முதன் முதலில் மாற்றிய பெருமை உமரையே சாரும்.

    தேனீ எழுத்துருவை இயங்கு எழுத்துருவாக (Dynamic Fonts) மாற்றிப் பல்வேறு இணையத் தளங்களில் அதை இலவசமாகப் பயன்படுத்த வழி செய்தார். இன்று தமிழிணைய உலகில் அனேகம் பேர் அந்த எழுத்துருவைப் பயன்படுத்தி வலைப்பதிவு செய்து வருகிறார்கள்.

    கணினி, அறிவியல், பொருளாதாரம், கல்வி, வணிகம் போன்ற துறைகளில், இன்று வழக்கத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை மிக எளிமையான முறையில் தொகுத்து வழங்க முடிவெடுத்தார். அதன்பொருட்டு தமிழ் இணைய அகராதியைக் கொண்டு வந்தார். அதன் உருவாக்கத்தில் உமருக்குத் தமிழ் உலக உறுப்பினரும், talktamil.4t.com இணையத் தள நிர்வாகியான மஞ்சுவும் தோள் கொடுத்தார்.

    தமிழ் மணம், தமிழ் உலகம் குழுமம், ஈ உதவிக் குழுமம், ஒருங்குறி குழுமம், அறிவியல் தமிழ்க் குழுமம் என இணையத்தின் பெரும்பாலான தமிழ்க் குழுமங்களில் பங்கெடுத்துத் தம்மால் ஆன அத்தனை உதவிகளையும் நல்கி இருக்கிறார். உமர் தம்பி உருவாக்கிய செயலிகளும், கருவிகளும் இன்றளவும் இணையத்தில் அவரின் பங்களிப்புக்குச் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    உதாரணத்துக்குச் சில...
    • AWC Phonetic Unicode Writer
    • தமிழுக்காக Online RSS creator - can be used in offline as well
    • எண்களாகத் தெரியும் ஒருங்குறி எழுத்துக்களை படிப்பதற்கான செயலி
    • தமிழை ASCII வடிவில் டேட்டாபேஸில் சேமிக்கும் கருவி
    • எல்லாவகையான குறிமுறைகளையும் ஒருங்குறிக்கு மாற்றும் செயலி
    • ஒருங்குறி மாற்றி
    • தேனீ ஒருங்குறி எழுத்துரு
    • வலைப்பதிவுகள், வலைத்தளங்களுக்கான இயங்கு எழுத்துரு தொடுப்பு
    • வைகை இயங்கு எழுத்துரு
    • தமிழ் மின்னஞ்சல்
    • தமிழ் ஒருங்குறி Toolbar for உலாவி
    • Uniwriter (உலாவியில் Tools மெனுவில் சேர்க்கப்படும்)
    • தமிழா-எ-கலப்பை உருவாக்கத்திலும் பங்காற்றி உள்ளார்.

    இணையத்தில் தமிழைக் கொண்டு வர வேண்டும் என்று உமர் எடுத்த முதல் முயற்சி தான் இன்று பலவகையான தமிழ்நுட்பத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது என்பதை இணையப் பயனாளர்கள் அறிவர்.

    உமர் தம்பியின் செயல்பாடுகள் பற்றி இணையத்தில் ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தையும் ஒருங்கே தொகுத்துக் கொடுப்பது சாத்தியமல்ல.

    காலம் உமர் தம்பிக்கு வழங்கிய தவணை 2006 ஜுலை 12 ல் முடிந்திருக்கலாம். அறிவியாலால், தாம் கொண்ட அறிவால் அவர் வளர்த்து விட்ட நல்ல மனிதர்கள் இன்றளவும் இணையத்திலும், இதயத்திலும் தமிழைக் கொண்டு வந்து சேர்க்க அயராது பங்காற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

    செம்மொழி மாநாட்டில் கணினித் தமிழுக்கு அணி சேர்க்கும் விதத்தில் சில நிகழ்வுகளும் நடக்கவுள்ளன. அதில் உமர் தம்பியின் இணையத் தமிழ்ப் பங்களிப்புக்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இணைய மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தும் “உத்தமம்” அமைப்பு உமர் தம்பியின் பங்களிப்புகளைப் பற்றி அரசாங்கத்துக்கு எடுத்துரைக்க வேண்டும். அவருடைய கணினித் தமிழ்ப் பங்களிப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். அதைச் செய்வதன் மூலம் பெருமையடைப் போவது உமர் தம்பியல்ல. அன்னைத் தமிழ் தான்.

    தாய்மொழிக்கு ஒரு பெருமை வரும் என்றால் அதைத் தயங்காமல் செய்யும் தமிழக அரசு. இணையத் தமிழ்ப் பயனாளர்களின் இந்தக் கோரிக்கைக்கும் செவி சாய்க்குமா?.....

    நிச்சயம் செவி சாய்க்கும் என்பது நம்பிக்கை.


    நாம் வாழ
    பிறரை வாழ விடுவோம்.
    நலம் விரும்பும்,


    இனியவன்.

  2. #2
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    எல்லோருக்கும் தெரியவேண்டிய தகவல். இதுபோல் மறைந்து கிடக்கும் மாணிக்கங்களை வெளிக்கொண்டுவந்து உரிய அங்கீகாரம் தருவது அரசின் தலையாய கடமை
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் Narathar's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    London / Sri Lanka
    Posts
    5,891
    Post Thanks / Like
    iCash Credits
    12,457
    Downloads
    11
    Uploads
    0
    இவருக்கு உரிய அங்கீகாரம் செம்மொழி மாநாட்டில் வழங்கப்பட்டதா?
    தமிழை வளர்க்க,
    தமிழரோடு தமிழில் பேசுங்கள்

  4. #4
    புதியவர்
    Join Date
    29 Dec 2009
    Location
    trichy
    Posts
    15
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    அவர்கள் மாநாடு நடத்திய நோக்கம் தங்களுக்கு புரியவில்லையா

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •