வணக்கம் உறவுகளே
குட்டி கதை புகழ் ஐரேனிபுரம் பால்ராசய்யா வை தொடர்ந்து நானும் ஒரு குட்டி கதையை பதிக்கலாம் என்று முயன்று இருக்கிறேன். பெரிய விஷயத்தை கொஞ்ச வார்த்தைகளில் உணர்த்தும் குட்டி கதைகள் மீது எப்பவும் எனக்கு ஒரு காதல் உண்டு.


ஒரு ரூபாய்

ரமேஷ் தன்னுடைய மதிய உணவை பிரபலமான அந்த ஓட்டலில் சாப்பிட சென்றான். பிரபலமான ஓட்டல் என்றாலே அங்கு வாடிக்கையாளர்களுக்கு மரியாதை இருக்காது, வேண்டா வெறுப்பாக தான் சர்வர்கள் பரிமாறுவார்கள். ரமேஷுக்கு சர்வரின் பார்வை, முறைப்பு எரிச்சலை தந்தது, அடக்கிக் கொண்டு உணவை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்தான். சர்வர் பில்லை எடுத்து கொண்டு வந்து வைத்தான் பில் 299 ரூபாய் ஆனது. ரமேஷ் 500 நோட்டை எடுத்து கொடுத்தான், சர்வர் தெனாவட்டாக எடுத்துக் கொண்டு போய், மீதி தட்டில் 200 (100+50+5x10) ரூபாய் பாக்கி கொண்டு வைத்து திரும்பி பார்க்காமல் நடந்து போனான்

ரமேஷுக்கு எரிச்சல் அதிகமானது, சர்வரை சத்தமாக அழைத்தான். அவன் முகத்தில் எந்த வித உணர்வும் இன்றி என்ன? என்பது போல தலையை ஆட்டினான்.

“என்னங்க 201 ரூபாய்க்கு 200 தரிங்க”

“சில்லரை இல்ல”

“அத சொல்ல வேண்டாமா?”

“நீங்களே புரிஞ்சிக்கனு” ரமேஷுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

“என்ன ....ர புரிஞ்சிக்கனும், மீதி காசை சாமர்த்தியமா டிப்ஸை எதிர்பார்த்து 5 பத்து ரூபா நோட்டா வைக்க தெரிது இல்ல, அதே மாதிரி சில்லரை ஒழுங்க கொடுக்கனும் அறிவு வேணாம்”

“ஒரு ரூபாய் தான”

“யோவ் அது நாலணாவாக கூட இருக்கட்டும், என்னுடைய காசை நான் வேண்டாம்னு சொல்லலாம், ஆனா நீ எப்படி வேண்டாம்னு முடிவு செய்யலாம்”

”இரு வரேன்” என்று அவசரமாக சென்ற சர்வர், போய் ஒரு ரூபாயை எடுத்துக் கொண்டு வந்து தந்தான். ரமேஷ் வாங்கிக் கொண்டு சர்வரை முறைத்த படியே ஓட்டலை விட்டுச் சென்றான். இன்னொறு சர்வர் வந்து

”என்ன மாமே, என்ன சண்டை”

“ஒண்ணு இல்ல டா ஒரு கஞ்சப்பைய ஒரு ரூபாய்க்கு சண்டை போட்டுட்டு போறான்” என்ற சர்வர் ரமேஷின் பில் வேலட்டை எடுக்க போனான், அதில் ரமேஷ் டிப்ஸாக 10 ரூபாய் வைத்து இருந்தான், கூடவே ஒரு துண்டு காகிதமும் இருந்தது.

அதில் “நீ முகமலர்ச்சியுடன் உன் வேலையை செய்து இருந்தால் 20 ரூபாய் தந்து இருப்பேன்” என்று எழுதி இருந்தது.

அந்த சர்வர் அடுத்த டேபிளுக்கு முகமலர்ச்சியுடன் சென்றான்.