என் பள்ளித்தோழன் யுவராஜ், வித்தியாசமானவன். கப்பலேக் கவிழ்ந்தாலும் கவலைப்படமாட்டான். முகத்தில் எப்போதும் புன்னகையோடுதான் இருப்பான். நிறம் குறைவு, முகம் முழுதும் அம்மைத்தழும்புகள் ஆனாலும் எந்த தாழ்வுமனப்பான்மையுமில்லாமல்...எல்லோருடனும் இணைந்து பழகி, அனைவரையும் சந்தோஷப்படுத்துவான்.

ஒருமுறை நானும் அவனும் மோட்டார்பைக்கில் போகும்போது, சாலையில் சிந்தியிருந்த எண்ணையால் வழுக்கி வாகனத்தோடு விழுந்தோம். அவனது கால் வாகனத்துக்கடியில் சிக்கிக்கொண்டது. எனக்கு லேசான சிராய்ப்பு, உடனே ஓடிவந்து வாகனத்தைத் தூக்கி அவனை விடுவித்தேன். எழுந்து நிற்கமுடியாமல் தடுமாறினான். எலும்பு உடைந்திருக்கும். ஆனாலும், அவன் முகத்தில் வலிக்கான வேதனையின் சுவடே தெரியவில்லை.

"எலும்பு உடஞ்சிருக்கும் போலருக்குடா....ரொம்ப வலிக்குமே...ஆனா உன்னப்பாத்தா வலிக்கவேயில்லங்கற மாதிரி சிரிக்கிற....என்னடா நீ லூஸா?"

என்றதற்கு,

"போடா....போடா....என் உடம்புல இருக்கிற எல்லா பாகமும் என் மனசோட கட்டுப்பாட்டுலத்தான் இருக்கு. அந்த மனசு என் கட்டுப்பாட்டுல இருக்கு. அடிபட்ட பாகத்துக்கு வலின்னா என்னன்னு தெரியுமா....மனசு சொல்லித்தானே அது வலிக்குதுன்னு உணரமுடியும். ஆனா என் மனசை நான் ரொம்ப உறுதியா வெச்சிருக்கேன். வலியையே உணராத மாதிரி அதைப் பழக்கி வெச்சிருக்கேன்....அதாண்டா எனக்கு வலின்னா என்னன்னே தெரியல"

அவனை அன்று ஆச்சர்யத்துடன் பார்த்தேன். இன்றைக்கும் அவனை ஆச்சர்யத்துடன்தான் பார்க்கிறேன். ஆனால் வேறுவிதமான ஆச்சர்யத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனை இன்று சந்தித்தேன். தெருவோர தேநீர்க்கடையில் தேநீர்க் குடிக்க நின்றிருந்தோம். சூடானத் தேநீரை அவனுக்குக் கொடுக்கும் போது தவறி அவன் கையில் சிந்திவிட்டது. உடனே கையை உதறிக்கொண்டு ஓடி பக்கத்திலிருந்த குளிர்ந்த தண்னீரை அள்ளி ஊற்றிக்கொண்டான். எரிச்சலில் துடித்ததை என்னால் உணரமுடிந்தது.

"என்னடா யுவராஜ்...எந்த வலிக்குமே, கலங்காத நீ இந்தச் சின்ன சூட்டைத் தாங்கமுடியாம துடிக்கிற? என்னடா ஆச்சு உனக்கு?"

"என்னோட பலமே என் மனசுதான்டா...உடம்புல எந்த பாகத்துக்கு அடிபட்டாலும், வலியை உண*ரவிடாம பாத்துக்கிட்ட அந்த மனசையே ஒருத்தி உடைச்சிட்டாடா....அன்னையிலருந்து...இப்படித்தான்..."

"ஏண்டா....காதல் தோல்வியா..?"


"அப்படி சொல்ல முடியாதுடா.... ஆனா...என் மனசுக்குப் பிடிச்ச ஒரு பொண்னை நான் ரொம்ப நாளா...ஒருதலையாக் காதலிச்சுக்கிட்டிருந்தேன், அது அவளுக்கும் தெரியும், ஆனா ஒருமுறை அதை அவக்கிட்டயே நேர்ல சொன்னப்ப அவ சொன்ன வார்த்தைகள்தாண்டா என் மனசை உடைச்சிடுச்சி"

சற்று மௌனத்துக்குப் பிறகு,

"உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா....உன் மூஞ்சியை நீ கண்ணாடியில பாத்ததேயில்லையான்னு செருப்பால அடிச்சமாதிரி கேட்டுட்டுப் போயிட்டாடா....அன்னையிலேருந்து இன்னைக்கு வரைக்கும், என் மூஞ்சியை கண்ணாடியிலப் பாக்கும்போதெல்லாம் வலிக்குதுடா...செத்துப்போயிடலான்னு தோணுது"

"ச்சே....உன்னை எவ்வளவு உறுதியான மனசுக்காரன்னு நினைச்சிட்டிருந்தேன்....போடா.....சரி..இப்ப சொல்லு, உன் மூஞ்சி ரொம்ப அசிங்கம்ன்னு நீ நினைக்கிறியா?"

"நானே என்னைப் பத்தி எப்படிடா அப்படி நினைக்க முடியும்?"

"எஸ்...அதேதான். புத்தர் என்ன சொன்னார். ஒருத்தர் உன்னைப்பார்த்து திட்டும்போது, அதுக்கு நீ கோபப்பட்டா, அந்த வார்த்தை உனக்கு சொந்தமாயிடுதுன்னு அர்த்தம், நீ அதை ஏத்துக்கவேயில்லைன்னா...சொன்னவங்கக்கிட்டேயே அது இருக்கும். உன்னை ஒருத்தர் வேசிமகனே அப்படீன்னு சொன்னா, அதுக்கு நீ கோபப்பட்டா...உன்னோட தாய் தவறாவள்ன்னு அர்த்தம்...இல்லையா? அதுவே...அதைக் கண்டுக்காம, அதாவது அந்த வார்த்தையை ஏத்துக்கிட்டு, அதை உனக்கு சொந்தமாக்கிக்காம இருந்தா...அந்த வார்த்தைக்கு மதிப்பே இல்லை. அவ சொன்னதை நீ ஏண்டா ஏத்துக்கிட்ட. தூக்கி எறிஞ்சிடு. அது உனக்குச் சொந்தமானது இல்ல. அதை ஏன் சுமந்துக்கிட்டுத் திரியற? தூக்கித் தூரப்போடு"

முகமெல்லாம் பிரகாசமாய் என்னைப் பார்த்தவனின் கண்களில் எனக்குப் பழைய யுவராஜ் தெரிந்தான். திரும்பி நடக்கும்போது, அந்தக் கடை பெஞ்சில் முட்டியை பலமாய் இடித்துக்கொண்டான்...ஆனால்...அவன் முகத்தில்...அதே பழையப் புன்னகை.

அவனுடைய மனம்...மீண்டும் அவனின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.