கோடி பெறுமான
அழகிய பங்களாவை
அலங்கோலப்படுத்தும்
முகப்பு திருஸ்டி பொம்மையாய்
சில பல கெட்டவார்த்தைகளுடன்
ஆரம்பமாகும்
தெரு நண்பர்களின்
தெருவோர வட்டமேஜை மாநாடு.

நேத்து கொஞ்சம் தண்ணி ஓவரோ!
சீதாவ கரெக்ட் பண்ணட்டியா!
இப்படி போக்கிரிகளாய் ஆரம்பித்தாலும்
எவ்ளோடா வேணும் சொல்லு!
எங்க டிராப் பண்ணணும்!
எதுவா இருந்தாலும போன் பண்ணு மச்சி!
நான் பாத்துக்கறேன் மாப்ள!
இப்படி அழகிய தமிழ்மகன்களாகவும்
ஆகிவிடுவதுண்டு.

சற்று ஓவராக பீட்டர் விடும்
வடிவேல்களுக்கும்
கருத்துசொல்ல முயலும்
விவேக்குகளுக்கும்
மச்சி அடங்குறியா என்ற
அளவுகோல்
எவரிடமிருந்தும் பாயலாமென்ற
பயம் இருக்கும்

பக்கத்துவீட்டுச்செட்டியாரிடம்
பாத்துவச்சிக்க!
எதிர்வீட்டு பாப்பான்
எல்லாத்தையும் ஏப்பான்!
தந்தைமார்களுக்கு இருக்கும்
இது போன்ற தேசபக்தியை மிஞ்சும்
ஜாதிபக்தியெல்லாம்
கடனில் வாங்கிய
ஒரு தேநீர் குவளையை
நாலைந்துபேர்கள் சேர்ந்து
பரிமாறிக்கொள்ளும்
பிள்ளைகளிடமெல்லாம் எடுபடுவதில்லை

சின்னத்திரை சீரியலில்
சீரியஸாய் அழுது வடியும்
வீட்டு பொம்மனாட்டிகளுக்கும்

இப்படி ஆடியிருந்தால்
அவுட்டாயிருக்கமாட்டானென்று
இலவச வணண்த்தொலைக்காட்சிக்கு
முன்னால் அமர்ந்துகொண்டு
டெண்டுல்கருக்கு கோளாறு சொல்லும்
தந்தை மார்களுக்கும்

நாங்களெல்லாம் அந்த காலத்துல என்று
வீட்டுத்திண்ணைமீதமர்ந்து
பழம்பெருதை பேசும் பெருசுகளுக்கும்

அப்படி அவர்கள் செய்யாத
எதைஒன்றை பெரிதாய்
செய்துவிட்டார்களென்று
நணபர் பட்டாளத்தை கண்டால்
இப்படி கரித்துக்கொட்டுகுறார்களென்றுதான்
புரியவில்லை.


எஸ்.எம்.சுனைத் ஹஸனி.
mahasin2005@yahoo.co.in