அன்பார்ந்த இனிய தமிழ்மன்ற நட்புள்ளங்களே!

நான் இங்கே அறுசீர் மண்டில வடிவில் எழுதும் விடுகதைகளை எந்த விடுகதை நூலிலிருந்தும் எடுத்து எழுதவில்லை.

நெடுநாட்களாக விடுகதைகளைப் பல பெரியவர்களிடமிருந்தும் உறவுகளிடமிருந்ததும் கேட்டறிந்து குறித்து வைப்பதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

என் அன்பிற்குரிய காலஞ்சென்ற (தமிழறிந்த) தாய்மாமன் ஒருவர் விடுகதையை அறுசீர்மண்டில வடிவில் தருவது குறித்து எனக்கு அறிமுகப் பயிற்சி அளித்திருந்தார்.

அதைக் கொண்டே இங்கு விடுகதை எழுதிப் பழகிக் கொண்டிருக்கிறேன்.

இவ் விளக்கத்தையே, விடுகதை நூலின் பெயர் உரையாளர் பற்றி வினவிய அன்பு நண்பர் ஆதி அவர்களுக்கும் தெரிவித்தேன்.

இப்போது, அனைவரும் அறிய கூறிவிட்டேன்.
நன்றி.

இனி,

அடுத்த விடுகதை :

பவழவாய் திறந்துவிடை பகருவாயே!


கட்டிகளம் போர்புரியும் வீரனில்லை!

கடந்திடுமே இருவாழ்க்கை பெண்ணுமில்லை!

திட்டமுடன் இதைவளர்ப்பார் பிள்ளையில்லை!

தெள்ளருளில் நமைவளர்க்கும் தாயுமில்லை!

விட்டும்உயிர் விலங்கொன்றின் உணவுமாகும்!

வீணானால் மக்களைப்போல் பதருமாகும்!

பட்டழகு நல்லெழிலிப் பாவையேஉன்

பவழவாய் திறந்துவிடை பகருவாயே!