கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஹைட்டி நாட்டை இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் சாலைகளில் அநாதையாக கிடப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஹைட்டி தலைநகர் போர்ட்-அ-பிரின்ஸில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதற்கு முன்பாக தனது அமெரிக்க நண்பர்களுக்குப் பேசிய கத்தோலிக்க சேவை மையத்தின் பிரதிநிதி, “இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி குறைந்தது ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும்” எனக் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

போர்ட்-ஆ-பிரின்ஸ் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.