இன்று விடிகாலை மிதமான மழை பெய்திருந்தது
------------------------------------------

குளித்துத் தலை உதறிய
ஈரத்துடன் நின்றிருந்தன
புளியமரங்கள்

இரவைப் பிழிந்து கொட்டிவிட்டபடி
பளீர் தார்ச்சாலை

“வாங்க பாஸு” டீ மாஸ்டரின்
சந்தோசம் என் மீதும் தெறித்தது

மொறுமொறுப்பான மசால்வடைகள்
தின்ன அழைத்தன ஐந்து மணிக்கே

நான்கு மணிக்கு வீட்டில்
விளக்கு எரிந்தது பற்றி
நக்கல் பேசி இருந்தனர்
பேருந்துக்குக் காத்திருந்த
தினக்கூலிகள்

போர்வையை பிழியாமல் உதறியபடி
கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே
பிச்சைக்காரர்கள்

சாந்தமாய் அசைபோட்டுகொண்டிருந்தன
பொதிகாளைகள்

எப்போதும் குரைக்கும்
குட்டிநாயோடு சேர்ந்து
வாக்கிங் பெண்ணும் குறுநகை
புரிந்தாள்

இன்று விடிகாலை
மிதமான மழை பெய்திருந்தது

மகளிர் மட்டும்
---------------

தெருமுனை
மருந்துக்கடையில்
பு*திதாக வேலைக்கு
வந்திருந்தாள்
இளம்பெண்ணொருத்தி.
அப்போதுதான் கவனித்தேன்.
அதுவரை இல்லாத
குழப்பமும் தயக்கமும்
குடிவந்தது.
ஆணுறை பாக்கெட்
வாங்கச் சென்றவன்
தேவைப்படாத
தலைவலி மாத்திரையொன்றை
வாங்கிக்கொண்டு
அடுத்த தெரு மருந்துக்கடைக்கு
நகர்ந்தேன்.
இடையில் ஒருத்தி
அடுத்த தெருவிலிருந்து
இந்தக்கடை நோக்கி வந்தாள்.
இதுவரை இல்லாத
அன்னியோன்னியமாய்
அவர்கள் பேசிக்கொண்டார்கள்.
என்னவென்றுதான் தெரியவில்லை


uyirmmai.com