19
கதிரவன் அவன் பெற்றோர் காதலி கயல்விழி மோகன், சுரேஷ் அனைவரும் டாக்டர் ரதீஸனின் வீட்டில் குழுமியிருந்தன். கதரிவனின் அப்பா சங்கீதா உணவகத்திலிருந்து அனைவருக்கும் பலகாரங்கள் தரவைத்திருந்தார். எங்கும் மகிழ்ச்சி மயம்.

கதிரவன் ரதீஸன் முன் நெடஞ்சாணிக்கிடையாக விழுந்து எழுந்தான். ரொம்ப நன்றி சார் எனக்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து மட்டுமல்லாமல் என்னுடைய வியாதியையும் குணப்படுத்திட்டீங்க. நீங்க மட்டுமில்லாட்டா என்ன ஆயிருக்கும்னே நினைச்சுப் பார்க்க முடியலை. உங்களுக்கு வாழ்
நாள் முழுசா கடமை பட்டிருக்கேன் என்றான் நெகிழ்ச்சியுடன்.

அடேடே அதக்கு நான் மட்டும் காரணமில்லைப்பா. அங்க பாரு சுரேஷ் கோர்டுக்கே போகாம திறமையா வெளியிலேர்ந்தே வழக்காடிய வக்கீல். பிரசுத்திற்கே அனுப்பாம தந்திரமா கதை எழுதிய மோகன், அப்புறம் கயல்விழியோட காதல் உன் மேல வைச்ச நம்பிக்கை உங்க அப்பா அம்மாவோட வேண்டுதல் இப்படி பல காரணங்களும் சேர்ந்து தான் இந்த சாதனையே என்றார் தன்னடக்கத்துடன்.

சார் நான் செஞ்சது ஒன்னுமே இல்லை. ஜஸ்ட் ஒரு திரி பிடிச்சு கொடுத்தேன், மோகன் சார் தான் அற்புதமா ஒரு கதையை எழுதினாரு. டாக்டர் தான் உங்களை குணப்படுத்த எல்லாம் முயற்சியும் செய்தாரு என்றான் சுரேஷ் அவன் பங்கிற்கு தன்னடக்கமாக.

மோகனும் இல்லை கதிரவன் அரசியல் பிரச்சனையின்னு சொன்னதும் நான் பயந்த்து என்னவோ உண்மைதான். ஆனால் சாதாரணமா கதை எழுதிகிட்டு இருந்த என்னை ஒரு மருத்துவ கதாரியனாக மாத்தினது இவங்க இரண்டு பேரும் தான் என்றான்.

கயல்விழியின் கைபிடித்தவாறு அமர்ந்திருந்த கதிரவன் அது சரி சார் இந்த மாதிரி அரசியல் பிரச்சனை வந்த்தும் பயந்து என்னை கைவிடாம எல்லாரும் சேர்ந்து போராடி என்னை காப்பாதிவிட்டதற்கு என்ன சொல்ல என்றான் நன்றியுணர்ச்சியுடன்.

அதெல்லாம் சரிப்பா முக்கியமான வேலையால நான் இன்னிக்கு கோர்டுக்கு வரமுடியலை என்ன நடந்த்துன்னு யாராவது சொல்லுங்களேன். எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு. நிஜ கொலையாளி யார். எப்படி நீங்க குணமானீங்க. நீங்க விடுதலையானதை அவங்க அந்த அரசியல்வாதிங்க எப்படி சுலபமா ஏத்துகிட்டாங்க. எனக்கு எல்லாம் சொல்லுங்க என்றார் ரதீஸன்.

ஹாஹா அதுக்குத்தான் ஒரு கதாசிரியரை கூட வச்சிருக்கோம்ல. அவரு சொல்வார் கதையை என்று சுரேஷ் மோகனை பார்த்து சமிக்கை செய்ய மோகன் வழக்கமான கதை சொல்லும் பாணியில் தொடங்கினான்.