நன்றி : உயிர்மை.காம்
நன்றி : மாயா

சீனாவின் கண்காணிப்பு அரசியல்
==================================
இந்தியாவில் ஏற்கனவே யாஹூவை வென்றுவிட்ட இணையதள தேடு பொறியான கூகிளின் சீனப் பிரவேசம் சர்ச்சையுடன் தொடங்கியிருக்கிறது. கம்யூனிச ஆட்சி நடக்கும் சீனாவில் அந்தரங்கம் என்பது எதிலும் கிடையாது. அரசின் வேவு பார்க்கும் கண்கள் சீன வாழ்வில் நீக்கமற வியாபித்திருக்கின்றன. ஜனநாயக ஊடகமாகக் கருதப்படும் இணையத் தளமும் அதில் இயங்கும் தேடு பொறியும் அந்த உளவுக் கண்களுக்கு புதிய சவால்களாக விளங்குகின்றன. அதனால் google.cn என்னும் இணையதள முகவரியுடன் சீனாவில் காலடி பதித்த கூகிளின் தேடு பொறியில் அரசியல் சார்ந்த தேடுதல்களை முடக்க வேண்டும் என்று சீனா நெருக்கடி கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது. ஜனநாயக சக்தியாக இருக்க வேண்டிய அமைப்பு லாபத்திற்காக சர்வாதிகாரத்திற்குப் பணிந்துவிட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த கூகிளின் பங்குதாரர்களும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பான நெருக்கடி தற்போது கூகிளின் மீது மட்டுமே இருந்தாலும் சீனாவில் தங்கள் செயல்பாடுகளைக் கொண்ட யாஹூ, சிஸ்கோ முதலியவையும் இத்தகைய குற்றச்சாட்டுகளை சந்திக்கின்றன. அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று சீன அரசியல் போராளி ஒருவரின் ஈமெயில் விவரங்களை யாஹூ அம்பலப்படுத்தியதால் அந்த நபர் இப்போது சிறையில் உள்ளார். அதே போல அரசை விமர்சனம் செய்து இணையத் தளத்தில் கருத்துப் பதிவு செய்ததால் 80 சீனக் குடிமக்களும் இதழியலாளர்களும் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எனினும் இத்தகைய தணிக்கையை மீறியும் இணையத்தள சேவைகள் சீனாவில் விவாதத்தையும் ஜனநாயகத்தையும் தூண்டிவிடும் என்று கூறும் கூகிள் உயர் அதிகாரிகள், சீனாவில் காலடி பதிக்க அவர்களின் தணிக்கைக்குக் கீழ்ப்படிவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆளுங்கட்சியினர் கருத்துரிமையின் பாதுகாவலர்கள் போல் பேசினாலும் புஷ் நிர்வாகம் சீனாவின் அராஜகத்திற்குச் சளைத்ததல்ல என்ற கருத்து அமெரிக்காவிலேயே நிலவுகிறது. உதாரணத்திற்கு நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமலே இண்டர்நெட், தொலைபேசி இணைப்புகளை ஒட்டுக் கேட்க தேசியப் பாதுகாப்பு ஆணையத்திற்கு புஷ் அரசு அனுமதியளித்தது. அமெரிக்காவைப் பின்பற்றும் இந்திய அரசும் இந்தச் சர்ச்சையில் சிக்குகிறது. நட்பு வட்டாரங்களை உருவாக்கு ஆர் குட்டில் I hate Sonia Gandhi என்ற குழுவை ஆரம்பித்தவரின் அடையாளத்தைத் தெரிவிக்கும்படி கூகிளிடம் கோரியது இந்திய அரசு. சீன விஷயத்தில் நடந்துகொண்டது போலவே இதிலும் கூகிள் நடந்துகொள்ள, அந்த 21 வயது ஐ.டி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வெளிப்படுத்துவது கருத்துரிமையின் ஒரு அங்கம்தான் என்பதால் சோனியாவை வெறுக்கிறேன் என்று சொன்னதை குற்றமாக்க முடியாது. எனினும் அவர் தனது குழுவில் 'அருவருப்பூட்டும்' விஷயங்களை எழுதியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டார். இணையம் வழியாக நடக்கும் இன்றைய அத்தனை செயல்பாடுகளும் இன்று அரசின் கண்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரியும் யுகம் பிறந்துவிட்டதையே இந்தச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இந்தப் போக்குகளைப் பார்க்கும்போது எதிர்காலத்தில் இணையத் தள பயங்கரவாத தடைச் சட்டம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். ஆனால் அத்தகைய சட்டம் கட்டுப்படுத்த நினைக்கும் பல செயல்பாடுகள் நிஜமாகவே பயங்கரமானதாக இருக்காது. மாறாக இணையத் தளச் செயல்பாடுகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சாக்குப் போக்காகவே அத்தகைய சட்டம் இருக்கும்.

தேர்வு எழுதுகிறவர்களுக்கு ஊக்க மருந்து சோதனை
=======================================================
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் காப்பியடிப்பதைத் தடுக்க, பறக்கும் படைகள் அமைக்கப்படுவது தொடர்பான செய்திகளை மட்டுமே அறிந்த நமக்கு பிரிட்டனில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப் பரிந்துரைகள் உள்ளன என்று கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கும். நினைவாற்றலைத் தூண்டிவிடும் மருந்துகளை பிரிட்டன் மாணவர்கள் தேர்வு சமயத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிய வருவதால்தான் நிபுணர்கள் இத்தகைய பரிந்துரையை முன்வைத்திருக்கிறார்கள். அல்சைமர்ஸ் போன்ற நோய்களுக்கு மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மூளைக்குப் புத்துணர்வூட்டும் மருந்துகளை அவர்கள் பாடங்களை மனதில் ஏற்றவும், சிறப்பாகத் தேர்வு எழுதவும் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்கள். அதனால் தேர்வு எழுதி முடித்ததும் விளையாட்டு வீரர்களுக்குச் செய்வது போல, தேர்வு எழுதுபவர்களுக்கும் சிறுநீர்ப் பரிசோதனை செய்யலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். எனினும் பிரிட்டனில் மருத்துவர் சீட்டு எழுதிக் கொடுக்காமல் இத்தகைய மருந்துகளை வாங்க முடியாது என்பதால் இத்தகைய புதிய முறை தேவையில்லை என்று மற்றொரு தரப்பினர் சொல்கிறார்கள். எனினும் மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி இருக்கும் வரை காப்பியடிப்பது முதல் ஊக்க மருந்து வரை பல்வேறு வகையிலான குறுக்கு வழிகள் பயன்படுத்துவதைத் தவிர்க்க முடியாது.

காணாமல் போகும் பால்யம்
==================================
ஒவ்வொரு ஆண்டும் மே 25ந் தேதியை அமெரிக்காவில் காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கிறார்கள். 1979ல் இதே தினத்தன்று நியூயார்க்கில் சாலை வரை வந்து ஒரு தாய் தனது 6 வயது மகனை, பள்ளிப் பேருந்துக்கு வழியனுப்பி வைத்தார். ஆனால் அவன் பேருந்தில் ஏறவும் இல்லை, கடைசி வரை வீடு திரும்பவும் இல்லை. அந்த இழப்பின் நினைவாக அந்தத் தினம் காணாமல் போகும் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. எனினும் குழந்தைகள் காணாமல் போவது உலகம் முழுவதும் நிகழும் சோகம். பெற்றோர் சாகும் வரை நாம் தொலைத்த செல்வங்கள் என்றாவது கிடைக்க மாட்டார்களா என்னும் ஏக்கத்துடனேயே இருப்பார்கள். இந்த வருடத்தின் காணாமல் போன குழந்தையொட்டிய சமயத்தில் தென் கொரியாவில் நான்கு வயதில் தொலைத்த மகனை எட்டு வருடங்கள் கழித்து சந்தித்த ஒரு தந்தையின் உணர்ச்சிகரமான கதையை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிடுகின்றன. காணாமல்போன குழந்தையை எவ்வாறு மீட்டார்கள் என்பதைக் கேட்க இன்னும் சுவாரசியமாக இருக்கிறது. 2004 முதல் தென் கொரியாவில் காணாமல் போய், அரசுக் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளின் மரபணு மாதிரியை எடுத்துப் பாதுகாத்து வைக்கிறார்கள். குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர் தங்கள் மரபணு மாதிரியை அந்த அமைப்புக்கு அனுப்பி, அதன் மூலம் குழந்தைகள் காப்பகத்தில் தங்கள் குழந்தை இருக்கிறதா எனக் கண்டுபிடிக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் அந்தத் தந்தை இந்த வழி முறையைப் பயன்படுத்தித்தான் தனது மகனைக் கண்டுபிடித்திருக்கிறார். 2004 முதல் இதுவரை 79 குழந்தைகள் அவ்வாறு பெற்றோருடன் இணைக்கப்பட்டிருக்கிறார்களாம். இவ்வாறு அரசுக் காப்பகத்திலுள்ள 16,900 குழந்தைகளின் மரபணு மாதிரி அரசிடம் உள்ளது. ஆனால் காணாமல் போன தங்கள் குழந்தையைக்கோரும் பெற்றோரின் 840 மரபணு மாதிரிகள்தான் அரசிடம் வந்துள்ளன. இந்த வசதி குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் இந்த நிலை என்று சொல்கிறார்கள். மரபணு சேகரிப்பு துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று கூறி இந்த முறையைக் கைவிட வேண்டும் என்கிறார்கள் தென்கொரியாவின் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால் இந்தியாவில் காணாமல் போகும் குழந்தைகள் காப்பகங்களில் அன்றி தொழிற்சாலைகளிலும் பிச்சைத் தொழிலும் பிளாட்பாரத்திலும்தான் கணிசமாகச் சென்று சேர்கிறார்கள். இத்தகைய பெருவாரியான குழந்தைகளுக்குத் தங்கள் பெற்றோரிடம் சென்று சேர்வது கானல் நீர்தான்.

முரண்பாடுகள்: சென்னையிலிருந்து டெஹ்ரான் வரை
============================================================
சென்னையின் பூங்காக்களிலும் கடற்கரையிலும் ஜோடியாக அமர்ந்திருக்கும் ஆண், பெண்களை, கலாச்சாரத்தின் பெயரால் துன்புறுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் தங்கள் சொந்த வாழ்வில் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது எனது நெடுநாள் ஆசை. இவ்வளவு இயல்பான செயல்பாட்டை உலக மகா குற்றம் போல் நடத்தும் அவர்களின், அவர்களை அந்தப் பணியில் இறக்கிவிடும் காவல் துறை உயரதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, செக்ஸ் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? சென்னையில் அப்படிப்பட்ட எந்த நபரின் முகமும் பொது வெளியில் அம்பலமாகவில்லை என்றாலும் அவர்கள் எப்படி இருக்கக்கூடும் என்பதற்கு ஈரானில் ஒரு உதாரணம் வெளியாகியிருக்கிறது. இஸ்லாமியக் குடியரசான அந்த நாட்டில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பெண்களின் உடையைக் கண்காணிக்க சீருடைப் பணியாளர்கள் காத்திருப்பார்கள். இஸ்லாமிய பாரம்பரியத்தின்படி உடை அணியாத பெண்களைக் காவல் துறையினர் எச்சரித்து அனுப்புவார்கள். அத்தகைய அதிரடி நடவடிக்கைகளின் மையமாகக் கடந்த ஆண்டு வரை இருந்தவர் டெஹ்ரான் மாகாணக் காவல் துறைத் தலைவர் ரெஸா சரேயி. அவர் இப்போது ஐந்து மாதம் சிறையிலிருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார். பதவி பறிக்கப்பட்ட அவர் நிர்வாண விபச்சாரிகளுடன் இருந்ததற்காக இந்த தண்டனையை அனுபவித்தார். 1979ல் ஈரானில் இஸ்லாமியச் சட்டம் அமலாக்கப்பட்ட போது பல விபச்சாரிகளை உயிரோடு தோலுரித்து, தீயில் போட்டார்கள் என்பதை நினைத்துப் பார்க்க பெரும் முரணாக இருக்கிறது. இஸ்லாமியப் புரட்சிக்கு முன்புவரை ஓரிடத்தில் குவிந்திருந்த விபச்சார மையம் இப்போது மூலை முடுக்கெல்லாம் சிதறி, பல்கிப் பெருகியிருக்கிறது. அதன் நெருக்கமான இன்பத்தை அனுபவித்தவர்களில் ஈரானின் தலையாய கலாச்சாரக் காவலரும் ஒருவர். முரண்பாடுகள் ஈரானோடு நிற்பதில்லை.

குன்டனாமோ கொடுமை முறைகள்: ஒரு நினைவூட்டல்
==============================================================
"கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு, மலம் கழிப்பது போன்ற நிலையில் தரையில் கிடக்கிறார் அந்தக் கைதி. அங்கு நாற்காலி இல்லை, உணவு இல்லை, தண்ணீர் இல்லை. தங்களது மலத்தின், சிறுநீரின் மீதுதான் பெரும்பாலான கைதிகள் தரையில் கிடக்கிறார்கள். குறைந்தது 18-24 மணி நேரமாக அவர்கள் அதே இடத்தில், அதே நிலையில் இருந்திருக்கக்கூடும் என்று தோன்றியது” கியூபாவிலுள்ள குன்டனாமோ சித்திரவதைக் கூடத்திற்கு அனுமதியுடன் சென்ற செய்தியாளர்கள் பலர் பதிவு செய்த காட்சி இது. மற்றவர் பார்வையில் படாமல் நிகழ்ந்த கொடுமைகளும் அடையாளமற்றுப் போன தற்கொலைகளும் இன்னும் கொடுமையானவை. அந்தச் சிறையில் உள்ளவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்களை (ஹேபியஸ் கார்பஸ்) அனுமதிப்பதென்று அமெரிக்க நீதிமன்றங்கள் தீர்மானித்துள்ள நிலையில் குன்டனாமோ சித்திரவதை முறைகள் குறித்து சிறிய வரலாற்றுக் குறிப்பைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. 2001 செப்டம்பரில் அமெரிக்கா மீது விமானத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட பிறகு அந்த வழக்கு தொடர்பாக சுமார் 700 பேர் கியூபாவில் அமெரிக்காவுக்குச் சொந்தமான குன்டனாமோ சிறையில் அடைத்து விசாரித்து வந்தார்கள். அதில் ஒருவர்தான் சவூதி அரேபியாவைச் சேர்ந்த முகமது அல் கடாமி. அவரின் கைதி எண் 063. விமானத் தாக்குதலில் ஈடுபட்ட 20வது நபர் இவர் என்று 2002 ஜூன் மாதத்தில் அந்தச் சிறை அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமான விசாரணை முறைகளில் அவரைப் 'பேச' வைக்க முடியாததால் 2002 ஆகஸ்ட் முதல் மாற்றுக் கொடுமை முறைகள் ஆலோசிக்கப்பட்டன. 2002 டிசம்பரில் தன்னிடம் சமர்ப்பிக்கப்பட்ட 80 புதிய விசாரணை முறைகளில் 50 விசாரணை முறைகளுக்கு அன்றைய அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்டு அனுமதி தந்தார். அவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. முதல் பிரிவில் கைதிகளை நோக்கிக்கத்துவது போன்ற எளிமையான விசாரணை முறைகள் இடம் பெற்றன. இரண்டாம் பிரிவில் உளவியல் ரீதியாக அவமானப்படுத்துவது, முகமூடி அணிவிப்பது, நாய்களை ஏவிவிடுவது, பலவந்தமாக நிர்வாணப்படுத்துவது, மொட்டை அடிப்பது போன்ற கொடுமை முறைகள் இடம் பிடித்தன. பிரிவு மூன்றில் வந்த நான்கில் ஒரே ஒரு கொடுமை முறைதான் அனுமதிக்கப்பட்டது. கைதிகளுக்கு மிகவும் மெல்லிய போர்வையே தரப்படும். கைதிகள் நடத்தப்பட வேண்டிய விதம் குறித்த ஜெனிவா ஒப்பந்தத்திற்கு மட்டுமல்ல, அமெரிக்க ராணுவ நியதிகளுக்கே இது எதிரானது. 1863ல் ஆப்ரகாம் லிங்கனின் ஆட்சிக்குப் பிறகு வரலாற்றுத் திருப்பமாக நிகழும் ராணுவ நியதி மீறல் இது என்று குறிப்பிடப்படுகிறது.

எனினும் 2004 ஜூனில் அபு கரைப் சிறைச் சாலைக் கொடுமை முறைகள் தொடர்பான புகைப்படங்கள் அம்பலமாகும் போதுதான் இத்தகைய மனிதத்தன்மையற்ற சித்ரவதை முறைகள் வெளி உலகிற்குத் தெரிய வந்தது. இத்தகைய கொடுமை முறைகள் கொள்கைபூர்வமான அனுமதியுடன் நிகழவில்லை, ஒரு சில கீழதிகாரிகளின் தவறான பார்வையால் நிகழ்ந்தது என்று அப்போது கூறியது அமெரிக்க அரசு. ஆனால் 2002 முதல் அமெரிக்க அரசின் திட்டவட்டமான அனுமதியுடன் அது நிகழ்த்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்றைய அமெரிக்க உயர் அமைச்சர்களும் அதிகாரிகளும் குன்டனாமோ சிறைச்சாலைக்குச் சென்று நேரடியாக அத்தகைய கொடுமை முறைகளைப் பார்வையிட்டதாகவும் ஆய்வாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தற்போது அமெரிக்காவை ஆளும் குடியரசுக் கட்சியின் 'செல்லத் திட்டமான' குன்டனாமோ கொடுமை முறைகள் அமெரிக்க நீதிமன்றங்களால் கேள்விக்குட்படுத்தப்படுவதை புஷ்களால் தாங்க முடியவில்லை. குன்டனாமோ பகுதி அமெரிக்க நீதிமன்றக் கட்டுப்பாட்டில் வராது என்ற அமெரிக்க அரசு வழக்கறிஞர்களின் வாத்தத்தை மீறி 5-4 என்ற விகிதத்தில் குன்டனாமோ கைதிகளுக்கு அமெரிக்க நீதித் துறையில் வாதாட வாய்ப்பு கொடுத்திருப்பதைத் தேர்தல் பிரச்சினையாக்கப் பார்க்கிறார் அடுத்த குடியரசுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஜான் மெக்கெயின். "அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்குத்தான் வழி வகுக்கிறார்கள்" என்று அந்தத் தீர்ப்பு குறித்து அவர் கூறியிருக்கிறார். "சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்ட தேசம் இது என்ற நம்பகத்தன்மையை மிட்டெடுப்பதற்கு உதவக்கூடிய தீர்ப்பு இது" என்று கூறியிருக்கிறார் மெக்கெயினுக்கு எதிராக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா. ஜனநாயகம் வெல்லட்டும்.