நிலவென்றொரு பெயர்
தமிழுக்கு உண்டாம்;

நிலவின் தன்மையும்,
தமிழின் இனிமையும்,
நிழலாய் நல்லொழுக்கமும்,
நீங்காத நகையுணர்வும்
நிலைகொண்ட உனக்கிட்டேன்,
அப்பெயரினை, அன்பு மகளே!

வெண்ணிலா!

சொல்லவும் உன்பெயர் வெல்லமடி!
உன் உள்ளமோ,
பாசத்தின் வெள்ளமடி!

என்னைத் தாயாக்கிய பெண்ணே,
நீயும் தாயாகிறாய்,
என்னைத் தாலாட்டும் தருணங்களில்!

கணினிப்பாடம் கற்பிக்கிறாய் எனக்கு,
கண்டிப்பான ஆசிரியையாய்!

கணிதம் கற்றுக்கொள்கிறாய் என்னிடம்,
கவனம் சிதறா மாணவியாய்!

தலைவலித்தைலம் தடவும்
தளிர்விரல்களில் காண்கிறேனடி,
உன்னை ஓர் தாதியாய்!

குழம்பிய மனநிலையிலும்,
குமுறி அழும்போதும்,
இதமாய் அணைத்து, கண்ணீர் துடைத்து,
இதுவும் கடந்துபோகுமென்றே
ஆறுதல் சொல்கிறாய்,
அனைத்தும் அறிந்த தோழிபோல்!

பிறர் என்னைப் பரிகசித்தாலும்
பொறுக்கமாட்டாமல்
பாய்ந்தெழுகிறாய், என்
பாதுகாவலனென பதவியேற்று!

சுட்டித் தனம் செய்யும்
குட்டித்தம்பியிடம்
அம்மாவை வருத்தாதேயடா என்று
அவ்வப்போது அறிவுரைக்கும்
ஆசானாகவும் ஆகிறாய்!

பள்ளியிலே சிறப்புற்று
பெற்றவரை முன்னிறுத்தி
பெருமிதத்தில் எனையாழ்த்தி
பெற்ற பலனைப் பெறச்செய்கிறாய்!

'இவளல்லவோ பெண்!' என்று
அத்தனைப் பேரும் உரைக்கக்கண்டு
பெறுகிறேனடி, பெண்ணே,
உன்னால் பேரின்பம்!

இத்தனையும் செய்துமுடித்தபின்
போனால் போகிறதென்று
ஒருநாளுக்கு ஓராயிரம் முறை
அம்மா, அம்மா என்றழைத்து,
என் செல்ல மகளுமாய்
வலம் வருகிறாய்!

எங்கிருந்தோ வந்தான்,
பாரதிக்கோர் கண்ணன்;
என் வயிற்றில் வந்துதித்தாய்,
எனையாள்கிறாய் உன் அன்பால்!

பதினாறாம் ஆண்டில்
பாதம் பதிக்கும் உனக்கு
பதினாறு பேறும்
தவறாமல் சேரும் என்றே
வாழ்த்துகிறேன் கண்ணே!
பாசப்பைங்கிளியே!
பல்லாண்டு நீ வாழி!