உலகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று திரையிடப்படும் ஆதவன் திரைப்படத்தை ஒருநாள் முன்னதாகவே பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.



பாடல்கள் ஏற்கெனவே ஹிட்.. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகள்.. அத்துடன் சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள் பின் மன்னிப்பு.. நயனின் பிரபுதேவா காதல் சர்ச்சை..மாபெரும் வெற்றி பெற்ற தசாவதாரத்துக்குப் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்..குருவி பறக்காமல் மடங்கியபிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்ற படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களும் போட்டிக்கு வராமல் வேட்டைக்காரன் பின்தங்கியதால் ஏற்பட்ட வாய்ப்பும் ஆதவனை அசைக்க முடியாதவனாக மாற்றும் என்று பரவலாக நம்பப்பட்டது.

எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

ஏற்கெனவே கதை ஓரளவு கசிந்திருந்தது.. சூர்யா பணத்துக்காக கொலை செய்யும் ஒரு அடியாள்.சரோஜாதேவி,நயன்தாரா குடும்பத்துக்குள் ஒரு கொலை செய்ய நுழைந்து காதல்வயப்பட்டு பின் மனம் மாறுவது தான் கதை என்று தகவல்கள் சொல்லியிருந்தன.கொஞ்சம் கூட மாறுபடாமல் அப்படியே கதை..

கதை ரமேஷ் கண்ணாவுடையது.. அவர் இளையமான் என்ற கோமாளிப் பாத்திரத்திலும் வந்து சிரிக்கவைக்கிறார்.. (இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம்)

திரைக்கதை மற்றும் வசனம் கே.எஸ்.ரவிக்குமார்..

சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.

பட்டப் பெயர்கள் எதுவும் இல்லாத ஹீரோ என்ற நல்லபெயர் சூர்யாவிற்கு இருக்கும்போதிலும்,சிறுவயது சூரியாவின் புகைப்படங்கள் முதல் ஜோ-சூரியா அவர்கள் மகள் தியா உள்ள புகைப்படம் வரை காட்டி அவர் பெயரை காண்பிப்பது வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ..

நயன்தாரா,வடிவேல் ஆகியோருக்கும் அவர்களுடைய வழமையான ரசிகர்கள்..

Action திரைப்படம் என்பதை எழுத்தோட்டத்திலேயே அழுத்தமாக நிரூபிக்க முயன்றுள்ளார் இயக்குனர்.

படத்தொகுப்பு டோன்மாக்ஸ். பல இடங்களில் இவர் கைவண்ணம் மினுங்கினாலும் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.

சூர்யாவின் உடல் மொழிகளும்,முக பாவனைகளும் அசத்தல்.கட்டுமஸ்தான உடல் கம்பீரத்தை அள்ளித் தருகிறது.எனினும் அயனின் பாதிப்பு நிறையவே..இதனால் சில காட்சிகளில் ஏற்கெனவே பார்த்த அசதி..

அந்த அசதியைப் போக்கி திரைப்படத்தோடு இறுதிவரை எங்களை ஒட்டி,ஈர்க்க செய்பவர் வடிவேலு..நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதையோடு ஒட்டி வரும் வகையில் வைகைப் புயலடிக்கிறார்.

பல இடங்களில் வடிவேலு தன்னை மட்டுமே பார்க்கும் விதத்தில் centre of attractionஐ எடுத்துக் கொள்கிறார்.

சூர்யாவும் அவரும் சேர்ந்து சிரிக்கவைத்த அத்தனை இடங்களும் தீபாவளிப் பட்டாசுகள்.
பார்த்தீபனிடம் படும் அவஸ்தையை விட வடிவேலு அதிகம் பட்ட அவஸ்தை இந்த ஆதவனிலாகத் தான் இருக்கும்.
அந்தளவுக்கு சூர்யா மிரட்டுவதும் வடிவேலு மடங்கி அடங்குவதும் ரசனை மிகுந்த சிரிப்பு வெடிகள்..

பாலம்,வெடிகுண்டு,வீடியோ என்று தினுசு தினுசாக வடிவேலு மாடிக் கொள்வது புதுசு..
கிட்டத் தட்ட படத்தின் இரண்டாவது நாயகன் வைகைப் புயல் தான்..


நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..
எந்த உடையிலும் அழகாக நயனின் உடல்.. பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது..(இவ்வளவுக்கும் அநேகர் பள்ளி சிறுவர்கள்.. பிரபுதேவாவில் தப்பில்லை..அவரென்ன முனிவரா? )

உடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது? கவலை? பதற்றம்? அளவுக்கதிக வேலை?

சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது.

நயன்தாராவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு பாட்டில் குழுவோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்.. அடடா.. சிவாஜி,எம்.ஜி.ஆரின் ஆவிகள் பார்த்தாலும் ஆசைகொள்ளும். அதே கை,கண் அசைவுகள் தான் ரொம்பவே ஓவர்..
சரோஜாதேவியின் அளவுக்கதிக பூச்சலங்காரங்களைக் கலாய்க்கிறார்கள்.

காலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம். மனிதரின் கண்களும் பேசுகின்றன.படத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர்.

ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்..

நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தபாபு.. பாடும் வானம்பாடியிலும் பின் புது வசந்தத்திலும் அசத்திய அந்த டிஸ்கோ கலைஞனா இந்தளவு வயக்கெட்டுப் போய் வில்லனாக?
போதை எவ்வளவு கொடியது??

கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே நட்சத்திர அணிவகுப்பு என்பது போலே இதிலும் அனுகாசன், பெப்சி விஜயன்,ரியாஸ்கான், அலெக்ஸ், மனோபாலா, சத்யன் என்று வருகிறார்கள்..
சிலருக்கு மனதில் ஓட்டும் பாத்திரங்கள்..

வில்லன் ராகுல் தேவ் மிரட்டுகிறார்.. ஆனால் பெயரும்,பேசும் தமிழும்.கொல்கத்தவோடு ஒட்டவில்லை என்பது உறுத்தல்..

கே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..

ரெட் ஜெயண்டோடு இணைந்ததோ என்னவோ குருவி போல பறக்க பல இடங்களில் சூர்யாவும் ஆசைப்பட்டுள்ளார். பொருந்தவில்லை..
அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?

கட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. துப்பாக்கிக் குண்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தோளில் குண்டடி தாங்குகிறார்.. கயிற்றிலே ஹெலிகொப்டர் வரை சென்று ஆகாய சாகசம் புரிகிறார்..குருவி பரவாயில்லை..
ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ?

சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம்.காட்சியமைப்பிலும் ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.

எனினும் முதல் பாதியில் டம டமவைத் தவிர மற்றைய இரு பாடல்களும் சுமார் ரகமே.. மூன்று ஹிட் பாடல்களுமே பிற்பாதியில் வருவது கதையோட்டத்தை இழுக்கிறது.

சண்டைக் காட்சிகள்,துரத்தும் காட்சிகளில் கனல் கண்ணன்,பிரெஞ்சு சண்டைக் கலிஞர் ஆகியோருக்கு ஈடு கொடுக்கிறது ஹரிஸ் ஜெயராஜின் இசையும்..

வடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.

எல்லாத் திருப்பங்களையும் எளிதில் யூகிக்கக் கூடியளவுக்கு பலவீனமான திரைக் கதை. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவேண்டுமென்று அவசரப்பட்டிருப்பது தெரிகிறது.

கமலோடு செய்த வித்தியாச முயற்சிகளை சூர்யாவோடு செய்யப்போய் சூடுபட்டுள்ளார் இயக்குனர்.

பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா?)
எரிச்சலும் வருகிறது. பொருந்தவில்லை.

பல கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பல்..
ஹொவ்ரா பாலம்,குளுமையான இயற்கைக் காட்சிகள்,பணத்தைக் கொட்டிஎடுத்த பாடல் செட்கள் என்பனவற்றை ஒளிப்பதிவாளர் சரியாக செய்தும் இவ்வாறான குளறுபடி கிராபிக்சினால் சில காட்சிகள் படுத்து விடுகின்றன.

சில வசனங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை..

ஆரம்பத்தில் குழந்தைகளைக் கடத்திக் கொன்று உடல்பாகங்களை விற்பனை செய்யும்(நோய்டா விவகாரம்) கும்பல் பற்றி ஆராயவரும் நீதிபதியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சூடாகி நீதிபதி(முரளி) வழங்கும் பதில்களும் நடிகர்-பத்திரிக்கையாளர் விவகாரத்தின் பாதிப்பா?

(உன்னைப் போல பத்திரிகையாளர்களால் தான்யா எல்லாருக்கும் கெட்ட பெயர்.. எப்பிடி வேணாலும் கேள்வி கேப்பீங்களா? silly question)

வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..

ஆனாலும் எந்தவொரு இரட்டை அர்த்த வசனமும் இல்லாததால் பாராட்டுக்கள் வசனகர்த்தா ரவிக்குமாருக்கு..

நயன்தாராவின் கவர்ச்சியும் கல கல குடும்ப சூழலில் கொஞ்சம் மறைந்துவிடுகிறது..குடும்பப் பட்டாளங்களும் கலர்புல் பாடல்களும் ஹிந்தி படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஆபாசமில்லாத படம் என்பதால் குடும்பங்களோடு ரசிக்கத் தடையில்லை.. (மாசிலாமணியும் அப்பிடித் தானேங்கோ??)

இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..

தனது வழமையான பாணியில் இறுதிக் காட்சியில் வந்து கலகலக்க வைக்க முயன்றுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.. அவருடன் தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..

சிரிக்கவைக்கும் நடுப்பகுதி இருந்தாலும் வடிவேலுவும் பாடல்களும்,சூர்யாவின் துடிப்பும் இல்லாவிட்டால் ஆதவன்.. இயலாதவன்..

கலைஞர் டிவி புண்ணியத்தில் நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்..
ஆனால் சூர்யாவின் 'திறமையான,மாற்று வழியில் வரும்' நடிகர் பெயர் காலி..

குருவியைத் தயாரித்த நிறுவனம் குடும்ப பூச்சு,காமெடி நெடி பூசி பறக்கவிட நினைத்துள்ள மற்றொரு குருவி???

ஆதவன் = குடும்பம்+காமெடி+குருவி??


நன்றி : A.R.V.லோஷன்