ஒரே இலங்கைக்குள் பெற்றுக்கொடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திற்கு 95 வீதமான தமிழர்கள் ஆதரவு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் கருத்து வெகுசன வாக்கெடுப்பின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும் என அமெரிக்க சட்டத்தரணி புருஸ் பீன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இயங்கும் தமிழர் அமைப்பின் சட்டத்தரணியான புருஸ் பீன் இந்த சவாலை விடுத்துள்ளார்.

இதன்படி, 5 வீதமான மக்களே பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குவதாகவும், இதனால் தனித்தமிழ் இராச்சியம் என்ற கொள்கை நிராகரிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளக், சண்டே ஒப்சர்வர் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கில் உள்ள லட்சக் கணக்கான தமிழர்கள் கொழும்பிற்கு வந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படவில்லை என பிளக் குறிப்பிட்டுள்ளார்.

விமானக் குண்டுத் தாக்குதல், மனிதாபிமான உதவித் தடை, கொலைகள் மற்றும் கடத்தல்களுக்கு தமிழர்கள் உள்ளாக்கப்படவில்லை என்றே பிளக் தெரிவித்துள்ளார்.

பிரஜாவுரிமை சட்டம், 1956ம் ஆண்டு அரசகரும மொழிச்சட்டம், 1972ம் ஆண்டு அரசியல் சாசனம் போன்ற சட்டங்களின் மூலம் தமிழர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி பீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

1974ம் ஆண்டு செல்வநாயகத்தினால் தனித்தமிழ் இராச்சியக் கோட்பாடு முன்வைக்கப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்குத் திமோர், எரித்திரியா, மொன்டன்ரிக்கோ, கொசோவோ, கியூபெக், பியட்டரிக்கோ போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட வெகுசன வாக்கெடுப்பைப் போன்றதொரு வாக்கெடுப்பு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனித் தமிழ் இராச்சியம் தொடர்பான வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறானதொரு வாக்கெடுப்பின் மூலம் பிரபாகரனுக்கு 5 வீத மக்களே வாக்களித்தால் அமெரிக்கத் தூதுவரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.ajeevan.ch/content/view/2974/1/