கவிஞர் மு. மேத்தா

ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்…
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!

நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுந்திருக்கும்!

நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.
நிஜத்தைச் சொல்லுகிறேன்
நேரு குடும்பத்தின் மீது நீ
பாசம் வைத்திருத்திருந்தால்
இந்தியாவின் பாரிணாமமே வேறு!

கருப்புதான் நீயும்…
கருப்புக் காந்தி!
மகாத்மா காந்தியோ
சிரிக்கும் நெருப்பு.

நீ
சிரிக்கத் தெரியாத
நெருப்பு.
அந்த நெருப்பு
திருநீறாகி விட்டது.
உன் சாம்பலுக்குள்ளும்
தணல் தகிக்கிறது.

பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
‘பச்சைத் தமிழன்’ எனும்
பட்டம் பெற்றவனே!

இன்று நீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்த தமழர்களைக்
கண்டித்திருப்பாய்!

இன உணர்வு
தமிழனுக்கு இருந்திருந்தால்
இந்தியாவின் ஸ்டாலினாய்
இருந்திருக்க வேண்டியவன் நீ!

மணி முடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால் நீ
காளிக்குத்
தலையை வெட்டித் தந்த
கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!