அந்த அதிகாலைப்பொழுதில் பரபரப்பாக எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தார்கள்.

இடம்-ஒரு சாப்ட்வேர் கம்பனி தமிழில் சொல்வதானால் மென்பொருள் நிறுவனம்..

ஜாவா,ப்ரோக்ராம் டெட்லைன், அவுட் சோஸிங் ,வைரஸ் பெக் அப் போன்ற வார்த்தைகளுக்கு நடுவே இரண்டு சாப்ட்வேர் என்ஜினியர்ஸ்கள் சன்னமான குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள்..

“பொண்ணு பேரு திவ்ய லட்சுமி தேவி அய்யங்கனார்
ஊரு பாளையங்கோபுரத்துக்கு பக்கத்திலுள்ள சில்லைவெளிக்கிராமம்”

என்னடா மச்சான் உளர்ரியாடா..என்று ரமேஸ் தன் நண்பன் சிவாவிடம் அதட்டிக்கேட்டான்..

"இல்ல மச்சான்..உண்மைதான்டா"

பேரப்பாரு திவ்ய தேவி........
ஊரு அத விட மோசம்..அடக்கடவுளே...நீயெல்லாம் ஒரு என்ஜினியராடா..??என்கிட்ட சொன்ன மாதிரி வெளியில யாரிடமும் சொல்லிராதடா..நாறிப்போகும் என்று குமுறிய நண்பனை பார்வைகளால் ஆசுவாசித்தான் சிவா என்கிற சிவராமன்.

"இல்லடா ரமேஸ்..என் மனைவி கீதாவும் ஓ.கே சொல்லிவிட்டாள் மச்சான்"என்ற சிவாவை சிறிய கலவரத்துடன் பார்த்தான் ரமேஸ்.

"ஆமாடா..கீதாவை எப்படியோ சம்மதிக்க வெச்சுட்டன்..அந்தப்பொண்ண நிறையப்பேரிடம் விசாரிச்சுப்பார்த்தன்..தங்கமான பொண்ணாம் அப்பா செத்துட்டாராம் அம்மாவுக்கும் உடம்புக்கு முடியாமல் படுத்த படுக்கையர்ம் பாவமாப்பேனதாலதான் டா......"சொல்லிக்கொண்டே போன சிவாவை இப்போது முறைத்துப்பார்க்கத்தொடங்கினான் ரமேஸ்..

அதைப்பற்றி எந்தக்கவலையுமின்றி சிவா தொடர்ந்து பேசினான்..

"ஆமாம் மச்சான்..கல்யாணம் பண்ணின நாளிலிருந்து என்னோட கீதாதான் எல்லா வேலையையும் தனியாப்பார்க்கிறாள்..அவளுக்கு சமையல் கூட இன்னும் பிடிபடல..அதான் வீட்டுக்கு நம்பிக்கையான ஒரு வேலைக்காரி தேடி திவ்ய லட்சுமியை பிடித்தேன்..நாளையிலிருந்து வேலைக்கு வரச்சொல்லிட்டன்" என்று சொல்லி முடித்த நண்பன் சிவாவை இப்போதுதான் திருப்தியாகப்பார்த்தான் ரமேஸ்..

இருவரும் பேச்சை நிறுத்திவிட்டு அவரவர் வேலைகளில் மூழ்கத்தொடங்கினார்கள்.