அன்பு நண்பர்களே,

சென்ற வருடம் நமக்கு தமிழ் ரைட்டர் மென்பொருள் கிடைத்தது அல்லவா? இந்த வருடம் நமக்கு கிடைத்த நல்ல செய்தி. சில காலம் முன்பு வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மென்பொருள் "அழகி" இப்போது இலவசமாக கிடைக்கிறது!

ஃபோனடிக், தமிழ் டைப்ரைட்டர், தமிழ்99 ஆகிய தட்டச்சு முறைமைகளில் அழகியை பயன்படுத்த இயலும். ஒருங்குறி மற்றும் திஸ்கி எழுத்துருக்களை இதில் உபயோகிக்க இயலும்.

முதலில் வந்த எ-கலப்பை, தமிழாவின் எ-கலப்பை, என்.ஹெச்.எம். ரைட்டர் ஆகிய மென்பொருட்களை நம்மில் பலரும் அறிவோம். ஆனால் அவற்றில் இல்லாத சில கூடுதல் வசதிகளும் அழகி மென்பொருளில் இருக்கின்றன. அழகி வெளிவந்த சமயத்தில் மிகச்சிறந்த மென்பொருள் என பயனாளர்கள் பலராலும், செய்தித்தாள்களாலும் மிகுந்த பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

இதுவரை வெளிவந்துள்ளமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட எல்லாவிதமான விண்டோஸ் இயங்குதளங்களிலும் (விஸ்டா உட்பட)இதை பயன்படுத்தலாம்.

மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், அக்சஸ், பேஜ் மேக்கர், ஃபோட்டோ ஷாப், ஜிமெயில், யாஹு மெசஞ்சர் போன்றவற்றில் நேரடியாக தட்டச்ச இயலும். தமிழ் எண்களை பயன்படுத்த முடியும். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு என இருவழிகளிலும் மொழி மாற்றம் செய்யலாம்.

கலப்பை அல்லது ரைட்டருடன் ஒப்பிடுகையில், ஃபோனடிக் முறையில் தட்டச்சும் போது, சில எழுத்துக்களை தட்டச்ச வேறுபட்ட விசைகளை தட்ட வேண்டி இருக்கிறது. இருப்பினும் நேரில் காண விசைப்பலகையும் இணைக்கப்பட்டிருப்பதால் எல்லா எழுத்துக்களையும் எளிதில் பார்த்து, பழகி, தட்டச்சி விடலாம்.

சந்தேகப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக விரிவான உதவிப்பகுதியும் மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கி பயன்படுத்த விழைவோர் தட்டச்ச வேண்டிய முகவரி :
http://azhagi.com/free.html

அழகி மென்பொருளை தமிழுலகிற்கு வழங்கிய திரு. விஸ்வநாதன் அவர்களுக்கும், அழகி மென்பொருளை உருவாக்குவதில், வெளியிடுவதில் ஈடுபட்ட அனைவருக்கும், மனமார்ந்த நன்றி.

குறிப்பு: இந்தப்பதிவு அழகி மென்பொருளை பயன்படுத்தி தட்டச்சப்பட்டது.