சில மாதங்களுக்கு முன்பு படித்து இன்னும் மனதில் நின்று நெருடலை ஏற்படுத்தும் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கதையில் மிகவும் ஈடுபாடு ஏற்ப்பட்டதால் சற்று விரிவாகவே எழுதும்படி ஆகிவிட்டது.

கதை: ஆயிஷா
ஆசிரியர்: இரா. நடராசன்

ஒரு பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியை, அவர் விடுதி காப்பாளரும் கூட, விஞ்ஞான கேள்வி பதில் நூல் எழுதுகிறார். அந்த நூலுக்கான முன்னுரையாக இந்த கதையை எழுதுகிறார்.

தன் வகுப்பில் படிக்கும் ஆயிஷாவைப் பற்றி சொல்லி கதையை சொல்கிறார்.
ஒருமுறை காந்தவியல் குறித்து பூமி எப்படி காந்தமாக உள்ளதெனெ விளக்குகிறார், ஒரு செவ்வக வடிவ காந்தத்தை கையில் வைத்துக்கொண்டு வழக்கமான எந்திரத்தனத்துடன் யாவரையும் உறங்க வைக்கும் அவருடைய தொனியில். அப்போது "மிஸ்" என தயக்கத்துடன் அழைத்து, தயங்கி, தன் சந்தேகத்தை கேட்கிறாள் ஆயிஷா. அவர்களுடைய உரையாடல் பின் வருமாறு:

மிஸ்
என்ன...வாந்தி வருதா..? (வகுப்பில் சிரிப்பொலி)
இல்ல மிஸ் சந்தேகம்
என்ன? (எரிந்து விழும் குரலில்)
மிஸ் அந்த காந்தத்தை ரெண்டா வெட்டினா என்னாகும்..?
ரெண்டு காந்தம் கிடைக்கும்
அந்த காந்த்தத்தை வெட்டிக்கிட்டே போனா..?.........................துண்டாக்கி கிடைத்த காந்தங்களின் எண்ணிக்கை ஒரு முடிவுறா எண் என்று வச்சுக்கிட்டா..?
ரொம்ப சிம்பிள்மா...முடிவுறா எண்ணிக்கையில் காந்தம் கிடைக்கும்.
முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை ஒரே நேர்க்கோட்டில் வச்சா.. எதிர் துருவங்களை கவரும் அதன் இயல்பு என்னாகும்.?
"-----------"
ஒரு காந்தத்தின் வடக்கு மறு காந்தத்தின் தெற்கை இழுக்கும், ஆனால் இழுபடும் காந்தத்தின் வடக்கே அடுத்துள்ள காந்தம் ஏற்கனெவே இழுத்துக்கிட்டிருக்கும் இல்லையா..மிஸ்?
ஆமா.. அதுக்கென்னன்ற?
என் சந்தேகமே அங்க தான் இருக்கு.எல்லா காந்தங்களின் கவர்திறனும் ஒன்றெனக் கொண்டால் அவை ஒட்டிக்கொள்ளத்தான் வாய்ப்பே இல்லையே...எப்புறமும் நகராமல்
அப்படியே தானே இருக்கும்..?
"-----------"
ஏன் நாம இந்த பிரபஞ்சம் முடிவுறா எண்ணிக்கையிலான காந்தங்களை நேர்க்கோட்டில் வைத்தது போல் அமைக்கப்பட்டதா வச்சிக்க கூடாது? அந்த கோணத்தில் பூமிங்கிற காந்தத்த
ஆராயலாம் இல்லையா..?

இதன் பிறகு ஆசிரியை ஆயிஷாவின் மீது நேசம் கொள்கிறாள். ஆயிஷா பெற்றோரை இழந்தவள் என்றும் சித்தியின் பாதுகாப்பில் வளர்பவள் என்றும் அறிந்து கொள்கிறாள்.
இரவில் விடுதி அறையில் நூலக புத்தகத்தை வாசிக்கும்போது அதில் ஆயிஷா அடிக்கோடிட்டிருந்த முறையும் குறிப்புகளும் அவளை மேலும் கவர்கிறது. அதன் பிறகு சக
ஆசிரியைகளின் சராசரி பொழுது பேச்சுக்களான நடிகைகளின் வித்தியாசங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் வைத்திருக்கும் பட்ட பெயர்கள் மற்றும் முக்கிய கேள்விகளுக்கு மட்டும்
விடைகளை மனப்பாடம் செய்யவைக்கும் எந்திரத்தனம் இவற்றின் மீது அருவருப்பு தோன்றுகிறது.
பள்ளிகளில் வகுப்பு எண், வரிசை எண், தேர்வு எண், பெறும் மதிப்பெண் என எண்களே மாணவர்களை ஆள்கின்றன. எல்லா ஆசிரியர்களுமே ஏதோ ஒரு வகையில் மாணவரின் அறிவை அவமானப்படுத்துகிறார்கள் என உணர்கிறாள்.

ஒருமுறை லெவண்த் மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மாணவியான ஆயிஷா கணக்கு போட்டு கொடுத்திருக்கிறாள் என்று கண்டு பிடித்து ஆயிஷாவை அடித்து விடுகிறார்கள்.
அதைக் கண்டு வருந்தும் ஆசிரியை பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு சொல்லித்தரும் அந்த அறிவாளியான மாணவி இங்கு
வந்து ஏன் பிறந்து தொலைத்தாள்...கடவுளே எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்றும் என வேண்டிக்கொள்கிறாள்.

அவ்வப்போது ஆயிஷா ஒரு விஞ்ஞானியின் குணத்தோடு ஆசிரியையிடம் கேட்கும் கேள்விகள் சுவாரசியமானவை.
"ஒரு மெழுகு வர்த்தியின் ஒளி அதிகமாகவும் வெப்பம் குறைவாகவும் உள்ளது. ஆனால் அடுப்பில் எரியும் நெருப்பில் ஒளி குறைவாகவும் வெப்பம் அதிகமாகவும் இருக்குதே ஏன் மிஸ்"
துணி துவைக்கும் போது கேட்கிறாள் "துணி துவைக்கிற சோப் அழுக்கை அகற்றுவதற்கும், குளியல் சோப் அழுக்கை அகற்றுவதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன?"
ஒரு புத்தகத்தை படித்து விட்டு சொல்கிறாள் "மிஸ் மின்னலில் மின்சாரம் உள்ளதை நிரூபித்த பிராங்க்ளின் பட்டம் (காற்றாடி), ஒரு பட்டு கைக்குட்டையால் செய்யப்பட்டது மிஸ்"
"இங்லீஷ்ல படிக்க கஷ்டமாயிருக்கு மிஸ்.. நம் மொழியிலேயே வரனும்" என்கிறாள் நீங்களே எழுதலாமே மிஸ் என்றாள்
மின்னலிலிருந்து மண்ணை மின்சாரம் தாக்கும் இல்லையா? மரம் கூட விழுவதுண்டு. கம்பியிலுள்ள மின்சாரத்துக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம்?

ஆயிஷாவின் உறவில் அறிவியல் ஆசிரியை தன்னையே உணர ஆரம்பிக்கிறாள். "எவ்வளவு தூரம் நம் குழந்தைகளுக்கு விஞ்ஞானம் போதிக்கிறோம். ஒரு விஷயத்தை உணர்ந்து கேள்வி
கேட்க அவகாசம் தருகிறோம்?. பள்ளியில் ஆசிரியர்கள் அதிகம் சொல்வது எதை? கையக்கட்டு. வாயைப்பொத்து." மாணவர்கள் கேள்வி கேட்க தொடங்கும் முன்னரே அவர்களை
வேறு கேள்வியை கேட்டு மூழ்கடித்து விடுவதை எண்ணி வருந்துகிறாள்.

தினமும் ஆசிரியைகளிடம் உதை வாங்குகிறாள். பாட வேளையில் வரலாற்று ஆசிரியையிடம் கேட்கிறாள்,
அசோகரை புத்த மதத்துக்கு மாற்றியது யார் மிஸ்?
புத்த பிட்சு ஒருத்தர்
இல்ல....அவர் பெயர்..?
"-------"
அவரது பெயர் உபகுப்தர் மிஸ்.
தெரிஞ்சுகிட்டே டெஸ்ட் பண்றியாடி... என ஒரு காலில் நிற்க வைத்து உதைக்கிறாள் அந்த ஆசிரியை.

ஒருமுறை அவளுடைய விடைத்தாளில் மார்க் சரியா போடல என கேட்ட போது கெமிஸ்ட்ரி மிஸ் பின்னங்காலில் பட்டையாக தடித்து வீங்கும் அளவுக்கு அடித்து விடுகிறாள். சொந்த சரக்குக்கெல்லாம் மார்க் கிடையாதாம். நோட்ஸுல இருக்கிறத அப்படியே எழுதனுமாம். இதே மாதிரி நோட்ஸ் பிரச்னையில் இன்னொரு மிஸ்ஸிடமும் முன்பு அடி வாங்கி இருக்கிறாள்.

ஒருமுறை தன் அபிமான ஆசிரியையிடம் ஆயிஷா கேட்கிறாள்..டீச்சர், அடிச்சா வலிக்காம இருக்க ஏதாவது மருந்து இருக்கா? ஆசிரியை அந்த கேள்வியை சாதரணமாக
எடுத்துக்கொண்டு விட்டு விடுகிறாள். தற்செயலாக ஆயிஷாவின் ஒரு குறிப்பு நோட்டை ஆசிரியை பார்க்கும் போது அதில் அந்த ஆசிரியையின் பெயரை எழுதி அதன் கீழே
"என் தாயார்: என் முதல் உயிர்: என் முதல் ஆசிரியை" என ரத்தத்தால் எழுதியிருக்கிறாள். அதை பார்த்து ஆசிரியை கண் கலங்குகிறாள். அவளுக்கு நன்றியாக எப்படியாவது
எதையாவது செய்ய வேண்டும். உன்னை எப்படி ஆக்குகிறேன் பாரடி பெண்ணே என மனதில் எண்ணுகிறாள்.

ஒருநாள் ஆய்வு கூடத்தின் அருகில் ஆயிஷா வர சொன்னதாக ஒரு மாணவி வந்து சொல்ல ஆசிரியை போய் பார்க்கிறாள். அதற்கு சில தினங்களுக்கு முன்பு தான் வகுப்பில் அறுவை சிகிச்சையின் போது உடலை மரத்துப் போக செய்யும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவைப்பற்றி பாடம் நடத்தியிருக்கிறாள் ஆசிரியை.

இன்னிக்கு எக்ஸ்பரிமெண்ட் சக்சஸ் மிஸ் என்கிறாள் ஆயிஷா. ஒரு ஸ்கேலை ஆசிரியையிடம் கொடுத்து,
என்ன அடிங்க மிஸ் வலிக்காது, இனிமே யார் எனக்கு அடிச்சாலும் வலிக்காது என்கிறாள்.
லேபில் நைட்ரஸ் எத்தனால் (மரத்து போக செய்யும்) மருந்து கிடைத்ததை சொல்லி தவளைக்கு ஊசிப் போட்டதை சொல்கிறாள். தவளை இரண்டு மணி நேரத்துக்கு மேலாக மல்லாக்க போட்டாலும் உணர்ச்சி இல்லாமல் கிடக்கிறதாம். அப்புறம் அந்த மருந்தை அவளும் போட்டுக்கொண்டாளாம். எப்படி என் ஐடியா... என்கிறாள்.
பிறகு தவளை செத்து விடுகிறது.
அப்புறம் ஆயிஷாவை தூக்கி கொண்டு ஆஸ்பத்திரிக்கு போக அதற்கு முன் ஆயிஷா இறந்து விடுகிறாள்.

ஆசிரியை தன் விஞ்ஞான நூலினை, வயதுக்கு வந்த நாளோடு பள்ளிக்கூடம் விட்டு ஓடியவர்கள், ஏதோ ஒரு ஊரில் துவைத்து சமைத்து பிள்ளைப்பெற்று போடுகிறவர்கள், ஆணின் பாலியல் பசியில் தன்னை விற்பவர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், வயல் கூலிகள், கல்லுடைக்கும் பெண்கள் இவர்களில் எத்தனை ஆயிஷாக்கள் உள்ளனரோ? தன் விஞ்ஞான கனவுகளை அடுப்பு நெருப்பில் போட்டு சாம்பலாக்கும் அந்த பெண்களுக்கு சமர்ப்பணம் செய்கிறார்.

மேலும் ஆயிஷா கேட்ட கேள்விகளிலேயே அவரை மிகவும் பாதித்த கேள்வியை முன்னுரையில் வைக்கிறார்.
"மிஸ், கரோலின் ஏர்ஷல் போலவோ, மேரி கியூரி போலவோ நம்ம நாட்டுல பெயர் சொல்ற மாதிரி ஒரு பெண் கூட விஞ்ஞானியா வர முடியலயே ஏன்"

இக்கேள்விக்குரிய பதிலை நான் சொல்ல வேண்டியதில்லை தங்கள் சொந்த வீடுகளின் இருண்ட சமையலறையில் போய் அவர்கள் அதை தேடட்டும். என முடிகிறது கதை.

இந்த கதை என்னை எந்த அளவுக்கு பாதித்தது என்று சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன்.