சத்தம் சூழ்ந்த இவ்வுலகில்
பூத்த உறவல்ல இது!
இரத்தம் சூழ்ந்த கருவுலகில்
பூத்த உறவிது!

நானிருந்த கருவறையில்
எனக்குப்பின் வந்தவள் நீ!
நான் தமக்கை என்ற பதவியை
எனக்குத் தந்தவள் நீ!

காற்றில் இரு பூக்கள்
உரசிக்கொள்ளும் கவிதைதான்
உனக்கும் எனக்குமான
மோதல்கள்!!

இப்பொழுதெல்லாம்
மோதல்களில் நீயே
வெற்றிக்கொள்கிறாய்..

நம் ஆயுதங்கள்,
அதிகபட்சம் தலையணைகள்!

காலங்கள்
வினாடிகளை விடவும்
வேகமாய் ஓடுகின்றன!

பால்ய காலங்களை கடந்து -இன்று
பருவ காலத்திலே நாம்!

ஒரே அறையில்
ஒன்றாக பயில்கிறோம் -பின்
நன்றாக துயில்கிறோம்!
எப்போதும் மகிழ்கிறோம்!!

இருவரும் பிரியும் தருணங்கள்
எதிர்காலங்களில் வரலாம்!
சில கண்ணீர்காலங்களை
அவை நமக்கு தரலாம்!

அந்த கணங்களில் எல்லாம்
என் கண்களின் வழியே வழியும்
உனக்கும் எனக்குமான
செல்ல மோதல்களின் நினைவுகள்!!!