Results 1 to 9 of 9

Thread: அச்சக்காடு

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4

    அச்சக்காடு

    அச்சக் காடு
    எழுதியவர் : கிருஷ்ணா டாவின்ஸி,
    ஆனந்த விகடனில் வெளியான சிறுகதை
    -----------------------------------------------


    கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது.

    படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி 'சில்-அவுட்' ஆகத் தெரிந்தது. அந்த நள்ளிரவிலும் கொழும்பு நகர வீதிகளில் எங்கோ ஒரு வாகனம் சக்கரங்களைத் தரை யுடன் தேய்த்தபடி செல்லும் ஓசை. ராணுவ வண்டியாக இருக்கக்கூடும். மகிந்தா ஃபிரிஜ் ஜைத் திறந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருகினார்.

    இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும். ராணுவ உடை அணிந்த, வரிசையான பிணங்களும் எழுந்து நின்று, 'நாங்கள் சாக வேண்டிய பருவமா இது?' என்று கேள்வி கேட்கும். அதற்காகவே, அவருடைய கண்கள் மூட மறுக்கும். விடியற்காலையில்தான் உடல் அசதியில் கண்கள் மெள்ளச் செருகும். இரவு சரியாகத் தூங்காததன் விளைவு, அடுத்த நாள் முழுக்க எதிரொலிக்கும். எரிச்சல் கலந்த கடுமையான சில முடிவுகளையும் எடுக்கவைக்கும்.

    மகிந்தா மீண்டும் படுக்கையறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. 'மகிந்தா, நாம் கொஞ்சம் கதைப்போமா?'

    மகிந்தா திகைத்தார். உண்மையிலேயே அப்படி ஒரு குரல் கேட்டதா? அல்லது மனப்பிரமையா? பல பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, அந்தக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தார். எதுவும் விசேஷமாகத் தென்படவில்லை. அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

    'மகிந்தா, சோபாவில் பார், உனக்காக நான் அமர்ந்து காத்திருக்கிறேன்.'

    மகிந்தா சோபாவைப் பார்த்தார். அவர் ரத்தம் உறைந்தது. வெள்ளி நிற மெல்லிய ஒளிப் பின்னணியில் தகதகக்கும் தோற்றத்தில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அந்த உடல், முகம், தலைமுடி, எல்லாவற்றுக்கும் மேலாக, என்றுமே மறக்க முடியாத அந்தச் சிரிப்பு. இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

    ''ஓய மகிந்தா! நான்தான் லசந்த விக்ரமதுங்க... பத்திரிகை ஆசிரியன். உங்களுடைய பழைய நெருங்கிய நண்பன். பிற்காலத்தில் நீக்கப்பட வேண்டிய எதிரியாகவும் மாறியவன். என்னை அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்களை 'ஓய' என்று நம் சிங்களத்தில் உரிமையுடன் அழைக்கக்கூடிய ஒரு முன்னாள் நண்பனை அதற்குள் மறந்துவிட்டீர்களா மகிந்தா?'' என்றது புகையால் செய்யப்பட்ட அந்த உருவம்.

    மகிந்தாவுக்கு நா வறண்டது. கால்கள் நடுங்கின. ''லசந்த... நீ... நீயா? இது எப்படிச் சாத்தியம்? நீ இறந்துவிட்டாய் அல்லவா?''

    ''இறக்கவில்லை மகிந்தா. இறப்பு என்பது இயற்கையில் நிகழ்வது. நான் கொல்லப்பட்டேன். என் அலுவலகத்துக்குக் காலையில் காரில் வரும்போது, இருபுறமும் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சில கொலையாளிகள் என்னை வழிமறித்து, கத்திகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் தாக்கியதால் ரத்தம் பீறிடக் கொல்லப்பட்டேன். அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய்?''

    உயிரற்ற லசந்தவின் உருவம் இந்தக் கேள்வியைப் புன்னகைத்தபடிதான் கேட்டது. அந்தக் கண்களில் கருணையும் ஞானமும் நிரம்பி வழிந்தன. ஆனால், அந்த அமானுஷ்யமான புன்னகையும், அந்தக் குரலில் நிலவிய அன்பும் மகிந்தாவை நிலைகுலையவைத்தன. லசந்த எதற்கு வந்திருக்கிறான்? பழி வாங்கவா? டிராகுலா போல் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சவா? ஏற்கெனவே பல குடைச்சல்களைக் கொடுத்தவன், செத்தும் மீண்டும் வந்திருப்பது எதற்காக?

    ''பயப்பட வேண்டாம் மகிந்தா... என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் கிளஸ்டர் குண்டுகள் இல்லை. எதிர்க் கருத்து கொண்டவர்களைத் தீர்த்துக்கட்ட என்னிடம் கூலிப் படை களும் இல்லை. முக்கியமாக என்னிடம் கொலை வெறி என்பது இல்லவே இல்லை. நான் வெறுமனே பேச வந்திருக்கும் வலிமையற்ற ஓர் இறந்த கால மனிதன். நான் உயிரோடு இருந்தவரை அமைதியிலும் சமாதானத்திலும் நம்பிக்கை உள்ளவனாக, அதைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவனாக இருந்தேன். அதற்காகத்தான் கொல்லப்பட்டேன். இப்போது இறந்த பிறகும் என் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் அப்படியேதான் இருக்கிறேன். பயப்படாமல் என் எதிரே வந்து அமருங்கள். அச்சம் என்பதே வாழ்க்கையாகிப் போனால், எல்லாமே பயங்கரமாகத்தான் தெரியும் மகிந்தா... வாருங்கள், பயப்படாதீர்கள்.''

    எதிரே இருந்த நாற்காலியில் தயக்கத்துடன் அமர்ந்தார் மகிந்தா. லசந்தவின் கண்களை அவரால் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

    ''இன்றைய ராணுவச் செய்தி என்ன மகிந்தா, வழக்கம் போல் வெற்றிச் செய்தியா?'' என்றார் லசந்த.

    அப்போது அந்த முகத்தில் தெரிந்த சிரிப்பில் ஒருவித கேலி இருப்பது போல் மகிந்தாவுக்குத் தோன்றியது. உடனே மனதில் இயல்பான எதிர்ப்பு உணர்ச்சி எழுந்து, பெரிய எரிச்சலைக் கிளப்பியது. அதனால், உயர்ந்த குரலில் வாய் திறந்தார் மகிந்தா.

    ''வெற்றி... வெற்றி... இதைத் தவிர, வேறெந்தச் செய்தியும் எப்போதும் இல்லை. லசந்த... நீ உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் செய்தி. புதுக் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது ராணுவம். முழு வெற்றி மிகச் சமீபத்தில் இருக்கிறது. நீதான் தோற்றுவிட்டாய். எல்லாப் பத்திரிகைகளும், இங்குள்ளவை மட்டும் அல்ல... இந்தியாவின் பல முன்னணி தினசரிகளும் எங்களால் கொடுக்கப்படும் வெற்றிச் செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்போது, உனக்கு மட்டும் என்ன கேடு வந்தது லசந்த? ஏன் தேவைஇல்லாமல் பல விஷயங்களைத் தோண்டினாய்? கொடுமையாகக் கொல்லப்பட்டு இப்படி ஓர் அருவமாக நீ என்னைச் சந்திக்கத்தான் வேண்டுமா?'' என்றார் மகிந்தா கோபமாக.

    ''நான் எப்போது, யாரால் கொல்லப்படுவேன் என்று எனக்கு முன்பே தெரியும் மகிந்தா. அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இதோ, இதே அறையில் நீங்களும் நானும் தேநீர் அருந்தியபடி முன்னொரு காலத்தில், பின் இரவுகளில் எத்தனை கதைத் திருக்கிறோம். அப்போது நீங் கள் மனித உரிமைக்காரராக வும், இடதுசாரிச் சிந்தனை யாளராகவும் கதைத்ததெல் லாம் எப்படிப் பொய்யாகிப் போனது மகிந்தா?'' என்ற லசந்தவின் குரலில், ஆதங்கமும் வருத்தமும் கலந்து ஒலித்தது.

    மகிந்தா எதிரே இருந்தஉரு வத்தை வெறித்துப் பார்த்தார். ''நீ எப்போதுமே பயங்கரவாதிகளின் பக்கமே இருந்திருக்கிறாய் லசந்த. அதனால்தான் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாய். உன்னை இப்படிப் புகை வடிவத்தில் பார்ப்பதற்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? தேநீர் அருந்துகிறாயா?''

    ''வேண்டாம் மகிந்தா. நான் எதையும் இப்போது உண்பதில்லை. பேய்களும் பிசாசுகளும் ரத்தத்தை உறிஞ்சும் என்றெல்லாம் எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் பொய். உயிரோடு இருக்கும் மனிதர்கள்தான் சக மனிதர்களின் உயிர்களைப் பருகுகிறார்கள். நண்பர்களின் ரத்தத்தைப் பருகும் மனிதர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.''

    மகிந்தாவிடம் சங்கடமான மௌனம் நிலவியது. அதை உடைக்க, தொண்டையைச் செருமிக்கொண்டு, ''கவலைப்படாதே லசந்த... உன்னைக் கொன்ற கொலையாளிகளை எப்படியும் பிடித்து அவர் களுக்குத் தண்டனை வாங்கித் தருவேன். விசாரணை தொடங்கிவிட்டது தெரியுமா?'' என்றார்.

    லசந்த சிரித்தார். மெலிதாக ஆரம்பித்த அந்தச் சிரிப்பு, அடக்க முடியாமல் பெருஞ்சிரிப்பாக மாறியது. அந்தச் சிரிப்பு மகிந்தாவுக்கு மறுபடியும் எரிச்சலைக் கிளப்பியது. ஏற்கெனவே அமைதியற்றுக்கிடக்கும் அவருடைய மனத்தை அந்தச் சிரிப்பு மேலும் கூறு போடுவது போல் இருந்தது.

    ''நிறுத்து உன் சிரிப்பை லசந்த. இந்த அருமையான கோடை இரவின் அமைதியைக் கெடுப்பது போல் சிரிக்காதே'' என்று எரிந்து விழுந்தார்.

    ''சிரிக்காமல் எப்படி இருக்க முடியும் மகிந்தா. 'கொலையாளிகளைப் பிடிப்போம், விசாரணையைத் தொடங்குவோம். நீதி வழங்குவோம்' போன்ற வார்த்தைகளைக் கேட்டால், முன்பு கோபம் வரும். ஒரு நிலைக்குப் பிறகு இதெல்லாம் அங்கதம் ஆகிவிடுகிறது. என்னைக் கொன்ற கொலையாளிகளை யார் அனுப்பியது என்று எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இப்போது எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்ததே. என் மரணத்தில் உங்களுடைய அரசாங்கத்துக்குப் பொறுப்பு இல்லையா மகிந்தா?'' என்றார் லசந்த.

    மகிந்தா அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டார். அந்த அமைதியான இரவில் லசந்தவின் குரல் கம்பீரமாக ஒலித்தது. ''கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இருபது பத்திரிகையாளர்கள் நம் நாட்டில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் மகிந்தா. எனக்கு முன்னால் இசைவிழி செம்பியன், தர்மலிங்கம், சுரேஷ், சிவமகாராஜா, சந்திரபோஸ் சுதாகர், ரஜிவர்மன், பரநிருப சிங்கம் என்று எத்தனையோ பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களில் பாதிப் பேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் வாழப் பாதுகாப்பற்ற நாடுகளில் உலகிலேயே முதல் இடம் இராக்குக்கு. அடுத்த இடம் இலங்கைக்குத்தான். என்ன மகத்தான சாதனை மகிந்தா?'' லசந்தவின் குரலில் எள்ளல் இருந்தது.

    ''சும்மா புள்ளிவிவரங்களை அள்ளி வீசாதே லசந்த. பயங்கரவாதிகளும்தான் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கொன்றிருக்கிறார்கள். நான் ஒவ்வொரு வாரமும் கூட்டும் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்துக்கு நீ வந்ததே இல்லை லசந்த. வந்திருந்தால் உண்மை என்ன என்பது உனக்கும் புரிந்திருக்கும். 'நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகளுடனா அல்லது மக்களுடனா?' என்கிற கேள்விக்கு, 'நாங்கள் மக்களுடன்தான்' என்று பதில் சொல்லியவாறு எத்தனை பத்திரிகையாளர்கள் என் பக்கம் திரண்டு வந்தார்கள் தெரியுமா? திமிர் பிடித்த நீயும் வேறு சிலரும்தான் வரவில்லை'' மகிந்தா கோபமாகச் சொன்னார்.

    ''நான் மட்டுமா, எத்தனையோ நேர்மையானவர்கள் உங்களைப் புறக்கணித்தார்களே... சண்டே டைம்ஸ்கூட நீங்கள் கொடுத்த விருதைத் தூக்கி எறியவில்லையா? உங்கள் ராணுவத் தரப்புச் செய்திகளை மட்டுமே பல காலம் எழுதி வந்த விசுவாசி இக்பால் அத்தாஸ்கூட வெளிநாடு போய் விட்டார். அவர் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?''

    மகிந்தா ''என்ன சொல்கிறார்?'' என்றார் ஆத்திரத்துடன்.

    ''போரில் தினமும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கை அரசாங்கம் சொல்வதைக் காட்டிலும் மிக அதிகம். ஆனால், உண்மையான எண்ணிக்கையை என்னால் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. எழுதினால் எனக்கு என்ன கதி நேரும் என்பதை வாசகர்கள் அறிவார்கள்' என்று அவர் எழுதிய ஒரே காரணத்தால் பயமுறுத்தப்பட்டார் மகிந்தா. ஏற்கெனவே அவர் வீட்டுக்கு, மலர்வளையத்தை அனுப்பிவைத்தார் சந்திரிகா. அது உண்மையாகிவிடுமோ என்று அஞ்சி, இப்போது வெளிநாட்டுக்குப் போய்விட்டார். 'இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை நான் எப்போதுமே சந்தித்ததில்லை. இவ்வளவு பயங்கரமான உயிர் அச்சத்துக்கும் நான் ஆட்பட்டதில்லை' என்று சொல்லியிருக்கிறார். ஒரு பத்திரிகையாளனுக்குக் கொழும்பில் உள்ள பாதுகாப்பு இதுதான்.''

    மகிந்தா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். இப்போது தன் பழைய நண்பன் லசந்தவுடன் விவாதிப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. லசந்தவைக் கண்டு பெருமூச்சுவிட்டார். ''பயங்கரவாதிகளைவிட ஆபத்தானவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் அறிவேன். நீ ஒரு முட்டாள் லசந்த. எப்படிப்பட்ட வாழ்வு உனக்காகக் காத்திருந்தது? நீ படித்த படிப்புக்கு ஒரு புகழ்பெற்ற வக்கீலாகி இருக்கலாம். சிரீமாவோவிடம் உதவியாளனாக இருந்தவன் நீ. பிறகு பத்திரிகை ஆசிரியனாக மாறினாய். உன் தொடர்புகள் எத்தனை பெரிது! உனக்கு மந்திரி பதவிகூட கொடுப்பதற்குத் தயாராக இருந்தது. வெளிநாட்டில் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நீ எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாய்... இது தேவைதானா?''

    ''வேறு என்ன செய்வது மகிந்தா? நான் என் மனச்சாட்சிக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. இந்த யுத்தம் தவறு என்று உரக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது. என் முன்னாள் நண்பன் தன் சொந்த மக்களின் மேலேயே குண்டுகள் வீசிக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அதைக் கண்டித்து எழுத எனக்குப் பத்திரிகை தேவைப்பட்டது. அப்பாவி மக்களை, நம் சக குடிமக்களைக் கொல்வது மட்டுமல்லாது, ஆயுதம் வாங்குவதில் இருந்து இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலைப்பற்றி நான் மக்களிடம் சொல்ல விரும்பினேன். அது என் மரணம் மூலம் பாதியில் தடைபட்டதுதான் ஒரே வருத்தம்.''

    ''ஆனால், என்னிடத்தில் எந்த வருத்தமும் இல்லை லசந்த. வெற்றி, எல்லாத் தவறுகளையும் மறைத்துவிடும். அந்த வெற்றிக்கான விலை, பல உயிர்கள். போரில் அதைத் தவிர்க்க முடியாது. இப்போது பயங்கரவாதிகளை ஒடுக்கிவிட்டோம். அடுத்த யுத்தம் யாருடன் தெரியுமா? உங்களைப் போன்றவர்களுடன்தான். அந்த யுத்தமும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் நான் வெற்றி பெறுவேன்.''

    லசந்த ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்தார்.

    ''என்ன லசந்த, மௌனமாகிவிட்டாய்? வாயடைத்துவிட்டதா?'' என்றார் மகிந்தா ஏளனமாக.

    ''இல்லை மகிந்தா, எத்தனை மாயைகளில் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. குண்டு போட்டு, குண்டு போட்டு மக்களை அழித்தால், புதிய போராளிகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர, அமைதியைக் கொண்டுவர முடியுமா? நம் வாழ்வில், கலாசாரத்தில் வன்முறை அழிக்கவே முடியாதபடிக்கு அழுத்தமாகப் படிந்துவிட்டதை நீங்கள் இன்னும் உணரவில்லை. பயம்! அதைத்தான் நீங்கள் இங்கே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைத்திருக்கிறீர்கள். வெள்ளை வேன் வருமோ என்று பயம், குண்டு வெடிக்குமோ என்று பயம், ஆர்மி உள்ளே வருமோ என்று பயம், பாலியல் பலாத்காரம் செய்யுமோ, கழுத்தில் டயரை மாட்டி எரிக்குமோ, நிற்கவைத்துச் சுடுமோ என்று பயம்... சிறைச்சாலை, சித்ரவதைக் கொட்டடிகளைக் கண்டு பயம். இப்படி முழுச் சமூகத்தையும் பயம் என்னும் சாக்கடையில் மூழ்கவைத்த உங்கள் மனதிலும் பயம் இருக்கிறது மகிந்தா. உங்களுடைய வெற்றிச் சிரிப்பு ஒரு முகமூடி... அதற்குப் பின்னால் இருப்பது பயம் தெரியும் முகம்.''

    ''நீ முதலில் இங்கேயிருந்து வெளியேறு லசந்த. உன் முட்டாள்தனமான பேச்சை இனியும் என்னால் அனுமதிக்க முடியாது. எங்களுக்குப் பயம் என்பதே இல்லை. எங்களுடைய எதிரிகளுக்குத்தான் பயம். உன்னைப் போன்ற புத்திஜீவிக்களுடன் கதைப்பது வீண் வேலை. வெளியே போ லசந்த... என் கண் முன்னால் இருந்து காணாமல் போ!''

    உச்சக் குரலில் கத்திய மகிந்தாவைப் பார்த்துப் புன்னகைத்தார் லசந்த. ''நான் போகிறேன் மகிந்தா. ஆனால், நான் சொன்னது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். நான் கொல்லப்பட்டாலும், மனச்சாட்சி உறுத்தலின்றி, கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தேன் என்கிற இறுமாப்புடன் இருக்கிறேன் மகிந்தா. என் மூன்று பிள்ளைகளுக்கும் அப்பாவாக நான் இருக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு நான் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறேன். ஆனால், நீங்கள் விட்டுச் செல்லப்போவது என்ன? பயம்... ஒவ்வொரு நொடியும் பயம்... எந்த நேரத்தில்... எது நேருமோ என்கிற பயம்தான் நீங்கள் விட்டுச் செல்லப்போவது. அது இன்றைக்குப் பெரும் காடாக வளர்ந்திருக்கிறது மகிந்த. அந்த அச்சக் காட்டில் நீங்கள் எல்லோரும் காணாமல் போவீர்கள்!'' லசந்தவின் உருவம் மெதுவாக அங்கிருந்து மறையத் தொடங்கியது.

    மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மகிந்தா அப்படியே நின்றிருந்தார். லசந்தவின் குரல் அவர் தலைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லாம் கனவு போல் இருந்தது. மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. திரும்பி நடந்தார்.

    அப்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. எரிந்துகொண்டு இருந்த சில விளக்குகளும் அணைந்தன. இருட்டு வேகமாகப் பரவியது. 'உடனே பதுங்குங்கள்' என்கிற குறிப்பை உணர்த்தும் ஆபத்துக் கால சைரன் ஒலித்தது. வாசலில் சென்ட்ரிக்கள் ஓடும் சத்தமும், 'பதுங்கு... பதுங்கு' என்கிற சத்தமும் கேட்டது.

    மகிந்தா சோபாவின் அடியில் போய்ப் பதுங்கிக்கொண்டார். உடலெங்கும் வியர்த்தது. ஜன்னலுக்கு வெளியே வானத்தில் சின்ன வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு விமானம் கடந்து செல்வதைப் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த பயத்தை இருட்டு முழுமையாக மறைத்திருந்தது!
    Last edited by அறிஞர்; 25-03-2009 at 03:31 PM.

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    மேலே படம் பதிக்கப்பட்டதால் இங்கிருந்ததை நீக்கி விட்டேன்

    தெனாலி படத்தில் கமல் சொன்ன மாதிரி எல்லாம் பயமயம் தான் அவர்களுக்கு, உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து ஆக வேண்டும் என்பது போல, சொந்த நாட்டு மக்களை வஞ்சித்தவன் அவர்கள் கோபத்தை எதிர் நோக்க பயந்தால் எப்படி?.

    நிச்சயம் நல்ல சாவு அவர்களுக்கு வராது, அதாவது அரை இருட்டில் (பாத்ரூமில் கூட) அவர்கள் நிழலை கண்டு பயந்து ஹார்ட் அட்டாக்கில் தான் இறப்பார்கள்.
    Last edited by praveen; 26-03-2009 at 04:36 AM.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    உடன் கதையை பதிந்தமைக்கும், படத்தை தந்ததற்கும் நன்றி அறிஞர், பிரவீண்.

    உளவியல்ரீதியாக பயமுறுத்த நினைப்பவர்களுக்கு அதனாலேயே வருந்தத்தக்க முடிவு கிட்டும்.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.
    இந்தமாதிரியான ஆவிப் பிரம்மைகள் மனமும் மனச்சாட்சியும் உள்ளவர்களுத்தான் வரும்.
    மறுதலையாகச் சொன்னால் இப்படி ஏதாவது நிகழ்ந்தால்தான் மகிந்தாவை மனிதர்கள் மன்னிப்பார்கள்.

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    பகிர்விற்கு நன்றி அண்ணா.
    மனச்சாட்சி கடுகளவேனுமிருப்பவன் ஓர்கணமேனும் இவ்வாறு சிந்திப்பான்.
    மகிந்தவிடம் அப்படி ஒன்றிருக்குமா???

  6. #6
    மன்ற ஆலோசகர் பண்பட்டவர் பரஞ்சோதி's Avatar
    Join Date
    16 Jan 2004
    Posts
    10,688
    Post Thanks / Like
    iCash Credits
    30,554
    Downloads
    10
    Uploads
    0
    அருமையான பதிவு.

    லசந்தா விக்கிரமதுங்கவின் சிறப்பை ஒரு சிங்கள நண்பர் சொல்லி கேட்டேன், அவர் சொல்லிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

    ஒரு பத்திரிக்கையாளரின் மரணம அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன், மகிந்தா எத்தனை பெரிய கொடுங்கோலன் என்பதை அறிந்தேன்.

    லசந்தா விக்கிரமதுங்கயின் கடைசி எழுத்தான மரண சாசனத்தை படித்தால் போதும், மகிந்தாவை நாமே சுட்டு கொல்ல மனம் துடிக்கும்.
    பரஞ்சோதி


  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    நான் அறிந்த மறைந்த கதையாசிரியர் கிருஷ்ணா டாவின்ஸி அவருடைய கதையினை படிப்பத்ற்கோர் வாய்ப்பு இன்று கிட்டியது ..அழகான எழுத்து நடை துயரங்களை வரியில் தோய்த்த வலிகள் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  8. #8
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    ஆம் இவ்வளவையும் செய்து விட்டு எப்படி நிம்மதியாக தூங்க முடியும் ? .. மனதை வலிக்க செய்யும் உண்மையான பதிவு

  9. #9
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    05 Feb 2012
    Posts
    191
    Post Thanks / Like
    iCash Credits
    16,842
    Downloads
    0
    Uploads
    0
    பதிவுக்கு நன்றி.......

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •