Results 1 to 12 of 16

Thread: மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-2

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    மரபணுமாற்றப்பட்ட பயிர்கள் அறிவோமா!-பகுதி-2

    பரிணாமக் கொள்கையும் கலப்பினப் பெருக்கமும்

    சென்ற பாகத்தில் மரபணு என்றால் என்ன? அது எப்படிச் செயல் படுகிறது? மரபணுவின் முக்கியத்துவம் என்ன எனக் கண்டோம். சுருக்கமாக மீண்டும் சொல்வதானால், மரபணு என்பது ஒவ்வொரு உயிரின் குணத்தையும் அமைப்பையும் நிர்ணயிக்கிறது. பெரும்பாலும் ஒரு மரபணு ஒரு குணத்தை நிர்ணயம் செய்யும். சமயங்களில் ஒரு மரபணு பல்வேறு குணங்களைக் கட்டுப்படுத்தும் (ஆங்கிலத்தில் இதனை Pleiotrophy என்பார்கள்). மரபணு பற்றியும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் பற்றியும் விரிவாகக் காணும் முன் மரபணு மாற்றப் பட்ட பயிருக்கும் கலப்பின பயிருக்கும்(Hybrid) உள்ள வேறுபாட்டினை அறிந்து கொள்வது அவசியம். பரிணாமக் கொள்கையை அறிவதும் மிக்க அவசியமாகும்.

    மரபணுமாற்றம் என்றால் ஒரு உயிரினத்தில் உள்ள மரபணுக்கட்டமைப்பில் (Genome) வேறு உயிரினத்தின் மரபணுக்களை (Trans gene) செயற்கையாகப் புகுத்துவது. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட உயிரினம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரினம் (Genetically modified organism- GMO) எனப்படும். தன்னகத்தே வேற்று மரபணு கொண்ட பயிர் வேற்று மரபணுவேற்றிய பயிர் (Transgenic crop) எனப்படும்.

    நான் குறிப்பிட்ட அந்த ஆனந்த விகடன் கட்டுரையில் கறிக் கோழி (Broiler) மரபணு மாற்றம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. அதே போல முன்னர் வேறு ஒருவர் வலைத்தளத்தில் பெங்களூர்த் தக்காளிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை எனக் கூறி இருந்தார். ஆனால் மேற்கூரிய இரண்டுமே மரபணு மாற்றத்தால் வரவில்லை. ஆதி காலந்தொட்டே மனிதன் செய்து வந்த, செய்து வருகிற கலப்பின முறையால்தான் வீரியமிக்க ரகங்கள் உருவாக்கப் பட்டன. வேறு பாடுகள் அதிகமுள்ள மரபணுக் கட்டமைப்புகளில் இருந்து ஒரு உயிரினம் உருவாக்கப் படுமானால் உருவாகும் அந்த உயிரினம் மிகுந்த வீரியமிக்கதாக இருக்கும். ஏன்? வல்லான் வகுத்ததே வாய்க்கால் (Law of Dominance) என்ற விதியின் படி இரு வேறு பட்ட மரபணுக் கட்டமைப்பு உள்ள உயிர்கள் கூடும்பொழுது அந்த இரண்டு உயிரினங்களிலும் வல்லமை பெற்ற மரபணுக்களே குணங்களைக் கட்டுப்படுத்தும் பதவியைப் பெற்றுக் கொள்கிறது. அதனால் சிறந்த பண்புகள் உருப்பெற்று வீரிய மிக்கதாக புதிதாகப் பிறக்கும் உயிர் இருக்கிறது. மரபணு வேற்றுமைதான் (Genetic diversity) இனப்பெருக்கவியலில் (Breeding) மிக முக்கிய அங்கம். அதனாலேயே சர்வதேச அளவில் மரபணு வங்கிகள்(Gene Bank) இயங்குகின்றன.

    எடுத்துக்காட்டாக கலப்பு மணம் புரிந்த தம்பதிகளைப் பாருங்கள். அவர்களின் பிள்ளைகள் பெற்றவர்களை விட புத்திசாலியாகவும், நெருங்கிய உறவில் மணம்புரிந்த தம்பதிகளின் குழந்தைகளை விடவும் அறிவாளிகளாகவும் இருப்பர். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வெவ்வேறு உயிரினங்கள் உறவின் மூலம் பெறும் மகவு(கள்) வீரியமிக்கதாக இருக்கும் என்பதைக் கண்டறிந்தது இன்றைய அறிவியலாளர்கள் அல்ல. கி.மு 700ம் ஆண்டுகளில் தலைச் சிறந்த நகரங்களான டிக்ரிஸ்-யூஃப்ரடஸ் (Tigris-Euphroates) ஆகியவற்றில் வாழ்ந்த பாபிலோனியர்கள் தான். இன்றைய இராக் நாட்டின் பகுதிகள்தான் இவை. ஆண்மரம் பெண்மரம் எனத் தனித்து முளைக்கும் ஈச்ச மரங்களுக்கு கலப்புத் திருமணம் செய்வித்தப் பகுத்தறிவாளர்கள் அவர்கள். வேளாண்மைதான் அன்றைய நாகரீகத்தின் முதுகெலும்பாக இருந்தது. நாடோடிகளாகவே வாழ்ந்து கொண்டிருந்த என் தாத்தாவிற்கு தாத்தாமார்கள் ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்து வளம்பெருக்க ஏதுவாக விவசாயம் அமைந்தது.

    இங்கேதான் பரிணாமக் கொள்கை வகுத்த தீர்க்கதரிசி டார்வினை நினைவு கூறவேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் மாறுதல்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் உயிரினமே உலகில் உய்யும். மாற்றிக்கொள்ளாதவை இருப்பது ஐயம்- என்ற கோட்பாடை வகுத்த அவரே பரிணாம இயலின் தந்தை. அப்படியானால் சூழலுக்கு தக்க மாற்றிக்கொள்ளும் இந்தப் பரிணாம வளர்ச்சிக் கொள்கையின் படி மரபணுவிலும் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அம்மாற்றங்கள் ஏதோ செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து டிசம்பரில் முடிந்து விடக்கூடியவை அல்ல. பல தலைமுறைகளைக் கண்டு பின்னரே மாற்றங்கள் ஏற்படும். இவ்வாறு மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும். மற்ற மாற்றங்கள் எல்லாம் சேராது. எப்படி? எளிய விளக்கம் சொல்கிறேன். தமிழகத்தில் பிறந்த ஒரு நபர் சற்று மாநிறமாக இருப்பார் என்று வைத்துக் கொள்வோம். அவர் கனடா போன்ற குளிர்நாடுகளில் வாழும்பொழுது சற்று கூடுதல் வெளுப்பு நிறமாகக் காட்சியளிப்பார். ஒரு மூன்று மாதம் சிங்காரச் சென்னையின் கோடைகாலத்தில் இருந்து விட்டால் பின்னர் அவர் சாயம் வெளுத்த நரி போல தன்னுடைய மாநிறத்திற்கே திரும்ப வேண்டியதுதான். எனவே அந்த மாற்றம் அடுத்த தலைமுறைக்கு சென்று சேராது. தெரிந்தோ தெரியாமலோ பண்டைய விவசாயிகள் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க நல்ல கதிர்மணிகளை மட்டுமே அறுவடை செய்தனர். அதனாலேயே நல்ல கதிர்மணிகளுக்கு காரணமான மரபணுக்கள் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டன. ஆக பயிர் இனப்பெருக்கமும், பயிர் மேம்பாடும் அவர்கள் அறியாமலேயே செய்து கொண்டுதான் இருந்தனர்.

    இப்படித் தலைமுறை தலைமுறையாக மாறி வந்து இருக்கும் உயிரினங்கள்தான் நாம் இன்று காண்பவை. இப்படி உருவெடுத்த நல்ல(வல்ல) மரபணுக்கள்தான் நம் தேவை. அந்த மரபணுக்கள் ஒரு தலை முறையில் இருந்து மற்றுமொரு தலைமுறைக்கு இனப்பெருக்கத்தின் போது மாற்றப் படுகின்றன என ஆய்ந்து அறிவித்த மற்றொரு அறிவியல் மைந்தன்(நன்றி: இளசு அண்ணா) மெண்டல். ஆஸ்திரிய நாட்டில் ஒரு கிறிஸ்தவ மதப் பணியாளராக இருந்து கொண்டே 1860 களிலேயே பட்டாணிச் செடியில் ஆராய்ச்சி செய்து இன்றைய வேளாண் புரட்சிகளுக்கெல்லாம் வித்திட்ட மரபியலின் தந்தை.

    அமெரிக்காவில் 1930 களில் ஏற்பட்ட ஒரு வித தேக்க நிலையால் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் உத்தியை வேளாண் ஆராய்ச்சியாளர்கள் காண முயன்றனர். அதன்படி ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வெவ்வேறு மக்காச்சோளச் செடிகளை அயல் மகரந்தச் சேர்க்கை (Cross-Pollination) கொண்டு கலப்பினம் உருவாக்க முயன்றனர். அம்முயற்சிக்கு முதல் செயல் வடிவம் கொடுத்தவர் சாம் ஃப்ராண்ட்ஸ். அமெரிக்காவின் ஒஹாயோ பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர். அவர் நினைவாக அவர் ஆராய்ச்சி செய்த நிலத்தில் ஏற்படுத்தப் பட்டுள்ள நினைவுச் சின்னம்.

    சரி அறிவியல் தொடரில் வரலாறு இப்போதைக்குப் போதும்.

    மக்காச்சோளத்தில் ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியே இருக்கும். ஆண் பூ(Stamens,Tassel-மகரந்தம்) உச்சியிலும் பெண் பூ(Cob-சூலகம்) நடுவிலும் காணப்படும்.

    அதன் படி மகரந்தத்துகள்கள் விழும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளும் படி இயற்கையாகவே அமைக்கப் பட்டிருக்கும். மகரந்தத்தை வெட்டி எடுத்து விட்டால்(De tasseled) அந்தச் செடி பெண் செடியாக மட்டுமே கருதப் படும். எடுத்துக்காட்டாக ஆண் பூவை வெட்டிய பிறகு வேறு ஆண் பூவின் மகரந்தத்தைக் கொண்டு சூலகத்தில் தூவினால் அந்தச் சூல் கருவுற்று காய் கொடுக்கும். இதே முறையில் வேறு இரு செடிகளைக் கொண்டு மற்றுமொரு சோளக் கதிரை விளைவிக்க வேண்டும். இந்த இரு செடிகளில் விளைந்த விதைகளை மறுபடியும் முளைக்க வைத்து அவற்றில் ஒன்றின் ஆண் பூவை வெட்டி விட்டு மற்றொன்றின் ஆண் பூ கொண்டு மகரந்தச் சேர்க்கை நடத்தினால் நல்ல வீரியமுள்ள விதை கிடைக்கும். கீழே விளக்கப்படம் காணவும்.


    சரி எப்படி அந்தச் செடிகளைத் தேர்ந்தெடுப்பது. விரும்பபடும் குணமுள்ள செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பூச்சி எதிர்ப்பு சக்தி, நோய் எதிர்ப்புத் திறன், சுவைமிக்க மணிகள் எனப் பல குணங்களை ஆராய்ந்து கலப்பினப் பெருக்கம் செய்தோமானால் ஒவ்வொன்றில் இருந்தும் நல்ல குணங்கள் பெறப்பட்டு மிகவும் பயன் தரக்கூடிய செடி கிட்டும். சரி விரும்பத்தகாத குணமுடைய மற்ற செடிகளின் மகரந்தத் துகள்கள் வந்து கலந்து விட்டால்? அதற்காகத்தான் மகரந்தச் சேர்க்கை முடிந்த்ததும் காகிதப் பை கொண்டு சூலகத்தை மூடி விடுவர்.

    மரபணு மாற்றம் பற்றி விளக்காமல் என்ன கதை இது என்கிறீர்களா? பரிணாமவியல் பற்றியும், கலப்பினப் பெருக்கம் பற்றியும் முதலில் புரிந்து கொண்டால் மரபணுமாற்றத்தைப் புரிந்து கொள்ளுதல் எளிது என்பதால் இந்த நீண்ட பதிவு. ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனுக்குடன் கேளுங்கள்.
    Last edited by mukilan; 14-07-2008 at 03:14 AM.
    உன் வீட்டுக்கண்ணாடி ஆனாலும் கூட முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் இங்கே!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •