தமிழகம் மிக ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தான். ஒருவேளை அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி, கொடி என்று தமிழகமே களை கட்டத் தொடங்கிவிடும்.

பி.எம்.கே ( பாரத முன்னேற்ற கழகம்) எனும் புதுக்கட்சிக்கு ரஜினி தலைவராகி, மஞ்சள் கறுப்பு எனும் கொடியின் மத்தியில் ரஜினி அமர்ந்திருப்பது போல் கொடி தயாரிக்கப்பட்டு பட்டி தொட்டியெல்லாம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தலைப்பு செய்திகளில் இடம் பெறக்கூடும்.

உலகத் தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழகம் நோக்கி படை எடுப்பார்கள்.ஜப்பானில் வெடிச்சத்தம் முழங்க ஊர்வலம் துவங்கி தமிழகம் நோக்கி வரலாம்.

மத்தியிலுள்ள ஆளும் கட்சி ப.சிதம்பரத்தையும் பி.ஜே.பி துக்ளக் ஆசிரியர் சோவையும் தூதனுப்பி கூட்டணி வைத்துக்கொள்ள ரஜினியின் ஒரு குரலுக்கு காத்திருப்பார்கள்.

வசை பாடியபடியே ஜெயலலிதாவும், ஸ்டாலினும், விஜயகாந்தும், ராமதாசும் தோல்வி பீதியில் நெளிய ஆரம்பிப்பார்கள். அனைத்து கட்சியிலிருந்தும் சிலர் கழண்டு ரஜினி கட்சியில் சேர்வார்கள்.

தேர்தல் நேரத்தில் ரஜினி இமயமலைக்குச் சென்றால் கூட முன்பு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என்று பிரச்சாரம் செய்ததுபோல் ரஜினி இமயமலையில் இருந்தாலும் ஜெயிப்பார் என்ற பிரச்சாரம் தமிழகமெங்கும் ஒலிக்கும்.

தமிழக ரஜினி ரசிகர்களுக்கு ரஜினி அரசியலுக்கு வந்ததே ஒரு மாபெரும் இனிப்பு செய்தி என்ற குதூகலத்தில் இருப்பார்கள். இதற்கு முன்பு வரை தி.மு.க, ஆ.தி.மு.க ஆண்ட காலங்களில் மக்களுக்கு அதிருப்தி ஏற்ப்பட்டு தமிழகத்தை தலைநிமிர்த்த எம்.ஜி.ஆரைப்போல ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை என்று அடையாளப்பட்டவர் தான் ரஜினி

தனது ஸ்டையில் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை தன்வசப்படுத்தி இந்தியாவிலேயே அதிக ரசிகர்களையும் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் வலம் வருபவர் ரஜினி.

ரஜினி தமிழகத்தை ஆண்டால் ஏழை எளிய மக்கள் பயன் அடையக்கூடிய வகையில் எம்.ஜி.ஆரைப்போல நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஏழை மக்களின் வாழ்வு வளம் பெற ரஜினி எதையாவது செய்வார் என்று கனவு கண்டனர் அவரது ரசிகர்கள்.

ஆனால் ரஜினியோ அரசியல் சாக்கடையில் விழுந்தால் தான் ஒருவன் மட்டும் நல்லவனாக இருந்தாலும் தன் கட்சியிலுள்ளவர்கள் லஞ்சம், ஊழல், அதிகார துஸ்பிரயோகம் என்று சிக்கிகொள்ளும்போது தனது பெயரும் அடிபட்டு இதுவரை ரசிகர்களிடமிருந்த அன்பும் ஆதரவும் பறிபோய்விடுமோ என்ற தயக்கத்தில் கட்சி என்ற விசயத்தில் மௌனமே பதிலாக இருந்தது


தமிழகத்தில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்று அப்பொழுது ஒரு ரகசிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயில் ரஜினி ஒரு சிறந்த நடிகர் அவர் அரசியலில் விழுந்து தனது செல்வாக்கை இழக்கப் போகிறார் அவருக்கு அரசியல்வாதிகளைப்போல பொய், பித்தலாட்டம், வாக்குறுதி தந்து ஏமாற்றுவது, அந்தர் பல்டி அடிப்பது இது எதுவுமே ரஜினிக்கு தெரியாது, அவர் ஒரு சொக்கத்தங்கம் அவருக்கு அரசியலில் தலைவராகும் தகுதி இல்லை என்றே அடித்து கூறியது

ரஜினியும் இதுதான் உண்மை என்று நம்பி அரசியல் ஆருடம் கணிக்கும் போதெல்லாம் இமயமலைக்குச் சென்று அமைதி காண்பார். காலம் உருண்டோடினாலும் தமிழக ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை.எப்படியாவது அரசியல் சாக்கடையில் அவரை தள்ளி விடவே காத்திருந்தனர்.
அந்த எண்ணம் தற்பொழுது ரஜினிக்கு கை கூடி வந்திருக்கிறது.

தற்பொழுது எடுத்த ரகசிய சர்வேயில் ரஜினிக்கு தலைவராகும் தகுதி உண்டா என்ற கேள்விக்கு நூற்றுக்கு எண்பது சதவிகிதம் பேர் ரஜினிக்கு தலைவர் ஆகும் முழுத் தகுதி உண்டு என்று அடித்துச் சொல்கிறார்கள்

அரசியல் நடத்த அடிக்கடி பொய் மூட்டைகளை அள்ளி விட வேண்டும், முரண்பாடுகளின் மூட்டையாக வாய்க்கு வந்தபடி எதையாவது உளற வேண்டும், ஒரு தடவை சொன்ன விசயத்தை திருப்பி கேட்டால் நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று அந்தர் பல்டி அடிக்கவேண்டும்.

வாக்குறுதிகளை அள்ளி வீச வேண்டும் அதை நிறைவேற்ற தருணம் வரும்பொழுது நான் எப்போ சொன்னேன் என்று திருப்பி கேட்க வேண்டும். தெளிவற்ற பேச்சும் கொள்கையில் உறுதியும் இல்லாமலிருக்க வேன்டும். இதுதான் ஒரு அரசியல்வாதியின் இன்றைய முகம்.

இவை அனைத்தும் தற்பொழுது ரஜினியிடம் அமைந்துள்ளது. எனவே அரசியலில் தலைவராகும் தகுதி ரஜினிக்கு கட்டாயம் உண்டு. இதற்கு சமீபத்தில் அவர் அடித்த அந்தர் பல்டிகள் உதாரணமாக உள்ளது.

ஓக்கேனக்கல் பிரச்சனையில் ரஜினி பேசிய வார்த்தையால் தமிழர்கள் ஒவ்வொருவரின் இதயங்களும் குளிர்ந்தது ஆனால் குசேலன் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட வேண்டி அவர் பேசிய வார்த்தைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு நீண்ட ஒரு கடிதத்தை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார் இப்படி அந்தர் பல்டி அடித்ததால் அரசியலுக்கு தகுதியானவர் என்ற பட்டம் அவரை போய் சேர்கிறது

நான் எப்ப வருவேன் எப்பிடி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன் என்று ஒரு திரைபடத்தில் வசனம் பேசினார். ரஜினி ரசிகர்களும் அதை உண்மை யென்று நம்பி இத்தனை வருடம் காத்திருந்தனர்.

சமீபத்திய குசேலன் திரைப்படத்தில் அது யாரோ ஒரு ரைட்டர் எழுதிய வசனம் அதை நான் பேசி இருக்கேன் அதை உண்மையின்னு நீங்க எடுத்துகிட்டா நான் என்ன செய்யறது என்ற பதில் மூலம் ஒரு உண்மையான அரசியல்வாதியின் முகம் அவரிடம் பளிச்சிட்டது. இப்படி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் தலைவராகும் தகுதி அவரிடம் ஒட்டிக்கொண்டுவிட்டது

அரசியல் கட்சி தலைவர்கள் தவறாக எதையாவது பேசினால் தயங்காமல் மன்னிப்பு கேட்கவேண்டும் மக்கள் குளிர்ந்து போவார்கள் அந்த வகையில் ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடகத்திடமும், குசேலன் படத்தில் பேசிய வசனத்திற்க்காக ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டிருக்கிறார் ரஜினி. இப்படி எதற்க்கெடுத்தாலும் மன்னிப்பு கேட்க தயாராகிறார் என்றால் அவர் தலைவர் தானே.

முன்பு ஜெயலலிதா மீதான் கோபத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது என்று அவர் விட்ட அறிக்கை ஒரு மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது

பின்பு அதே ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவை பாராட்டி பேசினார். இப்படி திட்டுவதும் பிறகு பாராட்டுவதும் அரசியல்வாதிகளுக்கு கை வந்த கலை. அந்த கலை தற்பொழுது ரஜினிக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.

காவிரி நதி நீர் பிரச்சனை வரும்போதெல்லாம் இதற்கு ஒரே தீர்வு தேசிய நதி நீர் திட்டம் தான் என்றும் அதற்கு நான் ஐந்து லட்சம் தரத் தயார் என்று அறிக்கை விட்டதோடு சரி, அதற்கென்று ஒரு பைசா செலவளித்துள்ளாரா என்றால் அது தான் இல்லை.

ஆக ரஜினிக்கு அரசியல் தலைவர் ஆகும் தகுதி நிச்சயம் உண்டு.தமிழக மக்கள்தான் பாவம், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகிப்போன பிறகு ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன, ஏழைகள் பாடு எப்பொழுதும் திண்டாட்டம் தான்.

குமரியிலிருந்து வெளிவரும் குமரிகடல் மாதம் இருமுறை இதழில் வெளிவந்தது