Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 29

Thread: பெத்தமனசு.....!!!

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    பெத்தமனசு.....!!!

    ரு கடையின் வாசலில் நின்றுகொண்டிருக்கும் போதுதான் அந்த அம்மா என்னருகே வந்தார். சன்னமான குரலில்,

    “தம்பி ஒரு ரூபா குடுக்கறியா...டீ சாப்புடனும்”

    நான் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுப்பதில்லை. கோபமாக அவரைப்பார்த்து பேச நினைத்தவன் அந்த முகத்தைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன்.

    “அம்மா.....நீங்களா?...எ...எ...என்னம்மா இது? நீ...நீங்க போய்...”

    அவர் முகத்தில் திடீரென்று ஒரு கலவரம் தோன்றியது. சட்டென்று முந்தானையை தலைமேல் முக்காடாய் போட்டுக்கொண்டு அவசரமாய் அந்த இடத்தைவிட்டு விலகி வேகமாய் நடந்தார். என் அழைப்பை அலட்சியம் செய்துவிட்டு கிட்டத்தட்ட ஓடினாரென்றே சொல்லலாம்.

    நான் நின்றுகொண்டிருந்த இடம் ஒரு பேருந்து நிறுத்தமும் கூட. அப்போதுதான் வந்து நின்ற நகரப் பேருந்திலிருந்து கூட்டமாய் இறங்கியவர்களில் சிலர் என்னை உரசிக்கொண்டு போனதைக்கூட உணர்ந்துகொள்ளாமல் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

    பின்னாலிருந்து யாரோ என் பெயரைச்சொல்லி அழைத்து, பின் என் தோளைத் தொட்டுத் திருப்புவதை உணர்ந்ததும்தான் சுயநினைவுக்கு வந்தேன்.

    “என்னடா முரளி...பட்டப்பகல்ல பஸ்டாண்டுல நின்னுக்கிட்டு கனவு காண்றியா...?

    சிரித்துக்கொண்டே கேட்ட என் வகுப்புத்தோழன் பரமேஷைப் பார்த்து ஒரு புன் சிரிப்பை சிந்திவிட்டு,

    “டே பரமேஷ்....மதனோட அம்மாவைப் பாத்தண்டா...அவங்க....”

    “தெரியுண்டா. அதான் அப்படி அதிர்ச்சியா நின்னுட்டியா. இல்லாம இருக்குமா? பாவம்டா அவங்க”

    “என்னடா என்ன ஆச்சு?”

    “அது ஒரு பெரிய கதைடா. அதப்பத்தி அப்புறம் பேசலாம். நீ எப்ப வந்த? இப்ப எங்கருக்க? வைஃப், பொண்ணு எல்லாம் நல்லாருக்காங்களா?”

    “எல்லாம் நல்லாருக்காங்கடா. நேத்துதான் வந்தேன். இப்ப ONGC யில இல்லை, GAIL க்கு மாறிட்டேன். மூணு மாசத்துக்கு முன்னதான் என்னை குனாவுக்கு மாத்தினாங்க”

    “குனாவா...என்னடா கமல் படப்பேரெல்லாம் சொல்ற”

    “டே இது ஒரு ஊர்டா. மத்தியபிரதேசத்துல இருக்கு. அங்க எங்களுக்கு ஒரு பூஸ்டர் ஸ்டேஷன் இருக்கு. அதுல ஷிஃப்ட் இன்சார்ஜா இருக்கேன்.”

    “ஓ...பொண்ணு இப்ப சிக்ஸ்த் இல்ல?”

    “ஆமாடா”

    “சரி வா காப்பி சாப்புட்டுகிட்டே பேசலாம்”

    சாலையைக் கடந்து எதிர்வரிசைக் கடைகளின் இடையே இருந்த அந்த சிறிய உணவு விடுதிக்குச் சென்று, நாற்காலியிலிருந்த அன்றைய செய்தித்தாளை எடுத்து பக்கத்து மேசையில் வைத்துவிட்டு அமர்ந்த பரமேஷ், என்னையும் அமரச் சொன்னான். இரண்டு காஃபி சொல்லிவிட்டு, மேலும் தாங்கமுடியாதவனாக மதனின் அம்மாவைப்பற்றிக் கேட்டேன்.

    “எப்படி இருந்த குடும்பம்...நம்ம கிளாஸிலேயே அவன் குடும்பம்தானடா பணக்கார குடும்பம். ஒரு லாயர் பையன்ங்குறதுல அவனுக்கு அப்பவே பெருமை ஜாஸ்தி. எத்தனைதடவை அவனோட அம்மாக் கையால சாப்பிட்டிருப்போம். அவங்களை இந்த நிலையில பாக்க மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா...”

    “என்னடா செய்யறது. எல்லார் வாழ்க்கையிலும் விதி விளையாடும். மதன் வாழ்க்கையில அவனோட தான்தோன்றித்தனமும், அவன் அண்ணனோட சதியும் தாண்டா விளையாடிடிச்சி”

    “அவன் தான் பத்தாவது ஃபெயில் ஆனதுக்கப்புறமா படிப்பு ஏறலன்னு நின்னுட்டானேடா. அதுக்கப்புறம் டான்சியில் ஏதோ கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். போன வருஷம் லீவுல வந்திருந்தப்பக்கூட அவனைப் பாத்தேனே....அப்பக்கூட குடிச்சிட்டு பொலம்புனான். நீங்கள்லாம் நல்ல நிலையில இருக்கீங்கடா...என் பொழப்பப்பாருடா...யாரும் பொண்ணுகூட குடுக்க மாட்டங்கறாங்கன்னு.”

    “அதே பாழாப்போன குடிப்பழக்கம்தாண்டா அவனுக்கு வில்லன். நீ வந்து போனதுக்கப்புறமா அவங்கப்பா திடீர்ன்னு அட்டாக்குல போயிட்டாரு. சொத்து பிரிக்கறப்ப அவங்க அண்ணன் இவனை நல்லா ஏமாத்திட்டாருடா. குடிகாரன், பொண்டாட்டி புள்ளைங்க வேற இல்லன்னு கொஞ்சமா ஏதோ பேருக்கு குடுத்துட்டு எல்லாத்தையும் அவரே வெச்சுக்கிட்டாரு. கொஞ்சநாள் அவங்க அக்கா வீட்டுலத்தான் இருந்தான். அவங்க அக்கா அண்ணனுக்கு மேல. குடிபோதையில இருந்தவன்கிட்ட கையெழுத்து வாங்கிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தையும் அவங்க பேருக்கு மாத்திக்கிட்டாங்க. அவனையும் வீட்லருந்து தொரத்திட்டாங்க”

    பரமேஷ் சொல்லச் சொல்ல....மூணு வருடம் முன்பு எங்கள் வீட்டில் நிகழ்ந்த சொத்து பிரிப்பு என் நினைவில் ஆடியது. அப்பா இறந்த பிறகு, டவுனில் ஒரு பெரிய வீடும், கிராமத்தில் ஒன்றரை ஏக்கராவில் தென்னந்தோப்பும் மட்டுமே எங்க சொத்து. அண்ணனுக்கு பெருசா வருமானம் இல்ல. அதுவுமில்லாம மூணு குழந்தைங்க. அதுல ரெண்டு பொண்ணு. அதான் நானே அந்த வீட்டை அவருக்கே விட்டுக்கொடுத்திட்டேன்.கிராமத்துல இருந்த நிலத்தை மட்டும் நான் வெச்சுக்கிட்டேன். அம்மா இப்ப அண்ணன் கூடத்தான் இருக்காங்க.

    அண்ணனுக்கும் அண்ணிக்கும் என்கிட்ட ஒரு நன்றியுணர்ச்சி எப்பவும் இருக்கும். அந்த நிகழ்ச்சியையும், மதனின் வாழ்க்கையில் நேர்ந்த நிகழ்ச்சியையும் ஒப்பிட்டு பார்க்கும்போது....உறவுகளுக்குள்தான் எத்தனை வித்தியாசங்கள் எனத் தோன்றியது.

    “என்னடா யோசனையில இருக்கே?”

    ‘ஒண்ணுமில்லடா...சொந்தம், பந்தம், உறவு எல்லாம் பணத்துக்கு முன்னால செல்லாக்காசாப் போச்சேன்னு நினைச்சா வருத்தமா இருக்குடா.”

    “அப்படியும் சொல்ல முடியாதுடா. உங்க வீட்லக் கூடத்தான் சொத்து பிரிச்சாங்க. நீ எவ்ளோ பெருந்தன்மையா அந்த வீட்டை அண்ணனுக்கு விட்டுக்கொடுத்தே. இப்பவும் அண்ணனை நான் பாக்கறப்பல்லாம் உன்னைப் பத்தி ரொம்ப பெருமையா பேசுவாரு”

    என் மனதில் ஓடியதையே அவனும் சொன்னதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். நல்ல நட்பு என்பது இப்படித்தான் ஒத்த அலைவரிசையில் சிந்திக்கும் என்பது சரியாகத்தானிருக்கிறது.

    “சரிடா...அவனைத்தான் ஏமாத்திட்டாங்க, அவங்க அம்மா ஏண்டா பிச்சை எடுக்கனும்?”

    “அவங்க பிச்சை எடுக்கறது அவங்களுக்காக இல்லடா...கெட்டுப்போன தன்னோட சின்ன மகனுக்காக. வீடும் இல்லாம வாசலும் இல்லாம, தெருத்தெருவா அவன் அலைஞ்சி, அஞ்சுக்கும் பத்துக்கும் யார்யார்கிட்டவோ அடி வாங்கி அவமானப்பட்டதைப் பாக்க சகிக்காம, பெரிய மகன்கிட்டபோய் அழுதிருக்காங்க. அதுக்கு அவன், அந்தக் குடிகாரனுக்காக ஒத்த பைசா குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிட்டான். அவன்கிட்ட இப்ப ஒண்ணுமே இல்லையேடா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவான்னு கேட்டதுக்கு, முடிஞ்சா வேலை செய்யச் சொல்லு இல்ல பிச்சை எடுக்கச் சொல்லுன்னு சொல்லியிருக்கான்.

    அதைக் கேட்டுத் தாங்க முடியாமத்தான் அவங்களே பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் சாராயத்துக்காக. அது இல்லன்னா அவன் சீக்கிரமே செத்துப்போயிடுவானோனு பயந்துகிட்டு, இப்படி பிச்சை எடுத்து பத்து ரூபா சேர்ந்தா போதும்....ரெண்டு பாக்கெட் சாராயத்தை வாங்கிக்கிட்டு சத்திரத்துக்குப் போயி அவன் கிட்ட குடுத்துட்டு வருவாங்க. சில சமயம் சாராயம் இல்லாம போனா அவன் குடுக்கற அடியையும் வாங்கிட்டு வருவாங்க.”

    ‘கடவுளே...என்ன கொடுமைடா இது. அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளி அள்ளி சோறு போட்டவங்களாச்சேடா....மனசு கேக்கலடா...வா போயி மதனைப் பாத்துட்டு வரலாம்.”

    இரண்டு பேரும் போன போது அவனோடு அவனுடைய அம்மாவும் இருந்தார். குடித்துவிட்டு சுயநினைவில்லாமலிருந்த மதனை தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டிருந்தார். அது பிச்சைக்காரர்களின் தங்குமிடமான ஒரு பழங்காலத்து சத்திரம். கோணிப்பைகள்தான் அவர்களின் படுக்கைவிரிப்பு. பகலிலேயே இருளடைந்திருக்கும். மதனுக்குப் பக்கத்தில் முழுவதுமாக சாப்பிடப்படாத இட்லிகள் இருந்த பொட்டலத்தை தரையில் பார்த்ததும் விளங்கிவிட்டது உணவு உண்ணக்கூட முடியாத நிலையில் அவன் இருக்கிறானென்று.அவர்களை அந்த நிலையில் பார்த்தபோது என்னையறியாமல் கண்கள் கலங்கிவிட்டன.

    எங்களைப் பார்த்ததும் அம்மா அதிர்ந்துவிட்டார்கள். பின் மெள்ள அதிர்ச்சி சோகமாகி விசும்பி அழத்தொடங்கியதும், அருகில் சென்று அவர் கைகளைப் பிடித்ததும் கதறி அழுதுவிட்டார்.மேலே எதுவும் பேசி அவரது மன ரணங்களைக் கீறிவிட விருப்பமில்லாதவனாக பையிலிருந்து கொஞ்சம் பணத்தை அந்தத் தாயின் கைகளில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விலகினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த பரமேஷ்...

    “ஏண்டா பணம் கொடுத்தே....இன்னும் சாராயம் குடிச்சி சாகட்டுன்னா?”

    ‘நானும் நீயும் குடுக்கலன்னாலும் வேற யார்கிட்டயாவது வாங்கி மகனுக்கு குடுக்கத்தான் போறாங்க அவங்கம்மா. இந்தப்பணத்துனால அட்லீஸ்ட் அவங்களுக்கு கொஞ்சம் அலைச்சல் குறையட்டுமேடா. மனசு வலிக்குதுடா...குடி குடியைக் கெடுக்குன்னு சொல்வாங்க ஆனா இங்க இவனுடைய குடி அன்னலட்சுமியையே பிச்சைக்காரி ஆக்கிடுச்சேடா....”

    என் தோளைப் பிடித்து ஆறுதலாய் கூட நடந்து வந்தவன், சற்றுதூரம் வந்ததும் முதுகில் லேசாகத் தட்டிவிட்டு போய்விட்டான்.

    மூன்று மாதத்துக்குப் பிறகு உறவினர் ஒருவரின் துக்கக்காரியத்தில் பங்கு கொள்ள மீண்டும் ஊருக்கு வந்திருந்தேன். அந்தமுறையும் மதனின் அம்மாவை மீண்டும் சந்தித்தேன். வேறு இடத்தில். பக்கத்திலிருந்தவர்களிடம் என்னவோ சொல்லிக்கொண்டிருந்தார். அருகே சென்றேன். அவர் பிச்சைக் கேட்கவில்லை.....ஆனால் பார்ப்பவர்களிடமெல்லாம்,

    ‘என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.....என் மகன் செத்துட்டான். எனக்கு இனிமே காசு வேணாம்.....”

    என்று சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டதும் திடுக்கிடவில்லை. எதிர்பார்த்த ஒன்றுதான். மதன் இறந்ததற்காக மனம் வருந்தவில்லை. அவன் மரணம் ஒரு மனுஷியை பிணமாக்கிவிட்டதே என நினைத்த போது மனம் கணத்தது. முழுவதுமாய் மனம் பிறழ்ந்த அந்த பெரியமனுஷி...இப்போது பிச்சைக்காரியிலிருந்து பைத்தியக்காரியாகிவிட்டிருந்தாள்.
    Last edited by சிவா.ஜி; 01-03-2009 at 05:36 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    என்ன அண்ணா... வாசித்து முடிக்கும் போது தொண்டைக்குழி காய்ந்துவிட்டது. எதிரிக்கும் வரக்கூடாத சோதனை... குடிகாரனால் வந்த கதியை புதுசாக இன்று இந்த கதைமூலம் காண்கிறேன்...

    உங்கள் எழுத்துத்திறனில் இன்னொரு வெற்றிக்கதை... வாழ்த்துக்கள் அண்ணா...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்தமுறை ஊருக்கு போனபோது ஒரு மூதாட்டி என்னிடம் இப்படித்தான் ஒற்றை ரூபாய் கேட்டார் அன்பு. பார்த்தால் நிச்சயம் பிச்சைக்காரியாய் தோன்றவில்லை. களையான, குடும்பப்பாங்கான முகம். சொல்ல முடியா ஒரு சோகம் அந்தக் கண்களில்.

    அந்த சோகத்துக்குப் பின்னே என்ன இருக்கிறதோ தெரியவில்லை. என் பார்வையில் இப்படியும் இருக்குமோ என எண்ன வைத்தது என் நண்பனின் குடியால் ஏற்பட்ட முடிவு. இரண்டையும் இணைத்தேன்.

    நன்றி அன்பு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    கதையைப் படித்து முடிந்ததும் நெஞ்சம் கனக்கிறது!

    மற்றவர்களை வருத்தி சுகம் காணும் பலர் இவ்வுலகில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    குடி குடியையும் கெடுத்து அவனுக்காக வாழ்ந்த அப்புனிதமான உயிரையும் கடைசியில் பைத்தியாமாக்கிவிட்டதே!

    நான் படித்த உங்கள் கதைகளில் என் மனதில் கனக்கும் கதைகளின் பட்டியலில் இதுவும் ஒன்றே. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    இரு சம்பவங்கள் கரையாய்
    இணைக்கும் கற்பனை நதியாய்..

    வாழ்க்கை மணல் புரட்டுகிறது..
    நனைந்த மனம் கனக்கிறது..

    என் மனம் கனிந்த பாராட்டுகள் சிவா..

    உங்கள் மனதுக்கு வந்தனமும் விரல்களுக்கு முத்தமும்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    இந்தக் கதையை வாசிக்கும்போதே இது நிச்சயமாகக் கற்பனைக் கதையல்ல என்ற எண்ணம் தோன்றியது.
    சிவா.ஜியின் இயல்பு அந்த எண்ணத்திற்கு வலுச்சேர்த்தது.
    சிவா.ஜியின் பின்னூட்டம் அதைத் தெளிவுபடுத்திவிட்டது.

    இரு காட்சிகளை இணைத்து, ஒரு அரும் காட்சியைக் காட்டும் கதை.

    பல்வேறு விதமான படிப்பினைகளையும், வாழவேண்டிய, வாழக்கூடாத முறைமைகளையும் கோடிட்டு வரையறுத்து அறுதியிடுகின்றது.

    போதைகளின் பிடியில் பிச்சைக்காரியாகிப் பைத்தியமாகிப்போன தாய்க்கும் போதைதான்.
    ஒரு பக்கம் குடிப்போதை.
    மறு பக்கம் சொத்துப்போதை.
    நடுவில் தாயின் பாசப்போதை.

    உறவுகளை விடவும் மேலான சொத்து, ஏதுமல்ல...
    என்பதை அனைவருக்கும் உணர்த்தும் அழகிய காதை.

    பாராட்டுக்கள் சிவா.ஜி...

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by நிரன் View Post
    .
    குடி குடியையும் கெடுத்து அவனுக்காக வாழ்ந்த அப்புனிதமான உயிரையும் கடைசியில் பைத்தியாமாக்கிவிட்டதே!
    குடியின் கேடுகள் எத்தனையோ....அதில் இது காணக்கூடாதது.

    நன்றி நிரன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by இளசு View Post
    இரு சம்பவங்கள் கரையாய்
    இணைக்கும் கற்பனை நதியாய்..

    வாழ்க்கை மணல் புரட்டுகிறது..
    நனைந்த மனம் கனக்கிறது..
    சம்பவக்கரைகளுக்கு நடுவே கற்பனை நதியென்றாலும்..சிலவை நேரில் கண்ட....காணுகின்ற உண்மைகள் இளசு. என்னையறியாமல் என் நண்பனின் உண்மைப்பெயரை இதில் பயண்படுத்திவிட்டேன். மதன்...தங்கமானவன். தந்தையின் பணம் நண்பர்களுக்கும் பயன்பட்டது...நாசத்துக்கும் பயன்பட்டது.

    நன்றி இளசு.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    Quote Originally Posted by அக்னி View Post
    போதைகளின் பிடியில் பிச்சைக்காரியாகிப் பைத்தியமாகிப்போன தாய்க்கும் போதைதான்.
    ஒரு பக்கம் குடிப்போதை.
    மறு பக்கம் சொத்துப்போதை.
    நடுவில் தாயின் பாசப்போதை
    .
    விமர்சனப்புலியின் அர்த்தம் நிறைந்த வார்த்தைகள். எத்தனை உண்மை...?
    பாசமும் ஒரு போதையாகி காட்டுபவரையும், காட்டப்படுகிறவர்களையும் அவதிக்குள்ளாக்கிவிடுகிறது.

    ஆழமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அக்னி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் samuthraselvam's Avatar
    Join Date
    09 Jan 2009
    Posts
    1,560
    Post Thanks / Like
    iCash Credits
    17,165
    Downloads
    33
    Uploads
    0
    குடி குடிப்பவர்களை மட்டுமல்ல கூட இருப்பவர்களையும் கெடுக்கும். கதையின் முடிவு கண்களை ஈரம் ஆக்குகிறது அண்ணா... இதுபோல் குடியால் அழிந்த குடும்பங்கள் நம் நாட்டில் நிறைய இருக்கிறது. என் வீடிற்கு அருகில் உள்ள வீட்டில் பரிமளா என்ற பெண் இருக்கிறாள். அவள் கணவன் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பான். பாவம் அவள் வெளியில் யாரிடமும் சொல்லவே மாட்டாள். ஆனால் குடிக்காது இருக்கும் பொது அவர்களைப் போல் ஒரு அன்யோன்னிய தம்பதி யாருமே இல்லை என சொல்லும் அளவிற்கு இருப்பார்கள். இதுபோல் இன்னும் எத்தனை வீடுகளில் எத்தனை விதமாக குடி கொண்டிருக்கிறதோ இந்த குடிப்பழக்கம்.

    கதையல்ல இது நிறைய வீடுகளில் நடக்கும் நிஜம்.
    முயற்சி என்பது மூச்சானால்
    வெற்றி என்பது பேச்சாகும்....

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    சம்பவத் தூண்டல்களில் துலங்கல்களாகக் புதியன உருவாவது இயல்பு. எங்கள் எழுத்து விஞ்ஞானி சிவாவுக்கு அவ்வியல்பு அதீதமாக அமைந்ததில் மகிழ்ச்சி. அளவிறந்த சுவையுடன் விருண்ணும் பாக்கியம் கிடைக்கிறதே.

    பெத்த மனசு தலைப்பு. பித்தானது முடிவு. அருமையான முடிச்சு.

    இரண்டுக்கும் நடுவில் அனுபவங்களில் தொகுப்பு. அழகாக, எளிதில் எடுத்திடக் கூடியதாக அடுக்கப்பட்டுள்ளது.

    நான் என்று சிவா எழுதியதில் இடறி விழுந்தேன். பிச்சை எடுத்தபோது கண்ட நண்பனின் தாயையும் அவளால் அறிந்த நண்பனையும் என் சிவா நிச்சயமாக காசு கொடுத்து விட்டு அப்படியே விட்டுப் போயிருக்க மாட்டார்.

    எனது இக்கருத்து அதீதம் தான். அதுக்குக் காரணம் சிவாதான். பொதுவாகவே கதையுடன் ஒன்ற வைக்கும் சிவா தன்னிலை கதைசொல்லியாகி மிகவும் இறுக்கமாக கதையுடன் என்னைப் பிணைத்து விட்டார்.

    மற்றவர் துன்புறுத்தப்படும் நிலைக்கு தன் மகன் தள்ளப்படுவதைத் தவிர்க்க தான் துன்புறுவது..
    குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மகனின் மரணம் தந்த மகிழ்ச்சியில் பித்தாகியது..
    பித்து உதிர்க்கும் வார்த்தைகளில் சோக வித்தும் கலந்திருப்பது..
    இப்படி தாயில் காந்தி உட்பட்ட பல பாத்திரங்களைக் கண்டேன்.

    போதைகள் வாழ்க்கைக்குத் தேவை. மருத்துவப் பொருட்கள் சிலதின் தயாரிப்பில் கூடப் போதை தரும் கலவை உண்டு. ஏன் ஆரோக்கியம் பேணும் சில மருந்துகளே போதை தரவல்லதும் கூட. அளவு என்பது எமக்காக அளந்த முக்கியமான ஒன்று.



    சதையும் குருதியுமாக கதைபடைத்த சிவாவுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்.

  12. #12
    Awaiting பண்பட்டவர்
    Join Date
    02 Aug 2008
    Posts
    182
    Post Thanks / Like
    iCash Credits
    12,812
    Downloads
    1
    Uploads
    0
    நல்லதொரு பதிவு, கண்களை ஈரமாக்கி மனதில் தங்கிவிட்ட அருமையானதொரு படைப்பு. பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரின் மறுபக்கமும் ரணங்களின் பிரதிபலிப்புகள் நிறைந்ததொரு சோகவனம் தான், அதை கண்டறிந்து கதையாக்கி தந்திட்ட சிவாவை என் கரங்கள் தேடுகிறது கை குலுக்கி பாராட்ட!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •