ஊரெங்கும் உலவியக் காற்று
நிரப்பிச் செல்கிறது
இந்த ஆலமரத்தில்
தன் இசையை..

வெறுமையூடிய கிளைகள்
இலையுதடுகளால் முணுமுணுத்தன
பிரிந்தப் பறவைகளின் பாடல்களை..

அந்தப் பாடல்களில்
தனிமையின் தவிப்புகள்
பறவைகளின் ஸ்பரிசங்கள்
சிறகுகளின் சடசடப்புகள்
இறகுகளின் உதிர்வுகள் என
எல்லாம் நிறைந்திருந்தன..

ஏக்கமும்
வேதனையும் வடியும்
என் நெஞ்சை
மேலும் கீறிய
அப்பாடல்களுக்கு தெரியாது
சதையோடு பேர்ந்த நகம் போன்ற
வலிகளாலான சில நினைவுகளை..