அறிவியல் மைல்கற்கள் - 34

மின்சார மன்னன்


அலெசாண்ரோ வோல்டா (Alessandro Volta) 1745 -1827


--------------------------------------
அ.மை. 33 : தடுத்தாண்டவர் இங்கே
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16912
--------------------------------------------------------



ஒரு பட்டனைத் தட்டினா....!? என்னென்ன நடக்கணும்?

விஞ்ஞானத்த வளக்கப்போறேண்டி பாடலில்
என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் போடும் பட்டியல் எத்தனை!

அத்தனையும், அதையும் தாண்டியும் - பட்டனைத் தட்டினால்
வரும் மின்சக்தியால் இன்று நம் வாழ்வில்!

இன்று மின் தடை என்றால் கொந்தளிக்கும் அளவுக்கு
நம் வாழ்வில் பின்னிப்பிணைந்துவிட்ட மின்சாரம்..

அணுசக்தி மூலமாவது அதிகம் செய்து சேமிக்க நாம் துடிக்கும்
இன்றியமையாத பொருளாதார முன்னேற்றச் சாரம்..

இதைச் சேமித்து பயன்படுத்த முதல் படி அமைத்தவரே
இந்த 34வது மைல்கல் நாயகர்!

---------------------------------------------------------------------



வடக்கு இத்தாலியில் ஒரு வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பம்.
அக்குடும்பத்தில் 1745-ல் பிறந்தார் வோல்டா.

படிப்பு முடித்து, பிழைப்புக்காக பள்ளி ஆசிரியர் ஆனார்.
பணி - கணக்குக் கற்பிப்பது.
பாசம் - அறிவியலில், குறிப்பாய் மின்சாரத்தில்!



அவர் ஊரில் ஒருவீட்டில் முதல் இடிதாங்கி அமைக்கப்பட்டது.
பல்வேறு உலோகங்கள், பொருட்களின் மின்பண்புகளை அவர்
தீவிரமாய் ஆராய்ந்தார். நிலைமின்சாரம் ( Static Electricity) பற்றி
பல கட்டுரைகள் எழுதினார்.

ஒருமுறை சீண்டினால் கொஞ்சம் மின்சாரம் ஒருமுறை மட்டும் பாய்ச்சும்
கலன் அமைத்தார் - அதற்கு electrophorus எனப் பெயரிட்டார்.

சீமான்களை, சீமாட்டிகளை அழைத்து அக்கரூவியைக் காட்டி,
இன்ப 'அதிர்ச்சிகள்' கொடுத்து பிரபலமானார்.

ஆனால், கவனமாய்க் கட்டிய தீக்குச்சிக் கட்டடத்தை கணத்தில் கலைப்பதுபோல்
நேரமெடுத்து சேமித்த மின்சாரம் நொடிக்குள் தீர்ந்துவிடும் இவ்விளையாட்டால்
என்ன பயன் என யோசித்தார்.

அதிக அளவில் மின்சேமிப்பு.. பின் வேண்டும் நேரம் அதில் இருந்து மின்வரவு..
இப்படி ஒரு கருவியே வோல்டாவின் கனவு!


மின் -முன்னோடி!

வோல்டா மின்(சேமிப்புக்)கலன் - பேட்டரியை வடிவமைத்த கதை அறியும் முன்
அவர் முன்னோடி கால்வானி ( Luigi Galvani) பற்றி அறிவது அவசியம்.

தவளையின் காலை பித்தளைக் கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டால்
அதன் தசை ( செத்தபின்னும்) துடிப்பதைக் கண்டு சொன்னவர் கால்வானி.

துடிப்புக்குக் காரணம் - தசைகொண்ட நரம்பின் மின்பண்பு என்றார் கால்வானி.
வோல்டா அதை மறுத்து, மாட்டப்படும் உலோகக் கம்பியின் மின் தாக்கமே என்றார்.
இரு வேறு உலோகக் கம்பிகள் தசையைத் தொட்டால், அது இன்னும் அதிகம் துடிப்பதைக் கண்டார்.

மின்சாரத்துக்கும் உலோகத்துக்கும் உள்ள உள்ளுறவை வோல்டா தெள்ளக் கண்டார்!

நாம் உணவுச் சுவை அறிய மட்டும் பயன்படுத்தும் நாக்கு, வோல்டாவுக்கு இன்னொரு
பண்பறிந்து சொல்லி பெருமை கொண்டது.. ஆம்..!
பல உலோகப் பட்டைகளைத் தம் நாவின் நுனியில் வைத்து வைத்து ,
வந்த மின்னதிர்வின் அளவைக் கொண்டு, இன்னும் இவ்வுறவை அளந்தார்.
துத்தநாகம் ( Zinc), வெள்ளி(Silver) - மின்பண்பில் முதல் இரண்டு இடம் என (நாவால்) உணர்ந்தார்.

எலக்ட்ரிக் ஈல் எனப்படும் மீன் போலவே ''டார்பெடோ'' என்ற மீனும்
தன்னைத் தாக்குபவரை மின் அதிர்ச்சி கொடுத்து விரட்டும் - எனக் கேள்விப்பட்டார் வோல்டா.

டார்பெடோ மீனை ஆராய்ந்தார் - மாறி மாறி வேறு வேறு வகை வட்டில்கள் (discs)
அடுக்கப்பட்ட அங்கமே மீனின் மின்சேமிப்பு வங்கி எனக் கண்டவுடன்..
வோல்டா சிந்தையில் பேட்டரிக்கான பொறி உருவாகிவிட்டது..

துத்தநாகம், வெள்ளியால் ஆன வட்டில்களை முப்பது முப்பதாய் மாறி மாறி அடுக்கி,
இடையில் தோல் தட்டுகளை இட்டு,
அவை இட்ட தொட்டியை உப்புநீரால் நிரப்பி
மேல்-அடித் தட்டுகளை கம்பியால் பிணைத்தார்.

இது ஒரு முறை மட்டும் அதிர்ச்சி தரும் புஸ்வாண வேடிக்கைப் பொறி (ஸ்பார்க்) இல்லை..
தொடர்ந்து மின்சக்தி கிடைத்தபடியே.........................

ஆம், உலகின் முதல் பேட்டரி உருவாக்கப்பட்டுவிட்டது நண்பர்களே!




1799-ல் இச்சாதனையை வோல்டா நிகழ்த்திய நேரம்.
அவர் நாட்டை நெப்போலியன் ஆக்கிரமித்ததும் நடந்தது.
சாதகமான அரசியல் சூழல் வரும் வரைக் காத்திருந்து, நெப்போலியன் பின்வாங்கியபின்
1800 -ல் உலகுக்கு இதை வோல்டா அறிவித்தார்.

அடுத்த ஆண்டே நெப்போலியன் இவர் நாட்டை மீண்டும் பிடித்தாலும்,
தோற்ற நாட்டின் அறிவுத்தோன்றலான வோல்டாவை பாரீசுக்கு அழைத்து
பிரபுத்துவமும், பெரும்பணமும் அளித்து கவுரவித்தான்.

அதன்பின் , 1827-ல் மறையும் வரை வோல்டாவுக்கு பேரும் புகழும்
பல நாட்டு விஜயம், விருதுகள் எனவும் தொடர..
கெட்டு, பின் வாழ்ந்த குடும்பம் எனப் பெருமிதம் நிரம்பிய வசந்தம்தான்.

அந்த வசந்த நாயகரை நினைவுகூர இம்மைல்கல்லருகே சற்றே நின்று, பின்
பயணம் தொடர்வோம்... தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே!

நன்றி!