Results 1 to 9 of 9

Thread: பெண்கள் - தனிமை

                  
   
   
 1. #1
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,087
  Downloads
  15
  Uploads
  4

  பெண்கள் - தனிமை

  வெளியானது - ஆனந்தவிகடன்
  எழுதியவர் - எஸ்.ராமகிருஷ்ணன்
  -------------------------
  இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டேன். கலந்துரையாடல் நிகழ்வின்போது ஒரு மாணவி, 'எது உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமல் போகிறது?' என்ற கேள்வியைக் கேட்டாள். எளிமையான கேள்வி. ஆனால், அதற்கான பதில் எளிதானது இல்லை. 'நிகழ்வின் முடிவில் சொல்கிறேன்' என்றபடியே, 'எது உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போகிறது?' என்று எனக்குள்ளாகவே தேடிக்கொண்டு இருந்தேன். வேறு கேள்விகள்... வேறு பதில்கள் என்று உரையாடல் தொடர்ந்தபோதும் மனதில் அந்தக் கேள்வி ஆழமாகத் துளையிட்டுக்கொண்டே இருந்தது. சட்டென அதற் கான பதில் மனதில் தோன்றி மறைந்தது.

  'உலகில் அதிகம் புரிந்துகொள்ளப்படாமலே போவது, திருமணமாகி 10 வருடங்களான பிறகுபெண் ணுக்குள் உருவாகும் தனிமையும் வெறுமையுமே!' என்றேன். யாரோ ஓர் ஆசிரியை வெகு அவசரமாகக் கைதட்டிப் பாராட்டினார். கணவன், குழந்தைகள், வீடு என்றிருந்தபோதும் தான் எதையோ இழந்து விட்டதைப் போலவும், தான் நினைத்தது போல வாழ்க்கை அவ்வளவு சுவாரஸ்யமானது இல்லை என்றும் பெண்கள் உணரும் தருணம் உருவாகிறது.

  அப்போது குழந்தைகளைக் கவனிப்பது, சமைப்பது, கணவனோடு படுக்கையைப் பகிர்வது உள்ளிட்ட யாவும் அனிச்சைச் செயல்களாகிவிடுகின்றன. மனது எதற்கோ ஏங்கத் துவங்குகிறது. அன்றாட வாழ்வு அபத்தமானதாகவும், அர்த்தமற்ற செயல் ஒன்றினைத் தொடர்ந்து செய்துவருவதைப் போலவும் உணரத் துவங்குகிறது. இதைப்பற்றி யாரிடமும் பேசிக்கொள்வதும் இல்லை. தன்னை மீறி அந்த மன அவஸ்தைகளை வெளிப்படுத்தும்போதுகூட அது தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிறது.

  காற்று போய்விட்ட பலூன் சுருங்கிக்கிடப்பது போல மனது வாடிக்கிடக்கிறது. எதிலும் விருப்பம் இல்லை. அந்த நாட்களும் தனிமையும் விசித்திரமானவை. பிள்ளைகளோ, கணவனோ அதைக் கவனம்கொள்வதும் இல்லை. புரிந்துகொள்வதும் இல்லை. நீர்க்குமிழிகளைப் போல சின்னஞ்சிறு ஆசைகள் மனதில் கொப்பளிப்பதும் உடைவதுமாக இருக்கக்கூடிய நாட்கள் அவை.

  உண்மையில், திருமணம் தரும் கிளர்ச்சிகளும் கனவுகளும் எளிதில் வடிந்துவிடக்கூடியவை. அதன் பிறகு நீளும் நடைமுறை வாழ்க்கையை உரசல் இல்லாமல் கொண்டுபோவதற்கு சகிப்புத்தன்மையும், விட்டுக்கொடுத்தலும், வழியின்றி ஏற்றுக்கொள்ளுதலுமே சாத்தியங்களாக உள்ளன. இதில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை.

  எனக்குத் தெரிந்த நண்பரின் வீட்டில், அவரது மனைவி ஒருநாள் இரவு, தான் கன்னியாகுமரி போய் வருவதாக ஒரு தாளில் எழுதிவைத்துவிட்டு, தனியே புறப்பட்டுப் போய்விட்டாள். யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. திருமணமாகி 15 வருடங்களில் அவள் தனியே எங்கும் போனது இல்லை. அவளது அம்மா வீட்டுக்குப் போவதாக இருந்தால்கூட நண்பர் கூட்டிக்கொண்டு போய்வருவார். ஆனால், திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் ஒரு துண்டுச் சீட்டை எழுதிவைத்துவிட்டு கன்னியா குமரி புறப்பட்டுப் போய்விட் டாள்.

  என்ன கோபம்... எதற்காகப் போனாள் என்று வீடே பதற்றம்அடைந்தது. ஆனால், எங்கே தங்கி இருக்கிறாள்... எதற்காகப் போனாள் என்று புரியாமல், நண்பர் தன் குழந்தைகளைச் சகோதரி வீட்டில் ஒப்படைத்துவிட்டு, உடனே தானும் கிளம்பி கன்னியாகுமரி சென்று அவளைத் தேடினார். கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஓர் அதிகாலையில் அவள் திரும்பி வந்து வழக்கம் போலத் தனது அன்றாட வேலைகளைக் கவனிக்கத் துவங்கிவிட்டாள். நண்பருக்குக் கோபமான கோபம்.

  எதற்காகப் போனாள். ஏன் சொல்லிக்கொண்டு போகவில்லை என்று ஆயிரம் கேள்விகள் கேட்டபோது, அவளிடம் இருந்து வந்த ஒரே பதில், 'சும்மாதான்!'. அந்தப் பதில் அவருக்குத் திருப்தி தரவில்லை. அவளுக்குத் திமிர் ஏற்பட்டுவிட்டதாகக் குற்றம் சாட்ட ஆரம்பித்தார். காரணம் இல்லாமல் தொடர்ந்து சண்டையிட்டார். அந்தப் பெண், 'எனக்கு ரெண்டு நாள் தனியா இருக் கணும்னு தோணிச்சு, போயிட்டு வந்தேன். அதில் என்ன தப்பு?' என்று பதிலுக்குத் தானும் கத்தி னாள்.

  'பிள்ளைகளை விட்டுவிட்டு எப்படி உன்னால் போக முடிந்தது?' என்று கேட்டதும், 'நீங்க எத்தனை தடவை டூர் போயிருக்கீங்க? அப்போ எல்லாம் இந்தப் பிள்ளைகள் நினைவு ஏன் வரவில்லை?' என்று கேட் டாள். அவரிடம் இதற்கான பதில் இல்லை. இந்தச் சண்டை சில மாதங்கள் தொடர்ந்தன. அந்தப் பெண் கடைசி வரை கன்னியாகுமரிக்கு எதற்காகச் சென் றேன் என்றோ, அங்கே எங்கே தங்கினாள், என்ன பார்த்தாள் என்றோ யாரிடமும் சொல்லவே இல்லை.

  இதைப்பற்றி என்னிடம் நண்பர் விவரித்தபோது, 'தனிமையை அனுமதியுங்கள், புரிந்துகொள்ளுங்கள். முடிந்தால் விருப்பத்தின் பாதையில் நடமாட ஒத்து ழைப்புத் தாருங்கள்' என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

  அந்தப் பெண்ணின் தீராத அகத் தனிமையும் வெறுமையும் எளிதில் புரிந்துகொள்ளப்பட முடியாதது. திருமணத்தின் பிறகு பெண்கள் தங்கள் இயல்பில் இருந்து பெரிதும் துண்டிக்கப்பட்டுவிடுகிறார்கள். வீடு பாதுகாப்பானது என்ற உணர்வைத் தந்தபோதும் அது போதுமானதாக இல்லை. அதே நேரம், சமூகம், கலாசாரம், பண்பாடு என்ற கட்டுப் பாடுகள் காரணமாக, அவர்களது எளிய விருப்பங்கள்கூட மறுக்கப்படுகின்றன.

  ஒவ்வொருவரும் தனிமையை ஒரு விதத் தில் கரைத்துக்கொண்டுவிடுகிறார்கள். கன்னியாகுமரிக்குச் சென்ற பெண்ணின் தனிமை ஒருநாளில் உருவானதில்லை. அது சொட்டுச் சொட்டாக ஊறிப் பீறிட்டுஇருக்கிறது. அந்த ஒருநாள் அவளது வாழ் வில் தனித்துவமானது. அந்த நாளில் அவள் தனியள். அதிகாலைச் சூரியனின் முன்பாக நின்றபடியே, அவள் என்ன நினைத்துஇருப்பாள்? கடற்கரை மணலில் தனித்து அமர்ந்து இருந்தபோது எந்த நினைவில் தன்னைக் கரைத்துக்கொண்டு இருப்பாள்? அப்போது அவள் யார்? தாய், மனைவி, நடுத்தர வயதுப் பெண் என்று தன் மீது படிந்த எல்லா அடையாளங்களில் இருந்தும் அவள் விடுபட்டு, தன் இயல்புக்குத் திரும்பி இருக்கக்கூடும்.

  கணவன், குழந்தைகளுடன் பயணம் செய்வதை விரும்புவதைப் போலவே தன்னோடு படித்த தோழிகள் மற்றும் தனக்கு விருப்பமான தோழமையுடன் பயணம் செய்வதற்குப் பெண் உள்ளூர ஆசைப்படுகிறாள். அது இயல்பானது. ஆனால், எளிய இந்த விருப்பம் ஒருபோதும் நிறை வேறுவது இல்லை.

  ஐந்து வருடங்களுக்குப் பிறகு தற்செயலாகச் சந்தித்த கல்லூரி நண்பனுடன் சேர்ந்து குடிக்கச் செல்வதில் ஆண் காட்டும் விருப்பம், அவனது மனைவியோடு பள்ளி முழுவதும் படித்த தோழியைத் தற்செயலாக மனைவி வழியில் சந்திக்கையில், அவளோடு சேர்ந்து ஒரு தேநீர் அருந்தக்கூட அனுமதிக்காதது என்ற நிலைதான் உள்ளது.

  ஒரு பெண்ணின் கடந்த காலத்தை முற்றிலும் அழித்துவிட்டு, அவளது நினைவுகள் முழுமையையும், கணவன், குடும்பம், பிள்ளைகள் என்று மட்டும் நிரப்புவது அடக்குமுறை இல்லையா?

  போர் முனை என்ற ஜெர்மானியக் குறுநாவலில் ஒரு தாய். அவளுக்குத் தன் மகனை யுத்த முனைக்கு அனுப்ப விருப்பம் இல்லை. பதின்வயதில் இருக்கிறான். இன்னும் உலகம் தெரியவில்லை. இவனைப் போருக்கு அனுப்ப முடியாது என்று தாய் மறுத்துவிடுகிறாள். ஆனால், தாய் இல்லாத நேரத்தில் தகப்பன் தன் மகனிடம், 'நீ யுத்தக் களத்தில் சண்டையிட்டு வீரனாகச் செத்துப் போ!' என்று அவனை ஒரு குதி ரையில் ஏற்றி அனுப்புகிறார். மகனைக் காணாமல் தேடுகிறாள் தாய். மகன் குதிரையில் ஏறிப் போனதை அறிந்து துரத்தி ஓடுகிறாள். புல்வெளியில் குதிரை வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதைத் துரத்தி ஆவேசத்துடன் ஓடுகிறாள்.

  சரிவில் குதிரை இறங்கும்போது தாவி ஒரு கையால் குதிரையைப் பிடித்து நிறுத்தி, மகனைத் தன் னோடு வரும்படி சொல்கிறாள். மகன் பயந்துவிடுகிறான். தன் தாய் குதிரையைவிட வேகமாக ஓடி வருவதை, ஒரு கையால் ஆவேசமான குதிரையைப் பிடித்து நிறுத்தியிருப்பதைக் கண்டு, 'அம்மா! உனக்குள் இவ்வளவு சக்தி இருக்கிறதா? உன்னைச் சமையல் அறையில் பார்த்தபோது பூனை போல இருந்தாயே?' என்று கேட்கிறான்.

  'அப்பா என்னை அப்படி மாற்றிவைத்திருக்கிறார். உண்மையில் நான் தனியே குதிரைச் சவாரி செய் யவும், ஓடும் ஆற்றில் தனியே நீந்தவும் தெரிந்தவள். 15 வயது வரை அப்படித்தான் இருந்தேன். உன் அப்பாவைத் திருமணம் செய்துகொண்ட பிறகு, இத்தனை வருஷங்களில் ஒருநாள்கூட நான் நீந்துவதற்கு வெளியே செல்லவோ, தனியே குதிரையேறிப் போகவோ இயலவில்லை. என் பலம் எனக்கே மறந்து போயிருந்தது. இன்று உன்னை இழந்துவிடக் கூடாது என்ற ஆசையில் என் பலம் எனக்குள் பெருகியோடியது. என்னை நான் மறந்து போயிருந்ததை ஓடி வரும் நிமிடங்களில் உணர்ந்தேன்' என்கிறாள்.

  இந்த உண்மை ஜெர்மனியப் பெண்ணுக்கு மட்டு மில்லை; பெரும்பான்மை இந்தியப் பெண்களுக்கும் பொருந்தக்கூடியதே. நீச்சல் வீராங்கனையாகப் பரிசு வென்ற பெண், திருமணம் ஆனதும் அதை மறந்து வீட்டின் குளியலறைக்குள் அடைபட்டுவிடுகிறாள். கூடைப்பந்து ஆடத் தெரிந்த பெண் கல்யாணம் ஆன பிறகு, பந்தை தொடக்கூட மறந்துவிடுகிறாள். என்ன பேதம் இது? எதற்காக இந்த ஒடுக்குமுறை? விலக்கல்? இரண்டாம் பட்ச மனப்போக்கு?


  1991-ம் ஆண்டு ரிட்லி ஸ்காட் இயக்கி ஹாலிவுட் டில் வெளிவந்த 'தெல்மா அண்ட் லூயி' (ஜிலீமீறீனீணீ & றீஷீuவீsமீ) என்ற படம் பெண்களின் தீராத அகத் தனிமையைப் பற்றியது. ஜுனா டேவிஸ் நடித்த இந்தப் படம், அன்றாட வாழ்க்கை போரடித்துப்போன இரண்டு இளம் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறி, தங்கள் விருப்பத்தின் பாதையில் சில நாட்கள் செல்லும் பயணத்தையும் அதில் அவர்கள் அடையும் எதிர்பாரா மையையும் பற்றியது.

  லூயி, காபி ஷாப் ஒன்றில் வேலை செய்கிறாள். அவளது தோழி தெல்மா. இருவருக்கும் வாழ்க்கை அலுப்பூட்டுகிறது. தெல்மாவின் கணவன் மிகக் கண்டிப்பானவன். அவனது அடக்குமுறை தன்னை மூச்சுத்திணறச் செய்வதாகச் சொல்கிறாள். இந்த நெருக்கடியில் இருந்து விடுபட்டு, இருவரும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

  இவர்கள் நினைத்தது போல அது சந்தோஷமான பயணமாக அமையவில்லை. பெண்ணாக இருப்பதால் உடல்ரீதியான வன்முறையை எதிர்கொள்கிறார்கள். தற்காத்துக்கொள்ள வழி தெரியாமல் சுடுகிறார்கள். போலீஸ் துரத்துகிறது. தப்பி ஓடுகிறார்கள். சட்டென அவர்கள் இயல்பு வாழ்க்கை திசைமாற்றம்கொண்டு, விபரீதத் தளங்களில் செல்லத் துவங்குகிறது. முடிவு இல்லாத சாகசத்தின் பாதையில் அவர்கள் காரில் பயணிக்கிறார்கள். முடிவில் அவர்களைக் காப்பாற்ற அவர்களாலும் முடியவில்லை.

  தெல்மாவும் லூயியும் மத்திய வயதுப் பெண்கள் அடையும் வெளிப்படுத்த முடியாத அக நெருக்கடியின் இரண்டு மாறுபட்ட வடிவங்கள். அவர்கள் தங்கள் அடையாளங்களை மீட்கவே போராடுகிறார்கள். உலகம் அவர்களை பகடைக்காய்களைப் போல உருட்டி விளையாடுகிறது. தங்கள் வயதுக்கு மீறிய அலுப்பைத் தாங்கள் அடைந்துவிட்டதாக இருவருமே ஓர் இடத்தில் சொல்கிறார்கள். அது அவர்கள் இருவ ரின் குரல் மட்டுமில்லை. அது மத்திய வயதை அடைந்த பெரும்பான்மை பெண்களின் அகக் குரலே!

  தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் நம்மை அடுத்த நூற்றாண்டை நோக்கிக் கொண்டுசெல்லும்போது நம் கலாசார, சமூகத் தடைகள் 100 வருஷம் பிந்திய மனப்போக்கைத்தான் நமக்குள் வைத்திருக்கிறதா? இந்தக் கேள்விக்குத் தேவை பதில் இல்லை. புரிந்துகொள்வது மற்றும் நடைமுறைச் செயல்மாற்றங்களுமே தேவைப்படுகின்றன. அது ஒன்றே இதற்கான எளிய தீர்வு!
  Last edited by அறிஞர்; 23-09-2009 at 06:30 PM.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
  Join Date
  17 Apr 2003
  Posts
  7,901
  Post Thanks / Like
  iCash Credits
  17,030
  Downloads
  62
  Uploads
  3
  சிறப்பான பகிர்வுக்கு நன்றி அறிஞரே.

  இருமுறை பதிவாகி இருக்கிறது. கவனியுங்கள்.

 3. #3
  மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
  Join Date
  23 Dec 2008
  Location
  ஆஸ்திரேலியா
  Age
  49
  Posts
  7,283
  Post Thanks / Like
  iCash Credits
  97,876
  Downloads
  21
  Uploads
  1
  பெண்களுக்கு திருமணம் என்ற ஒன்று பல புதிய கதவுகளைத் திறக்கிறது; திறந்திருக்கும் பழைய கதவுகளை அடைக்கிறது. அவ்வாறு அடைபடும் கதவுகளில் நட்பும் ஒன்று. எழுதிய ராமகிருஷ்ணன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட அறிஞர் அவர்களுக்கும் நன்றிகள்.

 4. #4
  இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
  Join Date
  24 Dec 2008
  Location
  தற்பொழுது சென்னை
  Posts
  604
  Post Thanks / Like
  iCash Credits
  24,005
  Downloads
  112
  Uploads
  0
  நல்லதொரு பகிர்வு தோழரே நன்றிகள்...

 5. #5
  அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
  Join Date
  09 Jan 2009
  Posts
  1,560
  Post Thanks / Like
  iCash Credits
  13,255
  Downloads
  33
  Uploads
  0
  இந்தக் கட்டுரை மிகச் சரியானதே...

  வாழ்வின் எல்லை வரை வாழ்க்கை சுவாரசியமாக கொண்டு செல்ல ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கவேண்டும்...

  அந்த ஆதாரம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.... கணவன், குழந்தைகள், சுற்றுச்சூழல்....இப்படி.....

  இதில் சற்று தொய்வு ஏற்ப்படும் போது வாழ்க்கையும் தொய்வடைவது இயல்பே...

  அதுவும் பெண்ணின் மனநிலையைப் பொறுத்த வரை, சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூட அங்கிகாரம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்பார்கள்....

  அந்த எதிர்பார்ப்புகள் சில சமயம் ஏமாற்றங்களைத் தரும்.

  அப்படி கிடைத்த சின்னச் சின்ன ஏமாற்றங்கள் எல்லாம் ஒட்டு மொத்தமாக சேர்ந்து மனதில் "என்னடா வாழ்க்கை இது? இப்படி ஒரு வாழ்க்கை தேவைதானா நமக்கு?" என்ற வெறுமையான மனநிலைக்கு கொண்டுவந்துவிடுகிறது....

  அந்தச் சமயத்தில் ஆண்கள் அதை உணர்ந்து ஆறுதலாக பேசினாலே போதும். அந்த வெறுமை அவர்களை விட்டு பல மைல்களுக்கு அப்பால் ஓடிவிடும்...


  பகிர்தலுக்கு நன்றி அறிஞர் அண்ணா....அட இது கூட நல்லாத்தான் இருக்கே....
  முயற்சி என்பது மூச்சானால்
  வெற்றி என்பது பேச்சாகும்....

 6. #6
  இனியவர் பண்பட்டவர் மஞ்சுபாஷிணி's Avatar
  Join Date
  02 Aug 2009
  Location
  குவைத்
  Age
  52
  Posts
  980
  Post Thanks / Like
  iCash Credits
  10,695
  Downloads
  13
  Uploads
  0
  எத்தனை அருமையான பகிர்வு இது...

  எத்தனை சுயம் இழந்த பெண்கள் இதை படிக்கும்போது தானும் அந்நிலையில் இருப்பது போல் உணர்வது கட்டாயம்...

  கன்னியாகுமரி போறேன்னு சொல்லிட்டு போனவர் மேல் கோவம் மட்டுமே பட்டார் கணவர். பாவம் என்று தோணவே இல்லையே.. ஐயோ நைட் டைம் நம் மனைவி எப்படி எங்கே பஸ் கிடைக்காம அவஸ்தை படுகிறாளோ? என்ன மனதில் வருத்தமோ இப்படி எல்லாம் யோசிக்காமல் எப்போதும் ஒரே ரீதியில் மட்டுமே யோசிப்பதால் வரும் வினை இது. உண்மையே. தனிமை ஒரு சில சமயங்களில் தேவைப்படுகிறது....

  அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பரே....
  மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே: 7. #7
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  5,143
  Downloads
  32
  Uploads
  0
  உடனடியாக ராககிருச்ணண் அவர்களுக்கு பகில் தோன்றினாலும், ஆனால் அதுதான் புரிந்து கொள்ளப்படாமால் காலங்காலமாக இருந்து வருகிறது..இங்கு பகிர்ந்து கொண்ட அறிஞர் அவர்களுக்கு நணி
  (இருமுறை கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது.அதை நிக்குங்கள்.பதிவு நீன்டதாக தெரிகிறது.)

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  299,500
  Downloads
  151
  Uploads
  9
  எஸ்ரா அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் தளம் மகளிர் கல்லூரி வளாகமாக இருக்க வேண்டும்.

  குழந்தையாக இருக்கும் போது ஒருமாதிரி..

  கொஞ்சம் வளர்ந்த பிறகு இன்னொரு மாதிரி..

  பருவமடைந்த பிறகு வேறு மாதிரி..

  பருவம் கடந்த பிறகு இன்னும் வேறுமாதிரி..

  கல்யாணம் ஆனதும் ஒருமாதிரி.. தாயானதும் ஒருமாதிரி..

  என் தாய் தந்தையும் சரி.. உங்கள் தாய் தந்தையும் சரி இப்படி இல்லை என்று கூற முடியுமா..

  இதை எல்லாம் ஏற்கும் கட்டத்தில் நாங்கள் இல்லையா.. இருந்ததில்லையா.

  அப்படி இருக்க இல்லற மாற்றங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதேன்?

 9. #9
  இளம் புயல் பண்பட்டவர் பால்ராஜ்'s Avatar
  Join Date
  13 Apr 2009
  Location
  Logam
  Posts
  417
  Post Thanks / Like
  iCash Credits
  23,665
  Downloads
  8
  Uploads
  0
  அருமையான கட்டுரை..
  சிந்திக்க வைத்தது...
  ஆனால் அவளும் எப்போதாவது வாயைத் திறக்கலாமே என்றும் கேட்க வைத்தது..

  சில விஷயங்களில் தங்களைத்தாமே கட்டுப் பெட்டியாக வைத்துக் கொள்வதில் ஒரு அலாதியான இன்பமும் இருக்கக் கூடுமோ??
  பா.ரா.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •