காலையில் உதித்தது
ஒரு கவிதை...
நினைத்தவுடன் எழுதாவிடின்
என் மறதியால்
மரித்துப் போகும் அக்கவிதை..
நினைத்து, மறந்து,
மரித்த கவிதைகள்
கணக்கில் அடங்கா..
வேகமாய் கணினி முன்
தட்டச்சுவை திறக்க
காலையிலேயே
கணினி முன்பாயென
என் அம்மா திட்ட
எழுதியே தீர வேண்டும் என
தலைப்பு வைத்து கவிதையை
தொடங்க பட்டென்று இருள்..
என் எண்ணங்களில் அல்ல
என் அறையில்...
மாதம் ஒரு நாள் மின் துண்டிப்பு..
அந் நன்னாள் இந்நாள் என
என் அம்மா சிரிக்க
ஐயோ என் கவிதை என
என் மனம் கூப்பாடு போட
நீண்ட நாட்களுக்கு பிறகு
பேனாவை தேடியது என் கண்கள்...
பேனாவையும் வெள்ளைத்தாளும்
ஒருவழியாய் இருளில் தேடிப் பிடித்து
எழுதிய முதல் வார்த்தை "நான்"..
ஒரு நொடியில் பெரிய அதிர்ச்சி...
என்னவாயிற்று என் தமிழுக்கு??
என்னவாயிற்று என் கையெழுத்து??
சிறு குழப்பம்...
கைபேசியிலும் கணினியிலும்
ஜாலம் செய்யும் விரல்கள்
இன்று பேனா பிடிக்கையில்
ஆரம்பக்கல்வி குழந்தையாய்
கிறுக்கி கொண்டு செல்ல
நான் எழுதிய வார்த்தை கண்டு
குழம்பி போனது மனது...
ஐயோ என் தமிழ் சொல் எங்கே??
கைபேசி குறுஞ் செய்தியிலும்
கணினியிலும் ஆங்கிலத்தில்
தமிழை எழுதியதால் வந்த வினையோ?
என் மனம் துடித்தது...
"நான்" என்று ஆங்கிலத்தில்
எழுதி இருப்பதாய் பார்த்து
என் கண்களே நம்ப மறுத்தது...
கை எழுத்துக்கூட காணமல்
போயிற்று கணினியால்...
நான் தமிழை ஆங்கிலத்தில் வளர்த்தேனோ??
தமிழை மறந்தேனோ???![]()
Bookmarks