Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 38

Thread: தேடல் (சிறுகதை)

                  
   
   
 1. #1
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,037
  Post Thanks / Like
  iCash Credits
  22,517
  Downloads
  39
  Uploads
  0

  தேடல் (சிறுகதை)

  அனைவருக்கும் வணக்கம். இது எனது முதல் சிறுகதை. தயவுசெய்து படித்துவிட்டு பின்னூட்டம் தாருங்கள்.

  தேடல்
  ------

  இன்று குளிர் அதிகம். இறைமகனின் விரல்கள் நடுங்கியது. தலைக்கு வைத்திருந்த மூட்டையை அவிழ்த்து கனமான சட்டையை எடுத்து அணிந்து கொண்டான். ஒரு சுருட்டை எடுத்து உதட்டில் பிடித்து நடுங்கும் விரல்களினாலே தீப்பெட்டியை உரசி பற்ற வத்துக் கொண்டான். சூடான புகையை உள்ளுக்குள் இழுத்தான். குளிர் இப்போது தேவலாம் போல் இருந்தது. இறைமகன் தன் நரைத்த தாடியை வாஞ்சையாய் தடவினான். அவன் படுத்திருந்த சிமெண்ட் குழாய் சில்லிடுகிறது. ஆனாலும் கிழவன் வேறு ஜாகைக்கு செல்வதில்லை.

  ஆற்றின் கரையில் பதிக்கப்பட்டிருந்த அந்த நான்கு குழாய்களில் தண்ணீர் வந்து ஆற்றில் விழும். அதெல்லாம் இறைமகன் சிறுவனாயிருந்த போது. இப்போது உள்ளே வெறும் குப்பையும் கூளமும் தான். குழாய்களுக்கு மேலே பக்கத்து ஊருக்கு செல்ல பாலம் போல் பாதை இருந்தது. கிழவன் குழாய்க்கு குறுக்காக படுத்து தலையை குழாயில் சாய்த்து இடது காலை மடக்கி ஊன்றி அதன் மேல் வலது காலை வைத்து அரசனை போல் படுத்திருந்தான். விரல்களில் சுருட்டு புகைந்தது. நிலவொளியில் ஆற்று நீர் வெள்ளி தகடாய் பளபளக்கிறது. அழகான, கோதுமை நிற பாம்பொன்று நீரில் நீந்தி மறைந்தது. பாம்பு மறைந்த பக்கத்திலே சிறு சலசலப்பு. ஒரு தவளையின் மரண ஓலம் கேட்டு அடங்கியது.

  இறைமகனுக்கு காலையில் அவன் அடக்கம் செய்த இளைஞனின் ஞாபகம் வந்தது. அவனை எங்கேயோ பார்த்த நினைவு. எங்க..? நெற்றியை சுருக்கி, வாழ்வின் இறந்த காலத்தை யோசித்து... ஆ...ஆ...ம்.. சிலவருடங்களுக்கு முன்பு கிழவன் சாலையோரம் அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது சாலை வழியே வந்த சிறுவன் கிழவனுக்கு காசு போட எண்ணி அங்கே நின்று தன் சட்டை பைக்குள்ளும் கால்சட்டை பைக்குள்ளும் தேடினான். ஆனால் அவனிடம் காசு இல்லை. வெட்கத்துடன் புன்முறுவல் செய்தான். கிழவன் சிரித்துக் கொண்டே "பரவால்ல..போ..போ.." என அனுப்பி வைத்தான்.

  மறுநாள் வந்து காசு போட்டான். அந்த சிறுவன் தான் இன்று இளைஞனாய் வளர்ந்து மத கலவரத்தில் மடிந்திருந்தான். இறைமகனுக்கு உடல்களை அடக்கம் செய்வது ஒன்றும் புதிதில்லை. ஒவ்வொரு மரணத்துக்கும் எதேதோ காரணங்கள். ஆனால் தினம் தினம் மரணங்கள். சுடுகாட்டில் வேலை செய்யும் நபர் சிலசமயம் இறைமகனிடம் உதவி கேட்பான். ஈடாக உணவோ, சுருட்டோ, போதை பாணமோ வாங்கி தருவான்.

  கிழவன் பெருமூச்சுடன் மனதில் சொல்லிக்கொண்டான். ம்..ம்..ம்..ஹும்..எத்தனையோ பாத்துட்டேன். இன்னும் பாக்க என்ன இருக்கு. எப்ப அவன் வந்தாலும் அவன் கைய பிடிச்சுக்கிட்டு போக வேண்டியதுதான் பாக்கி...எப்ப வருவானோ? நினைத்துக் கொண்டே புகையை அதிகமாய் இழுத்தவன்....ஹுக்கும்...ஹுக்கும்..என இருமினான். அவன பாக்கனும். அவன் எங்க இருக்கான். எல்லாம் பொய். மனுஷன் பயந்தே சாககூடாதுன்னு தைரியபடுத்திக்க கடவுள்னு ஒருத்தன மானசீகமா படைச்சுக்கிட்டான். அது கற்பனைக்கு தான் லாயக்கு. அப்படியே கண்ணயர்ந்தான். நல்ல உறக்கம்.


  அங்க இருக்கார்..அங்க இருக்கார்...ஒரு கூட்டத்தின் குரல் கேட்டது. இறைமகன் உள்ளே போனான். மையிருட்டு. எதுவும் தெரியவில்லை. கைகளால் தடவினான். கல்லில் ஒரு மனித உருவம். இல்லை நான் தேடியவன் இங்கே இல்லை. வெளியில் வந்தான். இங்க..இங்க..என்றது வேறொரு கூட்டத்தின் குரல். இறைமகன் அங்கும் போனான். கருமிருட்டு. அங்கே எதுவுமே இல்லை. வெளியில் வந்தான். இங்க..இங்க..என்றது இன்னொரு கூட்டத்தின் குரல். அங்கும் போனான். கருமிருட்டுக்குள்ளே கூட்டல் குறி மாதிரி ஒரு மரச்சட்டம் இருந்தது. கிழவன் ஏமாற்றமாய் வெளியில் வந்தான். தனக்குள் சொல்லிக்கொண்டான்..அவர்கள் ஆத்திகர்கள். கல்லிலும், காற்றிலும், கட்டையியிலும் கூட கடவுள் உண்டு என்பார்கள். நான் நாத்திகன். எதிரில் பார்க்காமல் நம்ப மாட்டேன்.

  கூட்டங்களின் குரல் ஓயவில்லை. வெவ்வேறு திசைகளில்...வெவ்வேறு மொழிகளில்.... கிழவன் சோர்ந்து அமர்ந்து விட்டான். முகத்தில் தீவிர யோசனை. "கடவுளே நீ எங்க இருக்க...?" மீண்டும் எழுந்தான். ஒரு கையில் மெல்லிய ஒளியில் எரியும் லாந்தர் விளக்குடன் நடந்தான். குழி விழுந்த கூரிய கண்களால் தேடினான். ம்...ஹும்...இல்லை. கருநீல ஆகாய வெளியிலே நிலவும் வெள்ளிகளும் மின்னியது. புகைபுகையாய் மேகங்கள் நகர்கின்றன. மலை போல், மரம் போல், பொதிமூட்டை போல், வினோதமான விலங்கு போல்...இன்னும் கற்பனைக்கேற்ற உருவமாய்...யாருக்கோ பயந்து ஓடுகின்றன. அதற்கு கட்டளை இட்டது யார்..? அவனைத்தான் பார்க்கனும்.

  மயானத்தில் இருப்பானோ..? இங்கு வரவேண்டிய உடல்கள் வந்து விட்டனவா என்று கணக்கு பார்த்துக்கொண்டு...! மருத்துவமனையில் இருப்பானோ..? இன்றைய உயிர்கள் மலர்ந்து விட்டனவா என்று.. படைத்தவற்றை ரசித்து எங்கும் சுற்ற போயிருப்பானோ..? நாளைய நிகழ்வுக்கு இன்று நிகழ்ச்சிகள் அமைத்து கொண்டிருப்பானோ?..இருக்கும். அப்படித்தான் இருக்கும். அன்றன்று அவன் நிகழ்த்துவதில்லை. நிகழ்ச்சிகள் நடக்கும் நிலைக்கு கொண்டு வந்து விடுகிறான்.

  கிழவன் நடக்க முடியாமல் அமர்ந்தான். பிறந்து இத்தனை வருடமாய் கேள்விப்பட்டு வருகிறேன். ஒருமுறை...ஒரே ஒருமுறை...ஒரே முறை அவனை பார்க்க முடியாதா? ம்..ம்..ஹும்...பெருமூச்சு விட்டான்.

  கண்ணை இருட்டியது. எங்கோ மெல்லிய இசை ஒலிக்கிறது. எந்த கருவி என அறிய முடியவில்லை. இசை சோகமாகவும் ஆனால் சுகமாகவும் ஒலிக்கிறது. சோகமில்லாத சுகமேது..? தனக்குள் சொல்லிக்கொண்டான்.

  அருகில் எங்கோ சூரியன் உதிப்பது போல் வெளிச்சம் பரவுகிறது. ஆகாயம் முழுவதும் உலகின் தலைசிறந்த ஓவியன் தீட்டுவது போல் ஓளி பரவியது. பலவிதமான பறவையினங்களும் வண்டினங்களும் யாரையோ பாடுகின்றன. விலங்குகள் தாயின் முன்னால் விளையாடும் குட்டிகளை போல மண்ணில் உருள்கின்றன. சில வெளிச்சம் வரும் திசையை நோக்கி மண்டியிட்டு அமர்கின்றன. மலர்கள் தங்கள் காணிக்கையாய் மலர்களை உதிர்க்கின்றன. வெண்மையும், மஞ்சளும், சிகப்பும், நீலமுமாய் எத்தனை வண்ண மலர்கள். மரங்கள் தங்கள் சரீரத்திலிருந்து வாசனை திரவியத்தை அதிகமாய் மலர்களில் சுரந்தனவோ? இந்த பகுதி முழுதும் மணக்கிறது. அருகில் ஓடும் ஆற்றில் மீன்களும், நண்டுகளௌம், இறாலும்... பாம்புகளும் தவளைகளும் கூட ஒற்றுமையாய் நீரின் மேல் மட்டத்துக்கு வந்தன.

  தாமரையும், மல்லிகையும், முல்லையும், ரோஜாவும், மகிழம்பூவும், தாழம்பூவும்...இரவில் மலரும் மலர்களும், காலையில் மலரும் மலர்களும் ஒரே சமயத்தில் மலர்கின்றன. பறவையினங்களின் கீச்சு குரல் அடங்கியது. விலங்குகளின் ஓசை அடங்கியது. அமைதி.. அமைதி... அப்படியோர் அமைதி. மொட்டுமலர்கள் திறக்கும் ஓசை மட்டுமே.. ஓளி வரும் திசையிலிருந்து காற்று மட்டும் கீதமாய்...மதுர கீதமாய் ஒலிக்கிறது. எத்தனை கோடி ஆனந்தம்...இறைவா..!இறைமகனின் கைகள் அணிச்சையாய் இணைந்தன. நான் எப்போது ஆத்திகன் ஆனேன்...? மனதில் கேள்வி. பதில் தேட நேரமில்லை. கிழவன் சப்தநாடியும் ஒடுங்கி தரையில் வீழ்ந்தான்.

  ஓ...இறைவா...கடவுளே..தெய்வமே...ஆண்டவா... பலவித குரல்கள் எழுகின்றன... பறவைகளின் விலங்குகளின் பிற உயிர்களின் மொழிகள் எனக்கெப்படி புரிகிறது...?

  ஓ.. ஆண்டவனே..! எத்தனை கோடி உயிர்கள்.. பஞ்சபூதங்களில் பிரபஞ்சத்தை உண்டாக்கினாய்... நீரிலே ஜீவன்களை படைத்தாய்.. காற்றிலே நுண்ணுயிர்களை கலந்தாய்...நிலத்திலே தாவரங்களை தந்தாய்.. ஆகாய வெளியிலே ஒளிவீசும் தாரகைகளை தவழ விட்டாய். தீயிலே வெப்பமும் ஒளியும் தந்தாய்..அனைத்திலும் அற்புதமாய் மனிதனை படைத்தாய். அவனது ஒவ்வொரு செல்லிலும் உயிரும் உணர்வும் தந்தாய். எதை சொல்வேன்..? எதை விடுவேன்..?குழந்தையில் மழலை தந்தாய்... இளமையில் அழகு தந்தாய்.. பருவத்தில் குழந்தை பெறும் ஆற்றல் தந்தாய்.. வயோதிகத்தில் தளர்ச்சி தந்தாய்.. அத்தனை கோடி உயிர்களுக்கும் மனதில் அன்பை தந்தாய். எப்படி புகழ்வேன்?. எதை சொல்லுவேன்..? இறைமகனின் விழிகள் நீரை சிந்தியது.

  எனக்கு உன்னை பார்க்க கண் கூசுகிறது. அதற்கெல்லாம் அருகதையில்லாதவன் நான்.. ஆனால் உன்னிடத்தில் கேட்க எனக்கு சில கேள்விகள் உண்டு, அதற்கு பதில் சொல்ல நீ மனிதனாக வரவேண்டுமே..? இறைமகன் மனதில் நினைத்தான். அப்போது தகப்பன் தன் குழந்தையை வருடுவது போல் ஒரு கரம் இறைமகனின் தலையை வருடியது. இறைமகன் மெதுவாய் தலையை நிமித்தினான்.

  அங்கே அவனை விட வயதான ஒரு பெருங்கிழவன் இருந்தான். என்ன கேட்க போகிறாய்? என்றான் பெருங்கிழவன். நீ...நீ...? என கேள்விக்குறியோடு அவனை பார்த்தான் இறைமகன்.

  நானே நீ தேடும் கடவுள்.

  நீ உண்மைலேயே உண்டா???

  ஏன் என் மீது நம்பிக்கை இல்லையா?

  இறைமகன் இல்லை என்பது போல் தலையசைத்தான். பிறகு எங்கோ பார்த்தவனாய் சொன்னான். "இருந்தது...எம்மகனும் பொஞ்சாதியும் இருந்த காலத்தில. மனுஷன் சிசுவாய் பிறந்து குழந்தையாகி, வாலிபனாகி, மணமாகி அவனும் குழந்தை பெற்று, பேரன் பேத்திகள் பெற்று வயோதிகத்தில் மரிக்கும்போதெல்லாம், கடவுள் இருக்கிறான்னு தோணும். ஆனால் பச்சமரமா, சிறுவனா, வாழ்வில் அடியெடுத்து வைக்கும் இளைஞனா..குடும்பத்தை காக்கும் தகப்பனா, தாயாக இருக்கும் போது..... மரிக்கும் போது..அந்த வேதனை உனக்கு தெரியாது. மனிதனுக்கு தான் தெரியும். நல்லவர்கள் துன்பபடும் போதும் தீயவர்கள் திருப்தியாய் வாழும்போதும்.... கடவுள் என்பதெல்லாம் வெறும் கற்பனை என முடிவு செய்து விடுவேன்.

  மனிதர்களுக்கு அன்பான உறவுகளை கொடுத்துவிட்டு திடீர்னு அவர்களை பிரிக்கிறாயே..? அதிலென்ன திருப்தி உனக்கு...?"

  "உங்களின் விதிகள் என் ஆளுமைக்கு உட்பட்டது. மரணம் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறது என்பது ஒரு எச்சரிக்கை. இத்தனை காலத்துக்கு மரணமில்லை என்று இருந்த்திருந்தால் உங்கள் அட்டுழியத்தால் எப்போதோ அழிந்து போயிருப்பீர்கள். உங்களில் யார் நல்லவன் யார் கெட்டவன்..? எல்லோரும் ஒரே மாதிரிதான். சிலர் செயல் உலகம் முழுதும் தெரியும். சிலர் செயல் அடுத்த காதுக்கு கூட எட்டாது. எனக்கல்லவா தெரியும் எல்லோரையும் பற்றி"

  என்றான் பெருங்கிழவன்.

  அப்படியானால் பூகம்பம், போர், வெள்ளம், நோய், விபத்து, கலவரம் இதிலெல்லாம் பச்சை குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உடல் ரணமாய் வேதனை படுவதும், அழுகையும், கதறலும், மரணமும் உனக்கு சம்மதம் தானா? இரக்கமே இல்லையா உனக்கு..? மிகுந்த வேதனையுடன் கேட்டான் பெருங்கிழவன்.

  "ஹா...ஹா...ஹா...ஹா........ஹா..ஹா..ஹா...ஹா..." பெருங்கிழவன் பேய்சிரிப்பு சிரித்தான்.

  இறைமகன் அடங்கி ஒடுங்கி நடுங்கினான். ஏன் சிரிக்கிறான் என புரியாமல் பார்த்தான்.

  "இரக்கத்தைப் பற்றி மனிதன் பேசுவதை கேட்டால் சிரிப்பு வருகிறது" பெருங்கிழவன் சொன்னான். முகத்தை சோகமாக்கி கொண்டு மேலும் தொடர்ந்தான். மனிதன் பிற உயிரினங்களின் மரணத்தில் எந்த அளவுக்கு துக்கபடுகிறானோ நானும் அந்த அளவுக்கு மனிதனுக்காக துக்கபடுகிறேன். என்றான்.

  அப்படியானால் நீயும் மனிதனைப்போல் இரக்கமில்லாதவனா? என நினைத்தான் இறைமகன். கேட்கவில்லை. சில வினாடிக்கு பிறகு கேட்டான்.

  சிலர் செல்வத்தில் புரள்வதும், சிலர் வறுமையில் உழல்வதும் உனக்கு உறுத்தவில்லையா?

  நான் எல்லா உயிர்களையும் வெற்றுடம்போடுதான் படைக்கிறேன். மனிதன் தன் சுயநலத்துக்காக பணத்தை உருவாக்கி கொண்டான்.

  "நீ ஒன்றா? பலவா? இங்கே ஏகப்பட்ட மதங்ககள்...மார்க்கங்கள்...எது உண்மையான மதம்?

  எல்லாம் உண்மையானது தான்.

  அப்படியென்றால்...?

  நான் ப்ரபஞ்சத்தோடு கலந்தேயிருக்கிறேன்.... காற்றிலே ஒலியை போல.. வாசத்தை போல. நானும் பிரபஞ்சமும் வேறு வேறல்ல.

  நீ எல்லோருக்கும் ஒரே கடவுளாக உலகில் தோன்றியிருக்கலாம். உன் பெயரால் இங்கு ஏராளமான மதங்கள் உருவாக்கி மாண்டுபோகிறார்கள்...!

  நான் ஒரே கடவுளாக உலகம் முழுமைக்கும் காட்சி தந்தாலும் நீங்கள் பிரித்துதான் வைத்துக்கொள்வீர்கள். உங்கள் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் ஏகப்பட்ட பிரிவுகள் வைத்திருக்கிறீர்களே..? உங்களுக்குள் ஏற்பட்ட அதிகார ஆசை. ஒவ்வொருவனும் தன்னை அதிமேதாவியாய் நினைத்து கொள்கிறான். எங்கும் இருக்கும் கடவுள்..என்றெல்லாம் பேசுவார்கள்.. எழுதுவார்கள்..பிற வழிபாட்டு தலங்களிலும் நானே இருப்பதை உணர மாட்டார்கள்...என்றான் பெருங்கிழவன் நீண்ட பெருமூச்சுடன். மேலும் தொடர்ந்தான் ஆனாலும் மனிதன் சில சமயங்களில் மட்டும் தான் அட்டூழியம் செய்கிறான். இன்னமும் அவன் மேல் நம்பிக்கையிருக்கிறது. அதனால் தான் இன்னமும் படைத்து கொண்டிருக்கிறேன்.

  நீ மனிதனை படைத்தபோது இப்படித்தான் ஆவான் என்று நினைத்தாயா..? என்றான் இறைமகன்.

  பெருங்கிழவன் தலை குனிந்தான். நான் மனிதனின் உடலை படைக்கும் முன் அவன் மனதை படைத்தேன். அதை மனித குணத்தால் நிரப்பினேன். ஒரு சதவீதம் மட்டும் நிரப்பாமல் வெற்றிடமாய் விட்டேன். அதில் எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் என் குணத்தை வளர்த்து கொள்வான் என நம்பினேன்....ஆனால்..! ..? பெருங்கிழவனின் குரல் கரகரத்தது.

  மனதில், ஆனால்..? என்ற கேள்வியுடன் இறைமகன் பெருங்கிழவனை பார்த்தான்.

  பெருங்கிழவனின் கண்ணீர் பூமியில் விழுந்தது. "ஆனால், அவனோ மிருகங்களிடம் எப்போதாவது தோன்றும் சில கீழான கோரமான குணங்களை எல்லாம் அந்த வெற்றிடத்தில் நிரப்பிக்கொண்டான். இப்போது நான் படைத்த அந்த மனித குணத்தையும் மிருக குணம் அழித்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது தோன்றும் சில சாந்த குணமுள்ளவர்களையும் அது கொன்று போட்டு விடுகிறது. நான் தோற்றுவிட்டேன்..நான் தோற்றுவிட்டேன்.....

  கடவுள் கலங்கினான். தளர்ந்த நடையோடு எங்கோ புறப்பட்டான்.

  எங்கே.. போகிறாய்? தயங்கியபடி கேட்டான் இறைமகன்

  "நான் எப்படி நினத்து படைத்தேனோ அப்படியொரு மனிதனை தேடி." கடவுள் நடந்தான்.

  இறைமகன் அவன் காலில் விழுந்தான். கடவுளே.. என்றவாறு கைகளால் தடவினான். அவன் கைகளில் சிமெண்ட் குழாய் சில்லிடுகிறது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். கண்டதெல்லாம் கனவா? வெட்கத்துடன் சிரித்துக்கொண்டான். இளங்காலை பொழுது பளபளவென விடிந்திருந்தது. ஏதாவது ஒரு வழிபாட்டு தலத்துக்கு சென்றால் தேவலாம் போல் இருந்தது. ஆற்றில் நீராடிவிட்டு வழிபாட்டு தலத்துக்கு போனான் கடவுளை தேடி.

  ஆதி காலம் தொட்டு....மனிதன் தோன்றிய காலம் முதலாய் இந்த தேடல் தொடர்கிறது.
  ..................................................................................................

  நண்பர்களே, என்னை கீழை நாடானாக அறிமுக படுத்திக்கொண்டு நான் பதிக்கும் முதல் சிறுகதை இது. இந்த கதையை பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலாய் உள்ளேன். ப்ளீஸ் பதிலிடுங்கள்.
  அன்புடன்
  Last edited by அமரன்; 19-04-2008 at 06:39 PM.

  கீழை நாடான்

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அனுராகவன்'s Avatar
  Join Date
  24 Jan 2008
  Location
  சிங்கப்பூர்
  Posts
  5,009
  Post Thanks / Like
  iCash Credits
  31,133
  Downloads
  25
  Uploads
  3
  நண்பரே!! கதையே படித்து பதில் தருகிறேன்..
  உங்கள் முதல் கதைக்கு பாராட்டுக்கள்
  என்றும் அன்புடன்
  அச்சலா

  ..................................................................................
  வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
  திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

  ..................................................................................

 3. #3
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  96,161
  Downloads
  10
  Uploads
  0
  கீழை நாடான் உங்கல் முதல் சிறுகதை முயற்சி ஆனால் பக்குவப்பட்ட எழுத்துகளை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கடவுளை தேடி தேடி சிந்தித்ததன் விளைவு உங்களை இதை எழுத தோன்றியது. க*தை மிக* அருமை, இன்னும் உங்க*ள் தேட*ல் தொட*ர்ந்து செல்ல*ட்டும். இ ந்த தேடல் தான் உயிரனங்களுக்கு கடவுள் கொடுத்த ஆற்றல். தேடல் மூலம் உங்க*ளுக்கு ப*ல* த*த்துவ*ங்க*ள் விள*ங்கி எங்க*ளுக்கு இன்னும் சிர*ப்பான* க*தை கிடைக்க*ட்டும்.

  பார்வையை வெளியில் செலுத்தாமல் உள்ளே செலுத்தி கதை எழுதி இருக்கிறீர்கள். கதை மிக அருமை பாராட்டுகள். முதல் முயற்ச்சிக்கு 100 இபணம் பரிசளிக்கிறேன்
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 4. #4
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
  Join Date
  28 Apr 2003
  Location
  அமெரிக்கா
  Posts
  16,348
  Post Thanks / Like
  iCash Credits
  36,797
  Downloads
  15
  Uploads
  4
  முதல் கதையை "தேடலை" மையமாக வைத்து அழகாக எழுதியிருக்கிறீர்கள்..

  இன்னும் பல கதைகளை கொடுங்கள்.

 5. #5
  நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
  Join Date
  23 May 2007
  Location
  வளைகுடா நாடுகள்
  Posts
  15,360
  Post Thanks / Like
  iCash Credits
  174,436
  Downloads
  39
  Uploads
  0
  ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் தத்துவார்த்தமான கதை. தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். கடவுளைப் பார்த்துக்கேட்கும் கேள்விகள் அர்த்தம் பொதிந்தவை. வாழ்த்துகள் கீழைநாடன்.

  (வரிகள் மிகநீளமாய் இருப்பதால் படிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சுருக்கிப் போட்டால் நன்றாக இருக்கும். பக்கத்துக்குள் அடங்குவதாய்..)
  அன்புடன் சிவா
  என்றென்றும் மன்றத்துடன்
  கவலை என்பது கைக்குழந்தையல்ல
  எல்லா நேரமும் தோளில் சுமக்க
  கவலை ஒரு கட்டுச் சோறு
  தின்று தீர்க்க வேண்டும் அல்லது
  பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

 6. #6
  இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
  Join Date
  15 Mar 2008
  Location
  Abudhabi
  Posts
  774
  Post Thanks / Like
  iCash Credits
  9,833
  Downloads
  81
  Uploads
  1
  கதை நன்றாக இருக்கிறது. ஒரு சின்ன விண்ணப்பம் கதையில் புகை பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள், புகை பிடிப்பது, மது அறுந்துவது போன்று சொல்லாமல் கதை எழுதமுடியுமானால் முயற்சி செய்யுங்கள்
  நன்றி

 7. #7
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,037
  Post Thanks / Like
  iCash Credits
  22,517
  Downloads
  39
  Uploads
  0
  பின்னூட்டம் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அறிஞர், சிவா-ஜீ, சத்யா திருநாவுக்கரசு மற்றும் ஊக்க இ-பணமும் தந்த
  வாத்தியார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  என்னை எழுத்தாளனாய் காட்டிக்கொள்ள வேண்டும் என்பது நீண்ட வருட கனவு. இன்று நிறைவேறியது. அதற்காக மீண்டும் சந்தோஷம் கலந்த நன்றிகள்.

  சத்யா அவர்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
  ஆனால், புகை பிடிப்பது மது அருந்துவது போன்ற விசயங்களை கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை குறிப்பிட மட்டுமே பயண்படுத்துகிறேன். மனைவியையும் பிள்ளையையும் இழந்த, சுடுகாட்டில் வேலை செய்யும் ஒரு கிழவனுக்கு வேறு எது துணையாக இருக்க முடியும்

  வரிகள் நீளமாயிருப்பதை குறைக்க பலமுறை முயற்சி செய்தேன். சரியாக வரவில்லை. என்னுடைய கணிணியில் பிரச்னை என நினைத்தேன்.
  அடுத்த பதிப்பில் சரி செய்து கொள்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

  கீழை நாடான்

 8. #8
  மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
  Join Date
  16 Feb 2007
  Location
  சுவாசம்
  Age
  40
  Posts
  21,007
  Post Thanks / Like
  iCash Credits
  309,255
  Downloads
  151
  Uploads
  9
  அப்படியானால் பூகம்பம், போர், வெள்ளம், நோய், விபத்து, கலவரம் இதிலெல்லாம் பச்சை குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உடல் ரணமாய் வேதனை படுவதும், அழுகையும், கதறலும், மரணமும் உனக்கு சம்மதம் தானா? இரக்கமே இல்லையா உனக்கு..? மிகுந்த வேதனையுடன் கேட்டான் பெருங்கிழவன்.
  இறைமகன் என்று வந்திருக்க வேண்டுமோ..

  "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்" கருத்தை வலியுறுத்தும் கதை. பிரபஞ்சம் பிறந்த காலந்தொட்டு இத்தேடலும் இருந்திருக்கும்.

  பக்கச்சீராக்கல் செய்துள்ளேன்..

  பாராட்டுகள் கீழை நாடான்.

 9. #9
  அனைவரின் நண்பர் பண்பட்டவர்
  Join Date
  17 Mar 2008
  Posts
  1,037
  Post Thanks / Like
  iCash Credits
  22,517
  Downloads
  39
  Uploads
  0
  Quote Originally Posted by அமரன் View Post
  இறைமகன் என்று வந்திருக்க வேண்டுமோ..

  "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்" கருத்தை வலியுறுத்தும் கதை. பிரபஞ்சம் பிறந்த காலந்தொட்டு இத்தேடலும் இருந்திருக்கும்.

  பக்கச்சீராக்கல் செய்துள்ளேன்..

  பாராட்டுகள் கீழை நாடான்.
  ஆம் நண்பரே. கிழவன் அல்லது இறைமகன் என வந்திருக்க வேண்டும்.

  பக்க சீராக்கல் செய்தமைக்கு மிக்க நன்றி. இந்த கதையை சிலவருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தேன்.
  காகித்தில் இந்த கதையை பலமுறை படித்திருக்கிறேன்.
  இப்போது பக்க சீராக்கல் செய்த பிறகு படிக்கும் போது என் மனம் உவகையால் நிறைகிறது.
  மிக்க நன்றி.

  கீழை நாடான்

 10. #10
  இனியவர் பண்பட்டவர் SathyaThirunavukkarasu's Avatar
  Join Date
  15 Mar 2008
  Location
  Abudhabi
  Posts
  774
  Post Thanks / Like
  iCash Credits
  9,833
  Downloads
  81
  Uploads
  1
  வாழ்த்துக்கள்

 11. #11
  புதியவர் பண்பட்டவர் visu_raj87's Avatar
  Join Date
  13 Apr 2007
  Posts
  44
  Post Thanks / Like
  iCash Credits
  5,760
  Downloads
  0
  Uploads
  0
  நல்ல சிந்தனையை தூண்டும் கதை

 12. #12
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Nov 2007
  Location
  பாலைவனம்
  Posts
  2,785
  Post Thanks / Like
  iCash Credits
  51,830
  Downloads
  114
  Uploads
  0
  நேற்று அலுவலகப் பணிகளுக்கிடையில் வாசிக்க ஆரம்பித்தேன் ஆனால் இந்த தேடல் ஆறஅமர வாசிக்க வேண்டியது எனத் தோன்றியது. ஆகவே இப்போது வாசித்தேன்.
  முதல்ல கைகுடுங்க கீழைநாடன். சொற்கள் அருமையாக வசப்பட்டிருக்கின்றன. விளக்குவதற்கு கடினமான ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதுவும் கனவுகளுக்கிடையில் கதைசொல்லுவது அத்தனை எளிதல்ல. தொய்வில்லாமல் பயணிக்கிறது உங்கள் நடை.
  அருமையான சொல்லாடல். வர்ணிப்புகள் அனைத்தும் அருமை.
  நாத்திகனை கோவில் செல்ல வைக்க கடவுளே நேரில் வந்து கதை சொல்ல வேண்டியுள்ளது. கோவில் செல்வது மனமாற்றம் என்பது எனக்கு உறுத்துகிறது. ஆதியின் உண்டியல் கவிதையில் சொல்லியிருப்பது போன்று உண்டியல்கள் பலவும் பாவப்பணங்களாலும் லஞ்சங்களாலும் நிரம்புகின்றன.
  கோயில் செல்வதைக் காட்டிலும் நீங்கள் கூறிய மிருக குணத்தால் நிரப்பப் பட்ட பகுதியை மனித குணமாக்கினாலோ அல்லது மிருகக் குணத்தை அடக்கி வைக்கும் பக்குவம் வந்தாலே போதும் எனநினைக்கிறேன். அவன் ஆத்திகனா அல்லது நாத்திகனா என்பது தேவையற்றது.
  மனம் கவர்ந்த கதை படைத்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  அன்புடன்...
  செல்வா

  பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •