Results 1 to 1 of 1

Thread: மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” - வீறு கொண்டெழும் கவிதைப்பொறிகள்

                  
   
   
  1. #1
    புதியவர்
    Join Date
    02 Feb 2010
    Location
    கொழும்பு, இலங்கை
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    8,956
    Downloads
    0
    Uploads
    0

    மன்னார் அமுதனின் “விட்டு விடுதலை காண்” - வீறு கொண்டெழும் கவிதைப்பொறிகள்

    பிந்தைய 20ஆம் நூற்றாண்டின் ஈழத் தமிழ்க்கவிதைகள் இலக்கிய ரசனை முகிழ்த்தெழும் கவிதைகள் என்கிற பரிணாமத்தைத் தாண்டி உண்மையான வாழ்வியல் வலிகளை உலகுக்கு வியாக்கியானம் செய்யும் மகோன்னத பணிக்குரிய ஊடகமாக மாறியிருக்கிறது என்பதில் தப்பேதுமில்லை.

    புதுக்கவிதையின் இயற்பியலை புரட்டிப்போட்ட இலக்கியங்களையே 1980ம் ஆண்டுக்குப் பின்னர் காணக் கூடியதாக உள்ளது. வெறுமனே வர்ணிப்பு, காதல், தனிமனித ஆசைகள், சுயகழிவிரக்கங்கள் என்பவற்றை புறந்தள்ளிவிட்டு நிழலென நம் வாழ்வோடு பயணிக்கும் நம் நெருங்கிய உறவாகவே அண்மைக்கால கவிதைகள் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வரிசையில்தான் மன்னார் அமுதனின் 'விட்டு விடுதலை காண்' கவிதை நூலும்...

    இந்த நூல் தனக்காகப் பேசியதை விட தன் சமூகத்துக்காகவே அதிகம் பேசியிருக்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவரையும் பிரதிபலிக்கும் ஒரு சமூக ஆவணமே இந்தக் கவிதைப் புத்தகம். காரணம் இந்நூலிலுள்ள எல்லாக் கவிதைகளிலும் தெறித்து விழுவது சமுதாய சித்தாந்தங்கள் தான்.

    எனதருமைத்தாய் எனத் தொடங்கும் முதல் கவிதையிலிருந்து மரணிக்க முன் ஒரு நிமிடம் என்கிற கடைசிக் கவிதை வரை நூலாசிரியர் சமூகம் மீது தனக்கிருக்கும் தெள்ளிய பற்றை வெள்ளிடை மலையாய்க் காட்டுகிறார்.

    தன்னை இந்த சமூகம் நேசிக்கவில்லை என்று அங்கலாய்க்கும் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில், தான் இந்த சமூகத்தை வெகுவாக நேசிக்கிறேன் என்று அடித்துச் சொல்லும் கவிஞர் அமுதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    'ஈழத்தமிழரின் வாழ்க்கை இன்று சந்தித்திருக்கிற நெருக்கடியே அவர்களின் எல்லாப் படைப்புக்களிலும் முதன்மைப்படுகின்றன' என்று கருணாகரன் ஒரு கவிதை விமர்சனத்தில் கூறியிருப்பார். அதுபோலவே இந்த நூலும் ஈழத்தமிழர்களின் வலிகளை தன்னகத்தே நிலை கொள்ளச் செய்திருக்கிறது.

    'ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு நிகழ்விலும் ஒளிந்து கொண்டிருக்கிறது கவிதை. அதை கண்டுபிடித்துத் தருபவனே கவிஞன்' என புதுக்கவிஞன் ஆனந்த் அடிக்கடி சொல்வான். அந்தவகையில் அமுதனும் நிறைய விடயங்களை இந்த நூலின் வழியாக கண்டு பிடித்துத் தருகிறார்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் இந்த நான்கைப் பற்றியும் இதே வரிசையில் முதல் நான்கு கவிதைகளாகவும் இணைத்திருப்பத புதுமை. எனதருமைத் தாய் எனத்தொடங்கும் கவிதையில்

    தாய் போல அரவணைக்க
    தரணியிலே யாருண்டு?
    சேயெனக்கு உணவளிக்க
    சேற்றினிலும் நடந்திடுவாள்

    தாய் மடியில் தலைசாய்த்தால்
    பசிகூட மறந்துவிடும்
    வெண்குரலில் பண்ணிசைத்து
    வேந்தனெனைத் துயில வைப்பாள்

    என்று தாயின் சிறப்பை அழகாக வர்ணித்திரக்கிறார். ஒரு மனிதனுக்குக் கிடைக்கின்ற முழுமையான ஒரே ஒரு உறவு தாய்தான்.. அந்த உறவை விஞ்சும் எந்த உறவையும் இறைவன் இங்கு படைக்கவில்லை.

    அதைப் போலவே பிதா, குரு, தெய்வம் பற்றியும் இவரது பேனா பேசுகிறது..

    எந்தை என்ற கவிதையில் தந்தை பற்றியும்,ஆசான் என்ற கவிதையில் நம் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு விதத்தில் சிற்பமாக்குவதற்கு தன்னையே மூலதனமாக்கும் ஆசான்களைப் பற்றியும்

    தெய்வம் என்ற கவிதையில்

    வல்லமைமிக்க இறைவா போற்றி
    வலிமையைக் கொடுக்கும் தலைவா போற்றி
    அமைதியை அருளும் ஆண்டவா போற்றி
    வேந்தா;கெல்லாம் வேந்தனே போற்றி, போற்றி


    என்கிற ஆளுமைமிக்க வரிகளினால் கடவுளைப் பற்றியும் இவர் பாடுகிறார். தொடரும் தோழன் என்கிற கவிதை நட்பைப் பற்றிச் சொல்கிறது.

    போரின் ஆணிவேரைப் பற்றி ஆழமாக எழுதப்பட்டிருக்கும் இந்த நூலில் ஆங்காங்கே காதலைப் பற்றியும், தன் காதலி பற்றியும் சமகால காதலின் பரிமாணங்கள் பற்றியும் கூட இவர் கவிதை பாடத் தவறவில்லை.

    தன் காதலி பற்றி இவர் கூறும் வர்ணணையைப் பாருங்கள்... சொக்கும் வரிகளோடு கிறங்கடிக்கும் காதலியின் பேரெழிலை நகல் செய்கிறது இவரது பிரம்மன் செய்த ஓவியம் என்கிற கவிதை. அழகின் ரசனை ஈரஞ்சொட்டும் வரிகள்.

    இக்கவிதையின் சில வரிகளில் லயித்துப் போனவனாய் அவ்வரிகளை உங்களுக்கும் ஒப்புவிக்கிறேன்

    வெண்ணிலவைக் கல்லாக்கி
    விண்முகிலை உளியாக்கி
    பன்முகத்தான் பிரம்மனவன்
    படைத்த எழில் சிற்பமவள்

    கண்ணிரண்டும் விண்மீன்கள்
    காதுமடல் செவ்வானம்
    புருவங்கள் பிறைநிலவு
    பூத்த பூவாய்ச்; செவ்விதழ்கள்

    கருங்கூந்தல் மையிருட்டு
    இருகொங்கம் மலைமுகடு
    தரையதிரா அன்னநடை - தவறி
    விழத்துடிக்கும் சின்ன இடை


    மிக அழகான, லாவகமான, இயல்பான வரிகள். ஒரு பெண் என்பவள் இயற்கையிலேயே அழகானவள். ஆயினும் அவளைப் பார்த்து 'நீ ரொம்ப அழகு' என்று சொன்னால் போதும். நிறைய ஆண்கள் இந்த வார்த்தையைத் தான் பல இடங்களில் எப்போதும் பயன்படுத்துகிறார்கள். ஒரு ஆய்வின் பிரகாரம் ஒரு பெண்ணுக்கு அதிகம் பிடித்த வார்த்தை நான் மேற்சொன்ன 'நீ ரொம்ப அழகு' என்னும் வார்த்தையாம். அந்த வார்த்தையை கவிஞர் ரொம்பவே அழகாக கையாண்டிருக்கிறார்.

    தொடரும் வெயிலும், வாழ்வும், இயற்கை, தேவையேயில்லை, வானமும் வசப்படும் வழுக்கி விடாதே போன்ற கவிதைகள் வாயிலாக இன்றைய சமுதாய சிக்கல்களையும், பிரச்சினைகளையும், வாழ்வின் அத்தியாவசிய அங்கங்களையும் கண்ணாடியின் விம்பத்தைப் போல துல்லியமாய்க் கவிஞர் அமுதன் வெளிப்படுத்தத் தவறவில்லை.

    இந்த நூல் சுமந்திருக்கும் போர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்..கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.

    என் கிராமம் என்று கவிஞர் தன் கிராமத்தின் நிலையை படம் பிடித்திருக்கும் கோணத்தைப் பாருங்கள்

    என் கிராமம்
    இதோ,
    என் கிராமம்
    உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்ளும்
    பாதுகாப்பின்றி

    அம்மா வைத்த
    தென்னம் பிள்ளைகள்
    பீரங்கிகளுக்கு முட்டுக்
    கொடுக்கப்பட்ட வண்ணமாய

    நான் உருண்டு விளையாடிய மண்
    பதுங்கு குழிகளுக்குள்
    அடுக்கப்பட்ட மூட்டைகளாக

    அதோ...
    நான் வளர்த்த நாயின்
    கடைசிச் சந்ததிகள்
    அதே முகச் சாயலோடு
    பச்சையுடைகளுக்கு வாலாட்டிக்கொண்டு
    என்னைப் பார்த்துக் குரைக்கின்றன

    என்று ஐந்தறிவு ஜீவன்களுக்காகவம் உருகும் கவிஞரைப் போன்ற மனித நேயமிக்கவர்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் சில ஐந்தறிவு மனித ஜீவன்கள் இனவாதக் கால்களால் சிறுபான்மை என்றொரு முகவரியை எமக்களித்து தொடர்ந்தும் அடக்குமுறை என்ற பெயரில் நம்மை நசுக்கிக் கொண்டிருப்பது முடிவிலியா? என்கிற கேள்வியும் இத்தருணத்தில் மிக அவசியமானதே.

    தொடர்ந்து யுத்தம் பற்றி எழுதும் கவிஞர்

    இது தான் எங்கள் தாகம் என்னும் கவிதையில்

    என்று விடியுமெம் தேசம் - இதுவே
    உலகத் தமிழனின் தாகம்.


    என்று போலி விடியலைச்சாடுவதுடன் நிஜமான விடியலை யாசிக்கிறார்.

    இந்த இடத்தில் கவிஞரின் சந்தோசமாய் வா பின்னே என்கிற காதல் கவிதையில்

    வெண்பனி தீண்ட விடமாட்டேன் - உன்
    விருப்பமில்லாமல் தொட மாட்டேன்
    சத்தியம் செய்து தருகின்றேன்
    சந்தோசமாய் வா பின்னே


    என்று அவர் பாடுவதும் சமூகத்தின் கலாச்சாரத்தின் விழுமியங்களை அவர் பின்தொடர்கிறார் என்பதோடு இன்றைய காலத்தின் 'டைம்பாஸ்' காதல்களின் முகத்தில் ஓங்கிக் குத்தியிருக்கிறார்.

    உன்
    விருப்பமில்லாமல் தொட மாட்டேன்

    என்கிற வரிகளை ஒவ்வொரு காதலனும் காதலியும் கடைப்பிடிக்கும் பட்சத்தில் எத்தனையோ சமுதாயச் சீர்கேடுகளைத் தடுக்க முடியும்.

    தமிழச்சியின் புலம்பல் என்கிற ஈழப்பெண்ணின் அன்றாட புலம்பல்களையும் கவிஞர் அடையாளப் படுத்தியிருக்கிறார். இந்த இடத்தில் மேமன்கவி அவர்கள் எனது பெண்ணியம் தொடர்பான கவிதைகளை விமர்சிக்கும் போது ஒரு ஆண் பெண்ணியம் பற்றி எழுதும்போது சில தவறுகள் ஏற்படலாம் என்று எச்சரித்திருந்தார். அது உண்மையும் தான். அவரவர் உணர்வுகளை அவரவர் வெளிப்படுத்துவதற்கும் பிறர் சார்பாக வெளிப்படுத்தவதற்கும் வேறுபாடுகள் உண்டு. அதை தற்போதைய ஆண் கவிஞர்களும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள்.

    இந்தக்கவிதை
    கைகள் கட்டி
    சுடப்பட்ட கணவன்

    பணயப் பணம் இன்றி
    இருட்டறை வாசத்தில் அப்பா

    கடைக்குப் போன மகள்
    சந்தியிலே சவமாக,
    கடத்தப்பட்ட மகன்
    பூசாவில் பிணமான

    என்கிற வரிகளின் துணைகொண்டு வடக்கில் யுத்த காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு ஈழத்தாயும் எதிர்கொண்ட துயரத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார். வலி நிறைந்த வரிகள் உயிரைப் பிழிந்தெடுக்கின்றன. இனி இப்படி எந்தத்தாயும் புலம்பக்கூடாது என்கிற பிரார்த்தனைகளையும் இறைவனிடத்தில் கேட்டுக்கொள்வோம்.

    இவ்வாறாக அவல நிலைகளை புடம்போட்டுக் காட்டும் கவிஞர்

    தட்டும் போதே திறந்து விடு
    எம் சுதந்திரக் கதவுகளை - இன்றேல் கதவுகளை உடைத்தெறிவோம்

    என்று இது இயலாமை அல்ல எம் நிர்ப்பந்தமே..என்றும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் போனால் அதற்கான மருத்துவம் வேறு விதம் என்பதையும் எச்சரித்துக் காட்டுகிறார்.

    விலைவாசி என்கிற கவிதையில்
    நீதி வழுவிய இந்நாடு
    நிதியிலும் வழுவி விட்டதாம்
    அடுக்கடுக்காய் வாpபோட்டால்
    கொடுக்கவா முடியும்?
    அரசிடமே வழக்கு நாம்
    தொடுக்கவா முடியும்?

    என்று சம்பந்தப்பட்டவர்களை எள்ளி நகையாடுகிறார். விலைவாசியின் விளைவுகளை நான் சொல்லித்தான் நீங்கள் புரிய வேண்டும் என்பதில்லை. சும்மா சாமர சில்வாவின் துடுப்பாட்டம் போல 10-20 என்றிருந்த பாணின் விலை டில்சானின் துடுப்பைப்போல 100ஐத் தொட்ட கதை ஒவ்வொரு ஏழையின் வாழ்வையும் நிர்க்கதியாக்கியதையும் அமுதன் பாடத்தவறவில்லை.

    இன்னும் பாப்பா பாட்டு, என் தோழி, உதிரும் பூவின் மலா;ந்த ஞாபகம், விவசாயி பேசுறேங்க, விடுதலைப் பள்ளு என்று தன் சமூகக்கோபத்தை அக்கினிச் சுவாலைகளாய் கவிதைகளுக்குள் குடியிருத்தியிருக்கிறார்.

    இந்த நூலில் இரங்கல்கவிதை- கு.முத்துக்குமரன் என்ற கவிதையும் மிக முக்கியமானது. முத்துக்குமரனுக்காக இரங்கும் அதேவேளை இவ்வாறான தற்கொலைககள் வரவேற்கப்பட முடியாதவை என்பதையும் கவிஞர் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

    தமிழனுக்காய் உயிர் துறக்க
    தமிழ்சாதி இருக்கென்று
    கவியெழுதி மாழாத
    செயல்வீரன் நீயன்றோ

    கவியெழுதி உடலொpக்க
    ஊக்குவிப்பு தரல மச்சான்
    உசுரோடு இருங்க மக்காள்
    இருந்தாத் தான் பலமெமக்கு.


    என்று அழுத்தமாகச் சொல்லுமிடத்தில் கவிஞரின் சமூகக் கடப்பாடுகள் மீதான அக்கறை பல மடங்கு உயர்வாவதை கவனிக்கலாம்.
    விட்டு விடுதலை காண் கிளியே...என்கிற விடுதலை பற்றிய கவிதையும் கிளியை உருவகமாக்கி நமக்கான விடுதலையை அழுத்தந் திருத்தமாக வலியுறுத்தகிறார்.

    இறுதியாக அவர் சொல்லும் விடயம் மிக முக்கியமானது

    அவ்வப்போது
    ஜனநாயக நீரோடையில்
    ஞானஸ்நானம் பெற்று
    சிறுவார்களைக் கடத்திக்
    கைகளைக் கட்டி
    கழுத்தை அறுக்கும்
    பிரிவின் வலியறியா
    அரசியல் பெருச்சாலிகளின்
    கைக்கூலிகள்

    கைக்குக் கையாலும்
    வாய்க்கு வாயாலும்
    விடை தரும் பண்டிதா;கள்

    ஏனோ
    எழுத்திற்கு மட்டும்
    எழுத்தால் பதில் சொல்வதில்லை

    என்கிற கேள்விகளால் ஆணவ பெரும்பான்மையினர் முகத்தில் ஓங்கி அறைகிறார். இதுவரை பதில் தரப்படாத கேள்விக்குத் தேவை உடனடிப்பதில். அதை கவிஞர் கேட்டிருக்கும் விதம் அவரது கவித்துவத்துக்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்றே நாம் கொண்டாட வேண்டியிருக்கிறது.

    இப்படியாக அழகான கவிதைகளுடன் யதார்த்தம் இம்மியளவும் பிசகாமல் நெய்யப்பட்டிருக்கும் இந்த நூல் இன்றைய காலத்திற்கு அவசியமான நூல்..

    பயணத்தின் போது சகஜமாகப்பேசும் ஒரு ரயில் ஸ்நேகிதனைப்போல

    நாம் கண்ணீர் சிந்தும் போது எங்கிருந்தோ கிடைக்கும் ஆறுதலைப்போல

    அவசரத்தில் நமக்குக்கிடைக்கும் உதவிக்கரம் போல

    முகவரியைக்கையில் வைத்துதக் கொண்டு இடம் தேடித் தடுமாறும் போது எப்படியோ வழிகாட்டும் ஒரு வழிகாட்டியைப்போல

    ஒரு இயல்பான நூல்..

    கவிஞரின் அடுத்த நூல் துயரங்கள் களையப்பட்ட தேசத்தின் மக்கள் விடுதலை பெற்ற வாழ்வின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கும் நூலாக வெளிவர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    கவிஞரின் கவிதையியல் மென்மேலும் வளர வாழ்த்தி விடை பெறுகிறேன்.

    நிந்தவுர் ஷிப்லி
    உதவி விரிவுரையாளர்
    தென்கிழக்குப்பல்கலைக்கழகம்
    இலங்கை
    Last edited by mannar amuthan; 03-02-2010 at 05:48 AM.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •