நான் படித்ததில் படித்ததை உங்களிடம் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..
தேவகோட்டை என்ற வலைதளத்தில் இருந்து எடுத்தது... கொஞ்சம் பெரியதுதான் ஆனாலா படித்துபார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும் வரதட்சனை கேட்கும் பெற்றோர்களுக்கு......... படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


ஆயிரத்தில் ஒருத்தி என்றால் அனைவருக்கும் தெரியும், கவியரசரின்
பாடல் ஒன்றும் அந்த வரியில் துவங்கி ஒலித்துப் பிரபலமாகியது..

அதென்ன கோடியில் ஒரு பெண் என்று நீங்கள் கேட்கலாம். அப்படி
எதில் உயர்ந்தவள் அவள்? அழகிலா அல்லது படிப்பிலா? அன்னை
தெரசா மாதிரி சமூக சேவையிலா அல்லது ஜான்ஸி ராணி மாதிரி
வீரத்திலா? என்று எண்ணலாம்.

வள்ளியம்மை ஆச்சி தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கக் கோடி
ரூபாய்த் தோதில் (அதாங்க வரதட்சணையில்) ஒரு பெண்ணைத் தேடிக்
கொண்டிருந்தார்கள்.

இங்கே கோடியென்பது பணமதிப்பில் சொல்லப்பட்டுள்ளது

வள்ளியம்மை ஆச்சியின் கொழுந்தனார் மகனுக்கு கோடி ரூபாய் இன்கம்
டாக்ஸ் கணக்குடன் கூடிய பெண் வந்து சேர்ந்ததிலிருந்து ஆச்சிக்கும்
அந்த ஆசை வந்து விட்டது.

கொழுந்தனார் வீட்டைவிட நாம் என்ன குறைந்து விட்டோம் என்ற தன்
முனைப்பு அதிகமானதால், ஆச்சியும் அதை ஒரு சவாலாகவே எடுத்துக்
கொண்டு காரியத்தில் இறங்கினார்கள்.

முதலில் நகரத்தார்கள் நடத்தும் இரண்டு, மூன்று இலவசத் திருமண சேவை
மையங்களுக்குப் போய்ப்பார்த்தார்கள். அதில் ஒரு மையத்தில் நீங்கள்
உங்கள் மகனின் விவரங்களை எங்களிடம் பதிவு செய்யுங்கள், அப்போது
தான் நாங்கள் உங்களுக்கு முறைப்படி உதவி செய்ய முடியும் என்று கூறி
விட்டார்கள்.

மற்ற இடங்களில்,"ஆச்சி நீங்கள் தேடும் இடங்களை நாங்கள் பணக்கார
சர்க்கிள் என்போம். அவர்களெல்லாம் எங்கள் மையத்திற்கு வரமாட்டார்கள்.
அவர்களே தாங்கள் சந்தித்துப் பேசும் இடங்களில் தகவலறிந்து முடித்துக்
கொண்டு விடுவார்கள். அதனால் அந்த மாதிரிச் செல்வச் செழிப்புள்ள
பெண்களுக்கெல்லாம் எங்களிடம் வேலை இல்லை!" என்று சொல்லி
ஆச்சியை அனுப்பிவிட்டார்கள்.

ஆச்சி அதற்கெல்லாம் அசரவில்லை.கடைசியில் காரைக்குடியில் திருமணத்
தரகர் ஒருவரைப் பிடித்து அவர் மூலம் தேட ஆரம்பித்தாரகள். அவருக்குச்
செட்டிநாட்டிலுள்ள அத்தனை ஊர்களும் அத்துபடி. அதோடு அவர் எந்த
ஊரில் எத்தனை பெண்கள் மற்றும் பையன்கள் திருமண வட்டத்தில் இருக்கின்
றார்கள் என்ற விபரத்தையெல்லாம் ஒரு டெக்னிக்கோடு தெரிந்து
வைத்திருப்பவர். பேச்சிலும் கில்லாடி.

மாதம் மூன்று அல்லது நான்கு திருமணங்களை முடித்துக் கொடுப்பார்.வாங்கிக்
கொடுக்கும் பணத்தில் இரண்டு சதவிகிதம் கமிஷன். கணிசமான தொகையைச்
சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

ஆச்சி சொன்னதைக் கேட்டவுடன் முதலில் அவர் அசந்து விட்டார். காரணம்
ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் தோதில் உள்ள பெண்களின் விவரங்கள்தான்
அவரிடம் இருந்தன. எனவே அவர் சற்று யோசித்தார்.

ஆச்சி, அந்தத் தரகரிடம் "அண்ணே, நான் விரும்புகிற மாதிரி ஒரு பெண்ணை
எனக்கு முடித்துக் கொடுங்கள். நான் இரண்டு லட்ச ரூபாய் உங்களுக்குக்
கமிஷனாகக் கொடுத்து விடுகிறேன்" என்று சொல்லி, ஒரே போடாகப் போட்டு
விட்டார்கள்.அவரும் படு சந்தோசமாகக் களத்தில் இறங்கி ஆச்சிக்கு உதவ
ஒப்புக் கொண்டு விட்டார்.

"அண்ணே,நமக்கு மூலம், ஆயில்யம் வேண்டாம்.ஜாதகம் பொருந்த வேண்டும்.
பெண் அழகாக இருக்க வேண்டும். ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும்"
என்று சொல்லி, அட்வான்ஸாக அவருக்கு ரூபாய் ஐயாயிரமும் கொடுத்து
விட்டார்கள்.

ஆச்சியின் கணவர் கருப்பையா செட்டியாருக்கு சேலத்தில் நான்கு ரூட்
பஸ்களும், பத்து லாரிகளும் கொண்ட ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனி இருந்தது.
ஃபேர்லண்ட்ஸ் பகுதியில் பெரிய வீடு. எல்லாம் அவர் உழைத்துச் சம்பாதித்தது.
அவர் அந்த ஊரிலேயே சிறுவயதில் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியிலும், பிறகு
அரசு கலைக் கல்லூரியிலும் படித்தவர். அவர் தலையெடுத்தவுடன் தன் தந்தை
யார் நடத்திய வட்டிக்கடைத் தொழில் அந்த நேரத்தில் சட்ட திட்டங்களால்
நசியும் நிலையில் இருந்ததாலும் ஒரு நண்பனின் அறிவுரையாலும் இந்தத்
தொழிலுக்கு வந்து சாதனை படைத்திருந்தார்.

அவர்களுக்கு ஒரே மகன். ஆள் வாட்ட சாட்டமாக இருப்பான். படிப்பைத் தவிர
மற்ற எல்லா வேலைகளிலும் கெட்டிக்காரன். எப்படியோ தத்தித் தத்திப் படித்துக்
கல்யாணத்திற்கான ஒரு டிகிரி வாங்கி விட்டான். அதற்குப் பிறகு அவனைப்
படிக்க வைப்பது பணத்துக் கேடு என்று செட்டியாரும் அவனைத் தன் டிரான்ஸ்
போர்ட் தொழிலுக்குக் கூட்டிக் கொண்டு விட்டார். அவனுக்கும் வயது இருபத்
தைந்தாகி விட்டது.

அவரும் அவனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக,ஒரு பத்து இடங்களி
லாவது முயற்சி செய்திருப்பார்.இதுவரை ஒன்றும் அமையவில்லை.சரி, நேரம்
வந்தால் நடக்கும் என்று அவரும் கவலைப் படுவதை விட்டு விட்டார்.

ஆச்சியின் தேடல் அறிந்து அவரும் ஆச்சியை, நாசுக்காக எச்சரித்தார்

"வள்ளியம்மை, நமக்குத் தகுந்த மாதிரிதான் நாம் பெண் பார்க்க வேண்டும்.
அதை விட்டு விட்டு, நீ கோடி கோடின்னு அலையறது நல்லாயில்லை!"

"என்ன நல்லாயில்ல சொல்லுங்க?"

"டாக்டர் அல்லது எஞ்சினியருக்குப் படிச்சிருந்தாலாவது பரவாயில்லை - நம்ம
பையன் வெறும் பி.ஏ. டிகிரி. கோடி ரூபாய் கொடுக்கிறவன் அதைப் பார்க்க
மாட்டானா சொல்லு?. அதோட நமக்கு சொத்துமிருக்கு, வங்கியில வாங்கின
கடனும் இருக்கு. அதனால பொண்ணு கொடுக்க வர்றவன் அதையெல்லாம்
விசாரிச்சுத் தெரிஞ்சுக்க மாட்டானா? எனவே உனக்குக் கோடி ரூபாய்த்தோதில்
எப்படிப் பொண்ணு கிடைக்கும்?"

"அதெல்லாம் கிடைக்கும், பழநியாண்டவருக்கு நூற்றியொரு ரூபாய் எடுத்து
முடிஞ்சுவச்சிட்டுத்தான் காரியத்தில இறங்கியிருக்கேன். அவரு முடிச்சுக்
கொடுப்பாரு!"

அதோடு சரி. செட்டியார் அதற்குப் பிறகு தன் வாதங்களை நிறுத்திக் கொண்டு
விட்டார். கூடவே ஒரு சந்தேகமும் வந்தது. பழநியாண்டவர் இதற்கெல்லாம்
துணை வருவாரா என்ன? பார்க்கலாம் என்று முடிவு செய்து விட்டார்.

தரித்திரம் தந்தியில் வரும்:.அதிர்ஷ்டம் அஞ்சலில் வரும் என்பார்கள்.
வள்ளியம்மை ஆச்சிக்கு அதிர்ஷ்டமும் தந்தி போல விரைந்து வந்து விட்டது.

ஆச்சி அவர்கள் பார்த்துப் பேசிவிட்டு வந்த மறு வாரமே, காரைக்குடித் தரகர்
ஒரு நல்ல செய்தியோடு வந்து சேர்ந்தார்.

இரண்டு லெட்ச ரூபாய் கமிஷன் என்றால் சும்மாவா? அவர் இரவு பகல் தூக்கம்
விடுத்து, விடாமுயற்சியுடன் தேடி, ஒரு பெரிய இடமாக,அதுவும் ஆச்சி அவர்
களின் நிபந்தனைகளுக்குத் தோதாகப் பிடித்துக் கொடுத்துவிட்டார்.

குமரகிரிமலை முருகன் சந்நிதானத்தில் பெண் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
இரு வீட்டாரும் சந்தித்துப்பேசி அங்கேயே திருமணத்தைக் கெட்டி செய்து
கொண்டு விட்டார்கள்.

அடுத்துவந்த ஒரு நல்ல நாளில் செந்தில்நாதன், செல்லம்மை இருவரின்
திருமணமும் இனிதே நடந்து முடிந்தது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தன் மகனின் திருமணம் முடிந்த பிறகு, எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணி
விட்டு, குலதெய்வக்கோயில், குன்றக்குடி, மற்றும் ஊருக்கு அருகில் உள்ள
எல்லாக் கோவில் களுக்கும் சென்று விட்டுப் புதுமணத் தம்பதிகளுடன்
ஒருவாரம் கழித்துதான் ஆச்சி சேலத்திற்குத் திரும்பினார்கள்.

ஆச்சியின் கணவர் கருப்பையா செட்டியார், தன்னுடைய வயதான பெற்றோர்
களுடன், திருமணம் முடிந்த இரண்டாம் நாளே புறப்பட்டு வந்து விட்டார்.

புதுமணத் தம்பதியருடன் தன் வீட்டிற்கு ஆச்சி வந்தவுடன், வீட்டிலிருந்த
சமையல்காரர், தோட்டக்காரர், காவல்காரர், மேல் வேலைகளைச் செய்யும்
பெண்மணி, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று அனைவரும் ஒன்று
சேர்ந்து ஆரத்தி எடுத்து அமர்க்களப்படுத்தி விட்டார்கள்.

அன்றையப் பொழுது இனிதாகக் கழிந்தது.

அடுத்த நாள் காலையில், வீட்டின் மாடியில் உள்ள தங்கள் அறைக்கு,
காப்பி கொண்டு வந்த சமையல்காரரிடம் மருமகள் செல்லம்மை கேட்டாள்.

”டிபன் என்ன?'

அவர் சொன்னார், "ஆச்சிக்கும், செட்டியாருக்கும் இட்லி, புளி வெங்காயச்
சட்னி, வயசானவுக ரெண்டு பேருக்கும் கோதுமை உப்புமா, தேங்காய் சட்னி,
உங்களுக்கும், செந்தில் தம்பிக்கும் நெய் தோசை!"

உடனே செல்லம்மை சொன்னாள்,"எனக்கு இட்லி தோசை யெல்லாம்
பிடிக்காது. காலையில், நூடில்ஸ், பிரெட் டோஸ்ட்டுடன் ஆம்லெட், வெஜி
டபிள் பர்கர் இப்படி ஏதாவது ஒன்றைப் பண்ணுங்கள். தொட்டுக்கொள்ள
தக்காளி சாஸ் இருந்தால் போதும்!"

அவரும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அதுபோல மதியத்திற்கும், இரவிற்கும் தனக்கு என்னென்ன வேண்டும்
என்று ஒரு பட்டியலைச் செல்லம்மை கொடுத்துவிட்டாள். பட்டியலிருந்து
இரண்டு, மூன்று அயிட்டங்களை அவ்வப்போது செய்யுங்கள்.என்றும்
சொல்லி விட்டாள். அந்தப் பட்டியலில் கார்ன் ப்ளவர் சூப், வெஜிடெபிள்
சாலட், புலவு சாதம், நான், கோபி மஞ்சூரியா, ஃபிங்கர் சிப்ஸ்,
தால் கிரேவி, பலக்பன்னீர், சிக்கன் 65, சில்லி சிக்கன் என்று ஏகப்பட்ட
அயிட்டங்கள் இருந்தன.

செட்டிநாட்டுப் புகழ் கெட்டிக் குழம்பு, சாம்பார், வற்றல் குழம்பு வகை
யறாக்கள் மட்டும் அதில் இல்லை!

வள்ளியம்மை ஆச்சியின் காதிற்கு இது எட்டவும், வந்தவுடன் ஒன்றும்
சொல்ல வேண்டாம், பத்து நாட்கள் போகட்டும் சரி பண்ணிக் கொள்ளலாம்
என்று இருந்து விட்டார்கள். அதோடு முடிந்ததை வீட்டில் செய்யச் சொல்லி,
தெரியாததை அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து
வைக்கச் சொல்லி விட்டார்கள்.

அதேபோல் வந்த புதுப்பெண், காலையில் ஒரு காட்டன் புடவை கட்டுவாள்.
மாலையில் வேறு ஒரு புடவை கட்டிக் கொள்வாள். அடுத்த நாள் காலை
அனைத்து ஆடைகளும் துவைப்பதற்கு வந்து விடும். அதையும் பத்து
நாட்கள் செல்லட்டும் என்று ஆச்சி சகித்துக் கொண்டிருந்தார்கள்.

பத்து நாட்கள் செல்லவில்லை. எட்டாவது நாளே ஒரு பிரச்சினை
அதிரடியாக உள்ளே வந்து விட்டது.

அன்று பெரிய செட்டியாருக்கு, அதாவது வள்ளியம்மை ஆச்சியின்
மாமனாருக்கு ஜென்ம நட்சத்திர தினம். வீட்டிலுள்ள பெரியவர்கள்
நால்வரும் அதிகாலையிலே எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்
கொண்டு, கடைவீதியிலுள்ள ராஜகணபதி கோவிலுக்குச்சென்று,
சர்வ அலங்காரங்களுடன் அருள் பாலித்த விநாயகப் பெருமானைத்
தரிசித்து விட்டுத் திரும்பினார்கள்.

ஆச்சியின் மகன் புதிய பஸ் ரூட் ஒன்றின் விஷயமாகச் சென்னைக்குச்
சென்றிருந்தான். மகமிண்டி (மருமகள்) வீட்டிற்கு விலக்கு, ஆகவே
அவர்களுடன் கோவிலுக்குச் செல்லவில்லை.

எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து காலைப்பலகாரம் சாப்பிடலாம்
என்பதற்காக தன் மருமகளைக் கூப்பிட ஆச்சி மாடிக்குச் சென்றார்கள்.

நல்ல வேளை! மருமகள் எழுந்து குளித்து முடித்து விட்டு, நடுவில் இருந்த
ஹாலில் அமர்ந்து முடியலங்காரம் செய்து கொண்டிருந்தாள்.

ஆச்சி ஹாலின் நுழைவாயிலில் நின்றவாரே, "இஞ்சே..!" என்று கூப்பிட்
டார்கள். ஒரு முறையல்ல மூன்று முறைகள் கூப்பிட்டுப் பார்த்தார்கள்.

செல்லம்மை எந்தவித சலனமும் இன்றித் தன் வேலையைச் செய்து
கொண்டிருந்தாள்.

ஆச்சி அவளருகே சென்று, குனிந்து, அவளுடைய தோளைத் தொட்டுத்
திருப்பிச் சற்றுக் கடுமையான குரலுடன் கேட்டார்கள்.

"எத்தனை தடவை உன்னைக் கூப்பிட்டேன். காதில் விழுந்ததா - இல்லையா?"

அவள் திரும்பிப் பார்த்து ஒரு முரை முறைத்து விட்டு, கணீரென்று குரல்
கொடுத்துப் பதிலுக்குக் கேட்டாள்.

"என்ன சொல்லிக்கூப்பிட்டீர்கள்?

"........................."

"இஞ்சே என்று கூப்பிட்டீர்கள். என் தாய் வீட்டில் எனக்குப் பெயர் வைக்க
வில்லையா? ஏன் நீங்கள் என் பெயரைச் சொல்லிக் கூப்பிடவில்லை?
நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா - உங்கள் இஷ்டம்போல
கூப்பிட?

இதற்கும் ஆச்சி அவர்கள் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தார்கள்.

"நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒன்றும் உங்கள்
வீட்டிற்கு வேலைக்காரியாக வரவில்லை. மருமகளாக வந்திருக்கிறேன்.
அதுவும் எப்படி? இருபத்தேழு வருடங்களுக்கு முன்னால் பலவிதக்
கனவுகளோடு, நீங்கள் எப்படி இந்த வீட்டிற்கு மருமகளாக
வந்தீர்களோ அப்படித்தான் நானும் வந்திருக்கிறேன்.
ஆகவே முதலில் மருமகளின் உணர்வுகளை மதிக்கக்
கற்றுக் கொள்ளுங்கள்!" என்று அவள் ஒரு போடு போட்டாளே பார்க்க
வேண்டும்.

வள்ளியம்மை ஆச்சி திகைத்துப்போய் ஒன்றும் சொல்லாமல், திரும்பிக்
கிழே வந்து விட்டார்கள்.

அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் முக்கியமில்லை.

மருமகள் ரெடியாகவில்லை என்று ஆச்சி சொல்ல, அனைவரும் பலகாரம்
சாப்பிட்டு முடித்தார்கள்.

சற்று நேரம் கழித்து, தன் அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகிக்
கொண்டிருந்த தன் கணவரை, அவருடைய அறையிலேயே சந்தித்து,
ஆச்சி பேசத் துவங்கினார்கள்.

"ஒரு சின்ன வேண்டுகோள்"

"என்ன வள்ளியம்மை! எதற்கு வேண்டுகோளெல்லாம்? விஷயத்தைச்
சொல்லு!"

"இந்தப் பகுதியிலே ஒரு நல்ல வீடு அல்லது ப்ளாட்டாகப் பாருங்கள்.
விலைக்குக் கிடைத்தாலும் சரி அல்லது வாடகைக்குக் கிடைத்தாலும்
சரி, ஆனால் மூன்று நாட்களுக்குள் வேண்டும். மகனையும், மருமகளை
யும் தனியாக விட்டு விடுவோம்!"

"ஏன் என்ன ஆயிற்று, திடீரென்று?"

"எனக்குள்ள மன உளைச்சல் எனக்குத்தான் தெரியும்.அதை அப்புறம்
விவரமாகப் பேசுவோம்.முதலில் நீங்கள் வீட்டிற்கு ஏற்பாடு பண்ணுங்கள்.
அவர்களைத் தனிக் குடித்தனம் வைத்து விடுவோம்."

இந்த இடத்தில் சற்றுப் புன்னகை செய்த செட்டியார், நக்கலாகச்
சொன்னர், "நாமே இன்னும் தனிக்குடித்தனம் போகவில்லை. என்
பெற்றோர்களுடன் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அதுகள் சின்னஞ்
சிறுசுகள். எதானாலும் பொறுத்துக் கொள். ஒரு வருடம் அல்லது
இரண்டு வருடம் ஆகட்டும், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும்,
அதற்குப் பிறகு தேவைப்பட்டால் அனுப்புவோம்"

இதற்குப் பிறகும் சும்மா சொன்னால் எடுபடாது என்று நினைத்த ஆச்சி,
மருமகள் வந்த நாளாக வீட்டில் நடந்ததையும், இன்று காலையில்
நடந்ததையும் எடுத்துச் சொல்ல, விஷயத்தின் தன்மையைப் புரிந்து
கொண்ட செட்டியாரும் சரி என்று தன் ஒப்புதலைத் தெரிவித்து விட்டுத்
தன் அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.

புறப்படும் முன்பு ஒன்றைச் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டார்.

"வள்ளியம்மை! ஞானி ஒருவன் சொன்னான், பணத்திற்காக ஒரு
பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளாதே! - பணம் குறைந்த
வட்டிக்கு வெளியே கிடைக்கும் என்றான்! அது உண்மைதான்
என்பதைத் தெரிந்து கொள்ள நம் வீட்டிலேயே இப்படி நடந்து விட்டது.
பணத்தோடு பெண் வேண்டுமென்றுதான் நீ பழநியாண்டவரை
வேண்டிப் பணத்தை முடிந்து வைத்தாயே தவிர, குணமான பெண்
வேண்டு மென்று முடிந்து வைக்க வில்லை. நீ கேட்டதைக்
கேட்டபடியே அவர் கொடுத்திருக்கிறார்."

ஆச்சி அதிர்ந்து போய் செட்டியார் கூறும் சத்தியமான வார்த்தைகளில்
மெய்மறந்து நிற்க, அவர் தொடர்ந்து சொன்னார்.

"நீ கோடியில் ஒரு பெண் வேண்டுமென்று கேட்டாய்: அவர் கோடியில்
ஒரு காலை ஒடித்து விட்டு ஒரு பெண்ணைக் கொடுத்திருக் கின்றார்
- நீ பட்டுத் திருந்தட்டும் என்று! கோடி என்ற சொல்லில் ஒரு காலை
ஒடித்தால் என்ன வரும்? கேடி என்று வரும்! கேடி என்றால் போக்கிரி
என்று பொருள்படும்! நீ சுலபமாக அவளைத் தனிக் குடித்தனம்
வைத்துத் தப்பிக்க நினைக்கலாம்.அதில் தவறில்லை! ஆனால்
நம் மகனை நினைத்துப்பார்! இவளுடன் அவன் எப்படிக் காலம்
தள்ளுவான்?"

ஆச்சியால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை! கண்ணில்
நீர் பெருக, கைகள் இரண்டையும் கூப்பி அவரை வணங்கினார்கள்.

"என்னைக் கும்பிடாதே! மீண்டும் அந்தப் பழநியாண்டவரையே
கும்பிடு! அவர் அவளைத் திருத்தி நம் மகனுக்கு ஒரு நல்ல
வாழ்க்கையைக் கொடுக்கட்டும்!" என்று அழுத்தமாகச் சொன்ன
கருப்பையா செட்டியார் விருட்டென்று எழுந்து போய் விட்டார்.

அதிர்ந்துபோய் அருகில் இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்த வள்ளியம்மை
ஆச்சி தன் நிலைக்கு வருவதற்கு நெடுநேரம் ஆயிற்று!

ஆச்சியின் மனவேதனைக்கு விளக்கமளிக்கும் விதமாக வெளியில்
இருந்த பெரிய செட்டியார் கை வானொலிப் பெட்டியில் இருந்து
பாட்டொன்று ஒலித்துக்கொண்டிருந்தது.

"எத்தனை கோடிப் பணமிருந்தாலும்
நிம்மதி வேண்டும் வீட்டிலே!
நிம்மதி வேண்டும் வீட்டிலே!

உத்தமமான மனிதர் களைத்தான்
உலகம் புகழுது ஏட்டிலே!
உலகம் புகழுது ஏட்டிலே!"

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், உறவு, பிரிவு, வறுமை,
செழுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் சின்ன
வயதிலேயே பட்டுணர்ந்த ஞானி எழுதிய பாடல் அது! ஆமாம்
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வைரவரிகள் அவை!
எத்தனை தீர்க்கதரிசனம் அவருக்கு!