சிக்கனம் !



" பணத்தை கன்னா பின்னாவென்று கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்பவர்களிடம் பணம் தங்காது!' என்பான் என் நண்பன் நிக்கி; அவன் ஒரு கோடீஸ்வரன். அவனுடைய நண்பன் ரவியும் ஒரு கோடீஸ்வரன். எதற்கு இந்த விபரம் என்று கேட்கிறீர்களா... சொல்கிறேன்.

நாங்கள் நண்பர்கள் ஐந்தாறு பேர். அவ்வப்போது ஒரு குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துப் பேசுவோம். கூடவே மது அருந்துவதும் உண்டு. உடனே, எங்களைக் குடிகாரர்கள் என்று எண்ணி விட வேண்டாம்.

ஒரு மாதுவின் துணை இல்லாமல் இரண்டு ஆண்கள் பல மணி நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்றால், மதுவின் துணையாவது வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள், " வேறு மாதிரி' ஆட்களாக இருக்க வேண்டும் என்பது அடியேனின் கருத்து. ஆனால், எங்களுடைய சந்திப்புக்கான செலவு, மாதம் ஒன்றரை லட்சம்.

நிக்கியும், ரவியும் ஒரு முடிவு செய்தனர். நகரின் ஓரத்தில் கடற் கரை அருகே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து, அதை நம் முடைய சந்திப்புக்கான கெஸ்ட் ஹவுஸாக ஆக்கினால் என்ன?

எனக்கு அந்த ஐடியாவில் உடன்பாடு இல்லை. ஆனால், அதை நான் எப்படி சொல்ல முடியும்? நான் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் மாட்டிக் கொண்டிருந்தேன்.

முக்கியமாக, உடைப் பிரச்னை. கடந்த பத்து ஆண்டுகளாக என் நண்பன் வெங்கிதான் என்னுடைய, " காஸ்ட்யூம்' பிரச்னையைத் தீர்த்து வைத்துக் கொண்டிருந்தவன். நல்ல, நல்ல விலையுயர்ந்த ஆடைகளை வாங்கித் தருவான். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அவன் மது அருந்துவதை நிறுத்திவிட்டான்; அவ்வளவுதான், என்னுடைய உடை சப்ளையும் நின்று போனது!

ம்... பாருங்கள். குடி குடியைக் கெடுக்கும் என்கின்றனர். என்னுடைய விஷயத்தில் ஒருத்தன் குடியை நிறுத்தியது, என் குடியைக் கெடுத்து விட்டது.

" உன் உடையை நீயே வாங்கிக் கொள்ள வேண்டியது தானே? அடுத்தவனை, ஏன் எதிர்பார்க் கிறாய்?' என்கிறீர்களா? நான் ஒரு எழுத்தாளன் ஐயா, எழுத்தாளன். எழுத்தாளனுக்கு முன்னால் என்ன அடைமொழி வர வேண்டும்? அதை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.

வெங்கியின் மனைவி கூட கேட் டார்களாம், " என்ன இப்போதெல் லாம் இவருடைய செலவு பட்ஜெட் ரொம்பவும் சுருங்கிப் போய்விட்டதே? என்ன விஷயம், சின்ன வீடு கின்ன வீடு, வைத்திருந்து, அதை, இப்போது ஒதுக்கி விட்டாரா...' என்று. அதாவது, அந்தக் கேள்வியின் அர்த்தம் என்னவென் றால், ஒரு சின்ன வீட்டை வைத்துப் பராமரிப்பதை விட தன் நண்பர் குழாமுக்கு அதிக செலவு செய்திருக்கிறான் வெங்கி.

சரி, அது போகட்டும். என் பிரச்னைக்கு வருகிறேன். ஒரு நாள் நிக்கி போன் செய்தான்... "டீக் கடைக்கு வருகிறாயா?' ( நாங்கள் செல்லும் நட்சத்திர ஓட்டலைத் தான் செல்லமாக "டீக்கடை' என்று அழைப்போம்.

அப்போது மதியம் மணி பனிரண்டரை. அவசர, அவசரமாகக் கிளம்பியதில், சட்டையில் இடுப்புக்குக் கீழே ஒரு ஓட்டை இருப்பதை கவனிக்கவில்லை. டீக்கடையின் உள்ளே நுழையும் போதுதான் கவனித்தேன். இப் போது என்ன செய்வது? சட் டையை இன்சர்ட் செய்யலாம் என் றாலும், அதற்கு டாய்லட் வரை போக வேண்டும்.

ஒரு ஐடியா உதித்தது. ஓட்டை இருந்த பகுதிக்குப் பக்கத்தில் தான் பாக்கெட் இருந்ததால் ஒரு கையைப் பாக்கெட்டுக்குள் விட்டுக் கொண்டேன். ஓட்டைப் பிரச்னை தீர்ந்தது.

திரும்பி வரும்போது என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா? ம்ஹூம்; ஞாபகம் இல்லை. இது ஒரு பக்கம் இருக்க, கெஸ்ட் ஹவுஸ் போட்ட பிறகும் செலவில் ஒன்றும் மிச்சப்படுத்தியதாகத் தெரியவில்லை.

கெஸ்ட் ஹவுசில் ஒரு பாரை செட்டப் செய்ய வேண்டியிருந்தது. அவ்விஷயத்தில் ரவியைப் பாராட்டியே தீர வேண்டும். சென் னையிலேயே அப்படி ஒரு அழகான பாரை பார்க்க முடியாது என்ற வகையில் அதை அமைத்திருந் தான். நீலம், பச்சை, தங்கம், கறுப்பு, சிவப்பு என்று ஐந்து நிறங்களில் கிடைக்கும் ஸ்காட்ச் விஸ்கியிலிருந்து, உலகில் கிடைக்கும் மிக அற்புதமான மது வகைகள் அனைத்தும் அந்தக் கண்ணாடி அடுக்குகளில் வெகு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

ஜானி வாக்கர் என்று அழைக்கப்படும் அந்த ஸ்காட்ச் வகையறாவில், ப்ளு லேபிள் தான் காஸ்ட்லியான ஐட்டம். ஒரு, " புல்' லே பல ஆயிரம் ரூபாய். அதே, " ஜாதியில்' அதிலிருந்து மற்ற சரக்குகளின் விலை படிப்படியாகக் குறையும். நிக்கி வழக்கமாகக் குடிக்கும் ப்ராண்ட் கறுப்பு. விலை 1,500 ரூபாய்.

" நான் மட்டும் பணக்காரனாக இருந்தால் ப்ளு லேபிள் தான் சாப் பிடுவேன்!' என்று, நினைத்துக் கொள்வேன். பணத்தைச் செலவு செய்யும் விஷயத்தில் என்னை யாருமே அடித்துக் கொள்ள முடியாது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அருணாச்சலம் என்ற படத்தில் 30 கோடி ரூபாயை 30 நாளில் செலவு செய்ய ரஜினிகாந்த் என்ன பாடுபடுவார்! என்னிடம் அதைக் கொடுத்துப் பாருங்கள்; எந்தச் சிரமமும் இல்லாமல் பத்தே நாளில் அதைக் காலி பண்ணி விடுவேன்.

வெறும் வாய்ச் சவடால் இல்லை. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். சென்ற ஆண்டு நானும், என் நண்பரும் பாரிஸ் சென்றிருந்தோம். நண்பர் ஒரு கோடீஸ்வரர். அவர் தான் செலவு செய்து என்னை அழைத்துச் சென்றிருந்தார்.

இரண்டே நாளில் இரண்டு லட்சம் காலி. இவ்வளவுக்கும் திருவல்லிக்கேணியில் 100 ரூபாய் வாடகையில் கிடைக்கும் படு மட்டமான ரூமைப் போன்ற ஒரு ரூமில் தான் தங்கினோம். வாடகை என்ன தெரியுமா? ஒரு நாளைக்கு 5000 ரூபாய். உடனே பாரிஸ் அவ்வளவு காஸ்ட்லியான ஊரா என்று நினைத்து விடாதீர்கள். நம்முடைய பணத்தின் மதிப்பு அவ்வளவு கம்மி.

பாரிஸில் ஒரு காபி குடித்தால் 210 ரூபாய் ஆகிறது என்றால், இந்தியர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். கலாம் சார் அடிக்கடி, " வல்லரசு, வல்லரசு' என்கிறாரே... ஒரு ரூபாயின் மதிப்பு ஒரு யூரோவுக்குச் சமம் என்ற நிலை ஏற்பட்டால் தான் இந்தியாவை உண்மையில் வல்லரசு என்று சொல்ல முடியும்.

இந்தப் பொருளாதார விஷயமெல்லாம் கிடக்கட்டும்... ரவியின் கெஸ்ட் ஹவுசுக்கு வருவோம். உலகின் மிகச் சிறந்த மது வகைகள் அடுக்கப்பட்டிருந் தாலும் அந்த பார் ஒரு வேஸ்ட் என்று தான் சொல்லுவேன்.

ஆமாம்... அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுத்துக் குடிக்க முடியாது. உங்களுக்கு வேண்டியதை நீங்கள் வெளியிலிருந்து தான் வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

" இது என்னடா கொடுமை?' என்று ஒரு நாள் நிக்கியிடம் புலம்பினேன்.

அவன் சொன்ன பதிலிலும் ஒரு லாஜிக் இருந்தது. என்ன வென்றால், எங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்கள் அனைவரும், அவர்களுக்குப் பிடித்ததை எடுத்துக் குடித்து விட்டால் அந்த விமரிசையான பார் ஒரே வாரத்தில் காலியாகி விடும்! அதனால் தான் அந்த சிஸ்டம் என்றான் நிக்கி.

ம்...கேட்பதற்குச் சரியாகத் தான் இருந்தது. ஆனால், என் சக சிறு பத்திரிகை இலக்கியவாதிகளுடன் ஆளுக்குப் பத்து, இருபது ரூபாய் என்று பீறாய்ந்து, " ஓல்ட் மாங்க்' ரம் வாங்கி அடிப்பதில் உள்ள சுதந்திரம் இந்த பாரில் இல்லையே என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால், ஒரு சலுகை உண்டு. நீங்கள் எந்த பாட்டிலை வேண்டுமானாலும் எடுத்துக் காலி செய்யலாம்; 24 மணி நேரக் கெடுவுக்குள் அதே பாட்டிலை வாங்கி அந்தக் கண்ணாடி அடுக்கில் வைத்து விட வேண்டும்.

என்ன தான் இருந்தாலும், அந்த கெஸ்ட் ஹவுஸ் எனக்கு உளவியல் ரீதியான தொந்தரவைத் தான் கொடுத்துக் கொண்டிருந்தது. காரணம் டீக்கடையின் மாதச் செலவு ஒன்றரை லட்சம் என்றால், கெஸ்ட் ஹவுசின் செலவும் கிட்டத்தட்ட அதே தான் ஆனது.

மாத வாடகை 30 ஆயிரம் ரூபாய். குளிர்சாதனம் மற்றும் மின்சார செலவு. பணிப்பெண்களின் ஊதியம். நேப்பாளி காவல்காரனின் சம்பளம்!

அவன் அந்த வீட்டு அவுட் ஹவுசில் தங்கிக் கொண்டான். மற்ற இத்யாதி செலவு வேறு! இப்படி சாமியார் பூனை வளர்த்த கதையாக அந்த கெஸ்ட் ஹவுசின் பராமரிப்புச் செலவு ஒன்றரை லட்சத்தை எட்டியது.

ஒரு வேடிக்கையைக் கேளுங்கள்... எனக்கு இந்தப் பணக்காரர்களின் உலகத்தை அவர்களோடு எவ்வளவு தான் நெருங்கிப் பழகினாலும் புரிந்து கொள்ளவே முடிய வில்லை. அன்றைய தினம் கெஸ்ட் ஹவுசில் முதல் நாளாகச் சந்திக்கிறோம்... வழக்கமாகக் கூடும் நான் கைந்து நண்பர்கள்.

ரவி ஒரு ஐடியாவை முன் வைத்தான். அதாவது நாம் தினந் தோறும் சோடா வாங்குகிறோம். ஒரு நாளைக்கு 15 சோடா என்றால், அதனால் ஏற்படும் மாதாந்திர செலவு 500 ரூபாய். அதற்கு நாமே ஏன் ஒரு சோடா மேக்கரை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது?

இந்த அருமையான ஐடியாவுக்காக ரவியை மெத்தப் பாராட்டிய நிக்கி, சோடா மேக்கர் தயாரிக்கும் கம்பெனிகளுக்கெல்லாம் போன் போட்டான். ஒரு சோடா மேக்கரின் விலையே 3000 ரூபாய் தான் என்று தெரிந்தது.

கிட்டத்தட்ட அந்த சோடா மேக்கர் விஷயமே அன்றைய மெயின் சப்ஜெக்டாக ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு டெக்னிகல் பிரச்னையால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதாவது, சோடா மேக்கரில் ஏதாவது கோளாறு நேர்ந்தால், அதைச் சரி செய்வது ஆகாத காரியம்; மீண்டும் ஒரு புதிய சோடா மேக்கர் தான் வாங்க வேண்டும்.

" சரி, சோடாவே வாங்கிக் கொள்ளலாம்' என்று மூன்று மணி நேர விவாதம் மற்றும் முயற்சிக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டது.

அடப்பாவிகளா! எனக்கு என்றைக்குமே பணக்காரனாக வேண்டாம் என்று தோன்றியது. இதற்கிடையில், ரவியின் சொத்து மதிப்பு 200 கோடி இருக்கும் என்பதையும் உங்களுக்கு நான் சொல்லியாக வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் நிக்கியிடம் எனக்குச் சில விஷயங்கள் பிடித்திருந்தன.

ஒரு நாள் டீக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந் தோம். தந்தூரி சிக்கனை சாப்பிட்டதில் கையில் மசாலா ஒட்டிக் கொண்டது. டீக்கடையில் வழக்கமாக வெள்ளைத் துணியாலான, " நாப்கின்' கொடுப்பர். அதை ஒரு பக்கம் நகர்த்தி வைத்துவிட்டு பேரரை (பணியாளர்) அழைத்து டிஷ்யூ பேப்பர் கேட்டான் நிக்கி.

ஏனென்று கேட்டேன். அதற்கு நிக்கி சொன்ன பதில்: துணியில் துடைத்தால் அந்த கறையை எடுக்க தண்ணீர் அதிகம் செலவாகும். பேப்பர் டிஷ்யூ என்றால் துடைத்துத் தூக்கிப் போட்டு விடலாம்.

மற்றொரு சம்பவம்:

சிவாஜி படத்தில் வரும் இங்கிலீஷ் பாடல் ஸ்டைலில் ஒரு பாட்டு... மிகவும் உன்னிப்பாகக் கேட்டால் தான் அதில் வரும் தமிழ் வார்த்தைகள் புரியும். ஆங்கில எழுத்து, " ஓ' வுக்கு அடுத்த எழுத்தை வைத்து பாடப்பட்ட அசிங்கமான வார்த்தைகளைக் கொண்ட பாடல்.

இது எப்படியோ நிக்கியின் மொபைல் போனுக்கு வந்திருக்கிறது. மிகவும் குதூகலத்துடன் எல்லாரிடமும் அதைக் பாட விட்டு காண்பித்துக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் தன் மனைவியிடம் அதைப் போட்டுக் காட்டியிருக்கிறான். அந்த அம்மையாருக்கு ஒன்றும் புரியவில்லை என்றதும், தன் மகளைக் கூப்பிட்டு கேட்கச் சொல்லியிருக்கிறான்.

கல்லூரியில் படிக்கும் அந்தப் பெண் தன் அம்மாவிடம், " அப்பா இன்னமும் நம் கிச்சா மாதிரியே இருக்கிறார்!' என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறாள்.

கிச்சா, நிக்கியின் 18 வயது மகன்!

* * *

சாருநிவேதிதா
நன்றி : தினமலர் – வாரமலர்