நேற்று பற்றிய நினைவில்லை...
நாளை பற்றிய பயமில்லை...
அந்த நொடிகளுக்காய் சிரித்திருந்தோம்..

நம்மிடையே எல்லாம் பொதுவாயிருந்தது...
உனதென்றும் எனதென்றும் எதுவும் இருந்ததில்லை.
உணவு முதல் கனவு வரை...
அண்ணன் முதல் அன்னை வரை...
எல்லாம் நமதாக இருந்தது.

நம் அனைவருக்குமான சாயங்கால சரித்திரங்கள்...
பெரும்பாலும் மொட்டை மாடியில் எழுதப்பட்டது.
நாம் விளையாடிய சீட்டுக்கட்டுக்கள்...
இப்பொழுது ஏதோவொரு மூலையில் இருக்ககூடும்.

மாலையில் ஆரம்பிக்கும் பேச்சு...
இரவு வரை நீளும்.
எதைப் பற்றி என்று தெரியாது...
ஆனாலும் பேசிக்கொண்டேயிருப்போம்.
அன்று காரணங்களே தேவைப்படவில்லை...

கிராமத்தில் கழித்த விடுமுறை நாட்கள்...

வரப்பின் ஓரமாய் அப்பா சிரித்திருக்க...
சேற்று வயல்களில் ஆடி களித்ததும்...
அம்மாவின் சமையலை வாசம் பிடித்து...
அவசரமாய் பம்ப்புசெட்டில் குளியல் முடித்ததும்...

பகல் முழுவதும் ஆடி களித்தபின்...
களத்துமேட்டினில் இரவு தொடங்கும்.
நிலவு ஒளியினில் ஒன்றாய் கூடி..
ஆடி.. பாடி... இரவை கழிப்போம்.
இடையிடையே இடைவேளையாய்
அம்மா கையால் சோற்றுருண்டை...

இன்றும் கூட...
நம் பழைய புகைப்படங்களை பார்க்கையில்...
அதில் உறைந்திருக்கும் சிரிப்பு....
சில நொடிகள் நம் உதடுகளில் உயிர்கொள்ளும்..
அடுத்த நொடிகளில்...
நினைவுகளாய் நம் உயிர்'கொல்லும்'.

உறைந்துவிட்ட புகைப்படம் போல் இல்லை வாழ்க்கை...
அசுர வேகத்தில் பாய்கிறது காலம்...
நம்மையும் அதனூடே இழுத்தபடி.
நேற்று என்பதை நினைவுகளாக்கி..
நாளை என்ற கனவுக்காய் வாழ்ந்து...
இன்றைய தூக்கத்தை தொலைத்து நிற்கிறோம்.

பார்ப்பதற்கு நேரமில்லை...
பேசவும் கூட காரணங்கள் தேவைப்படுகிறது.
எப்பொழுதாவது வரும் மின்னஞ்சலில்...
சில நொடிகள் நிலைகுத்தி நிற்கின்றன கண்கள்..

வளர்ந்துவிட்டோம்..
அதனால்தானோ என்னவோ...
நிறையவே இழந்துவிட்டோம்.