Results 1 to 6 of 6

Thread: ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

                  
   
   
  1. #1
    இனியவர் பண்பட்டவர் அகத்தியன்'s Avatar
    Join Date
    25 May 2006
    Location
    அமீரகம் (அபுதாபி)
    Age
    41
    Posts
    546
    Post Thanks / Like
    iCash Credits
    10,709
    Downloads
    148
    Uploads
    1

    ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

    இது ஆடி மாதம் அனைத்து இலங்கையர்களுக்கும் முதலில் நினைவுக்கு வருவது- ஆடிக்கலவரம்.
    அது பற்றிய ஒரு பத்தி காலச்சுவடு இதழில் வெளியாகியிருக்கின்றது. (பத்தி இங்கே).

    அதில் கட்டுரையாசிரியர் மேற்கோள் காட்டியுள்ள ஒரு வசன கவிதை என்னை மிகவும் பாதித்து விட்டது.

    அக்கவிதை இதோ-

    ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

    இறந்தவர்களைப் புதைப்பது
    ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
    இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
    காரணம் ஏதுமில்லை
    சத்தியமாகச் சொல்கிறேன்:
    நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
    சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
    உங்களைப் போலவே
    நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
    மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
    நான் ஒரு யதார்த்தவாதி
    எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
    மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
    உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
    மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
    என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது
    எனினும் அந்தக் கும்பல் அந்தக் காரை
    எப்படித் தடுத்து நிறுத்தியது என்பதை
    இப்போதும் நான் நினைத்துப் பார்க்கிறேன்
    காருக்குள் நாலு பேர்
    பெற்றோர், நாலு அல்லது ஐந்து வயதில்
    ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள்
    ஏனைய கார்களை எப்படித் தடுத்து நிறுத்தினரோ
    அப்படித்தான் இந்தக் காரையும் தடுத்து நிறுத்தினார்கள்
    எந்த வேறுபாடும் இல்லை
    குதூகலம் கொப்பளிக்கின்ற மனநிலையில்
    ஒரு சில கேள்விகள் செய்வதைப்
    பிழையறச் செய்ய விரும்பும் கவனமாய் இருக்கலாம்
    பிறகு செயலில் இறங்கினர் வழமைபோல
    பெட்ரோல் ஊற்றுவது, பற்றவைப்பது போன்ற விடயங்கள்
    ஆனால், திடீரென்று யாரோ ஒருவன்
    காரின் கதவுகளைத் திறந்தான்
    அழுது அடம்பிடித்துப் பெற்றோரைவிட்டு விலக மறுத்த
    இரண்டு குழந்தைகளையும் வெளியே இழுத்தெடுத்தான்
    குழந்தைகளின் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் இருப்பது
    சில சமயங்களில் குழந்தைகளுக்கு நல்லது என
    அவன் எண்ணியிருக்கக்கூடும்
    துரிதமாக இயங்கிய இன்னொருவனோ தீக்குச்சியைக் கிழித்தான்
    சூழவர எரிந்துகொண்டிருந்த பலவற்றோடு
    இந்த நெருப்பும் சேர்ந்துகொண்டது
    அருகே நின்று தமது சாகசங்களைப் பற்றிப்
    பேச ஆரம்பித்தனர் கொஞ்சப் பேர்
    கலைந்து போனார்கள் ஒரு சிலர்
    காருக்குள் இருந்த இருவரும் என்ன எண்ணியிருப்பார்கள்
    என்பதைப் பற்றி யார் கவலைப்பட்டார்கள்
    சமாதான விரும்பிகளாக மக்கள்
    தமது வீடுகளுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்
    அப்போதுதான் திடீரென உள்ளேயிருந்தவர்
    கார்க் கதவை உடைத்து வெளியே பாய்ந்தார்
    சட்டையிலும் தலைமயிரிலும் ஏற்கனவே தீ பற்றிவிட்டிருந்தது
    குனிந்தவர் தன் இரண்டு குழந்தைகளையும் வாரி எடுத்தார்
    எங்கும் பாராமல் கவனமாகத் திட்டமிட்டு எடுத்த முடிவை
    செயல்படுத்துவதுபோல உறுதியுடன் காருக்குள் திரும்பி ஏறினார்
    கதவை மூடினார்
    தனித்துவமான அந்த ஒலியை நான் கேட்டேன்
    எரிந்தழிந்த கார் இப்போதும் தெருவோரம் கிடக்கிறது
    ஏனையவற்றோடு இன்னும் சில நாட்களில்
    மாநகர சபை அதனை அகற்றக்கூடும்
    தலைநகரின் தூய்மையே ஆட்சியாளரின் தலையாய பணி.

    -பாஸில் ஃபெர்னாண்டோ (Basil Fernando)-



    நன்றி- காலச்சுவடு
    மைக்கல் றொபேர்ட்ஸ்
    தமிழில்: சேரன்

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    மன்றத்தில் ஈழத்து நண்பர்களில் கொஞ்சம் வயதானவர்களென்று யாருமில்லை என நினைக்கிறேன். அப்படி இருந்தால் இன்னும் பல கோரச் சம்பவங்களின் நேரடி சாட்சிகளாய் எம்மோடு இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
    1964... சிங்கப்பூரில் ஒரு கலவரம். சிங்கப்பூர் விழித்துக்கொண்டது. அதனால்தான் இன்று முதல்தர நாடு. ஆனால், ஈழத்தில் எத்தனை கலவரங்கள்.... ஆனாலும் விழிக்க விருப்பமின்றி சுயநல அரசியலின் பிடியில் சிக்கி இன்றும் அதே நிலையில்...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் meera's Avatar
    Join Date
    31 Aug 2006
    Location
    Singapore
    Posts
    1,432
    Post Thanks / Like
    iCash Credits
    28,347
    Downloads
    12
    Uploads
    0
    நெஞ்சை பிழிந்த கவிதை. அனாதையாய் விட்டுச்செல்வதைவிட, சொர்க்கமோ, நரகமோ தன்னொடே தன் குழந்தைகளை அழைத்துச்செல்வதே மேல் என்று நினைத்துவிட்டார் போலும் அந்த தந்தை. காட்டுமிரான்டிகளின் கொடுஞ்செயல் இன்னும் சில இடங்களில் அரங்கேறிக்கொன்டிருப்பது தான் கொடுமை.
    நேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு

    என்றும் அன்புடன்
    மீரா

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    பகிர்விற்கு நன்றி.
    நானும் பல கதைகள் மாமன்மார் சொல்லக் கேட்டிருக்கிறேன். வெளியே சந்திக்கு (சந்தை) சென்றவரும், வெளி மாகாணத்தில் மேற்படிப்பிற்கு போனவருமாக வந்து சொல்லும்போது......சிறுவனாக இருந்த நான் கொடூரத்தின் ஆழத்தினை அறிய முடியவில்லை. கதையாகவே கேட்டுவிட்டேன்.

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    17 Jun 2008
    Posts
    119
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    2
    Uploads
    0
    1958 இனக்கலவரம்

    1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

    ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள "ஸ்ரீ' சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரிப் பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி வீசப்பட்டது. இதனால், நாடு முழுவதும் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது.

    தமிழாராய்ச்சி மாநாடும் தாக்குதலும்

    1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

    1974 ஜனவரி 10 ஆம் நாள் மாநாட்டில் புகுந்த பொலிஸார் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். எந்தவித காரணமும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 9 தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இது மற்றொரு இனரீதியான ஒடுக்குமுறைத் தாக்குதலாகும். இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இடம்பெற்றது.

    1977 இன் இனக்கலவரம்

    ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான மற்றொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக் கலவரம் ஒன்று வெடித்தது.

    இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு, இடம்பெயர்ந்தனர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.

    1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாத இனக்கலவரம்

    இதேபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது, ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றொரு துயரச் சம்பவமாகும்.

    ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக் கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?

    யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன், 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.க.வில் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் நாம் நினைவு கூரத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இனவன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா?

    1983 ஜூலை இனக்கலவரம்
    1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் குண்டர்களால் இனவன்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக் கலவரத்தின்போது வெலிக்கடைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அடங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது. தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடமுடியும். இந்தக் கலவரத்தினால் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டவர்களால் என்றும் இந்தக் கலவரத்தை மறக்க முடியுமா? 1983க்கு பிற்பட்ட காலத்திலும் பல இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் வரலாற்றில் இருப்புக்கொண்டுள்ளன என்பதனை நாம் குறித்துக்கொள்ள முடியும்.
    நன்றி: தமிழ்வின்.கொம்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    இங்கும் சில விடயங்கள்.... இல்லை இல்லை, மேலும் சில விடயங்கள் சொல்லியிருக்க்கின்றனர்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •