Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 27

Thread: விசயா

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5

    விசயா

    விஜயா

    சற்றே பெரிய சிறுகதை

    விடியங்காட்டி வந்திர்றேன்னு சொல்லிட்டுப் போன விசியாவ இன்னம் காணோமே! கிரகம் பிடிச்சவ எங்கன போய்த்தொலைஞ்சாளோ! என்ற வசவோடுதான் சீனியம்மாளுக்கு அன்றைய நாள் புலர்ந்தது.மேலக்காட்டில அருகு மண்டிக்கிடக்கு. கன்னிப்புள்ளையும் பாலாட்டங்கொழையுமா களைப் புடிச்சி போயிருக்கே! நாலாள கூட்டிட்டுப்போயி வெட்டினா வெரசா வேலை முடியும்னு நேத்தைக்குச் சாயங்காலமே ஆள் சேர்த்துத்
    தயாரா வச்சிட்டுத்தான் உறங்கப்போனா சீனியம்மா.காலையில விசயா வரலைன்னா அச்சலாத்தியாத்தான இருக்கும்.

    விசயா விசயானு சின்னப்புள்ளைக கூட கூப்பிடற விஜயாவிற்கு போன ஆவணியோட 33 முடிஞ்சி 34 வயசு நடக்கு. ஏற்கனவே வெள்ளாமை பொய்ச்சு போயிருக்கிற ஊரில தரித்திரம் தாண்டவமாடற குடும்பத்தில மூனாவது புள்ளையாத்தான் விசயா பொறந்தா. விசயாவுக்கு கூடப் பொறந்தது ஒரு அண்ணனும் அக்காளும். அவுகய்யா ஊக்குருசாமி விசயா பொறந்ததுமே காணமப் போயிட்டாரு.அம்மாவும் அண்ணனுமா சேர்ந்து விசயாவுக்கு கஞ்சி ஊத்தினாக. விசயாவும் படிக்க பள்ளிக்கூடம் போனாய்யா! ஆனா பாருங்க ஓரொன்னா ஒன்னுக்கு அப்புறம் வாய்ப்பாடுல ஒன்னுமே தெரியாது. மூணாப்பு மட்டும் முக்கி முக்கி மூணுவருசம் படிச்சா. பள்ளிக்கூடத்தை நல்லா சுத்தமா கூட்டிப் பெருக்குவான்னு சரசுவதி டீச்சர் அவளை பெயிலாப் போட்டிட்டாங்கன்னு விசயாவுக்கு ஒரே கோவம். இனிமேல் பட அந்தப் பள்ளியியோடம் போவமாட்டேன்னு உக்கார்ந்திட்டா. அதோட சின்னப்பிள்ளைக கூட விளையாடித் திரிஞ்சா விசயா.

    பிள்ளைகளும் விசயாக்கா விசயாக்கானுதான் ஆரம்பத்தில வெளையாடிச்சிங்க. போகப்போக அக்காவை மறந்து இப்போ எல்லாருக்கும் விசயாதான். புளியமரமேறி புளி பறிச்சிப் போடுவா. புளியம்பழத்தை மேல மட்டும் உடைச்சி ஆட்டு மடுவிலே அப்படியே பாலைக்கறந்து அந்த புளியம்பழத்தோட்டுக்குள்ள விட்டிடுவா. புளில பட்ட பால் உடனே திரிஞ்சதும் தயிராயிடுச்சுன்னு சின்னப்பிள்ளைகளுக்கு வெளாட்டுக்காட்டுவா.எலந்தப் பழம்பறிக்கிறதென்ன, தட்டாம்பூச்சி யடிக்கிறதென்ன விசயாவுக்கு நல்லாத்தான் நேரம் போச்சு. அப்பதான் அவுக அக்காளைப் பக்கத்தூரில ஒரு சம்சாரிக்கு கட்டிக் கொடுத்தாக. கல்யாணம் முடிஞ்சி போனவ போனதுதான். அவ மாமங்காரன் அக்காளை பொறந்த வீட்டுக்கே போகக்கூடாதுன்னுட்டான். இங்கன இவுக வீட்டிலயும் வசதி இல்லாததால மொறை செய்ற கண்க்கில இருந்த தப்பிச்சிக்கிடலாம்னு அமைதியா இருந்துக்கிட்டாக. வீட்டு சாமான் வாங்க காச்சல் மண்டையிடின்னா ஊசி போடப் பக்கத்தூருக்குப் போனா அப்போ பார்த்துக்கிட வேண்டியதுதான். ரெண்டு நாள் வேலையிருக்கு அக்காக்காரி வீட்டில ரவைக்குத் தங்குவோம்கிற பேச்சுக்கிடமில்லை.

    அட்டத் தரித்திரம் விட்டத்தில இருக்கும்னு ஒரு சொலவடை சொல்வாக. அதைப்போல அமைஞ்சி போச்சி விசயா கதை. அவ அண்ணங்காரன் கூட வேலை செஞ்ச வள்ளியைக் கல்யாணம் பண்ணிகிட்டு வந்திட்டான். வந்த வள்ளி மொத வேலையா உங்கம்மாவுக்கும் உன் தங்கச்சிக்கும் நான் சோறாக்க முடியாதுன்னுட்டா. விசயாவையும் அவுகம்மாளையும் துண்டா ஒரு குடிசை பார்த்து வெச்சாக. ஒத்தைப் பொம்பளையா என்ன செய்ய முடியும் அவுகம்மாவுக்கு. அதனால அவளை களையெடுக்க்க கூடக் கூட்டிப்போச்சு. விசயாளுக்கு மிளகாச்செடிக்கும் களைக்கும் வித்யாசம்
    தெரியாம வரட்டு வரட்டுனு ஒரு பட்டம் மிளகாச்செடியைப் பிடுங்கிப்போட்டா. இதென்ன கெரகசாரம்னுட்டு முதுகில நாலு சாத்து சாத்திச்சி அவுகம்மா. பாவம் விசயா வாயெடுத்து அழுகுறா. பெருங்கொரலெடித்து கூப்பாடு போடறா.எனக்கெதுவும் தெரியலையே சொல்லிக்கொடு ஆத்தானு மருகுறா.அவுகம்மாவும் அழுகுது. பொழைக்கத் தெரியாத பொச கெட்டவளா வளர்த்திட்டோமேனு உருகுது. அவுகம்மா எல்லாத்தையும் விசியாவுக்கு சொல்லிக் கொடுத்திச்சு.மம்பட்டி பிடிக்கிறதும் வெட்டருவா பிடிச்சி மரம் வெட்டற்துமா விசயா பழகிக்கிட்டு ஊர்லயே வேலைக்குக் கெட்டிக்காரின்னு பேரெடுத்தாய்யா.

    விசயா சோடுப் பொண்ணுகளெல்லாம் கல்யாணம் ஆகிப் போய்ட்டாக. விசயாவிற்கும் கல்யாண ஆசை வந்திச்சு. விசயாவிற்கு கல்யாண செஞ்சி வைக்கத்தான் ஆளில்லையே. காதல் செஞ்சி யார் மனசையும் கவர முடியற அளவுக்கு கன்னியாலம்மன் விசயாவிற்கு அழகும் கொடுக்கலை. ஒரு வேளை கொஞ்சம் வசதியா நல்லா சாப்பிட்டிருந்தானா ஓரளவு பூசின ஒடம்பாயிருந்திருக்குமோ என்னவோ விசயா இன்னமும் ஒல்லிக்குச்சி போலத்தான் திரியுறா. காட்டு மேட்ல திரிஞ்சி தலைக்கு எண்ணையக் காட்டி பல வருசமானவளைப் போலத்தான் இருப்பா. எப்பவோ வாங்கின சிவப்பு ரிப்பனை வெச்சி ஒத்தைச்சடையை ரெண்டா மடிச்சிக் கட்டியிருப்பா விசயா.

    ஊரில பொம்பளைகளுக்கு பொழுது போகணும்னா விசயால வீட்டுக்கு கூப்பிட்டு கதை பேசுவாக. அங்கன மாப்பிள்ளையிருக்கு இங்கன மாப்பிள்ளையிருக்கு நான் உனக்கு பேசி முடிக்கிறேன்.. சித்த இந்த மாவை ஆட்டிக்கொடுத்திட்டுப் போனு ஏமாத்தி வேலை வாங்குறது தெரியாமலேயே எனக்கந்தப் பெரியம்மா கல்யாணம் முடிச்சி வைக்கும்.. அந்த கீழத்தெரு ராசம்மாக்கா மாப்பிள்ளை பார்த்திருக்குனு அப்பிராணியா சொல்லிக்கிட்டு திரிஞ்சா விசயா. அவுகம்மாவுக்கு சொந்த மகனே அனுசரனை இல்லாமப் போனதால இதயெல்லாம் தட்டிக்கேட்க முடியாம வாயிருந்தும் ஊமையாத்தான் கிடக்கு.

    ஏட்டி கல்யாணத்திற்கு பணம் வேணுமே பணம் சேர்த்துவை உடனே கல்யாணம் முடிக்கலாம்னு ஒரு தடவை பொங்கலுக்கு வந்த முத்துலட்சுமி சொல்லிட்டுப் போனதில இருந்து விசயா பணம் சேர்க்குறாய்யா. யாரென்ன வேலை சொன்னாலும் செய்றா. ஆள் ஒல்லியா இருந்தாலும் ஒரு ஆம்பிளை செய்ற வேலை செய்றா. அவ பணம் சேர்க்கற வெறியில மரத்தை வெட்டினானா மரச்சில்லுக எல்லாம் பல மைல் தூரமா பறந்து போகுதுக.
    மம்பட்டி பிடிச்சி கொத்துனான்னா மண்ணெல்லாம் விட்டிடு விட்டிடுன்னு வெலகி ஓடுது. சத்துணவு அமைப்பாளர் அக்கா மட்டுந்தான் விசயா மேல கொஞ்சமாவது உண்மையான பாசத்தோடு பழகும். அன்னன்னிக்கு மீந்து போன சாப்பாட்டையெல்லாம் விசயாவை வாங்கிகிட்டுப் போகச்சொல்லும். அது சொல்லித்தான் பக்கத்தூர் போஸ்ட் ஆபிஸ்ல பணம் போட்டிட்டு வந்தா விசயா.அந்தா இந்தானு அது ஒரு பத்தாயிரமாச் சேர்ந்து போச்சி. இன்னைக்குச் சீனியம்மா வீட்டு வேலைக்கு கிளம்பியிருக்கிறா.

    சீனியம்மாவோட வசவைச் சரிக்கட்டிக்கிட்டு வெக்கு வெக்குனு மேலக்காட்டுக்கு மத்த பொம்பளைகளோட போனா. மத்தியான வரைக்கும் களை வெட்டிட்டு வேம்புக்கடியில கூடினாக பொம்பிளைக. கொண்டிட்டு வந்த கஞ்சியைக் குடிச்சிட்டு கேலியும் கிண்டலுமா அன்னைக்குச் சாயுங்காலம் வரைக்கும் வேலை பார்த்தாக. கல்யாணத்தைப் பத்தி சீனியம்மாதான் பேச்சுக்கொடுத்தா.கம்மாப்பட்டியில ஒரு ஆளு இருக்காரு. அவரும் பல நாளாக் கல்யாணம் முடிக்காமத்தான் இருக்காரு பேசி முடிச்சிடுவமான்னா சீனியம்மா. சரின்னா விசயா.விசயாளுக்கு ஒரு வழி பொறந்திடுச்சோன்னு சந்தோஷப் படுதுக அவ கூட்டாளியெல்லாம்.

    பொண்ணு பார்க்க ஏற்பாடெல்லாம் சீனியம்மா தலைமையில நடக்குது. மாப்பிள்ளைக்காரனும் அவன் தங்கச்சி குடும்பமும் பொண்ணு பார்க்க குறுக்குப் பாதை வழியா மொட்டை வண்டில வந்து எறங்குறாங்க. மாப்பிள்ளை ராசப்பனுக்கு 40 வயசிருக்கும். ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்குமிடையே எங்க ஊர் கம்மா மடை போல இடமிருக்கு. வண்டி மசை போல கரு கருன்னு அப்படி ஒரு கருப்பு. முடியை விளக்கெண்ணை ஊத்தி படிய வாரி நெத்தில செந்திருக்கப் பொட்டை வெச்சிருக்கான். அவன் தங்கச்சி, தங்கச்சி வீட்டுகாரன், அப்புறம் சின்ன புள்ளைக ரெண்டு பேரு இவ்வளவுதான் மாப்பிள்ளை வீட்டு ஆளுக. உள்ளூர்ல இருக்கிற அண்ணங்காரனும் அவன் பொண்டாட்டியும் ஏதோ போனாப் போகுதுன்னு வர ஒத்துக்கிட்டாக. அதிலயும் அவ மதினி வள்ளி விசயாவோட அண்ணங்காரனை சொல்லித்தான் கூட்டிட்டு வந்தா. அங்கன போய் அது செய்றேன் இது செய்றேனு வாய்விட்ட்டீரு தொலைச்சிப்பிடுவேன் தொலைச்சினு. விசயா அண்ணன் மக்கமாரு ரெண்டு பேரும் வந்தாக. விசயாவோட அம்மாவைச் சேர்த்துகிட்டா இவ்ளோதான் பொண்ணு வீட்டாளுங்க.

    ராசப்பன் இருக்கிற லட்சணத்திற்கு விசயா அழகுல நொட்டம் சொல்லுதான். பொண்ணு ஒல்லியாயிருக்குங்குறான். வயசாயிடுச்சுங்குறான் அந்த 40 வயசு இளவட்டம். அவன் இருக்குற இருப்புக்கு ஐம்பதாயிரம் கொடுத்தா கட்டிக்கிடுதேங்கான். விசயா வச்சிருக்கிற பத்தாயிரம் அவ பட்ட பாடு அவளுக்குத்தான் தெரியும். விசயா மதனி எங்க வீட்டுக்காரன் வாக்குக்கொடுத்திடுவானோன்னு அவனை வடக்குவாசெல்லியம்மனைப் போல ஒரு முறை முறைச்சிப் பார்க்கிறா. விசயாவோட அம்மா வீட்டு எடத்தை வித்தாவது கட்டிக்கொடுக்கணும்னு சரின்னு சொல்லிச்சு. கார்த்திகை மாசம் அது.மார்கழி முடிச்சி வர்ற தையில கல்யாணத்தை வெச்சிக்கிடுவோம்னு பேச்சு.யாரைப்பார்த்தாலும் கல்யாணத்தைப் பத்திதான் பேசுறா விசயா. வேலைக்குப் போன அங்க இருக்குற பொம்பிளைகளுக்கு எடக்குப் பேச இப்போ விசயா கல்யாணம் அமைஞ்சி போச்சி.

    பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்னு சும்மாவா சொன்னாக. விசயாவோட அண்ணன் காரனுக்கு மரத்திலேருந்து விழுந்து பொசம் இறங்கிப்போச்சின்னு ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகலாம். திரும்பவும் தோள்பட்டையச் சேர்த்துவைக்கணும்னா இருபதாயிரம் செலவாகுங்குறாரு கணேசன் டாக்டரு.அப்படியும் அவனால கையை வெச்சு முரட்டு வேலைகளெல்லாம் செய்ய முடியாதாம். விசயாதான் சத்துணவு அக்கா சொல்லச் சொல்லக் கேட்காம அந்தப் பத்தாயிரத்தை தூக்கிக் கொடுத்தா. ராசப்பனைக் கல்யாணம் கட்ட முடியாதுன்னு தாக்கல் சொல்லியாச்சி. இப்போவும் என்ன வேலைன்னாலும் விசயா செய்யத் தயாராதான் இருக்கா. வம்பாடுபட்டாவது பணம் சேர்த்து கல்யாணம் செய்யணும்னு இல்லை. அண்ணன் பிள்ளைகள் அவளைப் போல தெருவில திரியக்கூடாதேன்னுட்டுதான்.

    சில வார்த்தைகளின் பொருள்

    அச்சலாத்தி- எரிச்சல்

    அருகு- அருகம்புல்

    வெள்ளாமை- வேளாண்மை

    ரவைக்கு- இரவுக்கு

    அட்டம்- அஸ்டம்- முடிவு

    விட்டம்- வீட்டின் மேலிருக்கும் மரம்

    பட்டம்- பயிர்களின் நீண்ட வரிசை

    துண்டா- தனியாக தனிக்குடித்தனம்
    Last edited by mukilan; 30-06-2008 at 03:13 PM.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    ஐயா நல்லா கதை எழுதிறீரே! இது என்னா வாட்டாரத்து பாசைன்னு கொஞ்சம் சொல்லிப்புடுங்க.

    விசயாவை நெனச்சாத்தேன் கொஞ்சம் பரிதாபமா இருக்கு. பாவம் அந்தப்புள்ள. கண்ணுக்குள்ளாறயே வந்து போறா. அந்தப் புள்ள மனசு கொழந்தங்க. அவளை தூக்கி கொஞ்சறாப்ல ஊர் சனங்க செய்யற அட்டகாசம் இருக்கே! அப்பப்பா! அந்த கொழந்தைக்கு பால் தாரேன்னுட்டு பால் ஊத்திப்புட்டாய்ங்க. சரி விடுங்க.. இத்தினி நாள் கழிச்சி இப்படி அம்புட்டு அழகா கத கொடுத்திறீக்கீங்க. நல்லா இருமய்யா! நல்லா இருங்க.

    கதயில எந்த நொள்ளயும் சொல்ல முடியலப்பு. கண்ணுக்குள்ள தண்ணி வரலையே தவித்து, மனசு கனக்குதுய்யா. இந்த கதய படிக்கிறப்ப ஊர் பெரிசுக மரத்துக்கடியில உக்காந்து கத சொல்றாப்ல நெனப்பு.. கத அப்படி நெனப்ப கொண்டு வருது. அதிலயும் கிராமத்து பாசை பின்னியிருக்கீகப்பு..

    ம்ம்ம்... உன்னும் என்ன சொல்றது? அம்புட்டுத்தான்... நெறய எழுதுங்க. அப்பத்தான் நாமளும் நாலு எழுத்து தெரிஞ்சிக்க முடியும்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    இது எங்கள் வட்டார வழக்குமொழி ஆதவா. கரிசல்காட்டு வட்டாரமொழிதான் என்றாலும் கி.ரா வின் கரிசல் காட்டிலிருந்து சற்றே மாறுபட்டது எங்கள் வட்டார வழக்கு மொழி. பா.செயப்பிரகாசம், கரு.வேல. ராமமூர்த்தி என்று சில எழுத்தாளர்கள் எங்கள் வட்டாரமொழி கொண்டு எழுதியிருக்கிறார்கள். மன்றத்தில் பாரதி அண்ணா ஒரு சில நிகழ்வுகளை எங்கள் வட்டார மொழியொத்த ஒரு மொழியில் எழுதியிருக்கிறார்.ராகவனும் கதைகளிலும் சில நிகழ்வுகளிலும் எழுதியிருக்கிறார். அவர்கள் அனைவரின் படைப்பின் உந்துதலே என் இந்த முயற்சி. உங்கள் விமர்சனத்திற்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. கவிதையில் கலக்கிக் கொண்டிருக்கும் உங்களிடம்தான் நான் நாலெழுத்து கற்றுக் கொள்ளவேண்டும்.

    எங்க ஊரு எதுன்னு சொல்லாமப் போய்ட்டேனே! தூத்துக்குடி மாவட்டத்தில விளாத்திகுளம் அதுக்கும் பக்கமா ஒரு ச்ச்ச்ச்ச்ச்ச்சின்ன கிராமம். அந்தப் பக்கம் இருக்கிற கரிசல் காட்டு வழக்கு மொழிதான் இது.

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mukilan View Post
    இது எங்கள் வட்டார வழக்குமொழி ஆதவா. கரிசல்காட்டு வட்டாரமொழிதான் என்றாலும் கி.ரா வின் கரிசல் காட்டிலிருந்து சற்றே மாறுபட்டது எங்கள் வட்டார வழக்கு மொழி. பா.செயப்பிரகாசம், கரு.வேல. ராமமூர்த்தி என்று சில எழுத்தாளர்கள் எங்கள் வட்டாரமொழி கொண்டு எழுதியிருக்கிறார்கள். மன்றத்தில் பாரதி அண்ணா ஒரு சில நிகழ்வுகளை எங்கள் வட்டார மொழியொத்த ஒரு மொழியில் எழுதியிருக்கிறார். அவர்கள் அனைவரின் படைப்பின் உந்துதலே என் இந்த முயற்சி. உங்கள் விமர்சனத்திற்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி. கவிதையில் கலக்கிக் கொண்டிருக்கும் உங்களிடம்தான் நான் நாலெழுத்து கற்றுக் கொள்ளவேண்டும்.
    உங்கள் வட்டாரம் என்றால் எந்தப் பகுதி? நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள் என்பதும் நான் இன்னும் பல படிக்கவேண்டும் என்பது தெரிகிறது.... கவிதையைக் கலக்கினால் சேறுங்க... (தெளிந்த குளத்து நீரைக் கலக்கினால் சேறு) அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். நான் கூட இந்த வட்டாரத்து மொழியை முயற்சி செய்தேன்.. தோல்விதான்.. உங்களது கதையில் வரும் சில வார்த்தைகள் அதை நன்றாக உறுதி செய்கிறது... வட்டார இலக்கியம் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வருவதில்லை.

    நான் இருப்பது திருப்பூர் டவுன். அங்கே கோவைத் தமிழ்கூட பேசப்படுவதில்லை..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    விசயாக்காவை நெனைச்சி.. நெஞ்சுக்குழியெல்லாம் ஈரமாயிடிச்சிங்கண்ணே...
    எம்புட்டு பாடுபட்டு.. அந்த விசயாக்கா மம்முட்டி புடிச்சி தொழில் கத்துக்கிச்சி.. எல்லாம் அதோட வெள்ளந்தி மனசு மாதிரியே நல்லதா நடக்கும்னு ஆத்தாவ வேண்டிக்கிட்டேன்...

    விசயாக்கா மாதிரி எத்தன அக்கா இன்னும் காத்திருந்தே துரும்பானாங்களோ... ??

    எத்தன சுயநலமா சொந்தமிருந்தாலும்.. ஓடியோடி உதவி செய்யற விசயாக்கா மாதிரி ஆளுங்க இருப்பதால தானோ என்னமோ எங்க ஊருல மழை நல்லா பெய்யுது..

    விசயாக்கா.. ஊருக்கு வந்தா அடுத்தாப்ல இங்குட்டு கட்டாயம் வரனும்னு சொல்லுங்க முகிலண்ணே...

    மனசு முழுக்க பாரமாயிடிச்சா என்ன எழுதன்னே தெரியல... அந்த விளக்கெண்ணைத் தலையனுக்கு பொண்ணு ஒல்லிபிச்சானாம்.. ரொக்கமா ஐம்பதாயிரம் காசு கேட்குதா? நல்லா சாடியிருக்கீக அண்ணே... கல்யாணம் நின்னதும் நல்லதுக்குத்தேன்னு விசயாக்காவுக்கு ஆறுதல் சொல்லிடுக அண்ணே...!!

    -------------------------------------
    ரொம்ப அழகான கிராமிய கதை.. சற்றும் தொய்வில்லாத நடை.. சில இடங்களில் வார்த்தைகள் வியக்க வைத்தது...

    அருமையான பல கருத்துகளைப் பகிர்ந்த கதைக்கு என் அன்புப் பரிசாக ஆயிரம் பொற்காசுகள்
    .
    Last edited by பூமகள்; 30-06-2008 at 05:55 AM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    கதை என்பது நிறைய வகைப்படும். சில படித்துவிட்டு...ஏதோ போடவேண்டுமே என பின்னூட்டம் போட வைக்கும். சில நெஞ்சில் நிலைத்து நிற்கும். உங்கள் கதை இரண்டாம் பிரிவை சேர்ந்ததென்றாலும் முதல் வகுப்பில் தேர்வு பெறும் அருமையான கதை. விசயாவ நெனைச்சா மனசு மருகுது. வெள்ளந்தியான பொண்ணு....எப்ப வாக்கப்படபோறான்னு மனசு கெடந்து தவிக்குது.

    சொந்தத்துக்கு ஒண்ணுன்னா ஓடி வர்ற மனசு...ஆனா அவளுக்காக நடந்து வரக்கூட யாருக்கும் மனசில்லையே அய்யா.....

    உள்ளத்தை தொட்ட கதை...இல்லை நிகழ்வு. மனதாரப் பாராட்டுகிறேன் அன்புத் தம்பியை. வாழ்த்துகள் முகிலன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அன்பு முகில்,

    கையைக் கொடு.....!

    பாரதி, ராகவன், கி.ரா உள்ளிட்ட எழுத்தாளர்களை பெருமை செய்துவிட்டாய்!

    சொல்ல வந்ததை சுவையான நடையில், இயல்பான நிகழ்வுக்கோர்வையில்,
    ஒரு நேர்க்கோட்டில் சொன்ன விதம் - மிக மிக அருமை!

    வர்ணனைகளும், வசனங்களும் அத்தனை நேர்த்தியாய் -

    ஓர் உளமுருக்கும் விவரணப்படத்தை கருப்பு -வெள்ளையில் பார்த்த
    விளைவு இக்கதை படித்து எனக்கு.

    விசயா - ஒருத்தியின் கதையல்ல..
    ஒரு சமூகத்தின் குறுக்குவெட்டு!

    தூரத்து உறவினர், உடன் பணி புரிந்தவர் - என இரு ஆண்களை
    பாரதி பார்வையும் இதே நோக்கில் படம் பிடித்திருக்கிறது..

    சமூக நோய்களின் பதிவாளன் - கதைசொல்லி!
    வேர் எங்கே? தீர்வென்ன?
    அது அனைவரின் ஒட்டுமொத்தப் பொறுப்பு..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அழகான தெளிவான நடையில் வட்டார மொழியில் ஒரு கதை.. எங்க போயிருந்தீங்க முகிலன் இவ்ளோ நாளாய்...?

    விசயாக்கா..மாதிரி வெள்ளை மனசோட நிறைய பெண்கள் இன்னமும். தங்கள் நடையில் கண்முன்னே கிராமத்தைப் பார்ப்பது போலிருந்தது..

    வாழ்த்துகள்...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    விசயா அக்கா மாதிரி நிறைய கதைகள் ஒவ்வொரு கிராமத்திலும் கேட்க முடியும்.
    அருமையான கதை தெளிவான நடை பிசிறு தட்டாத வட்டார வழக்கு....
    தொடர்ந்து நீங்க நிறைய எழுதணும் முகிலன் அண்ணா..
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இறுதிப்பந்தி படிக்கும் போது மனம் கலங்கிவிட்டதையா.... உரைநடையிலேயே கதை சென்றவிதம் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டது...

    பாராட்ட தகுதி இல்லை. வாழ்த்துகிறேன் அண்ணலே....
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by பூமகள் View Post
    [COLOR=Indigo]
    ரொம்ப அழகான கிராமிய கதை.. சற்றும் தொய்வில்லாத நடை.. சில இடங்களில் வார்த்தைகள் வியக்க வைத்தது...

    அருமையான பல கருத்துகளைப் பகிர்ந்த கதைக்கு என் அன்புப் பரிசாக ஆயிரம் பொற்காசுகள்
    .
    ஆயிரம் பொறகாசுகளா... சொக்கா எனக்கேவா!

    நன்றி தங்கையே. பின்னூட்டத்தில் உனது கிராமிய நடை கலக்கலா இருக்கே. நீயும் உங்கள் ஊரின் வட்டார மொழிவழக்கில் ஒரு கதை எழுதிடலாமே. விசயாக்கா கிட்ட அடுத்த முறை ஊருக்குப் போகும்போது தங்கையின் வாழ்த்துகளைக் கண்டிப்பா தெரிவிச்சிடறேன்.

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    சொந்தத்துக்கு ஒண்ணுன்னா ஓடி வர்ற மனசு...ஆனா அவளுக்காக நடந்து வரக்கூட யாருக்கும் மனசில்லையே அய்யா.....
    அண்ணாவின் வாழ்த்துக்கு நன்றிகள் பல. கதையின் உட்கருத்தா நான் நினைச்சது இதுதான். அதை சரியா சொல்லிட்டீங்கண்ணா. உங்கள் வாழ்த்துக்கு மீண்டும் என் பணிவான நன்றிகள்.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •