கால மயக்கம்

துளித்துளியாய்
உடல் வருடி
இதமான சிலிர்ப்பினை
பிறக்கச்செய்யும்
மிதமான தென்றலும்
கடிகாரம்தான்.
தொடரும் அதன்
ரிதத்தினால்..,

தென்றலும்,
வெறுமையும்,
அமைதியும்,
ஒரே அளவையால்
அளக்கப்படுமெனில்
கடிகாரம்
காலத்தை
விரைவாக கழிக்கிறது..,

பயணங்கள்
காலங்களால் வகுக்கப்படுவதே
வாழ்க்கையெனில்
சில காலங்களை
கரைத்துவிடும்
பரவச மாயைக்கும்,
ஆயுளுக்கும்
வழக்கு என்ன?

ஒவ்வொரு சுவாசமும்
மரணமென்றால்,
ஒவ்வொரு நொடியும்
வயது என்றால்,
காலத்தை மறப்பதே
மாயையென்றால்,

எங்கேயோ
வேண்டப்படாத அமைதியும்,
கூட்டப்படாத நொடிகளும்,
கற்றலில் உதிக்காத
அனுபவமும்,
கனவினில் தோற்காத
வெற்றிகளும்,
காலச்செலவின்றி கிடைப்பதுபோல்
"மாயை" செய்யுமெனில்,

ஒரு
புயல் வீசிச்சென்ற
காயமும்
கடவுள் செய்யும்,
காலம் கொல்லும்...,

-குளிர்தழல்.