ஓயாமல் பேசுவாய்
ஓடித் திரிவாய்
ஒரு வார்த்தையும்
பேசாமல் சோர்வில் துவண்டு
ஒரு வாரமாய் ஒரே இடத்தில்
படுத்த படுக்கையாய் நீ..
பார்க்க பார்க்க பதறி
துடிக்குது என் நெஞ்சம்...

உன் மௌன புன்னகையின்
உள் அர்த்தம் புரியாமல்
குழம்பும் நிலை...
வாழ்த்து அட்டைக் கொடுத்து
அழ வைத்தாய்...
உனக்காக பல ஆண்டுகள்
வாழ வேண்டுமா நான்...
சின்ன மனதில் பெரிய சிந்தனை...

என் ஆழந்த தூக்கத்தில்
யாரோ என்னை உற்று நோக்க
கண்விழித்து பார்த்தால்
கண் சிமிட்டி சிரிக்கிறாய்..
என்னவென்று வினவினால்
கட்டிபிடித்து கொஞ்சுகிறாய்
உன் உள் மனது சொல்லும்
சேதி என்ன??
புரியாமல் என் மனம் குழப்பத்தில் ...

சேய்யின் தேவையை தாய்
தான் அறிய முடியுமோ??
ஒருவேளை அவள் இருந்தால்
அறிந்து இருப்பாளோ...
எண்ணி எண்ணி
ஏதோ ஒரு குற்ற உணர்வு என்னுள்...

மெலிதாய் ஒரு புன்னகை...
கண் சுருக்கி நீ சிரிக்கும்
சிரிப்பு எல்லாமே அவளை நினைவூட்ட
என் கண்களுக்கு அவளின் மறு உருவமாய் நீ...
ஆரோக்கியம் இல்லாத போது
அரவணைக்கும் தாயாய்
இருந்தபோதும் ஏதோ ஒரு குறை...
யாரிடம் சொல்ல...

உன் தேவையை அறிய முடியா
பாவியா நான்...
தாயாய் மாறினாலும்
தாயின் இடத்தை நிரப்ப முடியாத
பாவியா நான்...
என் சந்தோஷத்தை புதைத்து
உனக்காக வாழும்
என்னை நீ உணரும் நாளுக்காய்
உயிர் பிடித்து வாழ்ந்து வருகிறேன்...
உனக்காக வாழ விரும்புகிறேன்